டில்லி – சென்னை பயணம் – ஒரு அனுபவம்

ஒரு மணிநேர கார் பயணத்திற்கு பிறகு ஒரு வழியாக டில்லி விமான நிலையம் வந்தடைந்தேன்.நடந்து வந்திருந்தால் கூட அவ்ளோ நேரம்தான் ஆகியிருக்கும். புற்றீசல் போல சாலையில் கார்களின் ஆக்கிரமிப்பு. இந்தியா பறக்கிறது. போர்டிங் பாஸ் வாங்கும் போது அனேகமாக எனக்குத் தெரிந்த எல்லா கடவுள்களையும் அழைத்துப் ப்ரார்த்தனை செய்தேன் இரரண்டு முக்கியமான விஷயங்களுக்காக:

ஜன்னலோர இருக்கை
கழிவறைக்கு அருகாமையில் இருக்கை

இரண்டாவது கொஞ்சம் பிதற்றலாக தோன்றும். உண்மையில் அது என்போன்ற குடிமகன்களுக்கு, இப்போது சில குடிமகள்களுக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. அசராமல் ஆறு பீர் அடித்துவிட்டு அடிவயிறு முட்டும் போது உங்களுக்கு புரியும் இரண்டாவது வரத்தின் “முக்கிய”த்துவம்.
அடித்து பிடித்து அங்கே போனால் வள்ளுவன் குறளில் சொன்னது போல பல அமரர்கள் அங்கு அடக்கிக் கொண்டு வரிசையில் நின்றுகொண்டிருப்பார்கள். சடாரென்று ஒரு பெண்மணி கையில் குழந்தையுடன் வந்துவிட்டால் பெண்ணியம் காக்க வந்த கொடிவீரர் போல விட்டுவிடுவார்கள். நம் காத்திருப்பு இரட்டிப்பாகும். உப்புத் தண்ணியை இறக்க உப்பு சத்தியகிரகமெல்லாம் செய்ய முடியாது. ப்ளீஸ் வெயிட், யு ஆர் இன் கியூ தான்.

அது என்ன ஜன்னலோர இருக்கை? என்னவோ வழியங்கிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டே வருவது போலவும், போகிற போக்கில் கடவுளுக்கு ஒரு ஹாய் சொல்லப்போவது போலவும் ஒரு நப்பாசை. 30000 அடியில் காதடைப்பையும் அடி வயிறு கலக்கலையும் சமாளிப்பத்தற்கே நேரம் சரியாகிவிடும். இருந்தாலும் ஒரு நப்பாசை. இது என்னைப்போல சிலர் போடும் டமாஸ் நாடகந்தான். ஏர்ஹோஸ்டஸ் இடிகளுக்கு வேண்டி சிலர் பாதைப்பக்க இருக்கைக்கு வரம் கேட்பர் சிலர்.

என் பிரார்த்தனைக்கு எப்பவும் போல கடவுள் செவிசாய்க்கவில்லை. புவி படைத்தவன் செவி அவ்வளவு சீக்கிரம் சாயுமா?

எப்படியோ இப்படியாக சிலபல விஷயங்களை “இதுவும் கடந்து போகும்” என்று என்னை நானே தேற்றிக் கொண்டு அடுத்த பயணத்திற்கு இப்போதே அடிபோட எண்ணி, சற்று கண் மூடி பிரார்த்தித்தேன். ஒரு கரகரத்த குரல் என்னை அழைத்தது….”தம்பி”…

கடவுள் செவிசாய்த்துவிட்டார் என்று நினைத்தேன். மீண்டும் அதே குரல், “தம்பி”. கண்முழித்துப் பார்த்தேன். பக்கத்தில் சகபயணி என்னை அழைத்திருந்தார். வெள்ளை வேட்டி சட்டை, 50 வயது சொல்லலாம், முறுக்கெடுத்த பெரிய மீசை. கசங்கிய சட்டையும் எகானமி க்ளாஸ் டிக்கெட்டும் அவர் அரசியல்வாதி இல்லை என்பதை திட்டவட்டமாக சொல்லியது.அவர் ஆரம்பித்தார்….

தம்பிக்கு எந்த ஊரு?
ஐஆம் ப்ரம் சென்னை.
ஓ! அயனாவரங்களா?
இங்கிலீஷு தெரியாது என்று நினைத்துக் கொண்டு, இல்லைங்க சென்னைன்னு சொன்னேன்.
மன்னிச்சிக்குங்க தம்பி நமக்கு இந்த இங்கிலீசு வராது. ஆமா சென்னைல எங்க?
திருவல்லிக்கேணி. உங்களுக்கு? சென்னைதானா? பார்மாலிட்டி கேள்வி தொடுத்தேன்.
நமக்கு ராயபுரங்க. தம்பி வேலையா இல்ல பிஸினஸா? அவர் ஒரு தீர்மானத்துடன் தான் இருந்தார்.
வேலதான். ஐடி கம்பெனி. கையில ஜாதகமில்ல என்று நக்கலடித்தேன்.
தம்பி, தமாசு என்று சற்றும் எதிர்பாராமல் சடாரென்று சிரித்தார்.
அவரை புறகணிக்க எண்ணி, கண்ணை மூடி தூங்குவது போல பாவ்லா செய்தேன்.

சற்று நேரம் அமைதி நிலவியது. சாப்பாடு கொண்டுவருவதாக அறிவித்தார்கள்.

தம்பி, என்ன சொல்றாங்க?
போச்சுடா என்ற அலுப்பைக் காட்டிக் கொள்ளாமல், சாப்பாடு தரப்போறங்க என்று விளக்கினேன்.
ஓ! சாப்பாடெல்லாம் உண்டா? பரவாயில்லையே? ஏரோப்ளேன்ல சமயகட்டெல்லாம் இருக்கா?
நான் பதிலளிக்கவில்லை. சிரிப்பை சிந்தி மௌனம் சாத்தித்தேன்.

மீண்டும் அமைதி (நான் உருவாக்கிய)…………..

விமானம் மேகமோதலில் சற்று ஆடியதால், பெல்ட் அணியுமாறு அறிவிப்பு வந்தது. முழித்துக் கொண்டேன். சார் அந்த பெல்ட் போடுங்க. அதான் சொல்றாங்க…
அப்படிங்களா, நான் போட்டிருக்கேனே. நீங்களும் போட்டுக்குங்க தம்பி
என் பெல்ட்டை போடப்போ…சார் நீங்க என் பெல்ட்ட போட்டிருக்கீங்க…
தெரியலீங்க, அந்தப் பொண்ணுதான் போட்டு போச்சு. எடுத்துக்குங்க…
சார் நீங்க முதல் தடவையா பிராயணம் செய்யறீங்களா?
ஆமாம் தம்பி.
போச்சுடா இன்னும் ஒரு மணிநேரம் கஸ்டமர் செர்விஸா நமக்கு என்று நொந்துகொண்டேன்.

சற்று நேரத்தில் சாப்பாடு வர…அழகான விமான பணிப்பெண் என்ன வேண்டும் என்று கேட்டாள்.

வெஜ், டூ யூ சர்வ் ட்ரிங்க்ஸ்?
யெஸ் சார், வாட் வுட் யூ லைக் டு ஹேவ்?
விஸ்கி வித் வாட்டர் ப்ளீஸ்…

வி.ப.பெ இப்போது அவர் பக்கம் பார்த்து, சார், பார் யூ?
1 ப்ளேட் பரோட்டா என்றார். சிரிப்பு தாங்கவில்லை எனக்கு. ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.
சார், இங்க அதெல்லாம் கிடையாது. அந்த கார்டு பாருங்க, அதுதான் கிடைக்கும்.
சரி தம்பி நாம அசைவம் நு சொல்லுங்க…நீங்களே பார்த்து சொல்லுங்க. நமக்கு அது ஒண்ணும் விளங்காது..
கெட் ஹிம் ஒன் நான் – வெஜ் என்று கெத்தாக சொல்லி அவரை பார்த்தேன்
தம்பி வெஜ்ஜா? நான் அசைவம்.
ஜோக்காமா…நான் போலியாக சிரித்தேன். அவர் நிஜமாகவே பெரிதாகவே ரித்தார்…
வேகமாக சாப்பிட்டுவிட்டு, இன்னொரு ப்ளேட் கிடைக்குமா என்றார்.
எனக்கு கோபம் தலைக்கேறியது…எப்படி சார்? இது ப்ளைட் இங்க அதெல்லாம் தர்றமாட்டாங்க.
ஏன் தம்பி நாம்தான் பைசா கொடுக்கறோமே? ட்ரெய்ன்ல தருவாங்களே?
சார், கொஞ்ச நேரம் பேசாம வாங்க என்று வள்ளினேன்.

மீண்டும் அமைதியை நிலைநாட்டிவிட்டு, கண்மூடினேன்..சில நொடிகளில், அவர் கொறட்டை சத்தம் வான்பிளந்தது. வானம் வேறு பக்கம் இப்போது. கேட்கவா வேண்டும்?

சென்னை வந்துவிட்டதாக அறிவிப்பு வந்தது, விடுதலை வந்ததாக எண்ணமும் வந்தது எனக்கு.

தம்பிக்கு ரொம்ப நன்றி, நெறைய உதவி செஞ்சீங்க என்றார்.
பேஸ் அடித்து, அசடு வழிந்து, “தட்ஸ் ஓகே” என்றேன்.
இந்தாங்க தம்பி இது நம்ம வீடு, எப்ப நேரம் கெடச்சாலும் வாங்க. உங்கள மாதிரி நெறைய தம்பிங்க அடிக்கடி வந்து போவாங்க.
விசிட்டிங் கார்டில், அந்த அனாதைகள் காப்பக பெயரிட்டு, அவர் பெயர் (அப்துல் ரஹ்மான்) நிறுவனர் என்றிருந்ததது. முதல் அதிர்ச்சி.

நீங்க…..என் குரல் இப்போது மிகவும் குறைவான டெசிபலில் ஒலித்தது.

ஆமாம் தம்பி, நாந்தான் அத நடத்தறேன். நீங்க ஊர்ல தெருவுல பார்த்திருப்பீங்க. நெறைய பேர் பித்து பிடிச்சாமாதிரி ஒரே வார்த்தையையோ அல்லது ஒரே வாக்கியத்தையோ சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அவங்க எல்லாம் எப்படியோ குடும்பத்துலேர்ந்து பிரிஞ்சு இப்படி ஆயிடறாங்க. நாங்க அவங்கள ஆசிரமத்துல வெச்சு, தினமும் தியானம் சொல்லிக்கொடுத்து, ராம நாமம் ஜெபிக்கச் சொல்றோம். அவங்களும் குணமடையறாங்க நாளடைவுல. அப்புறம் அவங்கள அவங்க குடும்பத்தோடு சேர்க்கறோம். இப்ப கூட ராக்கேஷ்ங்கறவர விடத்தான் டில்லி வந்தேன்.

இரண்டாவது அதிர்ச்சி. தோற்றம் ஏமாற்றும் என்பது எவ்வளவு சரி? Look is Deceptive.

சும்மா மொழிமாற்றம் செய்து அவருக்கு உதவுவதை கடனாக நினைத்த நான் எங்கே? ஒருவரின் வாழ்க்கையையே மாற்றிக் கொடுத்துவிட்டு அதையும் சாதரணமாக சொல்லும் அவர் எங்கே?

உண்மையில் நான் புத்திசுவாதினத்தை இழந்திருந்தேன். இன்று தெளிவுபெற்றேன்.

This entry was posted in அனுபவம், சிறுகதை, நகைச்சுவை and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

One Response to டில்லி – சென்னை பயணம் – ஒரு அனுபவம்

  1. Wonderful Sarathy. Title was really deceptive. Excellent.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *