பிரபஞ்சத்தின் முதல் விஞ்ஞானி

படைப்பாளி இல்லாமல் படைப்புகள் சாத்தியமில்லை. படைத்தவன் ஏன் ஒரு தலைசிறந்த விஞ்ஞானியாக இருந்திருக்கக் கூடாது? அவனை கடவுளாக போற்றப்படுவதனாலேயே அந்த கோணத்தில் பார்க்க மறுக்கின்றனர் என்று நினைக்கிறேன். அதனால்தான் (கடவுள் என்ற)ஒரு தனி படைப்பாளி இத்தனையும் படைத்திருக்க முடியாது என்றும் இவையெல்லாம் இயற்கை மாற்றங்களோ அல்லது சீற்றங்களோ என்கிறார்கள் போலும். பஞ்சபூதங்களின் அளவான சேர்க்கையும், பிரிப்பனவும் கூட அறிவியல்தானே. ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்து நீர் ஆகியது, சரிதான். ஆனால் ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் எங்கிருந்து வந்தன? இந்த பிரபஞ்சத்தின் படைப்பை அறிவியல் ரீதியாக கூட ஒப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த அறிவியல் வந்ததே வேதங்களிலிருந்துதான். வேதம் அறிவியல் பேசுகிறது. வேதத்தை அளித்தவன் கடவுள். ஆக யார் இந்த பிரபஞ்சத்தின் விஞ்ஞானி?

வேதம் இறைவன் திருமகள் வழியாக அங்கேயிருந்து விஸ்வக்‌ஷேனர் வழியாக வந்தும் படிக்க முடியாமல், முழுவதும் உணரமுடியாமல் போனபோதுதான் வேதவியாசர் மூலமாக பிரிக்கப்பட்டு நமக்கு கிடைத்திருக்கிறது. இதை ஏன் நாம் ”இறைவியல்” என்று சொல்லக்கூடாது? அவரை ஏன் அந்தக்கால அப்துல் கலாம் என்றழைக்கக்கூடாது?

எல்லாம் அறிவியல் என்றும், நாங்கள்தான் ஒவ்வொன்றாக கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் ஒரு கூட்டம் கூவிக்கொண்டு இருக்கிறது. கண்டுபிடித்தோம் என்பது தவறில்லை. ஏனென்றால் அது ஏற்கனவே இருந்த ஒன்றை தொலைத்துவிட்டு தேடிக் கண்டுபிடிக்கப்படுகிறது. அவர்களுக்கு அது புதிதுதான். வேதத்திற்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை. ஆனால் நமக்கு உண்டாயிற்றே. நம்மிடமே வந்து அதுபோல சொன்னால் என்ன அர்த்தம்? நாம் படித்துணர வேண்டியதை படிக்கவேயில்லை என்றுதானே? நம் வேதம் நான்கும் பறைசாற்றுவதே அந்த அறிவியலைத்தான்.

வேதத்தினுள் அறிவியலும் அடங்கியிருப்பது நாம் அறிந்ததே. ஒரு இடத்தில் ஆயுர்வேதா என்பதன் பொருள் ஆயுள் – Life என்றும் வேதா – Science என்றும் பொருள் தருகிறது. ஆக அறிவியலை நாம் எப்போதிலிருந்தோ நமக்கு தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றுகிறோம் என்றாகிறது. மேலும் நாம் (இந்து வாழ்க்கை முறை – கவனிக்க, இந்து மதம் அல்ல) செய்யும் பல காரியங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் அறிவியல் ரீதியான பொருளும் விளக்கமும் இருப்பது நாம் அறிந்ததே. உதாரணத்திற்கு ஒன்று: அறிவியலில் லைட் எனர்ஜி என்று சொல்வதை நாம் ரொம்ப காலமாக விளக்காக ஏற்றி வருகிறோம்.

(ரிக்வேதம் 10.149.1) சூரியனை பூமியும் மற்ற கிரகங்களும் சுற்றுவதை சொல்லியிருக்கிறது. இதை நாம் படிக்காததனால், இன்று சயின்ஸர்கள்/விஞ்ஞானிகள் என்னவோ அவர்கள்தான் முதலில் கண்டுபிடித்தைப் போல சொல்லிக்கொள்கிறார்கள். இதற்கு மூலமே நம் வேதம்தான் என்பதை மட்டும் சாய்ஸில் சௌகரியமாக விட்டுவிட்டார்கள்.

அதர்வன வேதத்தில் நம் உணவு பழக்கதையும் கூட சொல்லியிருக்கிறார்கள். உதாரணமாக கற்பூரவல்லி, துலசி ஜலதோஷத்தை போக்க வல்லது. அதையே மருத்துவர் இன்று சுருக்கி, கிறுக்கி விக்ஸ் என்று எழுதினால் மட்டுமே ஏற்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம் என்றால் மிகையில்லை. வேதியலும் அதர்வன வேதத்தின் ஒரு பாகம் என்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.

மருத்துவம் சார்ந்த அனைத்தையும் (உங்களை பரிசோதிக்கும் உபகரணத்திலிருந்து ஆபரேஷன் தியேட்டர் உபகரணங்கள் வரை) நாம் அதர்வன வேதத்தின் உபவேதமான ஆயுர்வேதத்தில் பார்க்கலாம். கணக்கையும் வான சாஸ்திரத்தையும் உள்ளடிக்கியது நம் ரிக், யஜுர், அதர்வன மற்றும் சாம வேதங்கள். ஆர்யபட்டாவையும் பாஸ்கராவையும் விட்டுவிட்டோம், அவர்ளை சொல்லியதை யாரோ ஒருவர் சொல்ல ”ஊங்கொட்டி” சுவாரஸ்யமாக படித்தோம். அதோடு நில்லாமல் நாமும் படித்த கையளவை வைத்துக்கொண்டு நானும் கண்டுபிடித்தேன் பார் என்று பார் புகழுக்கும் ஆசைப்ப்டுகிறோம். புதிதாக என்ன வந்தது என்று பார்த்தால், ”பழைய மது புதிய பாட்டிலில்“ கதைதான்.

மேலும் நம் வேதங்கள் அமெரிக்காவின் அறிவியலுக்கு அடிப்படையாக இருந்து கொண்டிருப்பதை நாம் அவ்வப்போது படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். கிரணங்களை பற்றியும் கூட அன்றே சொல்லப்பட்டுவிட்டது வேதத்தில். நூற்றுக்கணக்கான அளவுருக்களை கொண்டு கணித்திருக்கிறார்கள். மேலான்மையைப் பற்றி மஹாபாரதத்தைவிட எதுவும் புதிதாக பெரியதாக சொல்லிவிட முடியுமா? ஹார்வார்டு சொல்வதை அன்றே ஹரிஹரன் சொல்லிவிட்டான் பகவத் கீதை மூலமாக. ராமாயணமும் மஹாபாரதமும் சொல்லித்தரும் வாழ்க்கை முறைகளை மீறி/தாண்டி எந்த புத்தகம் சொல்லித்தரப்போவதில்லை.

பொருளாதாரம் (அர்த சாஸ்திரம்) ரிக்வேதத்தின் ஒரு அங்கம் என்று கூறப்படுகிறது. பொருளை ஈட்டுவதற்கும் நம்மேல் சுமையை தீட்டுவதற்கும் இன்று பொருளாதார அடிப்படையில் வணிகமயமாக்கப்பட்டிருக்கிறது என்பது மட்டுமே புதுமை.

சாஸ்திரம் சம்பரதாயம் என்று குற்றம் சாட்டப்படும் வேதத்தில் நாம் தூங்கி எழும்போது படுத்துறங்கிய அதே படுக்கையில் பல் கூட தேய்க்காமல் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொல்லச் சொல்கிறார்கள். எதற்காக? 23% மாரடைப்பு தூங்கி எழுந்திருக்கும்போதுதான் ஏற்படுகிறது என்று ஒரு ஆய்வு சொல்கிறது. இன்று அதன் விகிதம் ஏறி இருக்கலாம். நாம் படுத்த நிலையிலிருந்து எழுந்து உட்காரும் போது மட்டமான நிலையிலிருந்து செங்குத்தான நிலைக்கு உடல் மாறும்பொழுது, நம் இருதயம் அதிகப்படியான ரத்தத்தை செலுத்தும். இதனால்தான் படுத்தவாட்டிலிருந்து மெதுவாக உட்காரும் நிலைக்கு செல்ல வேண்டும், பிறகு படுக்கையிலேயே சில நொடிகள் உட்கார்ந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகிறது. இது அறிவியல். ஆனால் இது வேதத்தில் சொல்லப்பட்டிருக்கி்றது.

வடக்குப்பக்கம் தலைவைத்துப் படுக்காதே என்று பாட்டி சொன்னால், கிழவிக்கு வேறொன்றும் தெரியாது எப்பப்பார்த்தாலும் என்று சொல்வதை கொஞ்சம் தள்ளிவையுங்கள். அதற்கு காரணம் இருக்கிறது. பூமியின் காந்த அலைகளை மூளை இரத்த தந்துகிகள் வழியாக ஓட்டம் மற்றும் மூளையின் செல்கள் செயல்பாட்டை பாதிக்கும்.

பெண்கள் மேன்மையையும் பெண்களின் முக்கியத்துவத்தையும் வேதசாஸ்திரங்கள் போல எதுவும் அந்தளவிற்கு கூறியதாகத் தெரியவில்லை. பெண் விடுதலை, சமநிலை என்றவற்றிற்கு போராடுபவர்கள் இதனை படித்து விழுப்புணர்வை பெற்றும், ஏற்றும், கற்றதை எடுத்துரைத்தும் பயனுரலாம். உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், எந்த ஒரு விசேஷத்திற்கும் ஹோமம் வளர்த்தால் அங்கு குடும்பத்தலைவிதான் ஹோமத்தை கற்பூரத்தாலோ அல்லது விளக்காலோ துவக்கிவைக்கிறார். வீட்டின் கிரஹப்பிரவேசத்தில் கூட குடும்பத்தலைவியின் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே நாள் குறிக்கப்படுகிறது.

இறைவனே இப்பிரபஞ்சத்தின் முதல் விஞ்ஞானி.

ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொன்னதையே நானும் இங்கு சொல்கிறேன். அதற்காக நான் ஸ்ரீ கிருஷ்ணன் இல்லை..நீங்கள் அர்ஜுனனா என்பதை தீர்மானிக்கும் உரிமையை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

 விம்ருஸ்ய எதாத் அசேஷேன யதா இச்சாஸி ததா குரு: – நான் சொன்னதையெல்லாம் நன்கு அலசி ஆராய்ந்து நன்கு பகுத்தறிந்து அதை பின்பற்றுவதோ அல்லது ஏற்றுக்கொள்வதோ அல்லது உபரி அளவுக்குக் கூட இல்லை என்று உதறிவிடுவதோ உங்கள் கையில்.

 

நன்றி: INDIAN INSTITUTE OF SCIENTIFIC HERITAGE

This entry was posted in Featured, Headline, Sticky, கற்றதும் பெற்றதும், சிந்தனைகள், பொது. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *