Home » Featured, General, Headline, Sticky, அனுபவம், சிந்தனைகள், சினிமா இசை

பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் – பாகம் 4

31 January 2014 One Comment

பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்

மெதுவாக தொடங்கிய காலை வேகம் பிடிக்க, பிள்ளைகளை பள்ளிக்கு கட்டாயமாக அனுப்பி வைத்துவிட்டு வழக்கம் போல இளையராஜாவுடன் சற்று உரையாடலாம் என்று முடிவெடுத்தேன். துணைக்கு உபகரணங்களான என்னுடைய ஐ-அலைபேசியையும், போஸ் ஒலிப்பெட்டியையும் கூட்டிக்கொண்டேன்.

ஒரு சில பாடல்கள் கடந்து செல்ல, நானும் சின்னச்சின்ன வீட்டு வேலைகளை செய்து கொண்டிருக்க, வந்தது அந்தப் பாடல். சமீபத்தில் வந்த பாடல். வாழ்நாளில் யாருமே மறக்கமுடியாத பாடல். கூடிய சீக்கிரத்தில் சில கோயில்களில் ஒலிக்கப்போகும் பாடல். சில கோயிகளில் ஒலித்திருக்கக் கூடிய பாடல்.

இளையராஜாவை இன்னும் இன்னும் நினைத்து நினைத்து பிரமிக்க வைக்கும் பாடல். எப்படி இப்படி ஒரு இசை? இளையராஜா ஒரு முறை இசையென்பது உயிரை பிடிங்கி எடுக்கவேண்டும் என்று சொன்னது முற்றிலும் உண்மை. இந்தப்பாடல் அப்படித்தான் இருந்தது. என்னை எனக்கே காண்பித்துக் கொடுத்தது. உள்ளுக்குள் சென்று ஏதோ செய்தது. ஒவ்வொரு சின்னச்சின்ன இசையும் அதை கையாளப்பட்ட விதமும் மெய்சிலிர்க்க வைத்தது. இளையராஜாவாலேயே இப்படிப்பட்ட பாடல்களை அதிகமாக கொடுத்திருக்க முடியாது.

மின்னல் ஒன்று என்னை கேளாமலேயே வந்து பாய்ந்து பாடல் முடியும்வரை வியாபித்து இருந்தது. தினசரி வார்த்தைகளில் சொன்னால் ஷாக் அடித்தாற்போல் இருந்தது. மின்சாரம் அதன் பாட்டிற்கு இளையராஜாவின் பாட்டிற்கு பாய்ந்து என்னை என்ன என்னவோ செய்தது.

இசைப்பிரவாகம் என்னை ஆட்கொண்டுவிட்டது என்பது சத்தியமான உண்மை. அந்த சில நிமிடங்கள் என்னிடம் ஒரு பாறாங்கல்லை கொடுத்து உடைக்க சொல்லியிருந்தாலும் (முடியுமா முடியாதா என்பதல்ல கேள்வி) ஒரு கை பார்த்திருப்பேன். அலக்நந்தாவும் மந்தாகினியும் சேரும் இடத்தை பார்த்திருக்கிறீர்களா? அந்த வேகமும் சக்தியும் என்னில் முழுவதமாக வியாபித்திருந்தது. கிட்டத்தட்ட சரீரத்திருந்திலிருந்து உயிர் தனியாக தெரிந்தது. அப்போது நான் அனுபவித்த அந்த எண்ணக்களை இங்கே அவ்வளவு எளிதாக விவரிக்க முடியுமா என்று தெரியவில்லை. விவரிக்க முடிந்தால் அது ஒரு மிகச்சாதாரண அனுபவமாகவே இருக்க முடியும். வார்த்தை முட்டுகிறது. எண்ண அலைகள் செத்துபோய்விட்டிருந்தது.

அத்வைதமா விசிஷ்டாத்வைதமா என்றெல்லாம் பிரித்து பார்க்க எனக்கு நேரமிருக்கவில்லை. அது தேவையாகவும் இருக்கவில்லை. இசை அதை அனுமதிக்கவுமில்லை. என்னுள் பரவிக்கிடந்தது எல்லாம் தெய்வீகம் மட்டுமே. கடவுள் என்பது நம்பிக்கை மட்டுமல்ல அது ஒரு உணர்வும்கூட என்பதை புரிந்துகொண்ட தருணம்.

அந்த சில நிமிடங்கள் ஏதோ ஒரு பத்து பேர் என்னை அடிப்பது போலவும் நான் அதை பலத்த சிரிப்போடு ஆணவத்தோடு அவர்களை துச்சமாக பர்ப்பது போல ஒரு சக்தி. அது ஆக்கசக்தி. யார் சொன்னது சிவன் அழிக்கும் சக்தி என்று. அந்த நிமிடம் அவர்கள் என்முன் இருந்திருந்தால் இறந்திருப்பார்கள். என்ன இது இப்படியும் எண்ண அலைகளா என்று நீங்கள் கேட்டால், நான் பொறுப்பல்ல, அதை நீங்கள் இளையராஜாவிடம்தான் கேட்கவேண்டும்.

பாடல் முழுவதும் ஒலிக்கும் உடுக்கை ஒவ்வொரு முறையும் என் மனசக்தியை மேல்நோக்கி தூக்கி நிலைநிறுத்தியது. ஓம்காரம் என்னை வேறு நிலைக்கு இட்டுச்சென்றது. ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
நான் கடவுளாக மாறிவிட்டேன். நானே என்னை சிவனாக நினைத்துகொண்டிருந்தேன். அதே சமயம் என் கண்முன் இசையின் வடிவில் ஒரு சிவதாண்டவம் தெரிந்தது. சிவன் ஏதோ ஒரு கெட்ட சக்தியை அழிப்பதற்காக ருத்ரதாண்டவம் ஆடும் காட்சி என் மனக்கண்ணில் தோன்றியது. ஒருவித ஆணவம் என்னை ஆக்கிரமித்திருந்தது. அந்த ஆணவம் எந்த கெட்ட சக்தியும் என்னை அண்ட முடியாது என்று தீர்மானமாக சொன்னது. அஹம் ப்ரம்மாஸ்மீயை ரத்தத்தில் கலந்துவிட்டிருந்தது. ஆக்கபூர்வமான அதிர்வலைகள் என்னை சுற்றி வலம் வந்துகொண்டிருந்தது. அறை முழுவதும் அந்த அதிர்வலைகள் பரவியிருந்ததை உணர்ந்தேன்.

மேலே சொன்னவையெல்லாம் வெறும் எண்ணங்களே. ஆனால் இவ்வளவு பெரிய பாதிப்பையும் எண்ணங்களையும் தோற்றுவித்ததுதான் அந்தப்பாடலின், இசையின் ஆற்றல், வெற்றி. கேட்டுப்பாருங்கள் ஒருமுறை, தன்னந்தனியாக, கண்களை மூடிக்கொண்டு, பாடலோடு பிரயாணம் செய்து பாருங்கள். எது வருகிறதோ இல்லையோ, நிச்சயமாக, சிவதாண்டவமும், மிகப்ப்ரிய அதிர்வலைகளும் வருவது திண்ணம்.

இசையால், பாடல் வரிகளால் மட்டுமே நமக்கு கடவுளை, கடவுள் உருவத்தை நம் முன் கொண்டு வந்து நிறுத்தமுடியுமா? முடியும் என்கிறது இந்தப்பாடல். முயற்கித்துப் பாருங்கள் உங்கள் கருத்துக்கள உணர்ந்தபிறகு பகிருங்கள்.

பாலாவோ ஆர்யாவோ அந்த கேரக்டருக்குள் பயணிக்க அதிகம் சிரம்ப்பட்டிருக்க வாய்ப்பில்லை. பாடலை ஒருமுறை கேட்டிருந்தாலே என்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்று அவர்களுக்கு சொல்லியிருக்கும். விஜய் பிரகாஷ் ஒரு சிவபக்தனாகவும், இசைபித்தனாகவும், இளையாராஜாவின் பக்தனாகவும் மாறி பாடியிருக்கிறார். விஜய் பிரகாஷ் எவ்வளவு நல்ல பாடகர் என்றும் அவரது உச்சரிப்பு எப்படிப்பட்டது என்றும் அறிந்துகொள்ள கீழ்கண்ட வரிகளை நாம் ஒருமுறை சொல்லிப்பார்த்தால் புரியும்.

கால த்ரிகால நித்ர த்ரிவேந்தற சூல திரிசூல காத்ரம்
சத்ய பிரவாக நித்ய பிரகாஸ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்

நிஷ்ட பஞ்சராதி நிஸ்கலம் கோஹ நிஜ பூர்ண போத ஹம் ஹம்
சத்ய காத்மாய நித்ய பரம்மோஹ ஸ்வப்ன ஹாஸ்மோஹ ஹம் ஹம்

தனதன தனதன தனதன தனதன தன சஹச ஹத்ரசப்த விஹரவி
டமடம டமடம டுபடுப டுபடுப சிவடப டுப நாத விஹரவி

முழுபாடல் வரிகள்: http://tamilpadalvarikal.blogspot.in/2012/10/blog-post_25.html

அந்தப்பாடல்: ஓம் சிவோஹம். படம்: நான் கடவுள்.

One Comment »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.