Home » Featured, General, Headline, Sticky, கற்றதும் பெற்றதும், சிந்தனைகள், தொ(ல்)லைக்காட்சி, தொடர், நாட்டு நடப்பு, பொது

05/09/2012 நீயா நானா?

15 September 2012 3 Comments

விஜய் டிவி மற்றும் கோபிநாத் அவர்களுக்கு,

உங்களின் நீயா நானா? வை விரும்பி பார்த்துவருகிறேன். பல நல்ல தகவல்களை தருவதல்லாமல் சிந்தையை தூண்டுவதாகவும் உங்கள் நிகழ்ச்சி விளங்குகிறது. வாழ்த்துக்கள்.

எப்போது உங்கள் நிகழ்ச்சியை பார்க்கும் போதும், ஒரு தரப்பினர் சில அடிப்படை கேள்விகளை கேட்ப்பதில்லை. இது எல்லா வாரங்களிலும் தொடர சாத்தியமில்லை. எனக்கு என்னவோ அது தணிக்கை செய்யப்படுவதாகவே தோன்றுகிறது. இதற்கு நேரமின்மை கூட ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் குறிப்பிட்ட சில நபர்களையே “தலைமை விருந்தினர்” என்னும் பெயரில் அழைக்கப்படுகிறார்கள். அவர்களிடமிருந்து வரும் சிந்தனைகள் ஒன்று பலதரப்பட்ட மக்களின் நம்பிக்கைகளை, எண்ணங்களை அவமதிப்பதாகவோ அல்லது அவர்கள் எல்லாவற்றையும் (இனி ஒன்றும் படிக்க இல்லை) படித்து முடித்தவர்களைப் போலவோ பேசுகிறார்கள். அவர்கள் சிந்தனைகள் சில சமயம் குழந்தைத் தனமாகக் கூடத் தெரிகிறது எனக்கு.விஜய் டிவியும் அவர்களை கார்ல் மார்க்ஸ், ந்யூட்டன், அப்துல்கலாம்,அகத்தியர் என்ற எல்லைக்கு விளம்பரப்படுத்துகிறது.இது முற்றிலும் தவறானது.

ஒரு உதாரணத்திற்காக சொன்னால், இளங்கோ கல்லாணையை சொல்லலாம். அவர் வேலையை தூரம் தள்ளிவிட்டு கிராமத்திற்கு விவசாயம் செய்ய சென்றுவிட்டார் என்பது மிகுந்த பெருமைப்படக் கூடிய விஷயம்தான். ஆனால அதே இளங்கோவினால தொடர்ந்து தமிழில் பேச முடியவில்லை. ஆங்காங்கே ஆங்கிலம் ஆக்கிரமிக்கிறது. ஒரு பக்கம் தமிழ் நிகழ்ச்சியில் தமிழில் பேச முடியவில்லை என்று குற்றம் சாட்டும் நீயா நானா, இதை மட்டும் கண்டிக்காதது ஏன்? உலகமையமாக்காலினால் வரும் தொல்லைகள், நாம் தொலைத்தவை என்று பட்டியலிடும் இளங்கோ இதை நம் தாய்மொழியான தமிழில் (குறந்தைபட்சம் எவ்வளவு முடியுமோ) பேச முயற்சி செய்யலாம். பின் விஜய் டிவி அவருக்கு அவார்டு கொடுக்கலாம், தலைமை விருந்தினராக கூப்பிடலாம்.

அதே போல் ஓவியா. பெரியாரின் பிரதிநிதியாக அவர் இருப்பதில் அவருக்கு முழு சுதந்திரம் உண்டு என்பது போலவே மற்றவர்களுக்கும் (மக்களுக்கும்) அவர்களின் நம்பிக்கையின் பிரதிநிதியாக இருக்க சுதந்திரம் உண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது இல்லாமல் சமூக ஆர்வலர் என்று பட்டம் வைத்துக்கொள்வதில் அர்த்தமேயில்லை. சமூகத்தை முழுவதும் புரிந்தவரே அதன் வளர்ச்சி மீது ஆர்வமுள்ளவராக இருக்க முடியும்.அவர் முதலில் தன்னிலையை மற்றவர்கள் மீது
திணிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று மிகுந்த தாழ்வன்புடன் அவரை கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் எந்த தலைப்புக்கு அவரை அழைத்தாலும் தேவையோ தேவையில்லையோ, அவர் பெரியாரை இழுத்துவிடுவது திணிப்பதையே காட்டுகிறது. காந்தியும் ஏனைய கடவுள் நம்பிக்கை இருந்தவர்களும் ரத்தம் சிந்தி வாங்கித்தந்த விடுதலை வேண்டும் ஆனால் அவர்களை, அவர்களின் கொள்கைகளை ஒத்துக்கொள்ளமாட்டேன் என்று சொல்வதில் அர்த்தம் இருப்பதாக எனக்கு
தெரியவில்லை.

தன் வீட்டில் தன் சொந்த குழந்தைகள் வெளியே சென்றுவிட்டு வந்தால் கைகால்களை முதலில் கழுவி விட்டு வா என்று சொல்லும் நமக்கு, ஏன் ஒருவர் வீட்டினுள் இன்னொருவரை உள்ளே கூப்பிடவில்லை என்று சொல்ல எந்த அதிகாரமும் இல்லை.
மேலும் அது அவரவர் சொந்தப் பிரச்சனை. இதை சமூகப் பிரச்சனையாக மாற்றியதே தவறு. இதை தன் தலையில் போட்டுக் கொண்டும், தேவையில்லாமல் மற்றவரினுள் ஆதிக்கும் செலுத்துவதும், நான் சொல்வதை கேள் என்று மூக்கை நுழைப்பதும் கொள்கைகள் அல்ல. நான் மாமிசம் சாப்பிட மாட்டேன் என்பதற்காக, ஓவியா சமைக்காமல் சாப்பிடாமால் இருக்க போகிறாரா என்ன? இதற்கு ஒரு சிறியார் ஒருவர் வந்து சொன்னால் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில், நானே சிறியாராக இருந்துவிட்டு போகிறேன். இனி, இந்த கொள்கையை அவர் தான் கலந்து கொள்ளும் எல்லா நிகழ்ச்சியிலும் எடுத்துரைக்கட்டும்.“இனி தமிழன்/இந்தியன் மாமிசம் சாப்பிடக்கூடாது ஏனென்றால், (எனக்கு) சிறியாருக்கு மாமிசம் பிடிக்காது என்று தன் ஒரு பதிவில் பதிவு செய்திருக்கிறார்” என்று சொல்லட்டுமே.

மக்களின் நம்பிக்கைகளை, “நாந்தான் டாப்பு மீதியெல்லாம் டூப்பு” என்கிறாப்போலே இவர்கள் கேள்வி கேட்பதில்/பேசுவதில் விஜய் டிவிக்கும் தானாகவே பங்கு வந்து சேர்ந்துவிடுகிறது என்பதை நீங்கள் சற்று சிந்திக்கலாம்.

மேலும் நடுநிலையான விவாத மேடை என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒரு பக்கத்தை சார்ந்தவர்களேயே விஜய் டிவி நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஆதரிக்கத் தொடங்குகிறது.அவர்கள் வைக்கும் விவாதங்களுக்கு எதிர்
விவாதமிருந்தாலோ அல்லது அவர்கள் பேசுவதில் உள்ள தவறுகளையோ நிகழ்ச்சி நடத்துபவராக நீங்கள் எடுத்துச் சொல்வதுமில்லை அல்லது எதிரணியினர் பேசியும் இதுவரை நான் பார்த்ததில்லை.

ஒரு ஊடகமாக, நாட்டின் உண்மைகளை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக விஜய் டிவி செயல்படும் என்று மிகுந்த இறுமாப்புடன் இருந்தேன் என்றே சொல்லலாம்.ஆனால அது பொய் என்று விஜய் டிவி நீயா நானாவின் சில வார நிகழ்ச்சிகளின்
மூலம் தகர்த்துவிட்டது.விஜய் டிவி தாலியில் நடத்திய கேலி, இன்னும் மறக்க முடியாதது. இது ஒருபுறமிருக்க, விஜய் டிவியின் ஒரு நிகழ்ச்சியில் அதே கோபிநாத் தாலிகட்டும் கல்யாண நிகழ்வையும் காண்பிக்கிறது. ரஜினி மகள்
கல்யாணத்தையும் ஒளிபரப்புகிறது. அப்போ, எது சார் உண்மை? ஊருக்கு உபதேசமா? கோபிநாத் அன்று அந்த நிகழ்ச்சியில் ஒன்றும் அடித்து பேசவில்லையே? நடுநிலையாக பேசவில்லையே? விஜய் டிவி அவருக்கு அந்த சுதந்திரத்தை
மறுத்துவிட்டதா? வியாபார நோக்குனுடன் நடத்தபடும் இந்த நிகழ்ச்சியின் பல தலைப்புகள் அதற்காகவே வடிவமைக்கப்படுன்றன என்பதை நினைக்கும் போது மிகுந்த வேதனையடைகிறேன்.

என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், வியாபாரம் இல்லாமல் ஒன்றுமில்ல்லை. ஓத்துக்கொள்கிறேன்.ஆனால் அதுவே எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் ஒன்றாக (மூலப்பொருளாக) இருந்துவிடக்கூடாது என்பதுதான்.

“Truth and Quality should not be compromised for Money/Business”.
கடந்த 05/09/2012 நிகழ்ச்சியான மருத்துவர்கள் – தாய்மார்கள் நிகழ்ச்சி பார்த்தேன், ரசித்தேன். என்னுள் சில கேள்விகள் எழுந்தன. சில கேட்கப்படாத அல்லது கேட்டு நிராகரிக்கப்பட்ட (தணிக்கை செய்யப்பட்டிருக்கலாம்).

1. மருத்துவர்கள் பேசும்போது சித்த மருத்துவத்தில் எதற்கும் உத்திரவாதம் கிடையாது என்று சொன்னார்கள். அவர்கள் மருத்துவம் பார்க்கும்போது, உத்திரவாதம் தருகிறார்களா? எந்த மருத்துவரும் இதை சாப்பிட்டால் சரியாகிப் போய்விடும்
என்று சொல்லிக் கொடுப்பதில்லை. மாறாக மூன்று நாள் இந்த மருந்தை கொடு, சரியாகவில்லையெனில் மீண்டும் வா என்றுதான் சொல்கிறார்கள்.அவசர நிலையில் உள்ள ஒரு நோயாளியை குணப்படுத்தும் போதும் கூட அவர்கள் பொறுத்திருந்து
பார்க்கவேண்டும் என்றே சொல்கிறார்கள்.

2. அலோபதி என்ற மருந்துகளுக்கு துடக்கம் என்ன? ஒரு மருந்து பல ரசாயனங்களால் தயாரிக்கப்படுகிறது. அந்த ரசாயனத்தின் ஆரம்பம் என்ன? அவர்களால் சொல்ல முடியுமா?

3. மருத்துவர்களின் (தனியார்)மருத்துவமனைகளில் அவ்வப்போது நான் மருத்துவ பிரதிநிகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் மருத்துவர்களிடம் புதிதாய் வந்த சில மருந்துகளை அறிமுகம் செய்து அந்த மருந்தையே பார்க்கவரும்
நோயாளிகளுக்கும் மருந்தை எழுதித்தருமாறு சொல்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு தனியாக பணம் கொடுக்கப்படுகிறதா என்பது இங்கு அவசியமில்லாத கேள்வியானலும், உமர் ஃபரூக் சொல்வதைப் போல இவர்கள் தனிப்பட்ட முறையில் மீண்டும் ஒரு சோதனை செய்து அல்லது பயன்பாட்டு சோதனை செய்தா எழுதித்தருகிறார்கள்?

4. மருத்துவர்கள் வரிசையில் உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவர் என் குழுந்தைக்கு இதுபோன்று வீட்டு மருந்து கொடுத்ததில்லை ஆனால் என் பிள்ளை நன்றாகவே இருக்கிறான் என்று சொன்னது அப்பட்டமான பொய். இதை நிரூபிக்க அவர்
மனைவியையும் உட்கார வைத்திருந்தாலே போதும். மற்றும் வீட்டிலேயே டாக்டர் இருந்தால், இது சாத்தியமே. இதில் ஆச்சர்யம் ஒன்றுமே இல்லை. எதிரில் உட்கார்ந்திருந்தவர்களில் எத்தனைபேர் வீட்டில் மருத்துவர்கள் இருக்கிறார்கள்?

5. மஞ்சளும், இஞ்சியும், துளசியும் உடம்பிற்கு நல்லது என்று உலகளவில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதை இல்லை என்று இவர்கள் கூறுவது இவர்களின் வியாபார நோக்கையே காட்டுகிறது. நான் 25 லட்சம் செலவு செய்து மருத்துவம்
படித்திருக்கிறேன், என்னிடம் வராமல் எப்படி நான் திரும்ப அந்தத் தொகையை சம்பாதிக்க? என்ற உயரிய நோக்கையே வெளிப்படுத்திகிறது.

6. இந்தியாவில் ஸ்வைன் ஃப்ளு தாக்கப்பட்ட சமயம், பல மருத்துவர்களின் ஆராய்ச்சியிலும் நாம் சமையலில் மஞ்சள் உபயோகப்படுத்துவதின் ரகசியமே நம் நாட்டில் அதன் பாதிப்பு குறைவாக இருப்பதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.இதை
மறுப்பார்களா? மஞ்சள் ஒரு காக்கும் மருந்து என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதை நகத்தில் போடுவது நகத்திற்கு நல்லதே.

7. உட்கார்ந்திருந்த அனைத்து மருத்துவர்களில் பெரும்பாலானோர் 60/70களில் பிறந்தவர்கள் தெரிகிறார்கள். யாரும் சுத்த சென்னைவாசிகளாக இருக்க வாய்ப்பில்லை. இது அவர்கள் பேசும் தமிழிலேயே ஆங்காங்கே வெளிப்படுகிறது. அப்படியிருக்க அவர்கள் குழந்தையாக இருந்த போது அவர்களுக்கும் பாட்டி வைத்தியமே கொடுக்கப்பட்டிருக்கும். எனவே அவர்கள் இன்று ஆராக்கியமாக நல்ல மருத்துவர்களாக விளங்குவதற்கே பாட்டி வைத்தியம் ஒரு நல்ல
அடிப்படையாக இருந்திருப்பதற்கு ஒரு உதாரணம். இதுவும் கூட ஏன் கேட்கப்படவில்லை என்பது எனக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது.

8. அலோபதி மருந்துகளுக்காகவே சில நோய்கள் உருவாக்கப்படுகிறது யாரும் அறிந்த ஒன்று. பூரணமாக குணமாக்கும் மருந்தை கண்டுபிடிக்காததின் பின்ரகசியமும் இதுதான் – “வியாபாரம்”.

9. வெந்தயம் சாப்பிட்டால் சர்க்கரை குறையும். அவர்களின் இன்சூலின் மட்டும் முழுவதுமாக குணப்படுத்துகிறதா?

இந்தக் கேள்விகள் அவர்களிடத்தில் கேட்கப்பட வாய்ப்புகள் இருந்தால், என்போன்ற வெகுஜனத்தின் சார்பில் கேட்குமாறு விஜய் டிவியை கேட்டுக்கொள்கிறேன்.

இதுபோன்ற சிந்தனைகளை கேள்விகளை என்மனதில் தோற்றுவித்ததற்கு விஜய் டிவிக்கு மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்

3 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.