கொஞ்சம் பேசணும்

மிகவும் ரசித்த ஒரு ஜோக்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காதல் மீட்டர் நிகழ்ச்சியை நடத்தும் சுரேஷ் (அவரே ஒரு காமெடி பீஸ் தான் !) சொன்னது.
மனைவி: என்னங்க இன்னிக்கு என்ன சமைக்கட்டும்? ரசமா இல்ல சாம்பாரா?
கணவன்: முதல்ல நீ பண்ணு. அப்புறம் அது எப்படி வந்திருக்குங்கறத வச்சி, அதுக்கு பேர் வச்சிக்கலாம்.
மனைவி: !##@!$%%^$^

மிகவும் நொந்த ஒரு விஷயம்:

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலும், காமன் வெல்த் கேம்ஸ் ஊழலும். அது எப்படிங்க கொஞ்சங்கூட ஒரு மனசாட்சியே இல்லாம இப்படி பணத்த சுரண்டறாங்க? என்னதான் பணத்தாசை இருந்தாலும், இவ்வளவா? இதுல பல பங்கு வர்த்தகம் ஆகியிருந்தாலும், ஒரு தனிப்பட்ட நபருக்கு கிடைக்கக் கூடிய தொகை நம் வாழ்க்கைத் தரம் போல வாழ்ந்தால், இரண்டு மூன்று தலைமுறைக்கு சேருமே. அப்போ இதுவரை சேர்த்ததும் இனிமே சேர்க்கப் போவதும்? புரியல, இவங்க என்ன பணத்தை சேர்த்து ஒரு மாநிலமா வாங்கப் போறாங்க? ஒரு சலிப்பு வராதா? இது போல சேர்ந்தாற்போல ஊழல் நடப்பது ஆச்சர்யமில்லையென்றாலும், இதற்கு இன்னும் மக்களிடத்தில் பெரிதாக சலசலப்பு ஏற்படாதது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு புரட்சி வெடித்திருக்க வேண்டும். மாறாக வீதியிலும், அலுவலகத்திலும் பொழுதுபோக்குவதற்காக மட்டுமே பேசப்படுகிறது.

ஜெயா தொலைக்காட்சி ஸ்பெக்ட்ரம் பற்றி பேசுவது போல காமன் வெல்த்தையும், வீட்டு கடன் (எல்.ஐ.சி) ஊழலையும் பேசுவதாக தெரியவில்லை. உள்நோக்கம் அடுத்த தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்தி தான் அமர்ந்து தன்னால ஆனவரை சுரண்டுவது தானே. பிறகு மற்றவை பற்றி அவர்களுக்கு என்ன கவலை.

இதுவரை தமிழக முதல்வரோ, நாட்டின் பிரதம மந்திரியோ இதற்கு எதிர்கருத்தோ, அல்லது மக்கள் பணம் சுரண்டப்படுவதை பற்றியோ கவலையாகக் கூட ஒரு அறிக்கை விடவில்லை என்பது நம் அரசியல் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதையே காட்டுகிறது. நண்பன் இதை ஒரு ”கார்ப்பரேட் வார்”. ரிலையன்ஸ், டாடா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் தேவையே இந்த ஊழலுக்கு காரணம் என்று சொன்னபோது, நம் நாட்டை நிர்ணையிக்கும், மக்கள் பணத்தை சூறையாடும் சக்திகளாக இந்நிறுவனங்கள் செயல்படுவதை நினக்கும்போது பதறுகிறது. இன்னும் எந்தந்த இடத்தில் எவ்வளவும் பணம் சூறையாடப்படுகிறதோ என்ற எண்ணத்தையும் கிளப்புகிறது.

அடுத்த சந்ததியினருக்கு இந்தியா ஊழலில் வல்லரசு நாடக வரப்போவது எத்தகைய சாபம்?

இதெல்லாம் அதர்மம் இல்லை போலும், அதுதான் ஸ்ரீ கிருஷ்ணர் இன்னும் அவதாரம் எடுக்கவில்லை.

வேதனையும் சந்தோஷத்தையும் அளித்த ஒரு விஷயம்:

வேறென்ன மழையே. ஐப்பசி ஆரம்பத்தில் அலுவலகத்திற்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தேன். ஓட்டுனரிடம் பேச்சு கொடுத்ததில், ஐப்பசி ஆரம்பித்தும் இன்னும் மழையை காணோமே என்று இருவருமே வருத்தப்பட்டுக் கொண்டோம். எங்கே ஐப்பசியில் அடைமழை என்ற பழமொழி பெய்க்காமல் பொய்த்துவிடுமோ என்று எண்ணினேன். வந்தது மழை. வீட்டின் ஜன்னலிலோ அல்லது வாசற்கதவின் வழியாகவோ மழையை பார்க்கும்போது ஒரு கவிதையாக தோன்றும். இன்னும் வேகமாக பெய்ய, காற்றும் சேர்ந்து அதனுடன் (நம் நாட்டு அமைச்சர்கள் போல) ஒத்து ஊத,அதில் கிளம்பும் சாரல் நம்மில் படும்நேரம் பரவசம் அடையச்செய்யும், மனம் அமைதி காணும். குளிர்ந்த காற்று வீட்டின் கூலிக்கு (எலக்ட்ரிக் பில்) வேலை செய்யும் குளிர்சாதன பெட்டியை பொறாமை படச்செய்யும். இது சந்தோஷம்.

ஆனால் அதே மழை வலுபெற, இன்னும் இன்னும், போதாது போதாது என்று பெய்ய, தொலைக்காட்சியில் செய்திகள் பார்க்கும்போது நம்மை திட்டவைக்கும். ஆயிரக்கணக்கான பயிரடப்பட்ட நிலங்கள் சேதமாகியிருப்பதை பார்த்தால், நாம் ஜன்னலின் வழியாக மழைப் பார்த்து ரசித்த மனது இப்போது வலிக்கும். ஏழை (டிவியில் வந்து புலம்புவர்கள் எல்லாம் அல்ல) விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கி, வேர்வை சிந்தி பாடுபட்டு மழை வருமா, என் தாகத்தை தீர்க்குமா என்று நினைக்கும்போது, அடைமழை இடைவிடாமல் பெய்து அவர்கள் எண்ணக்கோலங்களை அழித்துவிட்டு செல்லும். இது இயற்கையென்றாலும், நகரத்தின் சொகுசு வாழ்க்கையில் ரோட்டின் மேடு பள்ளங்கள், தண்ணீர் தேங்கியிருப்பது என்று சில்லறை குறைகளை சொல்லும் என் போன்றோர்க்கு அது ஒரு பாடம்.

தம் வாழ்க்கையிலேயே பல பள்ளங்களை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கும் (உண்மையிலேயே) ஏழை விவசாயிகளை நினைக்கும் போது கலைஞர் பாஷையில் கண்கள் பனிக்கின்றன நெஞ்சம் கனக்கின்றன.

மிக அறுவறுப்பான தருணம்:

விஜய் டிவியில் கமலின் பேட்டி ”காஃபி வித் அனு”வில். அனு அளவு கூட யோசிக்காமல் அனு (பேட்டி காண்பவர்) போல பேசி தான் இதுகாலம் வளர்த்துவந்த ரசிகர்கள் அவர் மீது வைத்திருந்த மரியாதையை தானே போட்டு உடைத்தார் கமல். ஒரு கட்டுரையில் இதை பற்றி ஒருவர் விவரிக்கையில், ஆன்மீகம் ஒரு கட்டிலறை விஷயம் போல, அது நமக்கும் நம் குடும்பத்துக்கும் ஆனது சொன்ன கமல், அதே தான் ஆன்மீகத்தின் மீது கொண்ட சிந்தனையை தொலைக்காட்சியில் மைக் போட்டு பேசியது எந்தவிதத்தில் சரி என்று எழுதியிருக்கிறார். கேள்வி சரி சார், ஆனால் யாரிடம் கேட்கிறோம் என்பதுதான் தவறு. பதில் கிடைக்காத எந்தக் கேள்வியும் வீணே. அவர் படிக்க என் ஒரு பதிவு “யார் பகுத்தறிவாளர்”

இதில் நானும் என் நண்பர்களும் பேசிப்பேசி ரசித்த ஒன்று கமலின் கவிதை. அனு எசகுபிசகாக ஒரு கவிதை சொல்லுங்களேன் என்று கேட்க, கமலும் யாராவது இப்படி மாட்ட மாட்டார்களா என்றிருந்த தருணம் போல, அடித்து நிமித்துவிட்டார். கவிதை சொல்ல ஆரம்பித்தவர் நிகழ்ச்சி முடிந்து பேர் போடும் போது அந்தக் கவிதையை நிறுத்தவேயில்லை. ஒரு வேளை இந்தக் கவிதையைத் தான் அவர் வாலியிடமும் வைரமுத்துவிடவும் சொல்லியிருப்பாரோ என்னவோ. அதுதான் அவர்கள் மொக்கை தாங்காமல், கமல் இதி நீங்கள் ஒரு புத்தகமாக போடலாம் என்று சொல்லியிருப்பார்கள். இதை தவறாக புரிந்துகொண்டு கமல் அதை புகழ்ச்சியாக எண்ணிக்கொண்டிருக்கிறார்.

விருமாண்டிக்கு கேஸ் போட்ட புண்ணியவான்கள் போல தமிழ் ஆர்வலர்களும், ஆன்மீகவாதிகளும் அவர் மன்மத அம்பு படத்தில் ஒரு பாடலில் பிரபந்தத்தை, அந்தப்பாடல் முழுவதும் படர்ந்துகிடக்கும் கட்டில் இச்சைக்கு பயன்படுத்தியதற்கும் கேஸ் போடுவார்களா? மாட்டார்கள் என்ற தைரியம்தான் இவர் போன்றோர்க்கு. வலைதளத்தில் இந்தப் பாடல் முதலில் படித்த எனக்கும் இந்தப் படம் முன்பு சூர்யா டிவியில் நள்ளிரவு வேளையில் ஒளிபரப்பாகும் படமோ என்று நினைக்கத் தோன்றியது.

கமல் மொழியில் ஒருவரோ அல்லது பலரின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒன்றுதான் ஒரு சினிமாவின் கதையென்றால், அதில் அவரின் சித்தாந்தமான ”கட்டிலறை விஷயங்கள் அந்த அறயோடு” அடிபட்டுப்போது எப்படி?

இதுதான் மனிதநேயமா என்று யோசித்தத் தருணம்:

அப்பாவி சிறுவனையும் சிறுமியையும் பணத்துக்காக கடத்தப்பட்டு இருந்தும் அவனை கண்டந்துண்டமாக வெட்டி போட்ட கூட்டத்தை/கொலையாளியை (மனிதநேயம் என்றால் என்னவென்று தெரியாத) சுட்டுக் கொன்றதற்கு மனிதநேயம் (ஹ்யூமன் ரைட்ஸ் கமிஷன்) போலீசை குற்றம் கூறியது, காரணம் கேட்டது, மனிதநேயத்தின் மீதிருந்த காதல் குறைந்துபோனது. என்ன  என்றுதான் சொல்லவேண்டும். என்ன செய்திருக்கவேண்டும் என்கிறார்கள் இவர்கள்? அவனை பிடித்து ஜெயிலில் அடைத்து, அவன் திருந்துவான் என்று என்று நம்பிக்கை வைத்து, பின்பொரு நாளில், அண்ணா பிறந்தநாள், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் முதலாம் ஆண்டு தினம் என்று சொல்லி அவனை சிறையிலிருந்து வெளியேவிடவேண்டும் என்றா? அப்படி விட்டால், அவன் ஒரு புதுமனிதாக வாழ்வானா? முதலில் சிறையிலிருந்து வெளியான இவ்வகை குரூரக் கொலயாளிகள் இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு சர்வே எடுக்கவேண்டும், இப்படி தண்டனையை குறைக்கச் சொல்லி பிதற்றுவோர்.

பேசுபவர்களுக்கு எல்லாம் ஒரு பிரச்சனையும் வரப்போவதில்லை. அனுபவிப்பவர்கள் சராசரி மக்களே. பல திரைப்படங்களில் கூட தண்டனை கூடினால்தான் குற்றங்கள் குறையும் என்று சொல்லப்படுகிறது. அதுதான் உண்மை.

This entry was posted in Headline, அனுபவம், அரசியல், நாட்டு நடப்பு, பொது. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *