அமெரிக்காவில் ஒரு நந்தநந்தனதாசன்

மு.கு: இந்த படைப்பு வெறும் மொழி பெயர்ப்பே. இதில் சொல்லப்பட்டுள்ள அனைத்து கருத்தக்களுக்கும் மொழிபெயர்ப்பாளர் பொறுப்பல்ல. ஆன்மீகத்தைச் சொல்வதே இந்த மொழிபெயர்ப்பின் முக்கிய நோக்கமே தவிர, எந்த ஜாதி மதத்தையும், மக்களையும் புண்படுத்துவுதோ அல்லது குறைத்துச் சொல்வதோ அல்ல. இது ஸ்டீஃபன் நாப் என்பவரின் தன்னிலை மற்றும் அவரது அனுபவ விளக்கமே. தொடர்வது ஸ்டீஃபன் நாப்பின் கட்டுரை……

நான் எப்பொழுது இந்தியா சென்றாலும் எனக்குள் எழும் முதல் கேள்வி “ஏன் நான் ஹிந்துவாக மாறினேன்? அப்படியென்ன இருக்கிறது இந்தியாவிலும் அதன் கலாச்சாரத்திலும்?” என்பதேயாகும். ஒரு மேற்கத்தியனான எனக்கு ஏன் இந்தியாவின் மீது அதீத ஈடுபாடு? இந்தளவிற்கு இந்தியாவின் தொன்மையான புராதான வேதங்கள் ஏன் என்னை கவரவேண்டும்? மேற்கத்திய சமயம்/மதம் எனக்கு தேவையானதை தரமுடியாததாலா? இருக்கலாம்.

இந்தக் கட்டுரை நான் ஏன் சனாதன தர்மத்தை பின்பற்றுகிறேன் என்பதை பற்றியே தவிர எப்படி என்பதல்ல. இக்கட்டுரை அந்தக் கதையும் அடங்கியதே.

என்னுடைய இளம்வயதிலேயே நான் இந்த உலகத்தை சார்ந்தவனல்ல என்பதை உணர்ந்தேன். படித்தோமா, வேலை தேடினோமா என்று எல்லோரும் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைத்தான் நானும் வாழவேண்டுமா என்ற கேள்வி என்னை ஆக்கிரமித்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும். என் நண்பர்கள் கூட என்னை கேலி செய்தனர். எனக்கு இப்படிப்பட்ட, வழக்கமான, எல்லோரையும் போல வாழ்வதின் மீது வெறுப்புதான் அதிகமானது. நான் அதற்கு பிறக்கவில்லை என்ற எண்ணமே மேலோங்கி வளர்ந்தது. இருந்தும் நானும் இந்த சராசரி வாழ்க்கைக்கு தள்ளப்பட்டேன் என்பதுதான் நிஜம்.

இசை பயின்று என்னுடைய பருவ வயதில் ஒரு இசைக்கலைஞனானேன். இசையை மட்டுமே நேசித்தேன். மேற்கத்திய சங்கீதத்தில் பெயர் போன வாத்தியமான கிடார் பயின்றிருந்தேன். அதிலும் பேஸ் கிடார் வாசிப்பதில் தேர்ச்சிப் பெற்றிருந்தேன். பிறகலைஞர்களுடன் சேர்ந்து வாசித்து, இசையைப் பற்றி விவாதித்து என் நேரத்தை எனக்கு பிடித்தவகையில் போக்கினேன். இப்படியெல்லாம் வாழ்க்கையை கழித்தபோதும் என் பிறப்பிற்கான உண்மையான காரணத்தைத் தேடி மனம் அலைபாய்ந்து கொண்டுதான் இருந்தது. இந்தச் சிந்தனை என்னை நான் நேசித்த இசையைக் கூட என்னிடமிருந்து தள்ளிவைத்தது. தத்துவார்த்தங்களிலும், ஆன்மீக உணர்வுகளிலும் என் நாட்டம் அதிகரித்தது. இதனுள் சென்றாவது என் கேள்விக்கான விடையை கண்டறியலாம் என்ற நப்பாசைதான்.

ஏனைய அமெரிக்கர்களைப் போலவே ஒரு கிருத்துவனாக பிறந்து வளர்ந்த எனக்கு பைபிள் புதிதில்லை என்றபோதும் பைபிளை முழுவதுமாக புரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். வழக்கமாக ஞாயிறுகளில் மட்டுமல்லாது, தேவாலயத்தில் வாசிப்பதையும் தவிர, தனிமையில் பைபிளை நிறைய படித்தேன். பக்கத்துக்கு பக்கம், முழுவதுமாக. ஒரு முழு வருடம் தேவைப்பட்டது எனக்கு. நேரம் எடுத்தாலும் படித்தே தீரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து படித்தும் முடித்தேன். என்னுடைய பல தத்துவார்த்தக் கேள்விகளுக்கு பைபிள் விடை தரவில்லை என்பதே உண்மை. நீதியையே போதித்தது பைபிள். என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது போன்றவைகளையே போதித்தது. ஆனால் இது என் ஆன்மிகப் பயணத்தின் ஆரம்பமென்று நினைத்தேன். இது ஆன்மீகத்தில் என்னுடைய தேடலை அதிகரித்தது.

உண்மையென்னவென்றால் எந்த மதங்களுமே நம்பிக்கையின் அடிப்படையில் ஆரம்பித்து ஊடே எந்தவித ஆன்மீக அனுபவத்தையும் அறிதலையும் கொடுக்காமல் அதே நம்பிக்கையிலேயே முடிந்து போகிறது. தன்னிலை அறிதலுக்கும் சுயஉணர்வை தூண்டும் வகையிலும் அனேக மதங்களில் காணக்கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். என்னுடைய தேடல் இன்னும் முடியவில்லை என்பதை உணர்ந்தேன்.

என்னுடைய இந்தக் கேள்விகள் அப்படியொன்றும் கேட்கப்படாத கேள்விகளல்ல. யாரும் இதுவரை கேட்டிராதவைகளும் அல்ல. இது சக மனிதனின் கேள்விகளே. அது எப்போது வருகிறது என்பது மட்டுமே வித்தியாசப்படுவதேயன்று வராததல்ல. பைபிள் கடவுளை பற்றி என்ன சொல்கிறது? அவர் எந்த வடிவத்தில் இருப்பதாக சொல்கிறது? எரியும் நெருப்பாகவோ அல்லது ஒரு வாத்தின் வடிவமாகவோ என்று சொல்கிறது. அதற்கு மேல் அதில் ஒன்றும் இல்லை. அதோடு நின்றுவிடமால் அவர் கோபக்காரர் என்றும் பொறாமைக்காரர் என்றும் சொல்கிறது. இவ்வுலகையே படைத்தவன் அவன் என்று சொல்லும் பைபிள் அவனிடம் ஒன்றுமில்லையென்றா சொல்கிறது. பொருந்தவில்லை என்று எனக்குப்பட்டது. ஒருவேளை இது மனித இயல்பின் அடையாளமோ? அப்படியிருப்பின் பைபிளில் உருவகப்படுத்தப்பட்ட கடவுள் கடவுளே அல்ல. அது வெறும் மனிதனின் உவமானமாக மட்டுமே இருக்கவேண்டும்.

பைபிள் ஆத்மாவைப் பற்றியோ, நம் ஆன்மிக இயல்பைப் பற்றியோ அல்லது கடவுளுடனான நம் சம்பதந்தத்தைப் பற்றியோ சொல்லவேயில்லை. இது ஆன்மிக அறிவை வளர்த்துக் கொள்ள போதுமானதாக இல்லை. இன்னும் ஆன்மீகத்தைப் பற்றியான பல கேள்விகளுக்கு பதில் இல்லாமலேயே இருக்கிறது. நம் தனிப்பட்ட நம்பிக்கையையே சார்ந்து இருக்கச் செய்கிறது. பைபிள் உருவாக்கத்தின் முக்கிய காரணமே கடவுளை நம்மை கடவுளிடம் சேர்ப்பதே என்பதில் சந்தேகமில்லை. அப்படியிருக்க அது ஏன் நமக்கு ஆன்மீகத்தைப் பற்றி ஒரு ஆரம்பத் தகவலை மட்டுமே தருகிறது.

தேவாலயத்தில் கர்மாவைப் பற்றியும் மறுபிறப்பைப் பற்றியும் விளக்க எடுத்துக் கொண்ட மேற்கோள்கள் எனக்கு பிற்காலத்தில் பக்தர்கள் தேவாலயத்தின் தேவைகளுக்காக பயன்படுத்த கூறப்பட்டவைகளாகவே தோன்றின. மரியாதையை விரும்புபவர் கடவுள் என்றும் அதை காட்டத் தெரியாதவன் கிருத்துவனாக இருக்க முடியாதென்றும் கூறியது தேவாலயம். சரி இங்கேயும் என்னுடைய கேள்விகளுக்கு பதில் இல்லை. எங்கே செல்லலாம்? யாரை கேட்கலாம்? எந்த புத்தகத்தில் இருக்கும்? தேடலை தொடர்ந்தேன்.

ஜுடையிஸத்தை படித்தேன், எகிப்து என்ன சொல்கிறதென்று பார்த்தேன், கைரேகை, டாரட், ஜென் புத்திஸம், யோகக்கலை என்று சகலத்தையும் கற்று ஆராய்ந்தேன். குரானையும் விட்டுவைக்கவில்லை.குரான் ஆன்மீகத்தை பெரிதும் போதிப்பதில்லை. அது சாசுவதமான ஆனிமீகத்தை சொல்லவில்லை. மாறாக அதுவும் கூட கடவுளை கடுமையாகவே உருவகப்படுத்துகிறது. இது குரான் வாசித்தவர் அறிவர். வேதா இலக்கியங்களில் போல் அவ்வளவாக ஆத்மாவைப் பற்றி விரிவாக சொல்லவில்லை. இஸ்லாமியத்தை பின்பற்றாத அனைவரையும் தண்டிக்கும் ஒருவராகவே அல்லாவை அறிமுகப்படுத்துகிறது. அதே சமயம் அவர் அன்பையும் பறைசாற்றுகிறது. ஆனால் இந்த அன்பு ஒரு இஸ்லாமியருக்கோ அல்லது இஸ்லாம் மதத்துக்கு மாறுபவருக்கு மட்டுமே என்கிறது. இதுதான் கடவுளா? என்னால் நம்பமுடியவில்லை. இப்படி பாராபட்சம் பார்ப்பவனா இந்த உலகையும் படைத்து நம்மையும் படைத்து காப்பவன். நிச்சயம் இருக்காது என்ற தீரமான எண்ணத்தோடு தேடலைத் தொடர்ந்தேன்.

ஒவ்வொரு மதமும் ஒன்றிலிருந்து மாறுப்பட்டவை என்று தெளிந்தேன். நிச்சயமாக ஒவ்வொரு மதங்களும் ஆன்மீகத்தில் ஒரு நிலையை உணர்த்துகிறது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பைபிளோ குரானோ மனிதனை செதுக்குகிறது என்பது நான் படித்தறிந்தது. ஆனால் அவைகள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதை மட்டுமே சொல்கிறது. குரானும் பைபிளும் மனிதனை ஆன்மீகப்பாதையில் இட்டுச் செல்லும் ஒரு வழிகாட்டி. அதில் எந்தவித சந்தேகமும் எனக்கும் இல்லை யாருக்கும் இருக்காது. ஒரு முறை தவறிழைத்துவிட்டால் சொர்க்கம் கிடையாது என்று சொல்லும் இதர மதங்களும் எனக்கு சரியாகப் படவில்லை. நம்பிக்கை மட்டுமே மனிதனை சொர்க்கத்திற்கு அழைத்து செல்வது இல்லை.

ஆன்மீகத்தை உயரிய கோணங்களில் பார்த்து நம் உணர்வை மாற்றிக் கொண்டும் அதை நடைமுறைபடுத்துவதின் மூலமே இது சாத்தியம் என்று தோன்றியது.

என்னுடைய கேள்விகளுக்கு விடைகான ஆன்மீகத்தில் எனக்கு இன்னும் மேலான புரிதல் தேவைப்பட்டது. மனிதனை புண்ணியம் செய்தால் சொர்க்கம் என்றும் பாவம் செய்தால் நரகம்  என்றும் சொல்லும் பயமுறுத்தும் மதங்களும் அதன் கோட்பாடுகளும் எனக்கானது இல்லை என்று முடிவுசெய்தேன். நாம் எல்லோருமே சொர்கத்துக்கு போகவே இந்த ப்ரயத்தனப்படுகிறோம். தேவாலயத்தை சாராமால் போகமுடியாதென்றோ, எல்லோரும் ஒத்துக்கொண்ட ஒன்றை மட்டுமே பின்பற்ற வேண்டுமென்றோ கூறும் ஆன்மீகப்பாதை எனக்கு சரியாகப்படவில்லை. இது அறிவுப்பூர்வமாக தோன்றவில்லை. எனக்கு இயற்கையாக நிதானமாக அதே சமயம் படிப்படியாக இட்டுச்செல்லும் ஆன்மீகப்பாதையே தேவைப்பட்டது.

கடைசியாக நான் வந்து சேர்ந்தது பகவத் கீதையிடம். என் இத்தனை நாள் புதிருக்கான விடையாக இருந்தது என்று சொல்லலாம். என் தேடலுக்கான அனைத்தும் இதில் கிடைத்தது. என்னைப் பற்றிய என் பிறப்பின் காரணத்தைப் பற்றிய தேடலுக்கு இது வடிகாலாகவும் வழிகாட்டியாகவும் இருந்தது. இது ஒரு நல்ல ஆரம்பமாக இருந்தது. வேதத்தின் மீது நம்பிக்கை தந்தது. நான் மேலும் உபனிஷத், வேத சூத்திரங்களும், யோக சூத்திரங்களும் படித்தேன். புராணங்களை புரட்டினேன். இதிகாசங்களை இம்மியளவு விடாமல் படித்தறிந்தேன். இவையனைத்தும் எனக்கு பிறப்பின் காரணத்தின் மீது அழுத்தமான ஒரு சிந்தனையை கொடுத்தது, மேலும் நான் இவ்வுலகைச் சார்ந்தவனல்ல என்றும் புரியவைத்தது.

என் பள்ளிகாலத்தில் நான் இங்கேயே இருப்பேன், நிரந்தரமாக இருப்பேன் என்று பயிற்றுவித்ததை போல் இல்லை. அது என் பெற்றோர்களின் நிர்பந்தத்தால் கிடைத்த அறிவு. இந்த கிரகத்தில் நான் ஒரு பயணி என்று கற்றுணர்ந்தேன். நான் கிழக்கத்திய காவியங்களை படித்தபோது நாம் எந்த மதத்தவராயினும் எல்லோருமே கடவுளுடன் சம்பதப்பட்டவர்கள் என்று கண்டறிந்தேன். நாம் செய்யவேண்டியதெல்லாம் அந்த கடவுளுடனான அந்த உறவை அறிந்து புதுபித்து கொள்ளவேண்டியதே. வேத சாஸ்திரங்கள் பலவழிகளை சொல்லிக் கொடுக்கிறது. குரு, ஆசான், புனித நூல்கள், கோவில், வழிபாடுகள், யோகக்கலை என்று பல வழிகளைச் சொல்கிறது. ஆனால் இது எதுவுமே நம் மேல் திணிக்கப்படுவதில்லை.

வேதத்தின் வழியில் நாம் நம் வேகத்துக்கு செல்லலாம், நமக்கு நன்கு தெரிந்த முறையில் செல்லலாம், நமக்கு அந்தந்த சமயத்தில் ஆன்மீகத்தை பற்றி எவ்வளவு தெரியவேண்டுமென்று நினைக்கிறோமோ அந்தளவிற்கு தெரிந்து கொண்டு ஆன்மீகப் பாதையில் செல்லலாம். நம் முன்னேற்றம் எதுவுமே நம்முடனே அழியாமல் இருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சம். நாம் ஆன்மீகத்தை முழுமையாக தெரிந்து கொள்ள நம் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். ஒவ்வொருவரும் அவரவர் வேகத்தில் பயணிக்கலாம். மேற்சொன்ன வழிகளில் நமக்கு எது சிறந்ததாக இருக்குமோ அதை பின்பற்றி வாழ்க்கையின் அர்த்தத்தை அறியலாம், கடவுளை தெரிந்து கொள்ளலாம், முக்கியமாக நம்மை நாம் உணரலாம்.

வெறும் ஆன்மீகக் கண்ணோட்டத்திலோ அல்லது ஆன்மீகம் என்பது என்பதில் மட்டும் என் தேடலை நிறுத்திக் கொள்ளவிருப்பமில்லை. எல்லோருக்கும் மேல் ஒரு சக்தியுள்ளது என்பது நான் முன்பே பைபிளின் மூலமே தெரிந்துகொண்டுவிட்டேன். அவர் என்ன செய்வார், எப்படி இருப்பார், அவருடைய குணாதிசயங்கள் என்னென்ன, அவர் எவ்வளவு எப்படி தன் பக்தர்களிடத்தில் அன்பு செலுத்துகிறார் என்று எதையுமே எனக்கு மற்றவை விளக்கத் தவறியது. எனக்கு என் சொந்த அன்பவத்திலிருந்து தெரிந்து கொள்ள ஆசை. மனித இயல்பு தன்க்கென்று ஒன்று நேர்ந்தால்தானே எதையுமே ஒத்துக்கொள்கிறது. நான் அதிலிருந்து துளியும் வேறுபட்டவன் அல்ல.

இந்து மதம் உள்பட அனைத்து மதங்களுமே அறியவியற்தனமான செயல்முறையையே போதித்தன. இது நீடித்தது நான் பகவான் கிருஷ்ணனின் போதனைகளை படிக்கும்வரையே. முக்கியமாக பகவத் கீதை அதன் பின் பாகவத புராணங்களை படிக்கும்வரை. அவைகள் எனக்கு வாழ்க்கையைப் பற்றியும் நம்மிள் இருக்கும் ஆன்மீக உணர்வைப் பற்றியும் ஆழ்ந்த உயரிய தெளிவை கொடுத்தது. ஆன்மீகத்தை நான் ஒரு கல்வியாக கற்க விரும்பவில்லை. கல்விமுறையில் அனுபவங்கள் இருக்காது. அவை தப்பாக இருக்கவும் வாய்ப்புண்டு. தத்துவஞானிகள் தாங்கள் நேரடியாக அனுபவிக்காத ஒன்றை நமக்கு போதிக்கிறார்கள். ஆன்மீகத்தை பொறுத்தவரையில் அனுபவரீதியாக கிடைக்கப்படும் அறிவே சிறந்தது. ஒரு பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பின் மூலம் ஆத்மாவை அறிதலும், பிறப்பின் காரணத்தை அறிதலையும் அடைவதை கைவிட்டு, நேரடியாக நானே அதை அனுபவப்பட ஆசைப்பட்டேன்.பல நூறு வருஷங்களாக இருந்துவரும், பலனளித்து வரும் ஆன்மீக கட்டுப்பாடுகளை பின்பற்ற முடிவு செய்தேன். அப்படி முடிவுசெய்து ஒரு ஆன்மீக குருவையும் தேர்ந்தெடுத்து அவரின் வழிகாட்டுதலின்படி ஆண்டாண்டு காலமாக அழியா புகழ்பெற்ற பயிற்சிகளில் ஈடுபடுத்திக் கொண்டேன்.

இப்படி சொந்தமாக நானே ஈடுபடுத்திக் கொண்ட இந்த வழிப்படிப்பில் நான் உண்மையான ஆவலுடன் யோகக்கலையை பயின்று அந்தக் கலைக்கே தொண்டனானேன். ஏனென்றால் இந்த வழிமுறை ஒருவனின் ஆன்மீக உணர்வுகளை கண்டறிய உதவுகிறதோடு மட்டுமல்லாமல் ஆன்மீகத்தின் கோணங்களில் ஆழ்ந்த சுயசிந்தனையை தூண்டுகிறது. இது கடவுள் இருக்கிறார் எனற நம்பிக்கையை மட்டும் தருவதில்லை மாறாக கடவுளை பற்றிய விளக்கங்களை தருகிறது, நமக்கான அனுபவத்தை தருகிறது. நாம் எந்தளவிற்கு ஆன்மீக ரீதியாக ஈடுபடுத்திக் கொள்கிறோமோ அந்தளவிற்கு ஆன்மீகத்தை நமக்கு போதிக்கிறது. ஆன்மீகம் கண்ணுக்கு தெரியாதது அல்ல. ஆத்மாவை கண்டறிதல் அப்படியொன்றும் கஷ்டமில்லை. பிறப்பின் ரகசியத்தை அறிந்துகொள்வது முடியாத காரியமல்ல.

இப்படியாக நான் பக்தி யோகத்தை கற்று பின்பற்ற தொடங்கினேன். கண்ணனின் பக்தானகவும் ஆனேன். ஒரு ஆசிமரத்தில் தங்கி பயிற்சி செய்தேன், படித்தேன். முறையான வழிமுறையில் ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட்டும், கோவில்களுக்கும் சென்று, பூஜைகளை மேற்கொண்டு பிரம்ம-கவுடியா சம்பிரதாயப்படி ஸ்ரீலா ஏ.சி. பக்திவேதாந்தா ஸ்வாமி பரபுபாதாவிடம் சீடனானேன். அதன்பின் என் பெயர் நந்தனந்தனதாசா என்று மாற்றப்பட்ட்டது. பல மாதங்களுக்குப் பிறகு நான் பிரமனனாகவும் மாறினேன்.

நான் கிருஷ்ண பக்தனாவதற்கு பல காரணங்களுள் முக்கிய காரணம் கிருஷ்ணன் நிபந்தனையன்றி அன்பு செலுத்துபவர் என்பது. அவர் சனாதன தர்மத்தை நிலைநிறுத்த பகவத் கீதையை வழங்கியவர். குருக்‌ஷேத்திரத்தில் அர்ஜுனன் கலங்கிப் போய் சண்டையிட மாட்டேன் என்று கூறிவிட்டு தான் காட்டுக்கு சென்று தியானம் செய்யப்போவதாக கூறியபோது பரமாத்மா அவனை தடுத்தாக்கொண்டார். தன் கடமையைச் செய்வதே சிறந்ததென்றும் தர்மத்தை நிலைநிறுத்த எழுகொள்ள வேண்டும். இது நமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் நலனை பயக்கும். மற்றவர்களுக்காக வாழும்போதே ஒருவன் தனக்காகவும் வாழ்கிறான். நம் உதவியால மற்றவர்கள் அடையும் வளர்ச்சியின் மூலம் நமக்கு சிறிதளவு புண்ணியம் வந்து சேர்கிறது. இப்போது நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். சனாதன தர்மத்தை பயிற்சி செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் வேத சூத்திரங்கள் பாதுக்காக்கவும், அதை பிரபலப்படுத்தவும் அல்லது மற்றவருக்கு அதை பற்றி விளக்கவும் செய்துகொண்டிருக்கிறேன். அதை உபயோகப்படுத்தி அதனால் ஒருவர் பயனடைவதே என் நோக்கம்.

This entry was posted in Featured, Headline, அனுபவம், சிந்தனைகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அமெரிக்காவில் ஒரு நந்தநந்தனதாசன்

 1. S.Ravishankar says:

  அன்புள்ள சாராதி

  நண்பா உன் பதிப்பை படித்தேன் அருமை அருமை.

  அன்புடன் ரவிசங்கர்

  • நன்றி ரவி…

   இப்பொழுதும் ஒன்று எழுதியிருக்கிறேன்…படித்துவிட்டு குறை நிறைகளை சொல். உன்போன்றோர் கருத்துக்கள் என் எழுத்தை சீர்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *