வழக்கம் போல இன்றும்…..

வழக்கம் போல ரொம்ப நாள் எழுத எந்த நல்ல, கெட்ட, முக்கியமான, முக்கியமில்லாத விஷயங்கள் எவ்வளவோ மனதளவில் முக்கிப்பார்த்தும் எதுவும் தோணாமல் போக, கொஞ்ச நாளாக அலுவலகத்தில் வேலை முடித்துவிட்டு கிளம்பும் போதே கக்கத்தில் தினசரி பேப்பரைப் போல ஏதாவது ஒரு வேலையை கொடுத்து அனுப்ப, வீட்டிலும் என் மனைவி இரண்டாவது குழந்தையை பிரசவிக்க தயாராக இருக்க, சுருங்கச் சொன்னால் எழுத நேரம், எண்ணம் கிடைக்கவில்லை. இதை சுருங்கவே சொல்லியிருக்கலாமே என்று நினைத்துக் கொண்டிருக்கும் எனதருமை (முன்பு ஒரு பதிவில் இதை எனதெருமை என்று படிப்பதற்கு நான் காரணமல்ல என்று எழுதிவிட்டேன். அதையே டிஸ்கியாக வைத்துக் கொள்ளவும்) வாசகர்களுக்கு நான் கொடுக்க நினைக்கும் விளக்கம் ஒன்றுதான். சுருங்கச் சொன்னால் சி.மா.சே(நன்றி சத்தியமூர்த்தி.காம்), அதையே மசாலா வேர்கடலைப் போல சொன்னால் பதிவு. ஆகவே இது பதிவு (அப்ப்ப்பா…ஒரு வழியாக சமாளித்துவிட்டாகிவிட்டது).

இப்போது மனம் மாறி இதை பதிவாக (விரிவாக என்று அர்த்தம் கொள்ளவும்) படிக்கவிருக்கும் எனதருமை (ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி) வாசகர்களுக்கு, நான் இந்தப் பதிவில் என்ன எழுதப் போகிறேன் என்று இந்த நிமிஷம் வரை எனக்கே தெரியாது. ஆனால் எழுதவேண்டும் ஒரு முடிவெடுத்துவி்ட்டால் என் பேச்சை நானே கேட்கமாட்டேன் என்பது என்னை அறிந்த பல உள்ளூர் (நெருங்கிய, உறவின வாசர்கர்கள்) வாசகர்களுக்கு தெரியும்.

நம் தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது அப்படியொன்றும் கஷ்டமான வேலையில்லை. எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அந்த நட்சத்திரத்தின் பெயர் அல்லது அந்த நட்சத்திரத்தில் அவதரித்த நித்தியமாக இருக்கும் ஆனந்தன் (நான் நித்யானந்தத்தைச் சொல்லவில்லை) பெயரில் ஒன்றை ஒரு பெயராக வைத்திவிடலாம். அடுத்து நம் தந்தை, தாயார், தாத்தா, பாட்டி, மாமா என்று நெருங்கிய மற்றும் காலம் சென்றவர்களை அவர்கள் ஆத்மாவே திரும்ப வந்து பிறந்ததாக நினைத்துக் கொண்டு, அவர்களது நினைவாக இரண்டாவது பெயர். என் போல் இரண்டாவதை பெற்றவர்களுக்கு, முதலாவதாக பிறந்த குழந்தையின் பெயரின் ஆரம்ப எழுத்தை கொண்ட பெயரை வைத்தால் ரிதமிக்காக இருக்கும் (உதாரணம்: என் முதல் மகன் பெயர் ராமானுஜன், இரண்டாமவனுக்கு ரகுநந்தன். இரண்டும் “ர” குறில் அல்லது ”ரா..ஆ” நெடில் (நம் அப்துல் ஹமீது போல படித்துக் கொள்ளவும்)). பி.எல். எஸ்.கியூ.எல். கணக்கில் ப்ராகெட்டுக்குள் ப்ராகெட் போட்ட முதல் பதிவன் நானாகத்தான் இருப்பேன். மூன்றவதாக ஒரு பெயரை நீங்கள் யோசிப்பதற்குள் அந்நேரத்திற்கு உங்கள் அன்பு மனைவி மற்றும் அவரது சுற்றத்தார் மூன்று பெயருடன் தயாராக இருப்பார்கள். தாயாரான அவருக்கு உரிமையில்லையா என்ன? அதுதான் இப்போது 33% வேறு கிட்டத்தட்ட வந்துவிட்டதே.

இது போல வீட்டு விசேஷங்களில் நடக்கும் இன்னொரு தமாசு ஒருவருக்கொருவர் வார்த்தை, அன்பு, சமாச்சார், உபசரிப்பு பறிமாற்றிக் கொள்வது. அதுதான் சாப்பாடு பறிமாற இப்போதெல்லாம் ஆட்கள் கேட்டரிங் முறையில் வந்துவிடுகிறார்களே. “அப்புறம் என்ன ஆபீஸ் எல்லாம் எப்படி போகுது, ஓ…நீங்க போன வாரம் அங்க வந்திருந்தீங்களா..? நான் கூட கடைக்கு போயிருந்த போது வெலைய பார்த்தேன் ரொம்ப அதிகம்தான்….இப்பெல்லாம் நாம் ஒண்ணும் கேட்க முடியாதுங்க…ஆக்‌ஷுவலி இந்த மசோதாவை வரவேற்கணும்….பின்ன போன மாசம் தங்கம் என்ன விலை இருந்தது சொல்லுங்க….எல்லாம் இவங்களே ஏத்திவிடறாங்க….சுப்பிரமணியசாமி சொன்னது கரெக்ட்டுதான்…எங்காத்துல கூட இதே கதைதான்…வீட்டுக்கு வீடு வாசப்படி” என்று லோக்கல் மார்க்கெட் ஆரம்பித்து, ஆபீஸ் சமாசாரத்தில் புகுந்து, அரசியல், சுகாதாரம், சர்வதேச சந்தை போன்றவற்றில் வாய்வைத்து கிளை கிளையாக தாவி பேசி முடிப்பார்கள். இதில் விசேஷம் எந்த ஒரு விஷயத்திலும் முழுதாக பேசமாட்டார்கள். தொடங்குவது என்னவோ “ஏன் நான் ஃபங்க்‌ஷனுக்கு லேட்டா வந்தேன்?” என்பதற்கான விளக்கவுரையில் (ஆனால் அதற்கான காரணத்தை யாரும் கேட்காமலேயே தன்னிச்சையாக சொல்ல ஆரம்பிப்பது இன்னும் விசேஷம்). இதில் பெரிய வேடிக்கை மனைவி வீட்டு நிகழ்ச்சியென்றால் மச்சானும், கணவன் வீடு என்றால் அண்ணன் தம்பிகளும் மாட்டிக் கொண்டு தாறுமாறாக தவிப்பதுதான்.

இந்தமுறை ஐபிஎல் கடமையை கொஞ்சம் மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். எல்லா ஆட்டத்துக்கும் ஆட்டம்-முடிந்தவுடன்-பதிவு போடாமல் நான் கவனித்த சில முக்கிய சம்பவங்களையும், நிகழ்வுகளையும்,சமயங்களையும் (எல்லாமே ஒண்ணுதாண்டா புண்ணாக்கு பதிவாளானு திட்டாதிங்க ப்ளீஸ்) எழுதலாம் என்று இருக்கிறேன். ஐபிஎல்லில் எப்படி வருடாவருடம் புதுமைகள புகுத்தி வருகிறார்களோ அதுபோல நானும் கூட ஐபிஎல் பதிவுகளில் ஒரு புதுமையை புகுத்தவிருக்கிறேன். என்னவென்பதை இப்போது சொல்லாமல் உங்களை கொஞ்ச நேரம் சிந்திக்க வைக்க விழைகிறேன். எழுதும் போது தெரிந்துவிடும் உங்களுக்கே.

சரி சரி இன்று சென்னை ராஜாக்கள் மேட்ச் ஆரம்பித்துவிட்டது…இதோடு முடித்துக் கொண்டு பின்பொரு சமயம் மீண்டும் வந்து உங்கள் பொறுமையை சோதிக்கிறேன்.

This entry was posted in Featured, Headline, அனுபவம், சிந்தனைகள், நகைச்சுவை and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to வழக்கம் போல இன்றும்…..

  1. ரொம்பவும் சாதிச்சிட்டீங்க, சாரி சோதிச்சுட்டீங்க சாரதி ! !

    • சோதனை மேல் சோதனை…போதுமடா சாமின்னு “என் பதிவுலதான் ஒண்ணுமில்லை, விஜயசாரதி பதிவுகளையாவது போய் பார்க்கலாம்னு போன…(இதத்தானே சொல்லவந்தீங்க அனு(வின்)

  2. விஜயசாரதி,

    மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறாய். மூன்றாவது, நான்காவது பாராக்களில் இருப்பவை தனி பதிவாக இட்டிருந்தால், இந்த பதிவு வள வள – வெற்று என்று ஆகாமல் இருந்திருக்கும்.

    • சில நேரங்களில் மனம் சொல்வதை நாம் கேட்கவேண்டும் சத்தியமூர்த்தி. இந்தப் பதிவு கதையோ, சிறுகதையோ அல்லது ஒன்றை பற்றிய கட்டுரையோ அல்ல. இது அனுபவப் பகிர்தல். அவ்வளவே. தொடர்ச்சியாக நடந்த, நான் அனுபவித்த இரண்டு விஷயங்களை பகிர முற்படுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *