Home » Featured, Headline, செம்மொழி, தமிழ் சினிமா, தொடர்

வாலிபக் கவிஞன் – பாகம் 1

27 February 2010 12 Comments

என் அப்பா இவர் எழுதிய பாட்டை முனுமுனுத்தார், நானும் முனுமுனுத்துக் கொண்டிருக்கிறேன்..நிச்சயம் என் மகனும் முனுமுனுப்பான் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை. இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? மூவரும் முனுமுனுக்கும் பாடல் வேறு வேறு, அதுவும் அவரவர் காலத்தில் எழுதிய பாடல்களாயிற்றே, இவையெல்லாமே எழுதப்பட்டது ஒரு பாடலசிரியரால். இப்பொழுது சொல்லுங்கள், இதில் விசேஷம் இருக்கிறதா இல்லையா?

ரங்கராஜன் என்ற பெயருக்கும் எழுத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. எழுதும் கலைக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. இவை இரண்டுமே நமக்கு இரண்டு நல்ல எழுத்தாளர்களை கொடுத்திருக்கிறது. 1931ஆம் ஆண்டு இரண்டு சிறப்புக்களை பெற்றது. அதுவும் இரண்டுமே தமிழ் சினிமா சம்பதப்பட்ட விஷயங்கள் என்பது இன்னும் விசேஷம். ஆம். அந்த ஆண்டில் தான் முதல் பேசும்படம் வந்தது. அதே ஆண்டில்தான் கவிஞர் வாலி அவர்களும் பிறந்தார். நம் வாலி அந்நாளில் நடத்திக் கொண்டிருந்த கையெழுத்துப் பத்திரிகையில்(நேதாஜி) பங்கேற்றவர் இன்னொரு பிரபல ஸ்ரீரங்கத்துக்காரர். அவர் வேறு யாருமல்ல, நம் சுஜாதாதான். ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருப்பவர் ரங்கநாச்சியார் சமேத ரங்கராஜன் என்பது இன்னொரு சிறப்பம்சம்.

எத்தனை எத்தனை பாடல்கள் அவற்றில் எத்தனை எத்தனை ரகங்கள். இந்த நூற்றாண்டு தவமிருந்து பெற்ற பிள்ளை இளையராஜா என்றார் அவர். உண்மையில் நாம் தவமிருந்தாலும் இவர் போல ஒருவர் கிடைப்பாரா? தான் குடித்த காவிரி ஆற்றுத் தண்ணீரின் ஒவ்வொரு சொட்டையும் கவிதை வடிவமாக கொடுத்துக்கொண்டிருக்கிறார். பின்னாளில் சிலகாலம் காவிரியும் கூட கைவிரித்தது. ஆனால் நம் வாலி இன்றுவரை வாளி நிறம்ப கவிதைகள் வற்றாமல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

கண்ணதாசனை தத்துவப்பாடல்களின் தலைவன் என்று சொல்லலாம். பாவலரை விழுப்புணர்ச்சி பாடல்களினால் அடையாளம் காணலாம், கவித்துவமான பாடல்களில் வைரமுத்துவை காணலாம். ஆனால் நம் கவிஞரை இவை எல்லாவற்றிலும் சேர்த்துக் கொள்ளலாம். இது தவிர அவர் இளய சமுதாயத்திற்கும் சேர்த்து எழுதிக் கொண்டிருக்கிறார். இது எவ்வளவு பெரிய சாதனை. இவரை பற்றி நாம் பேசுவதே கிடையாது. அன்று முதல் இன்று வரை அவர் எழுதிய பாடல்கள் பாடுவதற்கும், மனப்பாடம் செய்வதற்கும் இலகுவான வார்த்தைச் சரம் இவர் பாட்டிலல்லாமல் எவருடையதில் உள்ளது. என் ஞானத்துக்கு எட்டியவரை, பாவலரின் பாட்டுக்களும் அந்த ரகமே. நம்மவர் ஒரு படி மேலே போய் ஆங்கிலத்தையும் சற்று கலந்து, அதிலும் எளிதாக உச்சரிக்கக் கூடிய அதே சமயத்தில் மெட்டுக்கேற்ற வார்த்தைகளை ப்ரயோகித்து கலக்கியிருக்கிறார், இன்னும் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

எம்.ஜி.ஆரை தன் பாடல்களின் மூலம் மக்களிடையே மிக அருகில் கொண்டு சென்றார். தனக்கு மிகவும் பிடித்த தன் அன்புக்கு பாத்திரமான இளையராஜாவின் பெயரை பல பாடல்களில் மறைமுகமாகவும் நேரிடையாகவும் கலந்திருக்கிறார். ரஹ்மான் தான் பாடுவது போலவும் வைத்து, பாடலாசிரியர் பாடுவது போலவும் எவ்வளவு அருமையாக “ஆறரை கோடி பேர்களில் ஒருவன்” என்று எழுதினார். ஒரு காதல் ஜோடியின் சந்திப்பை சர்வ சாதாரணமாக ஜுராஸிக் பார்க்கில்(முக்காலா முக்காபுலா) நிகழ்த்தியவர் இவராகத்தான் இருப்பார். இவர் நம் ஆழ்வார்கள் காலத்தில் பிறந்திருந்தால் இன்று அது ஐந்தாயிர திவ்யப் பிரபந்தமாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.

இவர் ஒரு எழுத்தாளர் மட்டும்தான் என்று நினைத்திருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள். அவர் ஓவியமும் பழகியவர். பிரபல ஓவியர் மாலியின்பால் தான் கொண்ட மற்றற்ற மதிப்பையும் அவர் ஓவியத்தின் மீது தான் கொண்ட ஈடுபாடும்தான் அவர் பெயரை வாலி என்றாக்கியது. தன் பள்ளி ஆசிரியர் வாலில்லையே என்று கிண்டலடிக்க்க, கீழ்காணும் கவிதையை துண்டுசீட்டில் எழுதி கொடுத்தார்:வாலில்லை என்பதனால்

வாலியாகக் கூடாதா?

காலில்லை என்பதனால்

கடிகாரம் ஓடாதா?

விளையும் பயிர் முளையிலேயே தெரியுமென்பார்கள். அதிலும் நம் பயிர் ஆலமரத்துக்கானது போலும். விழுதுகளாய் எத்தனை பாடல்களும் கவிதைகளும்.

இன்றும் பல திரைப்பட பாடலாசிரியர்கள் இவர் நடையை பின்பற்றி பாட்டெழுதிக் கொண்டிருப்பதை நாம் கேட்டுக் கொண்டுதானே இருக்கிறோம். அவரே ஒரு பாராட்டு விழாவில் சொன்னது போல ஒருவேளை யாருக்குமே (அவருக்கும்) தெரியாமல் வெண்பா, வஞ்சிப்பா, களிப்பா என்பது போல வாலிப்பா என்று ஒன்று நடைமுறையில் இருக்கிறதோ? அவரின் சொல்லாடல் யாருக்கு வரும். அன்று எம்.ஜி.ஆருக்கு எழுதினார், கமல்-ரஜினிக்கு எழுதினார், விஜய்-அஜீத்துக்கு எழுதினார், தனுஷ்-சிம்பு போன்ற இளம் கலைஞர்களுக்கு எழுதுகிறார். இவர் கலைஞர்களுக்கும் எழுதுகிறார், கலைஞருக்கும் எழுதுகிறார் பாராட்டு விழாவில். சிலர் கிண்டலாக இப்படி கூறினார்கள்:

வாலிபக் கவிஞர் வாலி

கலைஞரை புகழ்வது

இவரது ஜோலி….

இதற்கெல்லாம் அப்பாற்ப்பட்டவர் நம் வாலிபக் கவிஞர். எதுகை மோனையை முழுவதுமாக குத்தகை எடுத்துவைத்திருக்கிறார். இன்னும் சிலரும் எழுதுகிறார்கள்,பேசுகிறார்கள் எதுகை மோனையில் கவிதைக்கு எது கை என்றுகூட தெரியாமல். அவதாரப் புருஷன், கிருஷ்ண விஜயம், ராமானுஜர் விஜயம் என்று வாராவாரம் ஆனந்தவிகடனில் காவியக் கவிதை தாண்டவமாடினார் வாலி. அதை படிக்காதவர் உண்டா. அவர் பாஷையில் சொன்னால் வாலியை படிக்காதவர் படிக்காதவரே.

சில காலம் முன் அவரது துணைவியார் திருமதி ரமணி திலகம் காலமானது துக்ககரமான செய்தி.

ஒரு முறை பாண்டிச்சேரி கவியரங்கத்தில் கம்பன் சைவமா? வைணவமா? என்ற தலைப்பில் கவிபாட, அரங்கம் முடிந்தவுடன் ஒரு முதுபெரும் தமிழ்ப்புதல்வர் வாலியிடம் “இவ்ளோ நல்லா கவிபாடும் நீங்க, சினிமா பாடல்களில் மட்டும் ஏன் வர்த்தக நோக்கோடு செயல்ப்டறீங்க”ன்னு கேட்டார். அதற்கு வாலி சொன்ன பதில்:

இங்கே நான்

வண்ணமொழிப் பிள்ளைக்குக்

தாலாட்டும் தாய்;

அங்கே நான்

விட்டெறியும் எலும்புக்கு

வாலாட்டும் நாய்!

மேலும்…

எந்தப்பா சினிமாவில்

எடுபடுமோ? விலைபெறுமோ?

அந்தப்பா எழுதுகிறேன்;

என்தப்பா? நீர் சொல்லும்!

மோனை முகம் பார்த்து

முழங்கிட நான் முயற்சித்தால்

பானை முகம் பார்த்தென்

பத்தினியாள் பசித்திருப்பாள்

கட்டுக்குள் அகப்படாமல்

கற்பனைச் சிறகடிக்கும்

சிட்டுக்கள் நீங்கள்;

சிறியேன் அப்படியா?

மெட்டுக்குள் கருத்தரித்து

மெல்லவே இடுப்புநோகத்

துட்டுக்குத் தகுந்தவாறு

முட்டையிடும் பெட்டைக்கோழி!

என்று தன் மனதில் பட்டதை கவிதை நயத்தோடு படிக்கும் எல்லோருக்கும் எளிதாக புரியும் வகையில் உண்மையை பல கவியரங்குகளில் புலவர்களுக்கு சொல்லியதாக அவரின் “நானும் இந்த நூற்றாண்டும்” நூலில் குறிப்பிடுகிறார்.

சைவக் கடவுளை தொழுத வைணவர். பல இளையகவிகளை காலியாக்கிக் கொண்டிருக்கும் வாலி.எனக்கு வந்த ஒரு நாலு வரிக் கவிதை:

கவிதை எழுதுவது உன் ஜோலி

உன் கவிதை எல்லாமே எங்களுக்கு ஜாலி

உன் உடலுக்கு வயது எழுபது

நின் கவிதைக்கு இன்னும்கூட இருபது

வாலிபக் கவிஞர் வாலியை பற்றிய இந்த பதிவு தொடரும்…என்னால் முடிந்தவரை, எனக்கு தெரிந்தவரை, உங்களுக்கு பிடிக்கும்வரை…

12 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.