காரணமும் காரியமும்

காரண காரியமில்லாமல் எதுவும் நம் வாழ்வில் நடப்பதில்லை என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. இன்று என் அலுவலகத்தில் ஒருநாள்-கலந்தாய்வு நடந்தது. நாள் முழுவதும், நான் அலுவலகத்துக்கு 9 மணிக்கு நுழைந்ததிலிருந்து மாலை வேலை முடியும் நேரம் மணி 5 வரை நீடித்தது. இது காரணம். அதே நேரங்களில், எனக்கு அலுவலகத்தில் உட்கார இடமும் வேலை செய்ய கணினியும் தயார் செய்து கொண்டிருந்தார்கள்(அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதால்). இது காரியம்.

ஆகவே மேலே குறிப்பிட்ட காரணத்துக்கு அதற்கு கீழே குறிப்பிட்டுள்ள காரியம் நிறவேற காரணமே காரணமாக இருந்தது. இதுபோல நடப்பது எல்லாமே ஒரு காரண காரியத்திற்காகத்தான் நடக்கிறது எனபது என் எண்ணம். இதுபோல நம் வீட்டிலும் நடப்பது சர்வசாதரணமே. அதுவும் காரணம் நாமாக இருந்துவிட்டால்? ”அதை ஏன் கேட்கிறீர்கள்” என்று பலர் இந்த இடத்தில் மனதோடு பேசுவது கேட்கிறது. என் காரணம் மிக வலுவானது. முதலில் நடந்த காரியங்களை சொல்கிறேன். அதற்கு கீழே அந்த வலுவான காரணத்தைச் சொல்கிறேன்.

காரியம்:

காலை துணிகளை வாஷிங் மெஷினில் போடும்போது என் மனைவி இரண்டு பங்காக பிரித்து அதில் ஒன்றை என்னைப் போடும்படிச் சொன்னாள். உதாரணமாக 13 துணிகள் இருந்தது. என்னை 9 துணிகளை துவைக்கப் போடச்சொன்னாள். இதிலெல்லாம் என்ன கணக்கு என்றெல்லாம் கேட்க முடியாது. பின்பு ஏற்கனவே நான் காயவைத்த துணியை கொடியிலிருந்து அவள் எடுத்துவிட்டு துவைத்த துணி முழுவதையும் காயப்போடச் சொன்னாள்.

மகனை குளிப்பாட்ட சொன்னாள். துடைத்துவிட்டு பௌடர் போட்டுவிட்டு, ஸ்ரீசூர்ணம் இட்டு, அவன் ஸ்கூல் யுனிஃபார்ம் போட்டு “அப்பாடா” என்று முழுதாய் ஒரு பெரு மூச்சு விட, “நீ வாடா கண்ணா” என்று ஷூ போட்டுவிட்டாள்.

வழக்கமாக வைக்கும் 11/2 படி சாதத்தில் அன்றிலிருந்து மூன்றில் ஒரு பங்கை மட்டும் வைத்துவிட்டு மீதியை என்னை வைக்கச் சொன்னாள்.

இரவு எங்கள் வீட்டில் சப்பாத்திதான். அன்றிலிருந்து இட வேண்டிய பத்து சப்பாத்தியில் 7 மட்டுமே நான் இட்டால் போதுமானது மிச்சம் முழுவதையும் கஷ்டப்பட்டு தானே இட்டுக்கொள்வதாகச் சொன்னாள். என் காதில் ”இட்டுக்கொல்கிறேன்” என்று விழுந்தது எதிர்ச்சையான ஒன்று.

வீட்டை சுத்தமாக பெருக்கி துடைக்கும் உத்தரவு அடுத்தது. முடித்ததும் ”அந்த துடைப்பத்தை இப்படி கொஞ்சம் தாங்க” எனறதும் எனக்கு படபடப்பு வந்துவிட்டது. ”ப்ரியா என்ன இருந்தாலும் நான் உன் ஹச்பெண்ட்..உனக்கு பெண்டெடுக்க உரிமை இருக்கு ஆனா துடைப்பத்தால இல்ல” என்றேன். “அடச்சே..நீங்க வேற. அப்படியெல்லாம் நான் செய்வேனா. குண்டானாலும் கணவன் இல்லையா” என்று சொல்லி துடைப்பத்தை வாங்கி எப்போதும் வைக்கும் ஷெட்டில் வைத்தாள். மீண்டும் ஒரு “அப்பாடா”.

900 சதுர அடி அழகான டபுள் பெட்ரூம் வீட்டில் சுதந்திரமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்த என்னை, வீட்டில் எல்லா ரூமிலும் ஒரு கோடு போட்டு, அந்தக் கோட்டைத் தாண்டி என் பொருள் எதையும் அவளை கேட்காமல் வைக்கக் கூடாது என்று “மிகுந்த அன்போடு” உத்தரவிட்டாள். பாத்ரூம், ஷெட், வாசல், சோஃபா என்று பொது இடங்கள் போக எனக்கு அவள் அலாட் செய்த இடம் சுமார் 400 சதுர அடி.

நான் கேட்காமலேயே, சொல்லாமலேயே அதுவரையில் எல்லா வீட்டு வெளி-வேலைகளையும் (பேங்க், கிரெடிட் கார்டு, டெலிஃபோன் பில், எலக்ட்ரிக் பில்) தானாகவே செய்யும் என் மனைவி தான் ப்ராகெட்டில் குறிப்பிட்டுள்ள வேலைகளில் ஏதேனும் ஒன்றைத்தான் தன்னால் செய்யமுடியும் என்றும் மற்றவைகளை நானே பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் இன்னுமொரு அன்பு உத்தரவிட்டாள்.

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கொஞ்சம் கணினியலாம் என்று திறந்தேன். அங்கிருந்து என் மனைவி வேகமாக வந்தாள் கையில் சாதக் கரண்டியுடன். என் இதயம் வழக்கம் போல (அதெல்லாம் கூட பழகிப் போச்சுங்க) வழக்கத்தைவிட வேகமாக துடிக்கத் தொடங்கியது. “இத பாருங்க சும்மா ஒவ்வொண்ணுத்தையும் சொல்லிண்டிருக்க முடியாது, இப்படி உட்காராம போய் பாத்திரத்த தேய்ச்சு முடிச்சிருங்க. அப்புறம் அடிச்சேன் திட்டினேன்னு உங்க அம்மாகிட்ட போய் கம்ப்ளைன் பண்ணக்கூடாது”. உடனே அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டேன் (எங்கேயா? என்ன கேள்வி சார்?) பாத்திரம் தேய்க்கத்தான்., அங்கு சென்றால் கொஞ்சம் பாத்திரம் தேய்த்து வைக்கப்பட்டிருந்தது. வாஷிங் மெஷின் அனுபவம் இருந்ததால் கேள்வி ஏதும் கேட்கவில்லை.

கடைக்கு சென்றால் அங்கு நகைகள், புடவைகள் செல்கஷன் அவள் பொறுப்பு. தேர்ந்தெடுக்கப்பட்டவைகளுக்கு பணம் கட்டி, அவளையும் சேர்த்து பத்திரமாக வீடு வரை எடுத்துவருவது என் பொறுப்பு.

மேற்கூரிய நடவடிக்கைகளுக்கும் சட்டங்களுக்குமான காரணம்:

இந்தியாவில் இன்னும் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லையென்றாலும், வீட்டுக்கொரு மரம் என்கிற ரீதியில் ஏன் நாம் வீட்டுக்கு வீடு 33% சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று தோன்றியது. சிந்தனையின் விளைவு செயலாக உருவெடுத்தது. எழுத்துப் பூர்வமாகவோ சட்டப்பூர்வமாகவோ நிர்ணயம் செய்ய முடியாவிட்டாலும் எங்கள் இருவர் மனதளவிலும் மசோத அரங்கேறியது.

மாதக் கடைசியில் ஏர்டெல் பில் வந்தது. நான் அந்த 33% சதவிகிதத்தை மிகவும் எதிர்பார்த்தேன். அந்த மாதம் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு மொபைல் உபயோகப்படுத்தாமல் இருந்தேன். பில்லை பார்த்தால் ஆச்சரியம், என் பில் 300 அவள் பில் 900. வெளங்கிரும் என்று ஒரு முடிவுக்கு வந்தவனாக…………….

தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில் எதிர்கட்சியின்(மனைவி மற்றும் அண்ணிகள்) எதிர்ப்பை மீறி தோழமை (அம்மா, அண்ணன் மற்றும் மச்சினன்) கட்சிகளின் ஆதரவோடு முதலில் நிறைவேற்றிய உடன்படிக்கையான 33 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து.

This entry was posted in Featured, Headline, அனுபவம் and tagged , , , , . Bookmark the permalink.

3 Responses to காரணமும் காரியமும்

 1. ஹா ஹா ஹா

  சுவாரஸ்யமா நடந்தவைகளை பட்டியலிட்டிருக்கீங்க சார்
  விஷயம் கனம்….!

 2. :-))))))))))))

  happpy pongal….

  • பொங்கல் வாழ்த்துக்கள் வசந்த் மற்றும் ச்சின்னப்பையன்….

   வந்தமைக்கும் உங்கள் கம்ப்யூட்டர் மைக்கும் மிக்க நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *