Home » Featured, Headline, அனுபவம், சினிமா இசை, தமிழ் சினிமா, தொ(ல்)லைக்காட்சி

பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் – பாகம் 3

31 January 2010 6 Comments

கலைஞர் தொலைக்காட்சியில் கிருஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று போடாவிட்டாலும் ஓட்டு போய்விடும் பயத்தில் கலைஞர் டிவிக்கு பக்கத்தில் கிருஸ்துமஸ் தாத்தா நடந்து கொண்டிருந்தார். நம் நாட்டு மக்களின் நிலை போலவே அவரும் ஒரே இடத்தில் நடந்துகொண்டிருந்தார். விரிவாக வேறொரு பதிவில் இதை விவாதிக்கலாம். இப்பொழுது என்னை கட்டிப்போட்ட கட்டிவெல்லப் பாடலை பற்றி பார்ப்போம்.

ப்ளாகின் வழக்கமான சட்டமான என்ன பாடல் என்று கடைசிவரை சொல்லாமல் அதன் பெருமைகளை மட்டும் அடிக்கிக் கொண்டே போவதை இங்கு நான் கடைபிடிக்கப் போவதில்லை. பலர் பாதி படிக்கும் போதும், சிலர் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிடுவதும் உண்டு. அப்படி க.பிடித்துவிட்டால் மீதிப் பதிவு பிடிக்காமல் அதனால் படிக்காமல் போவதும் வழக்க்கில் இருப்பதால் இந்த முடிவு.

நான் கலைஞர் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான “ராஜா ராஜாதான்” (எத்தனையாவதோ மறுஒளிபரப்பு) பார்த்துக் கொண்டிருந்தேன். இசைத் தூரலில் லேசாக நனைந்து கொண்டிருந்த போது ஒரு பெரு மழை காத்திருப்பது அப்போது தெரியவில்லை. இந்தப் பாட்டுக்கு பிறகு அந்த பாட்டு என்ற அளவில் ஞாபகம் வைத்துக்கொள்ளாதது ஒரு காரணமாக இருக்கலாம். எத்தனையாவது முறையாக ஒளிபரப்பானால் என்ன. திருப்பதி லட்டு கொஞ்சம் தின்றால் மேலும் வேண்டும் என்று கேட்கும் நம் நாக்கு, சையப் அலிகான் சொல்வதுபோல ஒன்றை தின்றால் மேலும் கேட்கும் லேஸ் (ஷூ லேஸ் சுவைத்துவிட்டு என்னை திட்டக் கூடாது. நான் குறிப்பிடுவது ரஃபுல்ஸ் லேஸ்), இந்த வகையை சார்ந்தது இந்தப் பாடல்.

சாரலிலிருந்து தாவி பெரும் காற்றுடன் கூடிய சரமழைக்கு நான் தயாராகிவிட்டேன் என்று உணர்த்தியது ”காற்றில் எந்தன் கீதம்” பாட்டின் ஆரம்ப ஜானகியின் ஹம்மிங். முன்பு இதே போன்ற நிகழ்ச்சியை ஜெயா டிவியில் பார்த்தது நினைவிருக்கலாம். அதில் எதை மறந்தாலும் ச்ரேயா கோசல் பாடல் முழுவதும் “தோடுதே” என்று பாடி கடைசியில் ஒரு வழியாக “தேடுதே” என்று பாடியது மறக்கவே மறக்காது. ”Mistakes are sometimes the best memories” என்ற ஆங்கில பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. இந்த முறை யதார்த்தின் படி அவர் சரியாக பாடுவார் என்று தோன்றியது. என்னை ஜிசாட்டில் பேச துபாய் நண்பன் “டிங்”கி ”என்ன செய்துகொண்டிருக்கிறேன்” என்று கேட்டான். இந்தப் பாடல் போய்க்கொண்டிருக்கிறது என்று கூறினேன். அவ்வளவு கஷ்டப்ப்ட்டு இசையமைத்து, பாடிய பாட்டை ஒரு வரியில் அதுவும் சாட் மொழியில் (எவ்வளவு சின்ன வரி என்று உங்களுக்கு தெரியும்) சிலாகித்தான். என் பங்குக்கு நானும் சிலாகித்தேன். ஆனால் நான் சிலாகித்தது நம் ப்ளாக் மொழியில். பின்வருவது நான் சிலாகித்தது:

ச்ரேயா கோசல் இந்தப் பாடலை அதே உணர்வுகள் வெளிப்பட பாடுவதென்பது என்னைப் பொறுத்தவரை பெரிய விஷயம். அப்போது ஜானகி பாடும்போது அவருக்கு பாடலை சொல்லிக் கொடுத்தது மட்டுமல்லாமல், கதையில் அந்தப் பாடல் எங்கே வருகிறது என்று சொல்லியிருப்பார்கள். என்ன இடத்தில் வருகிறது என்றும் கூறியிருப்பார்கள். மேலும் பாடும்போது அவரே சில நல்ல மாற்றங்களை செய்து, இளையராஜாவின் பங்குக்கு சில, இயக்குனர் நேரடிப் பார்வையில் சில என்று மெருகேற்றியிருப்பார்கள். அன்று ஜானகி பாடும்போது அவரை நன்றாக பாடச்செய்ய இவையெல்லாம் இருந்தது. இன்று ச்ரேயா கோசலுக்கு ஒரே ஊந்து சக்தி, அவ்வளவு பெரிய கூட்டத்திற்கு நடுவே பாடுவதை சொல்லலாம். அவர் பார்க்காத மேடையா? அப்போ ஜானகி பாடிய பாடலை நம்மை பாடச் சொல்லியிருக்கிறார்களே என்ற பெருமை அவரை உற்சாகப்படுத்தும் ஒன்றாக இருக்கலாம். இது தவிர பெரிதாக ஒன்றும் இருக்க முடியாது.

ஜானகி பாடிய பாடலை, அதுவும் இந்தப் பாடலை பாடுவதென்பது கொஞ்சம் ரிஸ்க்தான். கொஞ்சம் தவறினாலும் பளிச்சிட்டுவிடும். ச்ரேயா துளியும் குறை வைக்காமல் பாடினார் என்று ஒரு வரியில் சொல்லி முடிக்க முடியாது. அவ்வளவு நன்றாக படியுள்ளார். நம்மை திரும்பவும் நினைவலைகளில் மிதக்க வைத்தார். ஜானகியின் தேனினும் இனியக் குரலின் அதே சுவை இங்கே ரிப்பீட். ”அடுத்த ஜானகி இவதான்” என்று சொல்லத் தோன்றியது. பாடல் வந்து 29 வருடங்கள் ஆகிறது. இன்றும் அதன் சுவை துளியும் குறையவில்லை. இது கிட்டத்தட்ட ரீமிக்ஸ் போலத்தான். எத்தனை ரீமிக்ஸ் இனிக்கிறது கேட்கும்போது. ஜானகியின் குரலில் நான் கேட்டபோது கிடைத்த அதே ஆனந்தம், அமைதி எல்லாம் கொஞ்சமும் குறையாமல். இன்றும் திகட்டாத அதே தித்திப்பு. இது அவர் குரலினால் மட்டுமா என்றால் நிச்சயம் இல்லை.

படத்தில் அந்தப் பாடல் இடம்பெற்றுள்ள இடம் முக்கிய காரணம். கதாநாயகி பாடகி. கதாநாயகன் ஏமாற்றுப் பேர்விழி சூழ்நிலைகளால். இருந்தும் அவன்வயப்பட்டுவிட்டாள் கதாநாயகி. போலீஸ் தேட, வந்துவிடு உன் கடன், திருடிய பணம் எல்லாவற்றையும் நான் தந்துவிடுகிறேன். எனக்கு நீ போதும் என்கிறாள். தலைமறைவாய் இருக்கும் தலைவனை வரவழைக்க தான் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவதாக சொல்கிறாள். நிகழ்ச்சி நடக்கவிருக்கும் அன்று பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. யார் யாரோ என்னென்னவோ சொல்லியும் கேட்காமல், இந்த பாடலை கேட்கவாவது அவன் வருவான் என்ற நம்பிக்கையில் துணிந்து பாட வருகிறாள். அவள் காதலைத் தேடி வருகிறாள். அவனை போலீஸ் துரத்துகிறது. புயலென்ன மழையென்ன, போலீஸ் துரத்தினால் என்ன? இது இரு மனங்கள் சேரவேண்டும் என்பதற்கான போராட்டம். இது அவள் பாடப்போகும் கடைசி பாட்டு. காதலனை நினைத்து பாடும் பாட்டு. இதுதான் இடம். இதற்கு மேலும் இளையாராஜாவை போன்ற ஒருவருக்கு சொல்ல வேண்டுமா? வந்தது பாட்டு, ”காற்றில் எந்தன் கீதம்”. கீரவாணி ராகத்தில் எத்தனையோ பாடல்களை தந்திருக்கிறார். இந்தப் பாடலில் இளையராஜா ஒரு இசைப் பிரவாகமே நடத்தியிருக்கிறார். பேஸ் புல்லாங்குழலில் சேஸிங் இசை மறக்கக்கூடிய ஒன்றா?

இது இன்னொரு “மாலைப் பொழுதின் மயக்கதிலே” என்றுதான் சொல்லவேண்டும். கேட்க கேட்க இனிமை கூடுவதை யாராலும் மறுக்க முடியாது. பாடலின் வெற்றிக்கு இன்னொரு காரணம் ஸ்ரீதேவி. பெரிய பாடகியாக இருந்தும் தன் மனதுக்குள் ஒரு அன்புத் தேடல். இனம் புரியாத ஒரு சோகம். ஸ்ரீதேவி தன் முகத்தில் முழுசோகத்தை தவழவிட்டிருப்பார். கண்கள் கலங்கி போன போதும் காதாலன் வந்துவிட்டானா என்ற ஏக்கப் பார்வை பாடல் முழுவதும் ஸ்ரீதேவியின் கண்களில்.

பாடலை இன்னும் இனிமையாக்குவது அதன் வரிகள். கவிதைத்துவமாக பாடலினூடே சொல்லியிருக்கும் காதலும் காதலினால் வந்த சோகமும் என்னவென்று சொல்வது. கங்கை அமரன் எழுதிய வரிகள் ஒவ்வொன்றும் முத்துக்கள். அந்த புயல் காற்று மழையில் “சில்லென்று வீசும் மாலை நேரக் காற்றில்” என்று எழுத துணிச்சல் இருந்திருக்க வேண்டும், அதுவும் மகேந்திரன் போன்ற ஒரு இயக்குனரின் படத்தில். காதலில் அவளுக்கு அந்தப் புயல் மழையும் சில்லென வீசும் தென்றலாய் தெரிவதாய் சொல்கிறார் பாடலாசிரியர்.

வரிகளில் ஒரு இதயம் இன்னொரு இதயத்தை தேடுவதாக எழுதியுள்ளார் கங்கைஅமரன். “நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும், நீங்காத நெஞ்சின் அலை ஓய்ந்தால் போதும்” என்று அவள் உள்ளத்தின் உளைச்சலை 100 வி எழுத்தில் கொண்டுவந்து கொடுக்கிறார். மனதின் போராட்டம் இது, உணர்ந்தாலே ஒழிய எழுத முடியாது, உணர்ந்ததாக நினைத்துக் கொண்டு எழுதுபவன் கவிஞன். ”அன்புள்ள நெஞ்சை காணாதோ ஆனந்த ராகம் பாடாதோ” – அவள் பாடும் பாடல் காற்றுவழியில் எப்போது அவனை காணுமோ, அதை கேட்டு அவன் வருவானோ, வந்தால் என் மனம் மகிழ்ச்சியுருமோ என்று சொல்கிறார். பாடலுக்கு இதைவிடவும் இனிமை சேர்க்க ஏதும் வேண்டுமோ?

ஜானகியின் குரலில் “மோனத்தின் ராகம் கேளாதோ, மௌனத்தின் தாளம் போடாதோ” என்று கேட்கும் போது சில்லென ஒரு சோகக் காற்று நம்மை வருடிவிட்டு செல்லும் உணர்வு கிடைக்கிறது. “வாழும் காலம்” என்று மேல்ஸ்தாயியில் ஜானகி பாடும்போது நம்மை கதாநாயகியின் நிலைக்காக கண்ணீர் விடவைக்கிறது. ஜானகி தானே காதலித்தது போலவும், தாந்தான் அங்கு மேடையில் பாடுவது போலவும் நினைத்துக் கொண்டு பாடலின் வரிகளுக்கும் மெட்டுக்கும் உணர்ர்சியும் உயிரையும் கொடுக்கவேண்டும். நினைத்துப் பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது. அதே சிலிர்ப்பு இப்போதும் ச்ரேயா கோசலின் குரலில் வருவதுதான் எனக்கு வியப்பை அளிக்கிறது.

பலமுறை இந்தப் பாடலை கேட்கும் போது கண்களில் தானாக நீர் வர ஆரம்பித்துவிடும். இசையின் மகத்துவம் அப்படி. ச்ரேயா கோசல் அந்தப்பாடலை பாடும் போது அங்கே கூடியிருந்த கூட்டத்தில் குறைந்தபட்சம் 70% பேர் அவருடன் பாடியிருப்பார்கள். மீந்தவர்கள் மறந்ததினால் பாடலில் நீந்தியிருப்பர். ரஜினி கமல்50ல் சொன்ன ஒரு கதை ஞாபகம் வருகிறது. கமலை மட்டும் கலைத்தாய் இடுப்பில் ஏற்றிக் கொண்டாள் என்றார். அதுபோலத்தான் இங்கே இளையராஜாவையும் சுமந்திருப்பாளோ. இந்தப் பாடலில் நான் வியந்த கலைஞர்கள்:

  • இளையராஜா
  • ஜானகி
  • மகேந்திரன்
  • கங்கைஅமரன்
  • ஸ்ரீதேவி
  • ச்ரேயா கோசல்
என்னைப் பொறுத்தவரை இசைஞானிகள் உருவாகுவதில்லை பிறக்கிறார்கள். இல்லாவிட்டால் இளையராஜாவால் தென்பாண்டிச் சீமையில பாடலில் “அழுதா மனசு தாங்காது” என்று பாடும்போது உண்மையாகவே அழுதிருக்கமுடியாது.

6 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.