Home » Featured, Headline, அனுபவம்

உங்கள் பேலன்ஸ் ஷீட் உங்கள் கையில்

23 January 2010 9 Comments

பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்பு நம்மை கொஞ்சநஞ்சமாக படுத்தவில்லை. அதிலும் வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்த நம் சகோதரர்களை கேட்டால் பல கண்ணீர் கதைகளை நமக்குச் சொல்வார்கள். இந்த பொருளாதார வீழ்ச்சியின் காரணங்களை பல வலைதளங்களில் பலபேர் பேசிவிட்டார்கள். அவை அனைத்தையும் நாம் படித்தோமா அல்லது படித்து புரிந்ததா என்பது மிகப்பெரிய கேள்வி. இதற்கு சரியான சிறிய பதில்; பலர் படித்திருக்க மாட்டார்கள் சிலர் படித்து புரிந்திருக்க மாட்டார்கள். என்னதான் பல பேர் பல காரணங்களைச் சொன்னாலும் ஒரு அடிப்படைக் காரணம் இருப்பது உண்மை, அது வலுவான காரணம் என்பதும் உண்மை. இது “என்னை பொறுத்தவரை”-வகை காரணமல்ல. நம்மில் பலரை பொறுத்தவரை. சரி அது என்ன காரணம்?

நாம் நம் நிலையை உணராததே. என்ன இப்படி சுருக்கமாக சொல்லிவிட்டான் என்று கொதிப்படைய வேண்டாம். முதலில் நாம் யாரென்றும் நம் தற்போதைய நிலையென்ன என்பதையும் அறியவேண்டும். நிலை நிலையென்று நான் சொல்லுவது தன்னிலையான ஆன்மாவை பற்றியல்ல. தற்போதைய வளர்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தையும் விலைவாசி ஏற்றத்தையும் சந்திக்க சக்தி கொடுக்கும் நிதி நிலை. அது சரி எல்லோரும் என்ன கணக்கர்களா என்ன? அதிலும் நாளுக்கு நாள் வியப்படைய வைக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி, நம்மை கணக்கர்களாக வேண்டும் ஆசையை அதிக தூரம் தள்ளிவைத்து விடுகிறது. மாதம் முழுவதும் வேலை செய்தோமா, மாதக் கடைசியில் சம்பளம் வந்ததா? இந்த மாதம் என்ன புதிதாக வாங்கலாம், எங்கே சென்று செலவு செய்யலாம், என்னென்ன தவணைகளை கட்ட வேண்டும் என்ற ஒரு மிகச்சிறிய வட்டத்திற்குள் அடைந்துபோகிறோம்.

தொலைக்காட்சியில் கூட நாம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் நிதி நிலை குறித்தான செய்திகளையோ அல்லது பேட்டியையோ நம்மில் எத்தனை பேர் பார்க்கிறோம். இந்த கேள்வி எனக்கும் உரித்தானதுதான். நாம் விரும்புவது ஏர்டெல் சூப்பர் சிங்கரும், சிலபல தொடர்களும்தானே. ”நமக்குத் தெரியாததா சொல்லிவிடப் போகிறார்கள்” என்ற எண்ணமே இந்த உதாசினத்திற்கு முக்கிய காரணம். நேரமின்மையை இன்னொரு காரணமாகக் காட்டினாலும் தை ஒத்துக்கொள்ளபடாத ஒன்றாகவே கருதுகிறேன்.

இருக்கும்வரை செலவு செய்துவிட்டு பின்பொரு நாளில் திடீரென்று நம் நிதி நிலையை உற்று கவனித்தால், ஒன்று இருந்த இடத்திலேயே இருப்போம் அல்லது அதைவிட கீழே இருப்போம். வெகு சிலரே இதை உணருகின்றனர். அதிலும் வெகு சிலரே தம் தற்போதைய நிதி நிலையை தெரிந்து வைத்திருக்கின்றனர். கையில் பத்து ரூபாய் இருக்கும்போது அதை முழுவதையும் இன்னும் கையிருப்பு ஏதும் உள்ளதா என்று கூட பார்க்காமல் செலவழிப்பவர்கள் அதிகம் பேர். முக்கியமாக தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் என்போன்றோர்.

நம் குழந்தையின் வருங்காலத்தைப் பற்றி தொலைக்காட்சி விளம்பரங்கள் காட்டும் அக்கறையில் எத்தனை பங்கு நாம் காட்டுகிறோம் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். நானும் விதிவிலக்கல்ல கொஞ்ச நாள்வரை. இப்போது நான் புதிய மனிதன். உங்களையும் பொருளாதார ரீதியாக புதிய மனிதனாக்கவே இந்த பதிவு.

நிதி நிலை எனபது என்ன? தன் நிதி நிலையறிதல் என்று படித்தவுடன் சிலருக்கு புரிந்தாலும், ஆங்கிலத்தில் பேலன்ஸ் ஷீட் என்று வாசித்தால் கூடுதலாக இன்னும் சில பேருக்கு புரியும். பொதுவாக இந்த நிதி நிலை என்பது கம்பெனிகளுக்கு போடப்படும் ஒன்று என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு ரூபாயாக இருந்தால் என்ன ஒரு லட்சமாக இருந்தால் என்ன? வரவு வரவுதான் செலவு செலவுதான்.

இது தனிநபருக்கும் பொருந்தும். இப்படி பார்க்காததனாலேயே நம் இன்றைய அளவில் நிதி நிலையை தெரியாதவர்களாக இருக்கிறோம். நம் தற்போதைய அசையும் அசையா சொத்து எவ்வளவு, பற்று எவ்வளவு, கையிருப்புப் பணம் என்ன என்பதை பட்டியலிட்டு வெளிச்சம் போட்டு காட்டி நம்மை எச்சரிப்பதே இந்த நிதி நிலை எனப்படுவது.

என் அண்ணனுடன் உரையாடுகையில் என் அப்போதைய நிதி நிலை எவ்வாறாக உள்ளது என்று கேட்டான். எனக்கு சரியாக சொல்லமுடியவில்லை. காரணம் எனக்கு என் நிதி நிலை தெரியவில்லை. அதுவரை நானும் சம்பாதித்தோமா, கடன் கட்டினோமா/செலவழித்தோமா என்றிருந்த நான் அப்போதுதான் இதன் அவசியத்தை உணர்ந்தேன். இது என் சம்பதப்பட்ட ஒன்று மட்டுமல்ல.

ஒரு விதத்தில் இது என் குடும்பத்தாரையும் பாதிக்கும் ஒன்று. என்னதான் பணம் பிரதானம் இல்லை என்று பேசினாலும், வாழும்வரை தேவைப்படுவது அது. இன்றையளவில் ஒரு எல்கேஜி சீட் வாங்கவேண்டும் என்றாலும் தேவை பணம். இந்த நவயுகம் பணயுகமாக மாறியிருப்பதை என் போன்றோர் சிந்திக்க தவறுகின்றனர்.

என் நிதி நிலையை கண்டறிய என் அண்ணனின் உதவியை நாடியபோது எனக்கு விளக்கினான். நான் அதை முயற்சித்தேன். விளைவு இன்றைய தேதியில் என் சொத்து, பற்றுக்கணக்கு கண் முன். இது எனக்கு எதிர்காலத்தை பற்றிய ஒரு தொலைநோக்குப் பார்வையை தந்தது. மேற்கொண்டு என்னை உயர்த்திக் கொள்ள, என் மகனின் எதிர்காலத்தை திட்டமிட வழிகாட்டியது.

என்னதான் விளம்பரங்கள் இதையே பறைசாற்றினாலும் இது நாமாக உணரவேண்டிய ஒன்று என்ற யதார்த்தத்தை உணர்த்தியது. ஒவ்வொரு செலவு செய்யும்போதும் என்னை “இது இப்போது தேவையா, சற்று தள்ளிப்போட்டால் என்ன?” என்று யோசிக்க வைத்தது. என் கடன்களை உற்று நோக்கவைத்து அதை எவ்வளவு சீக்கிரம் அடைக்க முடியும் என்றும் திட்டமிட வைத்தது. இந்த எண்ணங்கள் போதாதா நம் நிதி நிலையை சரி செய்து கொள்ள?

இதையெல்லாம் தவிர இன்னுமொரு அற்புதமான விஷயம் நம் கையிருப்பை கணக்கில் கொண்டு அடுத்து செய்ய வேண்டிய முக்கிய செலவுகளுக்கு பட்ஜெட் போடலாம். அதுமட்டுமா எந்த செலவுகளை தொடரலாம், எதை குறைக்கலாம் என்ற சிந்தனை வலுபெறும். ஆசை அலை போல இருந்தாலும், இந்தச் சிந்தனை நம்மை படகாக கரையேற கைகொடுக்கும். ஆசைக்கு தாள் போட்டா மாதிரியும் ஆகும் அதே சமயத்தில் எதிர்கால திடீர் பொருளாதாரப் பின்னடைவுகளிலிருந்தும் நம்மை காப்பாற்றும்.

மாதாமாதம் நம் வருமானத்தையும் அதற்குண்டான செலவுகளையும் பட்டியலிட்டு கடைசியில் கையிருப்பு என்ன என்பதை கண்டறிவதே ஒரு சுகம்தான். அடுத்த மாதம் இதேபோல தொடர போன மாதத்தை விட நாம் அதிகமாக சேமிக்க முடிந்ததா இல்லையா என்று கணக்கு பார்ப்பது ஒரு திரில்லான அனுபவம் என்றுதான் சொல்லவேண்டும்.

என்னுடைய இரண்டு மாதத்தில் பொருளாதார ரீதியாக நான் வளர்ந்திருக்கிறேன் என்று மைக்ரோசாஃப்ட் எக்ஸல் காண்பித்தபோது துள்ளி குதித்து வானத்தை தொட்டுவிடலாம் போல் இருந்தது. நீங்களும் வானத்தைத் தொடலாம்..அதிக தூரமில்லை. எப்படி?

  • முதலில் உங்கள் அசையும் அசையா சொத்துக்களை பட்டியலிடுங்கள். உதாரணத்திற்கு வீடு, நகை, நிலம், வங்கியில் இருப்பு போன்றவை.
  • அடுத்த அதே வரிசையில் உங்கள் ப்ராவிடெண்ட் ஃபண்ட், இன்சூரன்ஸ் போன்றவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்
  • அடுத்து உங்கள் அந்த மாத வருமானங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்
  • இவை அனைத்தையும் கூட்டுங்கள். இதுதான் உங்கள் சொத்து மதிப்பு.
  • இப்போது அதற்கு கீழே உங்கள் கடன் அனைத்தையும் பட்டியலிடுங்கள். உதாரணம் ஹவுஸிங் லோன், பெர்சனல் லோன், க்ரெடிட் கார்டு பாக்கி போன்றவை (முழுத்தொகையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்).
  • அதற்கு கீழே உங்கள் இந்த மாத வீட்டுச் செலவை பட்டியலிடுங்கள்
  • ஏதும் இன்சுரன்ஸ் மாதாமாதம் கட்டுபவராக இருந்தால் அதையும் இங்கே கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.
  • இப்போது இவை அனைத்தையும் கூட்டுங்கள். உங்கள் பற்றின் மொத்தத் தொகை உங்கள் முன்.
  • இப்போது மொத்த சொத்திலிருந்து மொத்த பற்றை கழியுங்கள். இதுதான் உங்களின் இன்றைய நிதி நிலை. இது போல மாதாமாதம் கண்டறிந்து போன மாதத்திலிருந்து இந்த மாதம் நாம் எவ்வாறு போய்க் கொண்டிருக்கிறோம் என்று எக்ஸல் உதவியுடன் மாற்றத்தை கண்டிறியலாம்.
இவ்வளவு எளிதாக இருந்தாலும், இதை பெரும்பாலானோர் முயற்சி செய்வதில்லை. எதெதெற்கோ நேரத்தை ஒதுக்கும் நாம் இதற்காக ஒரு மணி நேரம் ஒதுக்கினால போதுமானது. ஒரு மணி நேரமே செலவழித்து பல தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தாலாம், நம் எதிர்காலத்தை நாமே நிர்ணயிக்கலாம்.
எக்ஸல் டெம்ப்ளேட் தரவிறக்கம் செய்ய இங்கே அமுக்குங்கள்

9 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.