Home » Featured, Headline, சிறுகதை

2050: தாத்தா சொன்ன கதை

6 January 2010 7 Comments
“ தாத்தா ஒரு கதை சொல்லேன்”

“என்ன கதைடா செல்லம்? அனுமார் கதை சொல்லட்டுமா?”

“எப்ப பார்த்தாலும் அததானே சொல்ற. வேற ஏதாவது கதை சொல்லு தாத்தா ப்ளீஸ்”

“சரி. ராமர் கதை சொல்லட்டுமா?”

“அதுலையும் அனுமார் வருவாரு. அனுமார் கதையிலயும் ராமர் வருவாரு. எனக்குத் தெரியும் தாத்தா. வேற கதை சொல்லேன். உனக்கு சையின்ஸ் ஃபிக்‌ஷன் கதை தெரியுமா?”

“சையின்ஸ் ஃபிக்‌ஷன் வேணுமா செல்லத்துக்கு…அப்போ அவதார் கத சொல்லட்டுமா?”

“போ தாத்தா…அதுவும் அனுமார் கத மாதிரிதானே…வேற ஏதாவது சொல்லு தாத்தா…ப்ளீஸ் தாத்தா..ப்ளீஸ்…ப்ளீஸ்..ப்ளீஸ்….”

“கண்ணா தாத்தாவ தொந்தரவு பண்ணாத. அப்பா நீங்க சாப்பிட வாங்கோ மொதல்ல”

“கொழந்த ஆசையா கேட்கறான்மா. ஏண்டா அங்க என்ன லேப்டாப்ப தட்டிண்டு இருக்க. எங்க காலத்துலதான் ஆபீஸுக்கு போகணும். போயிட்டு வந்துதான் பர்சனல் ஜோலியெல்லாம் பார்க்கணும். அதான் இப்ப எங்கயிருந்து வேணும்னாலும் வொர்க் செய்யலாம்னு இருக்கோல்யோ. கொழந்த கேட்கறது. ஏதாவது சொல்லேன். அதையே கட்டிண்டு அழறியே எப்பப்பார்த்தாலும்”

“நன்னா சொல்லுங்கோப்பா..24 மணி நேரமும் அதையே கட்டிண்டுதான் அழறார்”

“ஏன் ஆளுக்காள் அவன இப்படி கரிச்சுக் கொட்றேள், அவனுக்கு என்ன ஜோலியோ”

“நீ சும்மா இருடி..வந்துடுவே உம்பிள்ளைய சொன்னவுடனே”

“ஆமா என்ன அடக்குங்கோ எல்லாத்துக்கும்” என்று அனன்யாவை ஒரு முறைத்துவிட்டு போனாள்.

“அப்பா எனக்கு கதையெல்லாம் சொல்லவராதுபா. என்ன விட்டுங்கோ. எனக்கு அவ்வளவா தெரியவும் தெரியாது”

“நெட்ல படிச்சுட்டு சொல்லுடா”

“அப்படியே நாளைக்கு வேலைக்காரி வராளா இல்லியான்னு கேட்டு சொல்லிடுங்கோன்னா”

“உனக்கு வேறே வேலையே இல்லடி. இரு…..பிஸின்னு காட்டறது சாட்ல. மெசேஜ் பண்ணியிருக்கேன்”

“அப்பா என் கம்ப்பூட்டர் ரொம்ப ஸ்லோவா இருக்குப்பா. ராம் இன்கிரீஸ் பண்ணணும். ஸ்கூல்ல மிஸ் அப்க்ரேட் பண்ணிண்டு வரச்சொன்னா”

“டேய் ரெண்டு நாளா லீவு இருந்துதில்ல என்னடா பண்ணிண்டிருந்த. இப்ப வந்து லாஸ்ட் மினிட்ல சொல்றீயே. எப்படியும் அவனுக்கு ஆன்லைன்ல ராம் அப்டேட் பண்ண 4 மணி நேரமாவது ஆகும். அதுமட்டும் நான் கண்முழிச்சிக்கிட்டு அவன் கேட்குற எசகுபிசகான கேள்விக்கெல்லாம் பதில் சொல்லணும். தலையெழுத்து”

“கொழந்தைய கோவிச்சுக்காதடா. பாவம். நாந்தான் அத கோவிலுக்கெல்லாம் விர்ச்சுவல் டூர் கூட்டிண்டு போயிட்டு மத்தியானம்தான் வந்தேன். அது சொல்லித்து. நாந்தான் உனக்கு அப்டேட் பண்ணலை”

“என்னப்பா நீ. இப்படித்தான் போனதடவை என்னோட டிஜிட்டல் சிக்னேச்சர் ஃபைல டெலிட் பண்ணிட்ட. அவன் ஸ்கூல்லேர்ந்து ஃபோன் பண்ணி அவன் ரிப்போர்ட் கார்டுக்கு என் சைன் வரலைன்னு கம்ப்ளையண்ட் பண்றா? நான் என் ஐஃபோன்ல அப்ரூவ் பண்ணிட்டேனேன்னு செக் பண்ணா ஃபைலை காணும். லாஸ்ட்டா ரெக்கார்டு உன் ஐடியை காட்டறது”

“அப்பாவ வெய்யாதேடா ராமானுஜா..நாந்தான் என் ஃப்ரெண்டு சுப்பு ஏதோ நாங்க எடுத்திண்ட ஃபோட்டவ கேட்டானுட்டு அத அனுப்பும்போது தெரியாம உன் ஃபைல டெலிட் பண்ணியிருப்பேன்” அம்மா தன் கல்லானாலும் கணவனை தற்காத்தாள்.

“அய்யோ அம்மா உனக்கு எத்தன தடவை சொல்லியிருக்கேன். அதுக்கு இத யூஸ் பண்ணவே வேண்டாம்மா. உன்னோட ஃபோட்டோ ஆல்பத்தை ஓபன் பண்ணி எந்த ஃபோட்டோ அனுப்பணுமோ அதை வலது சுண்டுவிரலால தொட்டியானா ஆப்ஷன்ஸ் வரும். அதுல ”செண்ட்” செலக்ட் பண்ணி உன் ஃபோன கனெக்ட் பண்ணி மாமிக்கு அனுப்பிட்டியானா அவா ஃபோட்டோ ஆல்பத்துக்கு போயிடும்”

“தெரியுண்டா…என்னவோ எனக்கே சொல்லித்தரான். இதே சுண்டுவிரலால அந்த காலத்துலயே நான் எழ கோலம் போட்டவளாக்கும்”

“சரி விடு ருக்கு….நாளைக்கு எலக்‌ஷனாச்சே…எத்தன மணிவரைக்கும் தொறந்திருப்பாளாம். எங்க காலத்துல எல்லாம் கார்த்தால ஆரம்பிச்சு சாயங்காலம் வரைக்கும் பூத் தொறந்து வெச்சிருப்பா”

“இன்னும் பணமே ட்ரான்ஸ்ஃபர் ஆகலையேபா….அவர் எப்பவுமே லாஸ்ட் மினிட் ஏதாவது பிரம்மாண்டமா செஞ்சி ஜெயிச்சுடுவார். நானும் அதுக்காகத்தான் பார்த்துண்டிருக்கேன்”

“அது சரி இப்ப எல்லாமே மாறிடுத்து. அந்த காலத்துல அவரோட அப்பா ஆத்துக்கு வந்து இரண்டு வார்த்தை பேசிட்டு கையில கொடுத்திட்டு போவார். இப்ப சாப்பாடுலேர்ந்து பால் பாக்கெட் அலர்ட் வரைக்கும் எல்லாமே ஆட்டோமேடிக் ஆயிடுத்து. யாருக்கு ஓட்டுன்னு டிசைட் பண்ணிட்டயா? ஐசிஐசில ஆன்லைன்ல செக் பண்ணு ஓட்டுக்கு பணம் ட்ரான்ஸ்பர் பண்ணியிருப்பா. யாரு அதிகமா குடுக்கறாளோ அவாளுக்குதான் போடணுமாம், எலக்‌ஷன் கமிஷன் நேத்து டிவில சொன்னா”

“சலிச்சுக்காதப்பா…இப்பவும் அதுபோலத்தானே…ஏதோ ஒரு பேர்லேர்ந்து நம்ம அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆயிடறதேபா. கட்சிக்காராளும் மேசேஜ் அனுப்பறா. இந்த வாட்டி கண்டிப்பா சேது கால்வாய் போட்டுருவோம்னு சொல்லிண்டிருக்கா”

“அட போடா கேட்டு கேட்டு புளிச்சுப் போச்சு..எங்க காலத்துலயே அவா தாத்தா இத முடிப்பேன்னு சொல்லிண்டிருந்தார்…என்னடி ருக்கு…?

“ஆமா ஆமா…இதுக்கெல்லாம் ஒண்ணும் கொறைச்சக் இல்ல…..”
தாத்தா நாற்காலியின் ஒரு பட்டனை தட்ட..வீட்டில் மூட் மாறுகிறது. பேக் டு தி பேரன் ஸ்டோரி.

“நீ வாடா செல்லம். நானே கதை சொல்றேன்”

“அப்பா சாப்பிட வரலையா நீங்க”

“நீங்க எல்லாம் சாப்பிடுங்கோ. எனக்கு கோதுமையும், பச்சை மிளகாயும், எண்ணெயும் தட்டுல போட்டு கொடுத்திடு. நான் அலாரம் செட் பண்ணி சமைச்சுக்கறேன்”

“ஏன்னா ஒரு நாளாவது சேர்ந்து சாப்பிடலாம்னா….வாங்கோ”

“நான் வீடியோ கான்ஃப்ரன்ஸ்ல வரேன் ருக்கு. கொழந்தைக்கு கதை சொல்லிட்டு வரேன்”
“நான் கூட வரலை அனன்யா. பாஸ் திடீர்னு பிங் பண்றார். அப்பா கொஞ்சம் மேலே துண்டு ஏதாவது போட்டுக்கோங்கோ…”

“அப்பா, அபிஷேக் இருக்கானாப்பா. ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..அபிஷேக்க்க்க்க்க்க்க்க்க்க்….”

“இடியட் ஏன் கத்தறே”

மறுமுனையில்:

“ஹாய் டா…..விவேக்….என்ன பண்ற நீ..நான் இங்க சந்திரயான் கேம் விளையாடிண்டு இருக்கேன். எங்கப்பா புதுசா ராக்கெட் வாங்கிண்டு வந்திருக்கார்”

“அபிஷேக், ஷட் யுவர் மௌத். அப்பா ராமனுஜன் கூட பேசிண்டிருக்கேன் இல்ல. ராமானுஜன் ப்ளீஸ் ம்யூட் யுவர் சன் ஃபார் சம் டைம்”

“ஓகே சார்”

சற்று நேரத்துக்கு பிறகு…..

“அய்யய்யோ..இங்க வாங்கப்பா” என்று வர்ஷினி பதற..

“என்ன ஆச்சும்மா. விவேக் ஏதும் அமர்க்களம் பண்றானா?”

“இல்லப்பா இவர் பீ.பி ஏறிடுத்து. போர்ட்ல மீட்டர் ஜாஸ்தியா காட்றது”

“ஏய்! அதெல்லாம் ஒண்ணுமில்லை விடு”

“என்னடா உன் பாஸ் ஏதும் விர்ச்சுவல் ஆன்சைட் வொர்க் ஏதும் கொடுத்தாரா. அதுதான் இருக்கும்”

“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா. இது என்ன புதுசா?”

“செத்த நேரம் நீயா நானாவுல பேசிட்டு வர விடறேளா. என்னடா ராமானுஜா என்ன ஆச்சு?”

“ஒண்ணுமில்லமா…பீ.பி 30 பாயிண்ட் ஏறிடுத்து. உடனே இவா அமர்க்களம் பண்றா. அப்பா நான் நார்மலாத்தான் இருக்கேன். சொன்னா கேளுங்கோ..ப்ளீஸ்…இருங்கோ இது வேற ஏதோ ப்ராப்ளம்…”
ராமானுஜன் தன் சட்டையை கழற்றி தன் இட புஜத்திலிருந்து “சிப்”பை எடுத்து உதறிவிட்டு மீண்டும் ஃபிக்ஸ் செய்துகொண்டான். இப்பொழுது கம்மியாகக் காண்பித்தது.

“பார்தேளா….இது ஏதோ ”சிப்”ல ப்ராப்ளம். அனன்யா அங்க மீட்டர்ல என் யுஐடி போட்டு ரீப்லேஸ்மெண்ட் சிப் ரிக்வெஸ்ட் போடு”

ஒரு மணி நேரத்திற்கு பிறகு…..

“இந்தாங்கோன்னா…”

“ஆங்….இப்ப பாரு….நார்மலா தெரியறது..”
எல்லோரும் கோரஸாக “அப்பாடா” என்று சொல்ல…லேப்டாப்பில் மறுபடியும் ஒரு பீப் சத்தம் பீறிட…

“உங்கள் மாற்று சிப் ரிக்வெஸ்ட்டிற்கு நன்றி. நீங்கள் செலுத்த வேண்டிய தொகை 3 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய். இதை நீங்கள் இந்த மாத பில்லோடும் கட்டலாம்” என்று விட்டுவிட்டு தெரிந்தது.

“தாத்தா….தாத்தா….என்ன தாத்தா யாருமே கத சொல்லமாட்டேங்கறளே”

“சரிடா ஒனக்கு நல்ல கத வேணும்னா ரெண்டு பொஸ்தகம் கொண்டு வரேன். என்னோட 2010 லைப்ரரில இருக்கு. சுஜாதான்னு ஒத்தர் எழுதினது. சயன்ஸ் பிக்‌ஷன் ஸ்டோரி”

“2010 கதையா? போ தாத்தா…ரொம்ப பழசு!…அதுலயும் அனுமார் வருவாரா?”

“இல்ல, அனுமார்லாம் வரமாட்டார், ஜீனோன்னு ஒரு நாய்தான் வரது”

7 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.