Home » Featured, Headline, சிறுகதை

கண்டேன் கடவுளை

28 December 2009 11 Comments

என் பெயர் சிவராமன். நான் ஒரு ”சராசரிக்கும் கொஞ்சம் மேல்” இந்தியன். எனக்கும் உங்களுக்கு இருப்பதை போல ஆசாபாசங்கள் உண்டு. நன்றாக படித்து, தமிழ் படங்களில் வரும் ஹீரோவைப் போல எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பெரும் பணக்காரனாக வேண்டும். நான் அவளை புரிந்து கொள்கிறேனோ இல்லையோ, என்னை புரிந்து கொள்பவள் மனைவியாக கிடைக்கவேண்டும். ஒரு பிரபலமானவனாக எல்லோராலும் அன்பு காட்டப்படுகின்றவனாக, மதிக்கப்படுகிறவனாக என்று எண்ணற்ற ஆசைகள், எதிர்பார்ப்புகள். எல்லாவற்றிற்கும் மேலாக எல்லா இந்தியனைப் போலவும் தெய்வபக்தி உள்ளவன். பல நேரங்களில் கடவுள் மனித உருவத்தில் வந்து பேசுவார் என்ற நம்புபவன்.

ஒரு ப்ளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியில் கடைநிலை அக்கவுண்டண்ட். மாதம் பிடித்தம் போக வரும் சம்பளம் உங்களிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒன்றல்ல. அதற்காக மிகவும் குறைந்ததும் அல்ல. போதும் என்றளவுக்கு கொடுக்கிறார்கள். போதுமென்பது அவர்களுக்கா அல்லது எனக்கா என்றரிய நான் வேறு வேலை தேடும் முயற்சியில்தான் கண்டுபிடிக்க முடியும்.

நான் அலுவலகத்தில் உள்ளே நுழையும்போதே ”அய்யரு வந்துட்டாரு” என்ற கமெண்ட் எனக்கு முன்னதாக வந்துவிடும். இத்தனைக்கும் நான் அய்யர் அல்ல. என்ன ஜாதி என்று சொல்லி ஜாதிக் குழப்பதை உண்டு பண்ண மனமில்லை. அதனால் நீங்களும் கேட்காதீர்கள். என்னிடம் உள்ள இன்னுமொரு நல்ல பழக்கம் வயசு வித்தியாசமெல்லாம் பார்க்காமல் ஆத்திகம் பேசுவது. யாராவது கிடைத்துவிட்டால் எனக்கு தெரிந்ததை அவருக்கு சொல்லியும் அவருக்கு தெரிந்ததை கேட்டு தெரிந்துகொள்வதுமாக அலுவலகம் இல்லாத நேரத்தை கருத்துப் பறிமாற்றத்தில் கழிப்பேன்.

அலுவலகம் செல்ல பஸ் பிடிக்கும் பஸ் ஸ்டாண்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயருக்கு ஒரு ரூபாய் போட்டு  குங்குமம் இட்டுக் கொள்வேன். சாதரணமாகவே நிறைய வேலை இருக்கும் டிபார்ட்மெண்ட் என்னுடையது. அதுவும் மாதம் தேதி 20வதை தொட்டுவிட்டால் வேலை பளு உச்சத்தில், மூச்சா போக கூட நேரம் கிடைக்காது. சம்பள கணக்கு, பிடித்தம், லோன் பாக்கி, ட்ராவல் அலவன்ஸ் என்று எல்லாவற்றையும் கவனித்தாகவேண்டும் 25க்குள். அது முடிந்து முதுகு நிமிர்வதற்குள் மாதக்கடைசி கணக்கு வழக்குகள் தொடரும். மாதாமாதம் குறிப்பிட்ட நேரத்தை வீணடிக்க இருக்கவே இருக்கிறது எம்.ஐ.எஸ் டீமுடன் போர்டு மீட்டிங். இதற்கும் நாந்தான் இளிச்சவாயன். ரெண்டு முதுகுத் தட்டல் பரிசாக குறிஞ்சி மலர் போல பூக்கும். அன்றும் அலுவலகத்தில் அப்படியொரு நெடுநாள்தான். இரவு வேலை முடிந்து கிளம்பும் போது மணி 10ஐ தாண்டிவிட்டது.

பஸ் ஸ்டாண்டுக்கும் என் அலுவலகத்துக்கும் சுமார் ஒரு 500 மீட்டர் தூரம் இருக்கும் என்று நினைக்கிறேன். தினமும் போய்வரும் பாதைதான். இருந்தும் தூரத்தை கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. பக்கத்து சீட்டில் இருக்கும் ரம்யாவையே இன்னும் கணக்குப் பண்ணாதவன் நான்.

ஆபிஸ் கேட்டில் சுவாரசியமாக பீடி பிடித்துக்கொண்டு அசுவாரசியமாக “குட் நைட்” சொன்ன மணிமனிதனை தாண்டி ஒரு 100 மீட்டர் தூரம் நடந்திருப்பேன். தெருவிளக்குகள் என்றுமே வேலை செய்ததில்லை.  கருப்பு மையை இயற்கை முழுவதுமாக தீட்டியிருந்தது. கொசுறுக்கு ஆங்காங்கே கொஞ்சம் வெளிச்சம், மூடப்பட்டிருந்த கம்பெனிகளின் வாசல் விளக்கிலிருந்து வந்து விழுந்து வழிகாட்டியது.

வேகமாக நடையை போட்டவனின் முன்னால் சற்றும் எதிர்பாராத தருணத்தில் சடாரென்று ஒரு உருவம் வந்து நின்றது. ஒரு நொடிக்கு என் இதயம் நின்றுவிட்டு பின் இயங்க ஆரம்பித்தது. சுதாரித்துக் கொண்டு இருந்த வெளிச்சத்தில் உற்று கவனித்த போது அந்த உருவம் நல்ல ஆஜானுபாகுவான உயரமாக, உடற்பயிற்சி செய்தாற்போன்ற உடல்கட்டுடன் இருந்தது. ஆஹ்..ஆஞ்சநேயர்…ஆம், அது ஆஞ்சநேயர்…எனக்கு தலைகால் புரியவில்லை. ஒரு நிமிடம் நாத்திகம் மனதில் புகுந்து வேஷக்காரனோ என்று தோன்றி உடனே ஆத்திகக்கண் திறந்து இல்லை இது கடவுள்தான் என்று உறுதி செய்தது. இது போல வேடம் அணிந்து நம் தெருக்களில் பார்த்திருந்தாலும், அந்த நேரத்தில் போக்குவரத்து அதிகமில்லாத தெருவில் அவர்கள் இருக்க வாய்ப்பில்லை. அதுவும் கும்மிருட்டில்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். யாருமே கண்ணில் படவில்லை. சினிமாக்களில் பார்த்திருக்கிறேன். கடவுள் ஒருவர் கண்ணுக்கு மட்டுமே தெரிவார். நாம் அவரை பார்ப்பதையோ அவருடன் பேசுவதையோ வேறு யாரும் தெரிந்துகொள்ள முடியாது. நிச்சயம் இது கடவுள்தான். நான் எவ்வளவு பெரிய அதிருஷ்டசாலி. எத்தனையோ ஞானிகள் தவமிருந்து அவனை காண காத்திருக்கும் போது, நான் தினமும் உண்டியலில் போடும் வெறும் 1 ரூபாய்க்கு என்முன் வந்திருக்கிறான் என்றால் நான் நிச்சயம் புண்ணியத்துக்கு மேல் ஏதாவது செய்திருக்கவேண்டும்.

அவரிடமிருந்து நான் இதுவரை சுவாசித்திராத ஒரு சுகந்தமான வாசனை. இது இவ்வுலகத்து வாசனையே அல்ல. பரிசுத்தத்தின் முழு அர்த்தமாக அவரின் புன்னகை.

வணங்கினேன். ”ஜெய் ஸ்ரீராம்” என்று ராமானந்த் சாகரின் ராமாயணத்தில் வரும் ஆஞ்சநேயரைப் போல உச்சரித்தார். 5.1 ஸ்டிரியோவில் கூட கேட்கமுடியாத உன்னத குரல். நான் சாஷ்டாங்கமாக ரோடு, குப்பை ஏதும் பாராமல் காலில் விழுந்தேன். என்னைத் தொட்டு எழுப்பினார். மெய் சிலிர்த்தது. பிறந்ததின் பயனை அடைந்துவிட்டதாக உணர்ந்தேன். பேச்சு வரவில்லை எனக்கு. “தீர்க்காயுஷ்மான் பவ” என்று தெய்வீகக் குரலில் ஆசீர்வதித்தார். அனைத்து உடல் உபாதைகளும் அந்த நொடியில் என்னைவிட்டு விலகி, தூய்மையடைந்ததை போல இருந்தது.

“என்ன வேண்டுமோ கேள் மகனே” என்றார் ஆஞ்சநேயர். கடவுளை பார்க்காத வரை அவரை ஒரு மேஜிக் நிபுணன் போல நினைத்து அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கும் மனதுக்கு நேரில் அவர் நிற்கும்போது ஒன்றும் தோன்றவில்லை.

மனது அத்தனை சுத்தமாக ஆகிவிட்டிருந்தது. நான் இன்னும் என்னையே நம்பவில்லை. மறுபடியும் ஒரு முறை சுற்றிப் பார்த்தேன். யாரையும் காணோம். வெறிச்சோடிக் கிடந்தது சாலை. அவரின் தலைக்குப் பின்னால் ஒரு வட்டமான மஞ்சள் நிற வெளிச்சம் தெரிந்தது. கடவுளை பார்ப்பதே கனவாக இருக்கும் போது, அவரை அங்கம் அங்கமாக ஒரு அடி இடைவெளியில் காணக்கிடைத்து, அவரின் கையால் தூக்கிவிடப்பட்டால்?

மனிதம் சந்தேகத்தின் உச்சம்தானே? சந்தேகம் உயிர்பெறும் தருணத்தில் நான் எதிர்பாராத நேரத்தில் ஆஞ்சநேயர் தன் கட்டைவிரலால் என் நெற்றியில் ஒரு இழு இழுக்க, தொட்டுப் பார்த்தால் செந்தூரம். மறுபடியும் இது கடவுள்தான் என்று உறுதியானது.  உள்ளங்கையை காண்பித்து என் மேல் அவர் வீசிய அந்தக் கருணைப் பார்வை “நன்றாக இருப்பாய்” என்றது.

எனக்கு என்ன கேட்பது என்று தெரியவில்லை. இருந்தும் அவரே சொல்லும்போது நாம் கேட்காமல் இருக்க முடியுமா? கேட்டுவிட்டேன்…

ஆஞ்சநேயா….வந்து…வந்து…கடவுளே…வந்து..எனக்கு சின்ன வயசிலிருந்தே பெரிய பணக்காரனாக ஆசை. ஒரு நல்ல அழகான பெண்ணை, என் பக்கத்தில் உட்காரும் ரம்யாவை கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசை. என்றும் உன்னை சேவித்தும் பாடிக்கொண்டும் இருக்க வேண்டும். என்னால் ஆனவரை மற்றவருக்கு உதவ வேண்டும். என் நண்பன் அவன் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னான். அவள் குணமடைய வேண்டும். ஆசீர்வதியுங்கள் ஆஞ்சநேயா…

கேட்டுவிட்டேன்…

ஆஞ்சநேயரின் புருவம் உயர்ந்திருந்தது. ஒருவேளை பேராசைப்பட்டு விட்டோமோ, அதிகமாக கேட்டுவிட்டோமோ என்று நினைக்கவைத்தது. ஆஞ்சநேயர் பேசத் தொடங்கினார். இதுபோல வாயை வைத்துக் கொண்டு எப்படி அவர் அப்படி ஸ்பஷ்டமாக பேசுகிறார். எனக்கு ஆச்சரியம் அளித்தது. மறுநொடி என் மனது “ச்சீ என்ன பேசற..அவர் கடவுள். அவர் நினைத்தால் என்னவேண்டுமானாலும் செய்ய முடியும்” என்று விளக்கியது.

“நீ அனுதினமும் என் ஸ்ரீராமனை வணங்கியதால், உன்னை ஆசீர்வதிக்கவே யாம் வந்தோம். நீ எல்லா நலமும் பெற்று வளமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வாய். நீ கேட்டதனைத்தும் யாம் கொடுக்கிறோம். உன்னால் ஆன உதவிகளை மற்றவருக்கு செய்துகொண்டிருந்துவிட்டு சொர்க்கம் வந்தடைவாயாக”.

நான் இன்னொரு முறை அவரை தலைவணங்கி நமஸ்கரித்தேன்.நிமிர்ந்து பார்த்தால் அவரைக் காணவில்லை. மறைந்துவிட்டிருந்தார். இன்னும் கொஞ்ச நேரம் என்னுடன் இருந்திருக்கலாம் என்று மனது ஏங்கியது. என்னைப் போல எத்தனை பக்தர்களை அவர் ஆசீர்வதிக்க வேண்டும், என்னிடமே இருந்தால் எப்படி என்று யதார்த்தத்தை உணர்ந்து, அவரின் வார்த்தைகளையும் உருவத்தையுமே நினைத்துக் கொண்டே நடக்கத் தொடங்கினேன். இதை யாரிடமாவது சொன்னால் நம்புவார்களா? கண்கண்ட தெய்வமான, கோவிலே கதியென்று இருக்கும் அம்மா கூட உடனே ஒரு நல்ல டாக்டரை பார்த்துவிடலாம் என்பார். நண்பன் நக்கலடிப்பான். யார் நம்பப் போகிறார்கள்.

யார் நம்பவேண்டும்?

இரவு முழுக்க மனதில் ஆஞ்சநேயரே நிரம்பி வழிந்தார். காதில் அவர் குரலே ஹெட்போன்ஸ் போட்டுக்கொண்டது போல ஒலித்தவண்ணம் இருந்தது.

அடுத்த நாள் அலுவலகம் கிளம்பும் முன் வாசலில் ஒரு வயதானவர் பெல்லடித்தார். அம்மா உள்ளே எனக்கு மதிய உணவை எடுத்து வைத்திருந்ததால்,ஒரு கால் சாக்ஸுடன் யார் என்று விசாரித்தேன். அவர் தன் மகள் படித்துக் கொண்டிருப்பதாகவும், கல்லூரி பீஸ் கட்ட பண உதவி நாடுவதாகவும் சொல்லி, நான் ஏதும் உதவ முடியுமா என்று கேட்டார். ஏதோ பேப்பர்கள் சர்டிபிகேட்கள் காட்டினார். எனக்கு கவனம் அதில் போகவில்லை. ஆஞ்சநேயர் சொன்னதே ஒலித்துக்கொண்டிருந்தது. “உன்னால் ஆன உதவிகளை மற்றவருக்கு செய்துகொண்டிரு”. கடவுள்தான் நம்மை சோதிக்கிறார். என்னதான் செய்கிறான் பார்க்கலாம் என்று வயதானவர் தோற்றத்தில் வந்திருக்கிறார். நான் அவரை காத்திருக்கும்படி சொல்லிவிட்டு உள் சென்று ரூ2000த்துக்கு செக் கிழித்து கையொப்பம் இட்டு வாசல் வந்து அவரிடம் கொடுத்தேன். இதை நீங்கள் உங்கள் பெயரிட்டு பணமாக் மாற்றிக்கொள்ளலாம். என்னிடம் கையிருப்பு ஏதும் இல்லை என்றேன்.

பெரியவர் மிகுந்த மகிழ்ச்சியுற்று, ”அந்த கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும். நீங்க பிள்ளைக்குட்டிகளோடு நன்றாக இருப்பீர்கள்” என்று ஆசி வழங்கினார். எனக்கு மீண்டும் மனதில் ஆஞ்சநேயர் சொன்னது வந்து போனது “நீ எல்லா நலமும் பெற்று வளமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வாய்”. கடவுள்தான் இவரை அனுப்பியிருக்க வேண்டும்.

அலுவலகதில் வேலையையும் தாண்டி ஆஞ்சநேயரே வியாபித்திருந்தார். வழக்கம்போல லேட்டாகவே அலுவலகத்தில் இருந்து புறப்பட்டவனுக்கு ஒரு நப்பாசை.  அதே சாலை, அதே இருட்டு, அதே விளக்கு வெளிச்சம். அவர் வருவாரா? நான் கொடுத்த செக்கை காட்டுவாரா? அவர் வரவில்லை.

அடுத்தநாள், அதற்கு அடுத்தநாள் என்று எதிர்பார்த்தேன்.  அவர் வரவேயில்லை.

ஒரு வாரம் போயிருக்கும். தந்தி பேப்பரில் தலைப்பு செய்தி இருந்தது.  கடவுள் வேடம் போட்டு நூதன முறையில் மக்களை ஏமாற்றும் கும்பல் மடிப்பாக்கம் அருகே பிடிபட்டதாக போட்டிருந்தது.

“ச்சே, நானும் ஏமாற்றப்பட்டு விட்டேனே.  அன்று வந்தது ஆஞ்சநேயராக இருக்காது.  ஆஞ்சநேயராவது வருவதாவது.  இந்த கலியுகத்தில் அதெல்லாம் நடக்குமா என்ன. வந்தவன் சொன்னதை கேட்டு யாருக்கோ ரூ.2000 தண்டம் அழுததுதான் மிச்சம்”

யோசித்துக் கொண்டே இருந்ததில் அலுவலகம் கிளம்ப தாமதம் ஆகிப்போனது. தாமதமாக போய் அலுவலகம் போய் சேர்ந்தேன். ”சிவராமன்! உன்னை மானேஜர் அவசரமா பார்க்கணும்னு வரச்சொன்னாரு” என்றான் கோபால்.

”சார், மே ஐ கமீன்”

“வாங்க சிவராமன். ஆங்…நாந்தான் உங்கள வந்தவுடனே வந்து பார்க்கச் சொன்னேன்”.

அவர் முகபாவங்களில் நான் எந்த பிரச்சனைக்காகவும் வரவழைக்கபடவில்லை என்ற சமிக்ஞை தெரிந்தது நிம்மதி அளித்தது. இருந்தும் எதற்காக வரச்சொன்னார் என்று புரியவில்லை. சமர்ப்பிக்க வேண்டிய ரிப்போர்ட்டுக்கு இன்னும் மூன்று நாள் இருக்கிறது.ஒருவேளை லேட்டாக வந்ததற்கு கோபிப்பாரோ?

யோசித்துக் கொண்டிருக்கும் போதே மானேஜர் “ஒரு குட் ந்யூஸ் சிவராமன். உங்க ப்ரோமோஷனுக்கு மேலிடத்துல பேசியிருக்கேன். உங்களை எம்.ஐ.எஸ் டிபார்ட்மெண்ட்டில் அசிஸ்டெண்ட் மானேஜராக ஆக்க சொல்லி சிபாரிசு செய்திருக்கிறேன். அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன். ஆல் த பெஸ்ட்” என்றார்.

எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. என் இம்மீடியட் கடவுளான மானேஜருக்கும் நன்றிகளை தெரிவித்தேன்.

வெளியே வந்து என் சீட்டில் உட்காரும்போது ரம்யா என்னைப்பார்த்து அழகாக சிரித்தாள்.

ப்ரோமோஷன் ந்யுஸ் கொடுத்த உத்வேகத்தில் அன்று வேலை பளு தெரியவில்லை.  மீண்டும் லேட்டாக கிளம்பி இருட்டு ரோட்டில் நடந்தவன் மடாரென்று இடித்துக் கொண்டேன். எதிரே அதே ஆஜானுபாகுவான ஆறடி உயரத்தில் ஒரு உருவம்.

அந்த உருவம் பேசத்தொடங்கியது ”ஜெய் ஸ்ரீராம்! ஐய்யா என் பெயர் அனுமந்தராவ். என் பர்ஸ் திருடு போயிடுத்து, பஸ்ஸுக்கு ஒரு பத்து ரூபாய் மட்டும் கொடுத்து உதவினீங்கன்னா கோடி புண்ணியமாகப் போகும்” என்றார்.

கதை பிடித்திருந்தால் ஓட்டு போடுங்க…

11 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.