Home » கற்றதும் பெற்றதும்

ஞாபகசக்தியை பெருக்கும் இண்டர்நெட்

6 November 2009 6 Comments

இப்போதெல்லாம் குழந்தைகளின் வளர்ப்பில் பெரிதும் பங்கு வகிப்பது பெற்றோர்களோ, வீட்டிலிருக்கும் பெரியோர்களோ இல்லை. தொலைக்காட்சியில் வரும் ஊட்டச்சத்து பான விளம்பரங்கள்தான். இது அதை கொடுக்கும், அது இதை வளர்க்கும், அர்ஜுனை விளையாட்டு, படிப்பு எல்லாவற்றிலும் முதன்மை பெறச் செய்யும் என்று ஆளாளுக்கு ஒரு அர்ஜுனை ஓடச்சொல்லி, குதிக்கச் சொல்லி (படிப்பதைத் தவிர) காண்பிக்கிறார்கள்.

நம் தமிழ்நாட்டு அர்ஜுன்கள் கொஞ்சம் பரவாயில்லை. நம் தமிழ்நாட்டு அர்ஜுன்கள் இதையெல்லாம் பார்த்து விளம்பர மயக்கத்தில் ”நான் உயரமாகணும்”, ”எனக்கு சச்சினோட சீக்ரெட் எனர்ஜி வேணும்”, ”எனக்கு செஸ் ஆனந்த் போல மூளை வளரணும்” என்று கேட்டு சகட்டு மேனிக்கு வாங்கித்தர சொல்லி ஸ்ட்ரைக் பண்ணுவதில்லை. (அந்த ஸ்ட்ரைக்கெல்லாம் செய்வது அர்ஜூன்களின் அம்மாக்கள்தான் என்பது வேறு விஷயம்). ஒன்றில் விட்டமின் டி இருக்கிறது. இன்னொன்றில் விட்டமின் ஈ இருக்கிறது. அப்போ நாம் நம் குழந்தைகளுக்கு இரண்டும் வேண்டுமென்றால் இரண்டையும் மிக்ஸ் பண்ணி கொடுக்க வேண்டுமா? இப்படி குழந்தையிலேயே குடிப்பதற்கு மிக்ஸ் செய்து கற்றுக் கொடுத்தால் ஏன் அவர்கள் பிற்காலத்தில் சிறந்த குடிமகன்களாக வரமாட்டார்கள்?

உண்மையில் இவையெல்லாம் அவர்கள் சொல்லும் புரத ஊட்டச்சத்து உள்ளவையா என்பது பக்கத்து வீட்டு ஜானகியம்மாளுக்கும், மாடிவீட்டு விஜயலஷ்மிக்கும் என்வீட்டு பிரியாவுக்கும் தெரியுமா என்றால், தெரியாது. விளம்பரத்தில் வரும் அழகான அம்மாக்கள் சொல்கிறார்கள் இதில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளன என்று.

சரி இது நாம் குழந்தையாக இருக்கும் போதும் இருந்ததென்று வைத்துக் கொள்வோம். என் அப்பா காலத்திலுமா இருந்தது? பிறகு நம் மூதாதையர்கள் முட்டாள்கள் என்று சொல்லவருகிறார்களா? அவர்களுக்கும் இந்த ஊட்டச்சத்து ஏதும் இல்லை என்கிறார்களா?

இது உண்மையென்றால், எப்படி நித்தம் ஒரு விரதம் இருக்கும் அலமு பாட்டி கண்ணாடி போடாமல் தினத்தந்தி வாசிக்க, புரத, ஊட்டச்சத்து பானம் பல பருகும் என் அண்ணனின் பதிமூன்று வயது மகன் செய்தித்தாள் தலைப்புச் செய்தி படிக்க கண்ணாடி தேடுகிறான்?

வயதானவர்களை குழந்தைகளைப் போல் அணுக வேண்டும் என்று பத்திரிகைக் கட்டுரைக்கும், தொலைக்காட்சியில் முகம் காட்டும் பிரபல மருத்துவர்கள் அறிவுரைக்கிறார்கள். இப்படி குழந்தைகளாக மாறிவிடும் நம் பெரியோர்களின் உடல்நலத்திலும் மனநலத்திலும் அக்கறை காட்டவேண்டியதும் அவசியமாகிறது. இதற்காகவே நம் அலுவலகங்களில் மெடிக்கல் ரீ-இம்பர்ஸ்மெண்ட் வைத்தார்களோ என்று சிந்திக்கும் அளவுக்கு இன்றைய மருந்து மாத்திரைகளின் தேவை.

ஆனால் மருந்து ஏதுமில்லாமல் உடற்பயிற்சி ஒன்றும் செய்யாமல், கத்தியின்றி ரத்தமின்றி நம் வீட்டு பெரியோகளின் ஞாபகசக்தியை கூட்டலாம் என்கிறார் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் ந்யூரோசயின்ஸ் மற்றும் மனித நடவடிக்கை வகுப்புப் பேராசிரியராக பணிபுரியும்(கூடவே ஆராய்ச்சியும் புரியும்) கேரி ஸ்மால்.

நம் பெற்றோர்கள் பல விஷயங்களை வேண்டுமென்று சில சமயங்களிலும் வேண்டாமென்று சில சமயங்களிலும் தெரியாமல் பல சமயங்களிலும் மறந்து போகிறார்கள்.

உதாரணங்கள்:

“இப்போ எலக்ட்ரிக் பில் கட்டுற ஆபீஸ் அங்க போயிடுச்சா? அங்க என்ன பஸ்
போகும்?, இது முன்பு சொன்னதை அசட்டையாக கவனிக்காமல் சீரியல் பார்த்ததில் வரும் மறதி

வெண்டக்காய் பிடிக்காததால், வாக்கிங் சென்று வரும்போது வாங்கிவந்த காய்கறியில் வெ.காய் மிஸ்ஸாவது, கேட்டால், ச்சே..என்னவோ மறந்துட்டேன்னு நினைச்சேன் அப்பவே” என்று பிறகு மழுப்பும் நடிப்பு மறதி.

”உனக்கு ஒரு லெட்டர் வந்ததுடா” – இந்த பசங்க கலாட்டுவுல அத சுத்தமா மறந்து போயிட்டேன் என்று ஞாபகமாக சொல்லிவிட்டு ”அத கைவாட்டா எங்கியோ வெச்சேன், எங்க வெச்சேன்னு தெரியல” என்று வீடு புரட்டி தேடும் உண்மையான மறதி.

இனி இந்த ஞாபகமறதிக்கு நம் பாட்டி தாத்தாக்கள் டாட்டா காட்டலாம் என்கிறார் ஸ்மால். எவ்வளவு பெரிய விஷயம், அதை சொன்னவர் பெயரோ ஸ்மால் (இந்த பெயருக்கும் தமிழ் படத்தில் வரும் “சின்னவரு”க்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் என்னிடம் ஸ்மால் பற்றிய குடும்ப குறிப்பு ஒன்றும் இல்லை. அவர் இளையஸ்டு சகோதரரா, அதனால் அவருக்கு இந்தப் பெயரா, அதுவும் ஊர்மக்கள் சூட்டிய பெயரா என்று தெரியவில்லை).

சரி அவர் சொல்வதுதான் என்ன?

இண்டர்நெட் உபயோகிப்பதன் மூலம் மனித மூளையின் செயல்பாட்டுத் திறன் அதிகமாகிறது என்கிறார். நாம் ஒரு கேள்வி கேட்டால், ஏந்தான் கேட்டோமோ என்று நினைக்கும் அளவுக்கு சிலர் மெதுவாக பதிலுரைப்பார்கள். அவர்களின் மூளையை கூட சுறுசுறுப்பாக்கிவிடுகிறது இந்த இண்டர்நெட் மிதவை(surfing).

அவர் ஆய்வில் சுமார் 55 வயதிலிருந்து 78 வயது வரையிலான ஆண் பெண்களை தேர்வு செய்துள்ளார். இதில் 50வி பேர்கள் இண்டெர்நெட் உபயோகிப்பவர்கள், மீதம் 50வி அவ்வப்போது. இவர்களை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் இண்டர்நெட்ட விட்டு பார்த்ததில் தெரியவந்த உண்மை:

இண்டர்நெட்டுவதால், படிக்கும் பொழுது சுறுசுறுப்பாவதைவிட அதிகமாக ஊக்கம் பெறுகிறது என்று தெரியவந்துள்ளது. இந்த சுறுசுறுப்பானது மூளையில் இணையத்துக்கு பிறகும் தொடர்கிறதாம். வயதானவர்களுக்கு இண்டர்நெட் தேடல் உணர்ச்சிகளையும் செழுமைபடுத்துகிறதாம். முக்கியமாக இந்த இண்டர்நெட் உபயோகம் நம் மூளையின் மொழி, படித்தல், ஞாபகம் மற்றும் பார்வை போன்றவற்றிற்கான பகுதிகளை மேம்படுத்துகிறதாம். பெரிய விஷயத்தை ஆராய்ந்து சின்னதாக சொல்லிவிட்டார் ஸ்மால்.

இனி நம் வீட்டு பெரியோர்கள் வேண்டுமென்றே மறந்தவைக்கு தேய்ந்து போன ஞாபகசக்தியை காரணம் காட்டமுடியாது.

ஸ்மால் சொன்னதை வைத்து வீட்டு பெரியவர்களுக்கு ஒரு லேப்டாப் கொடுத்து இணையத்தை துணையாக்கி விடலாம். பிறகு, நாம் ஏன் மறந்தாய் என்று கேட்கப்போய் மேலே சொன்ன மறதிகளுக்கு பதிலாக கீழ்கண்டவாறு சொல்ல ஆரம்பிக்கும் சாத்தியங்கள் உண்டு:

”27Dதான் கலைவாணர் அரங்கத்து வாசல் வரை செல்கிறதே. போற வழியில நீயே கட்டிட்டு போயிடுடா”.

”வெண்டக்காய் ஒரே முத்தல்டா.அதான் வந்துட்டேன்”

”ஐசிஐசிஐ கார்டு ஸ்டேட்மெண்ட்டு வந்துது, ரெண்டு மாசமா பணம் கட்டலயா? சிபிலுக்கு ரிபோர்ட் பண்ணிடுவா அப்புறம் உன்னோட க்ரெடிட் ஸ்கோர் கெட்டு போயிடும், பணம் கட்ட சொல்லி கால் வரும். ஏண்டா இப்படி மறந்துபோய் எங்க மானத்த வாங்கற?”

இதற்கு பிறகு இன்னும் ஏதோ ஒன்றை பற்றி எழுதணும்னு நினைச்சேன்…மறந்து போச்சே….

சரி சரி நீங்க மறக்காம கமெண்ட்டும், டமிலிஷ்ல் ஓட்டும் போட்டுட்டு போங்க…(இதுக்காக உங்கள வெச்சு நான் ஏதும் ஆராய்ச்சி செய்யறேன்னு நினைச்சுக்காதிங்க).

6 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.