Home » சிந்தனைகள், நகைச்சுவை

சிந்தனைச் சிதறல்கள்

4 November 2009 3 Comments

நாம் அன்றாட வாழ்வில் பார்க்கும், ஆலோசிக்கும், படிக்கும் விஷயங்கள் எச்சகச்சம்…சாரி…எக்கச்சக்கம். ஆனால் அவை அனைத்தை பற்றியும் பக்கம் பக்கமாக எழுதுவது என்பது என்
போன்ற சின்ன(உருவத்திலும் வயதிலும் அல்ல) எழுத்தாளர்களுக்கு..சாரி..இதுக்காக நீங்க கையில் கிடைக்கிறத எல்லாம் எடுக்க வேண்டாம்..நான் மாத்திடுறேன்…என் போன்ற எழுத்தாளர் ஆக துடிக்கும் எழுத்தாளர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்.

அதனால் இந்த முறை அவ்வப்போது மனதில் உதித்த கேள்விகள், எண்ணங்கள், சம்பவங்கள் என்று இந்த பதிவை ஒரு மாதிரியா ஒரு வழியா போட்டுரலாம்னு இருக்கேன். இனி ம.உ.கே மற்றும் ம.உ.எளின் பட்டியல்:
*********************************************************************************ஏழு மணிக்கு ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா தொடரை என் மூன்று வயதை தொட முயன்று கொண்டிருக்கும் மகனுடன் பார்ப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் பார்க்கும் போது வந்த காட்சி மதுராபுரி அரசன்…இல்லை அரக்கன் கம்சன் வசுதேவர்-தேவகி (க்ருஷ்ணனின் உண்மையான பெற்றோர்) இருவரையும் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார். இருவரும் இப்படி ஒவ்வொரு முறையும் அவர்களை காண்பிக்கும் போது திடீரென்று எனக்கு தோன்றிய சிந்தனை:

அந்தக்கால கதைகள் மற்றும் திரைப்படங்களை பார்த்தவரையில் இதுவரை நான் சிறைவாசிகளுக்கென்று காலைக்கடன், குளியல், உடைமாற்று அறை என்று பார்த்ததேயில்லை. ஆனால் அனைத்துக் காட்சிகளிலும் பரிசுத்தமாக காணப்படுகிறார்கள். ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணாவில் வசுதேவர் நெற்றி திருமண் சகிதம் பளிச்சென்று காட்சி தருகிறார்.
*********************************************************************************
அடுத்து என் அலுவலக நண்பனின் நிச்சயதார்த்திற்கு போயிருந்தேன். மற்ற நண்பர்களும் அங்கே ஆஜர். அடாத மழையையும் மீறி அனைவரும் வந்திருந்தது, அவர்களின் பசியையும் காட்டியது…. நம்புங்கள்…இது உள்ளே நுழையும் போதே வயிற்றை தடவிக் கொண்டு வந்த செந்தூரவன் மேல் ஆணை. க்ரூப் போட்டோவுக்கு தயாரானோம். நான், செந்தூரவன் எல்லாம் நின்றால் வைடஸ்ட் ஆங்கிள் லென்ஸ் பொருத்தினால்தான் போட்டோவை க்ளீக்க முடியும். அதையும் மீறி ஒருவர் (போட்டோகிராபர், ரிச்சாக இருந்தார், வயசானவர், அனுபவம் மண்டையிலேயே தெரிந்தது) முதல் க்ளிக்கில் முயற்சி செய்ய, நின்றவர்களில் எவரோ ஒருவர் தூங்குவது போலவோ, அல்லது தேவையில்லாமல் வாயை திறந்தோ விழுந்திருக்க வேண்டும். அதனால் போ.கி ஒன் மோர் ப்ளீஸ் என்று சொல்ல நான் ”யாருங்க அங்க? சாருக்கு மோர் வேணுமாம். அங்க யாருப்பா..” என்று வழக்கமான கிண்டலை ஆரம்பித்து, ஏதோ தோன்றியவனாக ”யாருப்”வோடு பில்டர் செய்து கொண்டேன்.

கொஞ்ச நேரம் கழிந்து இன்னொரு நண்பனிடம் எதேச்சையாக மனதில் எழுந்த கேள்வியை கேட்டேன். “டேய் அந்த போட்டோகிராபர் ராமுக்கு(மணமகன்) சொந்தக்காரரா?”

”ஆமாம்!” – நண்பன்.

நான்: அடப்பாவமே, இது தெரியாம கிட்டதட்ட நான் அவரை கிண்டலடிக்க போயிட்டேனே? தப்பா எடுத்திருப்பாரா? என்று சொல்லி திரும்பினால், ராமின் இன்னொரு சொந்தக்காரர். நான் சொன்னதை கேட்டவர் “ஓஹ்..அப்படியா சங்கதி” என்பது போல சிரிக்க…நான்..ஒரு பெரிய்ய்ய்ய…இளி…

டபுல் லாக் என்பது இதுதானோ. இதை எழுதும் போது டிவியில் “தம்பி இரண்டாவது லட்டு தின்ன ஆசையா?” என்ற விளம்பரம்.
*********************************************************************************
வலைதளங்கள்(நல்ல) சிலவற்றை தேடிபிடித்து, அதில் சிறந்தவைகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம் என்று டமிலிஷில் உலவியதில், பொக்கிஷமாக நீண்டநாட்களுக்கு பிறகு சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் (தரவிறக்கம் செய்து) படித்தேன். ஏற்கனவே படித்தது என்றாலும், சுஜாதாவின் அனுபவங்களும் அதை அவர் தந்திருக்கும் விதமும் எத்தனை முறை படித்தாலும் சுவை குறையாது இருக்கும். அப்படி படித்துக் கொண்டிருந்த போது நான் ரசித்த சுஜாதாவின் இயல்பான நகைச்சுவை தோரணம் ஒன்று உங்களுக்காக இங்கே:

சங்க கால்ச் சொற்கள் பல இன்று வழக்கொழிந்துவிட்டன. பல பொருள் மாறிவிட்டன. கீழ்காணும் பத்து சங்க கால வார்த்தைகளின் அர்த்தங்கள் (அடைப்புக் குறிக்குள் மூன்றில் ஒன்று) உங்களுக்குத் தெரியுமா எனப் பரிசோதித்துப் பாருங்கள் சரியான விடை இறுதியில்.

1. எழுதாக் கற்பு (பெண்களின் நற்குணம், கருமை, வேதம்)
2. புலத்தல் (வெறுப்பது, கலைப்பது, கலக்குவது)
3. வரைவு (சித்திரம், பரிசம், மலைப் பகுதி)
4. ஆடு (ஒர் சாதுவான மிருகம், வெற்றி, நடனம்)
5. ஐயர் (புரோகிதர், தலைவர், அரசர்)
6. முருங்குதல் (கோபிப்பது, சிதைவது, வளைவது)
7. ஞாழல் (நாணல், கொன்றை, தாமரை)
8, கறங்கல் (ஒலித்தல், கமறல், நீக்கல்)
9. மகிழ்னன் (சந்தோஷமானவன், மகிழம்பூ அணிந்தவன், மருத நிலத் தலைவன்)
10. தலைபோதல் (முடிதல், இறந்துபோதல், காணாமற்போதல்)
*********************************************************************************
சந்திரமுகி படத்தில் நாஸர் வடிவேலு இருவரும் சகோதரர்கள். இவர்களுக்கு ஷீலா மூத்த சகோதரி. ஆனால், படம் முடியும்வரை வடிவேலு ஷீலாவிடம் பேசுவது போல காட்சி அமையவில்லை என்பதை நீங்கள் கவனித்தீர்களா?

படத்தில் நிறைய காட்சிகளில் வரும் ஸ்வர்ணா உண்மையில் நயன்தாராவோடு அழகாய் இருக்கிறார். நன்றாக ஆடுகிறார். உண்மையில் பல காட்சிகளில் நல்ல முகபாவங்களை காட்டுகிறார். இருந்தும் ஏன் நயன்தாரா என்று கேள்வி எழுந்தது சந்திரமுகியை 23வது முறையாக பார்த்தபோது.
*********************************************************************************
பெரியவர்களை கேட்டால் ரஜினி பிடிக்கும், கமல் பிடிக்கும் என்கிறார்கள். சிறியவர்களை கேட்டால் முக்கால்வாசி பேர் சூர்யாவுக்கும் எஞ்சியிருக்கும் கால்வாசியில் முக்கால்வாசி பேர் விஜய்க்கும் மீதமுள்ளவர்கள் விக்ரம் அஜீத் போன்றோர்க்கும் வாக்களிக்கிறார்கள். என் அறிவுக்கு புலப்படாத விஷயம் ஏன் சிறியவர்கள் இந்த நடிகையை பிடிக்கும் அந்த நடிகையை பிடிக்கும் என்று சொல்வதில்லை என்பதுதான். கேட்க நானிருக்கிறேன் சொல்ல அவர்(வேறு எவர், சுஜாதாதான்) இல்லையே என்று நினைக்கும் போது வருத்தமளிக்கிறது. சுஜாதா ஒரு முறை ”ஏன் பத்திரிகைகளில் முக்கால்வாசிக்கும் மேல் கெட்ட செய்திகளாகவே வருகிறது” என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்தான் ஞாபகம் வருகிறது. இதுபோல பல சாதாரண கேள்விகளுக்கும் யதார்த்தமாக பதில் அளிப்பவர் அவர். அவர் இல்லாதது மிகப்பெரிய இழப்புதான். யதார்த்தவாதியான அவர் உயிர் நீத்ததும் யதார்த்தமே.
*********************************************************************************
சென்ற சனிக்கிழமை எங்கள் திருவல்லிக்கேணியின் கங்கைகொண்டான் மண்டபதுக்கு (தற்போது கங்கனாமண்டம் என்று அழைக்கப்படுகிறது) அருகில் அ.இ.அ.தி.மு.க கூட்டம் ஒன்று நடந்தது. முன்பெல்லாம் பொதுக் கூட்டத்துக்கு பெரிய பெரிய கட்சி தலைவர்கள் வருவார்கள் என்று என் அண்ணன் சத்தியமூர்த்தி சொன்னான். இதை பற்றி ஒரு பதிவு போடப்போவதாகவும் சொல்லியிருக்கிறான். இப்போதெல்லாம் அவ்வளவாக கூட்டம் வராததால் முன்பு தேரடித் திடலில் நடைபெற்ற கூட்டங்கள் இப்போது இடம் பெயர முக்கிய காரணம் ஒன்றும் உள்ளது. அது தி.கேணி ஹைரோட்டில் இருக்கும் இரண்டு டாஸ்மாக். இந்த கூட்டத்தின் சாரம்சம் “அம்மாவின் புகழுக்கு மகுடம் சேர்ப்பது அம்மாவின் அறிவாற்றலா அல்லது கருணையுள்ளமா என்று பட்டிமன்றம். அறிவாற்றலே என்று பேச ஒரு அணியில் எஸ்.எஸ்.சந்திரனும், கருணையுள்ளமே என்று நடிகர் ஆனத்தராஜும் பேசவிருந்தார்கள்.

அதற்கு முன்னதாக இசைக் கச்சேரி. எம்ஜிஆர் நடித்த படத்திலிருந்து பாடல்களை பாடினார்கள். நடுநடுவே கட்சி பாடல்களும். இன்னும் கூட “தரைமேல் பிறக்க வைத்தான்” பாடலை ஆரம்பிக்கும் போது, மிதந்து கொண்டிருந்த கூட்டம் கைத்தட்டி, விசில் அடித்து ஆராவாரம் செய்தது அந்த பாடலை எழுதியவரையும் பாடியவரையும் முக்கியமாக எம்ஜிஆர் மீது மக்கள் கொண்ட அதீத நெருக்கத்தையும் நினைத்து பிரமிக்கவைத்தது.

இது பற்றிய விரிவான பதிவு

3 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.