ஆசையே அலை போலே

ஒரு விஷயம் நம் ஆழ்மனதில் பதிந்ததற்கான சரியான சான்று அவ்வப்பொழுது அது நம் மனதில் வந்து போவதுதான். அது கெட்டதோ நல்லதோ. திடீரென்று அதன் தாக்கம் அதிகரித்து சில சமயங்களில் சங்கிலித் தொடர் போல எண்ண அலைகள் சுனாமியாகவும் உருவெடுக்கும். அப்படியொரு பேரலையின் சாரல் தான் இந்தப் பதிவு.

நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று ஒருமுறை இளையராஜா கொஞ்சம் உரிமைக் கோபத்தில் கேட்டார். அது இளையராஜாவின் “அன்றும் இன்றும் என்றும்” நிகழ்ச்சி என்று நினைவு. அல்லது ராஜ் டிவிக்காக நடத்திய நிகழ்ச்சியா? எங்கே எப்பொழுது நிகழ்ந்தது என்று சரியாக நினைவில் இல்லாவிட்டாலும், அவர் கேட்ட கேள்வி மனதில் ஆழமாக பதிந்துதான் போனது.

உண்மையில் அப்போது அந்த கேள்வி கேட்க நன்றாக இருந்தது. கேட்டது என் அபிமான இசைஞானியாயிற்றே. ஆனால் அதற்கான விடையென்ன என்பதை அவரும் சொல்லவில்லை. நானும் அந்த விடையை தேட பிரயத்தனப்படவில்லை. பதிவு எழுதும் பழக்கம் யார் யாருக்கு என்ன என்ன தந்திருக்கிறது என்று எனக்கு தெரியாது. நிச்சயமாக எனக்கு பல கேள்விகளுக்கு பதிலாக மாறியிருக்கிறது. இதனால் நான் பல புத்தகங்களை தேடிப்போயிருக்கிறேன், பல இடுகைகளை படிக்க தூண்டியிருக்கிறது, பல விஷயங்களை பற்றிய என் சிந்திக்கும் செல்களை செயல்பட வைத்திருக்கிறது.

சரி விஷயதிற்கு திரும்ப செல்வோம். அவர் கேட்ட கேள்விக்கு என்னவெல்லாம் விடையாயிருக்கும் என்று தெரியாது ஆனால் ”ஆசை” அதில் ஒன்று என்று மட்டும் மனதுக்கு தட்டுப்பட்டது. இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல. அப்படி நினைத்து படிக்க ஆரம்பித்திருந்தால் இந்த இடத்திலேயே படிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.

ஆசை ஆளைக்கொள்ளும் வியாதி, ஆசையே அலைபோலே என்றெல்லாம் நானும் பல முறை என் வாழ்வில் கேட்டிருக்கிறேன். ஆனால் அதை பற்றிய ஒரு ஆழ்ந்த சிந்தனை வந்ததேயில்லை.

இந்த ஆசை இருக்கிறதே இதுதான் எதற்குமே ஆரம்பமாக இருக்கிறது. வேளை பளுவுக்கும் அதனால் அடையும் மன உளைச்சலுக்கும் காரணம் நாம் அலுவலகங்களையும் நம்மை சுற்றியுள்ளவற்றையுமே காரணம் காட்டி வருகிறோம். மன உளைச்சலை அளக்க முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். மருத்தவரிடம் செல்லாமலேயே அளந்துவிடலாம். என்னுடைய தொலைக்காட்சிப் பெட்டியின் அளவை பொறுத்ததே என் மன உளைச்சலின் அளவும். நான் 42” தொ.கா.பெ வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்டு வாங்கினால், அதற்கான ஊதியம் வேண்டும். ஊதியம் வேண்டும்வென்றால் அதற்கேற்ற வேலை வேண்டும். அப்படி பார்த்து சேர்ந்தால் அவர்கள் செய்யும் வேலைகள் தவறாகவோ அல்லது தேவையில்லாத ஆணியை பிடுங்கும் வேலையாக இருந்தாலும் அனைத்தையும் மூடிக்கொண்டு செய்யத்தான் வேண்டும். பலருக்கு வேலையே வேலியாகிப் போவது இப்படித்தான்.

எனக்கு இப்பொழுது இருப்பதைவிட பெரிய வீடோ அல்லது இன்னொரு புதிய வீடோ வேண்டுமென்றால் அதற்கான உழைப்ப கொடுத்தால்தானே கிடைக்கும். இங்கே நம் மன உளைச்சலை சதுரடிக் கணக்கில் அளந்துவிடலாம்.

ஆசைக்கு அணை போடக் கூடியவர் சிலரே. லட்சத்தில் ஒருவர் இப்படியும் இருப்பார்கள். சிலருக்கு பணத்தின் மீது, சிலருக்கு பொருட்களின் மீது. சிலருக்கோ படோடோப வாழ்கையின் மீது. இந்த ஆசை ஆசையாகவே இருக்கும் வரையில் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. அது மோகமாக மாறும் போது தான் பிரச்சனையே.

முதல் வேலைக்கு சேரும் போது என்ன சம்பளம் தந்தாலும் பரவாயில்லை..ஏன் சம்பளமே தரவில்லை என்றாலும் பரவாயில்லை என்று சேருகிறோம். ஒரு உதாரணத்திற்கு ரூ.10000க்கு வேலைக்கு சேருகிறோம் என்று வைத்துக் கொள்வோம், சில மாதங்களிலேயே, நம் தேவை தானாக அதிகரித்துவிடுகிறது. இதற்கு யாரும் விதிவிலக்கே அல்ல. இதை எழுதிக் கொண்டிருக்கும் என்னையும் சேர்த்து, படித்துக் கொண்டிருக்கும் உங்களையும் சேர்த்து. இன்னும் சில மாதங்கள் செல்ல, நம் தேவை அதிகரிக்க, அதை எதிர்கொள்ள அதிக சம்பளம் தேவைப்பட, ”ரெசஸ்யூம் பானங்களை தொடுக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்”. இங்கே முடிந்தால் பரவாயில்லையே, காற்றாற்று வெள்ளத்துக்குக் கூட அணை போடலாம், நம் மனதில் உதிக்கும் ஆசைகளுக்கு அணை போடுவதென்பது இமயத்தை கட்டி இழுக்கும் சமாச்சாரம் ஆகிறது.

தேவை ஆசையாக மாறி, அந்த ஆசை தேவையாகிப் போகிற நிலையில்தான் நாம் உண்மையிலேயே மன அமைதியை இழக்கிறோம். அதற்காக வாழ்கையில் ஆசை என்ற ஒன்றே இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை. அது நம்மை ஆளக்கூடாது என்றுதான் கூறுகிறேன். வாழ்கையில் ஆசை தாமரை இலையில் தண்ணீர் போல இருந்தால் மன நிம்மதிக்கு “கதவை திற”க்க வேண்டாம், பல புத்தகங்களை படித்து நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை.

கோபம், ஏமாற்றம், பொறாமை இவை எல்லாமே ஆசையினால் விளைவதே. எந்தளவிற்கு எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்கிறோமோ அந்தளவிற்கு ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.

ஏ ஆர் ரஹ்மானை போல இந்தியாவை தலைநிமிர செய்ய வேண்டும் என்ற ஆசை வரலாம், அப்துல் கலாமை போல விஞ்ஞானத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை வரலாம். இவையெல்லாம் பொருள் ரீதியான ஆசைகளை கடந்ததது மட்டுமல்லாமல், நம்மை வாழ்கையில் ஒரு நல்ல உயரத்தில் கொண்டு சேர்ப்பவை. இம்மாதிரியான ஆசைகளால் நாம் நம்மை சுற்றி இருப்பவர்களையும் நம்முடன் அந்த உயரத்திற்கு அழைத்து செல்பவர்களாகிறோம்.

வீதியில் நடந்து செல்லும் போது எதிர்படும் ஒரு சோற்றுக்கு கஷ்டப்படும் வயதானவருக்கு வெறும் ஐந்து ரூபாயை தானம் செய்து பாருங்கள். உங்களுக்கு தன்னாலேயே புரியும். அவரும் வாழ்கிறார், நாமும். அவருக்கு இது மாதிரி ஒரு நாளைக்கு இருவர் தானம் செய்தால் போதும். அதாவது ரூ10. நமக்கு? இங்கே இதைச் சொல்வதின் நோக்கம் நாம் பிச்சையெடுக்க வேண்டிமென்பதல்ல. வெறும் பத்து ரூபாய் சம்பாதித்தால் போதுமென்பதல்ல. வாழ்கையின் உண்மையை உணர. சத்தியம் அதிபர் அவ்வளவு சேர்த்தது எதற்காக? மனிதனாக பிறந்தவன் இழக்கக் கூடாத மானத்தை இழப்பதற்காகத் தானே? அதற்கு மூலகாரணம் ஆசை தானே.

அட விலை உயர்ந்த தொ.கா.பெ.யை விடுங்கள், அதை வாங்க வேண்டுமென்ற அந்த ஆசையை கூட நம்மால் போகும் போது எடுத்துச் செல்ல முடியாது. பெரும்பாலான ஆசைகள் நமக்காக செய்தாலும் கூட அதற்கு “பிறர் சந்தோஷத்திற்காக செய்கிறேன்” என்ற சாயத்தை பூசிவிடுகிறோம்.

இந்த ஆசையென்னும் வானத்தில் நமக்கும் மேலே 40000 அடி உயரத்தில் பயணிப்பவர்கள் பேராசைக்காரர்கள். அவர்கள் இந்த சமுதாயத்தினால் திருடர்களாக அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு சுரண்டுபவர்கள் என்ற தனி முத்திரையும் உண்டு. மனிதனின் பேராசையே அவனை மனம் போன போக்கில் இழுத்துச் செல்கிறது. அதில் அவன் நினைத்தை அடைகிறான் என்பது பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது பேருந்து கிடைப்பது போலத்தான். சென்று சேர்கிற இடம் மட்டுமே இறுதி பலனாகிறது. இதை உணர்ந்தோர் பலர், உணர்வோர் இல்லை.

ஆசையை அடக்க நான் படித்த, கேட்ட ஒரு சிறந்த வழி:

நம் தேவைகளை பட்டியலிடுங்கள். அதில தேவை என்ற எல்லைக்கோட்டை தாண்டும் தேவைகளை தனியாக குறித்துக் கொள்ளுங்கள். இவைகள் தான் நம் ஆசைகள். இப்பொழுது இந்த ஆசைகளில் எதையெல்லாம் இப்பொதைக்கு தவிர்க்கலாம் என்று குறிப்பெடுங்கள். எவையெல்லாம் முற்றிலுமாக தவிர்க்கலாம் என்று பார்த்து, அடித்துவிடுங்கள். மீதமிருக்கும் ஆசைகள் அப்படியொன்றும் பெரிதாக இருக்காது. இது போல ஒரு மாதத்திற்கு இரு முறை செய்து பாருங்கள். நாள் செல்ல நாள் செல்ல, உங்களுக்கே ஒரு பக்குவம் வருவது உறுதி.

This entry was posted in சிந்தனைகள் and tagged , , , , . Bookmark the permalink.

2 Responses to ஆசையே அலை போலே

  1. நாள் செல்ல செல்ல பழைய லிஸ்ட்ல இருந்தது எல்லாம் basic necessity ஆயிடும். புதுசா புதுசா item லிஸ்ட்ல சேரும். ஆசை தனிமனித சம்பந்தப்பட்டதா இருக்கும்போது கட்டுக்குள்ள வைக்கறது ரொம்பவே ஈசி. ஆனா குடும்பம், மரியாதை, சமுதாயம்ன்னு பல ரூபத்துல வந்து டார்ச்சர் கொடுக்கும் நிகழ்வுகள் அதிகம். அடி வாங்கி திருந்தினா உண்டு. இல்லாட்டி அப்படியே பலருக்கும் வாழ்க்கையும் முடிஞ்சுடும்.

    • உங்கள் வரவுக்கு மிக்க நன்றி மணிகண்டன். நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரிதான். ஒரு உதாரணத்திற்கு பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களை யாரும் பார்க்கர் பேனாவினால் கையொப்பம் இட்டால்தான் ஆச்சு என்று சொல்வதில்லை. இங்கே அதை முடிவு செய்வது யார்? சமுதாயமா?

      வீட்டில் மனைவி நல்ல தரமான மளிகை சாமான்களை வாங்கத்தான் சொல்கிறார். குளிர்சாதன பெட்டியிலும் இதே க்தைதானே தவிர, விலையுர்ந்ததை வாங்குங்கள் என்று சொல்வதில்லை. அப்படி ஒரு வேளை சொல்பவரானால், இந்த பதிவை அவர்களையும் படிக்க வைப்பது கணவன்மார்களின் நல்ல யுக்தியாக இருக்குமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *