Home » அனுபவம்

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும்

22 October 2009 10 Comments

இன்று என் மைத்துனனின் நண்பன் திருமண வரவேற்பிற்கு சென்றிருந்தேன். (கங்கிராசுலேஷன்ஸ் …….ரங்கராஜன் ரிலேஷன் இல்லைங்க (மணமகன் கௌதம் அண்ட் மணமகள் வசுதா) – சந்தோஷமான மணவாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்)

வரவேற்பிற்கு வயிற்றுக்கு மட்டுமில்லாமல், செவிக்கும் உணவளிக்க நம் தமிழக குல வழக்கப்படி மெல்லிசை நிகழ்ச்சியும் இருந்தது.

என் திருமண வரவேற்பிலும், அதற்கு கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன் என் இரண்டாம் அண்ணன் www.systemsurgery.com லட்சுமி நாராயணனின் திருமண வரவேற்பிலும் மெல்லிசைத்த, குரல் மெலிய, உடல் வலிய ஸ்ரீராம்தான் இங்கும் மெல்லிசைத்தார். ஜெயா டிவியில் சில இசை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். “கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” ஸ்ரீலேகாவை காதலித்து, ஓடிப்போகாமல் கல்யாணம் கட்டியவர். சில திரைப்படங்களிலும் தலை காட்டியிருக்கிறார் (சிவகாசியில் அசின் வீட்டுக்கு ஓட்டுக் கேட்க போகும் காட்சியில் அய்யர், சொல்லாமலேயில் அட்வர்டைசிங் ஏஜென்சி மானேஜர்). மனைவி சகிதம் அவர் அனுவுடன் காபி அருந்தியதை உங்களில் விஜய் நேயர்கள் பார்த்திருக்கலாம். அது ஒளிபரப்பான அன்று அவருடைய அன்பு அம்மா காலமானது சோகம்.

எங்கள் திருமண சமயத்தில் அவர் ஒரு மேடைப்பாடகராக மட்டுமே இருந்தார். என் முதல் அண்ணணின் நண்பனாதலால், அத்தனை பிரபலமாகாத போது என் 2ம் அண்ணணின் திருமணத்திற்கும், ஓரளவு பிரபலமான பின்னாலும் என் திருமணத்திலும் பாடினார்.

மற்றவர்களிடமிருந்து இவர் வேறுபட்டு நிற்பது இவரின் குரலால்தான். பலரும் எஸ்.பி.பி போல பாட முயற்சி செய்து கொண்டிருக்கையில், மனிதர் பாடுவதை கேட்டால் அச்சு அசல் எஸ்.பி.பி பாடுகிறாப் போலவே இருக்கும். அவரைப் போலவே ஸ்ரீராமும் கொஞ்சம் பருத்த சரீரம். சாரீரம் சரீரம் இரண்டிலுமே அவரை ஞாபகடுத்துவார்.

இன்றைய கல்யாணத்தில் அவர் மிகச்சிறந்த இளையாராஜா பாடல்களையும், சில மெல்லிசை மன்னர் பாடல்களையும் பாடினார். பாடியவற்றில், கேட்கக்கூட வேண்டாம் சும்மா நினைத்தாலே இனிக்கும்“எங்கேயும் எப்போதும்” பாடலும் அடக்கம். மிக அற்புதமான, காதுக்கு விருந்தளித்த ஸ்ரீராமுக்கு நன்றி சொல்லும் அதே சமயம் கொஞ்சம் திருமண மெல்லிசை நிகழ்ச்சிகளின் சில வரங்களையும், சாபங்களையும் பார்க்கலாமா?

1. எஸ்.பி.பி. குரல் பாடலிலிருந்து நேராக உதித் நாராயணன் குரலுக்கு தாவுவது.

2. கல்யாணத்திற்கு வந்தவர்களில், முக்கியமாக கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளை கொண்டவர்கள், கச்சேரியில் முதல் வரிசையில் மிகவும் ரசித்துக் கேட்பது போல நடிப்பது. முயல் பிடிக்கும் நாயை முகத்தை பார்த்தே தெரிந்து கொள்ளலாம் என்பது போல, தன் குழந்தைகளுக்கு மேடை கிடைக்கவே அப்படி செய்வார்களே தவிர, உண்மையில் ரசிப்பதற்கு அல்ல.

3. மணமகன் வீட்டை சேர்ந்த ஒரு குடும்பம் கச்சேரி மேடையின் ஒரு பக்கம் (கிட்டத்தட்ட மண்டபத்தின் மறுபக்க மதில்சுவர் பக்கம்) நாற்காலியை சுற்றி வளைத்து போட்டுக் கொண்டு அரட்டை அடித்துக் கொண்டும், பாடுபவரையும், பாடலையும் அலசிக் கொண்டும் இருப்பார்கள். வெயிட்…..இதில் சொந்தக் கதை அரட்டைதான் அதிகம்…இசையைப் பற்றி மிகக்குறைவுதான். நடுநடுவே புகைப்படம் வேறு.

4. மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர்(இவர் பல வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்பவரோ அல்லது அது போல நடிப்பவரோ அல்லது அந்தஸ்தினால் செல்வாக்குப் பெற்றவரோ அல்லது கச்சேரியை அரேஞ்ச் செய்தவராகவோ இருப்பார்) அவ்வப்போது வந்து பாடகருக்கு அன்புப் பீடிகை போட்டு அந்த பாடலை பாடுங்கள், இந்தப் பாடலை பாடுங்கள் என்று வருத்தெடுப்பார். அவர் சொல்லிவிட்டு அந்தப் பக்கம் திரும்பும் போது நீங்கள் பாடகரின் முகத்தையும் அவர் மற்ற இசைக்கலைஞர்களை பார்த்து செய்கை பாஷையில் “இவன பெத்தாங்களா இல்ல பேண்டாங்களா” ரீதியில் திட்டித் தீர்ப்பார்.

5. அவ்வளவு கஷ்டப்பட்டு கச்சேரி சென்று கொண்டிருக்கும் போது, 95% சதவிகிதம் பேர், அவரவர் சொந்த பந்தகளின் விசாரிப்புகளில் மூழ்கியிருப்பர். ஆச்சரியம் என்னவென்றால், கச்சேரி செய்பவர்களுக்கு இதை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலையே இருக்காது.

6. இருந்தும் ஒரு 5% சதவிகிதம் பேர் கச்சேரி கேட்க உட்கார்ந்து விட்டு, சில தலை,கை, கால் கண் என்று சகலமும் ஆட ரசிக்க, இன்னும் சிலர் ஆடாமல் அசையாமல் இருப்பர்.

7. இந்த ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருப்போர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மணமகன் மணமகள் இரு வீட்டாருக்கும் அதிகம் பரிச்சயம் இல்லாததால் அதிகம் கவனிக்கப்ப்டாதவர்களாக இருப்பர். அதனாலேயே மேடைக்கும் முன் முழித்துக் கொண்டிருப்பர்.

8. மேடைக் கச்சேரியில் கடைசியாக பாடப்படும் பாடல் ”நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும்” அல்லது “நலம் வாழ”வாகத்தான் இருக்கும். கொஞ்சம் பழைய பாடல்கள் தெரிந்த பாடகரென்றால், “பூ முடிப்பாள் இந்த பூங்குழலி”யாக இருக்கும். கண்டிப்பாக பாட வேண்டிய பாடல் – நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான் (எங்க ஆஃபீஸ்ல கல்யாணமாகி மூணு மாசத்துல டைவர்ஸ் வாங்கினவங்க கல்யாணத்திலும் இந்த பாட்டு பாடினாங்களாம்

9. கச்சேரி நடக்கும் தருணங்களில் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கோள்வது வாயோடு காதை வைத்துதான். இதில் நாம் பல் துலக்காதவர்களிடம் மாட்டுவது மாட்டாததும் அன்று காலையில் நாம் எழுந்திருக்கும் போது யார் முகத்தில் முழித்தோம் என்பதை பொறுத்து அமையும். அதனால் அடுத்த முறை நீங்கள் எதாவது கல்யாண நிகழ்ச்சிக்கு போவதென்றால், தயவு செய்து பல் துலக்கி துப்பிவிட்டு போவது சாலச் சிறந்தது….மற்றவர்களுக்கு.

10. கச்சேரியில் ஒவ்வொரு பாடலுக்கு முன்பும், பாடகர் அடித்தொண்டையில், ஃபுல் பேஸ் ஸ்பீக்கரில், அடுத்த பாடல் என்னவென்று தெரிவிப்பது, அவர் அந்தப் பாடலை பாட ஆரம்பித்த பிறகே புரியும். அதுவரையில் அவர் ஏதோ கிரேக்க மொழியில் பேசுவது போலத்தான் இருக்கும்.

11. பல கச்சேரிகளில், பாடகர் தவிர சில பல இசைக் கலைஞர்களும் கருவிகளும் இருந்தாலும், அவர்கள் உண்மையாக வாசிப்பது கிடையாது. மாறாக டிஸ்க்கை ஓடவிட்டு (இதில் பாடலைத் தவிர எல்லா இசையும் வந்துவிடும், இதை கரோக்கி என்று சொல்வார்கள்) பாடலை மட்டும் பாடுவார்கள். என்னுடைய கல்யாணத்தில் கூட புது மாதிரியாக இசைக் கலைஞர்களுக்கு பதிலாக ஐ-பாட் மூலமாக ட்ராக் ஓடவிட்டு ஸ்ரீராம் பாடினார்.

12. மணமகன் நண்பர்கள் டான்ஸ் (சிலசமயம் மணமகனும்/ மிக சில சமயம் மணமகளும் மணமகனும் சேர்ந்து). என் சொந்த அனுபவத்தில் “மணமகனும்”

13. மணமகன்/ மணமகள் வீட்டு ”சூப்பர் சிங்கர்”/ ”சூப்பர் சிங்கர்” ஜூனியர் / ”சூப்பர் சிங்கர்” சூப்பர் ஜூனியர்/ ”சூப்பர் சிங்கர்“ சூப்பர் சீனியர் – இவர்களில் யாராவது ஒருவரோ, ஓரிருவரோ அவர்கள் குரல் வளத்தையும், நம் காது ஜவ்வையும் பரிசோதிப்பது. இவர்கள் மெல்லிசை குழு தலைவரை காக்கா பிடித்து பாட சான்ஸ் கேட்டு நிற்பது.

14. கடைசியாக மிக முக்கியமான புள்ளி விவரம்….மணமகனின் நண்பர்கள் வரவேற்பன்றைய தினம் இரவு கச்சேரிக்கு மேடையிலேயே மீட்டர் போட்டு காரியத்தை சாதித்துக் கொள்வது. இன்னும் சிலர் அட்வான்ஸ் புக்கிங் செய்வதும் வழக்கம்.

எனக்கு தெரிந்த புள்ளி விவரங்களை இங்கே துளியும் சிந்தாமல் சிதறாமல் பட்டியலிட்டுவிட்டேன்…..இனி..ஓவர் டு யூ….விடு ஜூட்…

10 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.