Home » அனுபவம்

மூச்சா வருது பூச்சாண்டி சார்

26 October 2009 6 Comments

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…..பொக்கிஷமாய் நெஞ்சில் ஜில்ஜில்ஜில் சுமந்த முதல் அனுபவங்கள் எல்லாம் ஞாபகம் வருதே….

நம் எல்லோருக்குமே இரண்டு விஷயங்கள் பிடித்தமானவை. நாம் ஒவ்வொருவரும் பல்வேறு பிடித்தமானவைகளை கொண்டு வேறுபட்டு நின்றாலும், இந்த இரண்டு விஷயங்களால் ஒன்றுபட்டே நிற்கிறோம்.

ஒன்று: நம் வாழ்வில் நடந்த சில சுவாரஸ்சியமான அனுபவங்களை அவ்வப்போது நினைவில் வரும்போதெல்லாம் நினைத்து பார்த்து சந்தோஷமடைவது (எருமை மாடு வெக்கோலை அசைபோடுவது போல அசை போட்டு பார்ப்பது என்றும் வைத்துக் கொள்ளலாம்).

பி.கு: மேல் வரியை படிக்கும் போது பக்கத்தில் இருப்பவர் உங்களை “இப்படி எருமை மாடு போல சும்மா உட்கார்ந்து பழசையெல்லாம் யோசிச்சு நேரத்தை வீணடிக்கிறியே” என்று திட்டினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இரண்டு: மற்றவர்கள் அவர்களின் சுவாரஸ்சியமான அனுபவங்களை திரைவடிவிலோ அல்லது எழுத்து வடிவிலோ படைத்ததை படித்து ரசிப்பது (வேறொரு எருமை மாடு வெக்கோலை அசைபோடுவதை வெட்டியாய நின்று வேடிக்கை பார்ப்பது என்றும் வைத்துக் கொள்ளலாம்).

பி.கு: இங்கு என்னை நானே எருமை மாடு என்று சொல்லிக்கொள்வதை பெருமையடித்துக் கொள்வதாக நினைத்துக் கொள்ளவேண்டாம். எனக்கு எப்போதுமே ”உங்களைப் போல ஒருவனாகவே” இருக்க ஆசை.

இதில் விசேஷம் என்னவென்றால் இரு சமூகத்தாரையும் ஒருங்கினைப்பது இந்த இரண்டு விஷயங்கள்தான். ஆமாம். ஒருவர் படைப்பவராகிறார், மற்றொருவர் அதை படிப்பவராகிறார். இன்று நான் படைக்கும் எருமை நீங்கள் படிக்கும் எருமை. எருமை எருமை என்று இப்படி கோடிட்டு உங்களை திட்டி என்னுடைய நெடுநாள் ஆசையை தீர்த்துக் கொள்வதாக நினைத்துக் கொள்ளவேண்டாம். ஏன் எருமை? பசு வெக்கோலைசை போடாதா? என்று தேவையற்ற கேள்வியை கேட்பவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டியது மேலும் படிக்காமல் போகிற வழியில் ஒரு கமெண்ட்டும், டமிலிஷில் ஒரு ஓட்டும் குத்திவிட்டு போங்கள். போகிற வழிக்கு (எனக்கு) ஒரு வோட்டாவது கிடைக்கும்.

சரி இப்போது சில சுவாரஸ்சியமான அனுபவங்களை பார்ப்போம்…(அட ஆமாஞ்சாமி…என் அனுபவங்கள் தான்):

அனுபவம் ஒன்று: நான் அப்போது 1வது படித்துக் கொண்டிருந்தேன். நான் படித்துக் கொண்டிருந்தது வீட்டுக்கு மிக அருகில் இருக்கும் (இன்றும் இருக்கிறது)ரெக்ஸ் இங்கிலீஷ் பள்ளியில். என்னை அதுவரை எந்த ”மிஸ்ஸும் அடித்ததே கிடையாது. அடித்தால் காலம் சென்ற என் பாட்டி தங்கம்மாள் அவர்களை அடித்து விடுவார். என் அம்மா நான் 1வது போனதுமே, பள்ளியில் என்னை ஒரு சக மாணவனாகவே பார்த்து தேவை ஏற்ப்பட்டால் அடித்து திருத்தும்படி சொல்லி வைத்திருந்தார் போலும்.

urinal-testஎன் க்ளாஸ் மிஸ்ஸின் பெயர் ராதா. ஒரு நாள் நான் வழக்கம் போல கூர்ந்து மிஸ் நடத்தும் பாடத்தை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தேன் (அந்த அறியா வயசுல வேறு என்ன தெரியும் எனக்கு பாவம்). பக்கத்தில் என் நண்பன் மதன்குமார் (இவன் இப்போது ட்ரையத்தலானில் ஸ்டேட் லெவெல் சாம்பியன் என்று பின்னாளில் எதேச்சையாக சந்தித்தபோது சொன்னான்) என்னை சீண்டி பேச அழைத்தான். நானும் ஏதும் அறியாத பச்சை மண்ணைப் போல பதில் பேச, அதை மிஸ் மிஸ் பண்ணாமல் பார்த்துவிட, பிரம்படி இருவருக்கும். நான் அங்கேயே மூச்சா போய்விட்டேன். நான் இருந்தது முதல் தளத்தில். அந்தத் தளம் கேப் விட்டு விட்டு கட்டையால் செய்யப்பட்டிருந்ததால், நான் போன மூச்சா கீழே பல மாணவர்களுக்கு அபிஷேகமாக மாறியது. இது நான் பப்ளிக்கில் பப்ளிக்காக பெய்த முதல் மூச்சா.

அனுபவம் இரண்டு: அப்போது நான் ஹிந்து சீனியர் செகண்டரியில் அம்மாவின் சிலபல ரெகமெண்டேஷனில் ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன். இங்கு தான் நான் முதலில் மனித நேயத்தை பழகினேன். சாதரணமாகவே நான் அவ்வளவு எளிதாக தெரியாதவர்களிடம் உடனே பழகி விட மாட்டேன். அதுவும் அப்போது நான் சிறுவன். ஒரு நாள் அடைமழை பெய்து கொண்டிருந்தது. வழக்கமாக அந்தப் பள்ளிக்கு செல்ல அதிக நாட்டம் காட்டாத நான், அன்று விடாப்பிடியாக சென்றே தீருவேன் என்று எனக்கிருந்த இரண்டே இருந்து குச்சிகால்களில் நின்றேன்.

பள்ளிக்கு கிளம்பியாகிவிட்டது(மழை விட்டிருந்தது). பாதி வழியில் பிடித்துக் கொண்டது. அப்போது அங்கு குடைபிடித்து சென்று கொண்டிருந்தார் ஒருவர்.அவருக்கு வயது சுமார் 35(அன்று) இருக்கும் என்று நினைக்கிறேன். என் அருகில் வந்து குடைக்குள் வரும்படி கூறினார். எனக்கு உள்ளுக்குள் ஒரு பயம். ஒரு வேளை என்னை கடத்தி கொண்டு செல்ல திட்டமிடுகிறாரோ என்ற பயம். அந்த வயதிலேயே என்ன ஒரு கற்பனைத் திறன் பாருங்கள். ஆனால் அவர் எனக்கு கற்றுக் கொடுத்தது மனிதாபிமானம் என்பதை வெகு நாட்கள் கழித்துதான் உணர்ந்தேன், நான் ஒரு மாணவனை என் பைக்கில் லிஃப்ட் கொடுத்து 32ஆம் நம்பர் பஸ் பிடிக்க உதவிய போது.

அனுபவம் மூன்று: வளர்ந்து வேலைக்கெல்லாம் போய்க் கொண்டிருந்த காலகட்டங்களில், வாராவாரம் சனிக்கிழமை என்றாலே ஆபீஸில் ஆராவாரம்தான். என் அலுவலக நண்பர்களில் பலர் ”நீரோ”ஃபோபியா நோயினால் தாக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கூடும் சமயங்களில் நானும் ஆஜர். எவ்வளவோ சொல்வார்கள் என்னன்னவோ செய்வார்கள்…ஹூம் அசரமாட்டேன் நான். எப்படியோ அந்த நோய் என்னை தாக்கிவிடாமல் தாக்குப்பிடித்துக் கொண்டிருந்தேன். வந்தது ஆபீஸ் டூர். ஒரு ப்ராஜக்ட்டை நேர்த்தியாக சீக்கிரம் முடித்ததற்காக போய் வா என்றார்கள். போனோம். கொடைக்கானல் என்று ஞாபகம். வந்து சேர்ந்த இரவு அனைவரும் அசதியாக இருந்ததால் தாகசாந்திக்காக தண்ணி (கு)அடித்துவிட்டு உறங்கிப்போனார்கள். காலையில் முதலில் எழுந்துவிட்ட நான் குளித்து முடித்து ஊர் சுற்ற தயாராகிவிட்டேன். ஒவ்வொருவராக எழுந்து கிளம்பினர். கிளம்பும் போது வழியில் தாகசாந்திக்கு ஏற்பாடு செய்து கொண்டனர். நேற்று சாப்பிட்ட பாட்டிலில் கொஞ்சம் பாக்கி இருந்ததை கவனித்த நான் அதை இப்போதே குடித்து முடித்து தூக்கிப் போடுங்கள் என்றேன். என் நண்பன் செவனப் இல்லை என்று சமாதானப்படுத்தினான்.

நான் விடவில்லை, என்னடா இவ்வளவு குடிக்கிறீங்க…இந்த நாலு சொட்டுக்கு இப்படி காரணம் சொல்றீங்களே என்றேன். யாரும் கேட்டபாடில்லை. அது பக்கார்டி வைட் என்று நினைவு. இரண்டு மூடி அளவு தான் மீதம் இருந்தது. இதற்கு எதற்கு கையில் லக்கேஜ் என்று கூறிவிட்டு, லபக் என்று எடுத்து மிச்சத்தை மிச்சம் வைக்காமல் சிப்ஸ் செவனப் ஏதுமில்லாமல் ஒரு மடக்கில் டபக்கென்று விழுங்கிவிட்டேன். அதுதான் என் முதல் தாகசாந்தி. எனக்கு அதை குடித்த விளைவு எதுவுமே தெரியவில்லை. என்னடா இதப்போயா இப்படி குடிக்கறீங்க….ஒண்ணுமே இல்லியேடா என்றேன். அதற்கு என் நண்பன் இது மலை பிரதேசம், குளிர் அதிகம் எனவே உனக்கு அப்படியொன்றும் தெரியாது, கீழே போகும்போது காண்பிக்கிறேன் என்றான். அவன் சொன்னதிலும் உண்மை இருப்பதாக எனக்கு பட்டது.

கீழே வந்தோம். ஞாபகமாக வாங்கிக் கொடுத்தான். நானும் சாப்பிட்டேன்…இந்த முறை கொஞ்சம் கோககோலா சேர்த்து. இரண்டு லார்ஜ். ஒன்றும் தெரியவில்லை என்றேன். இங்கேயும் குளிர் இருக்குடா…நீ மெட்ராஸுக்கு போய் சாப்பிட்டு பார் தெரியும் என்றான் இன்னொருவன். மெட்ராஸுக்கு வந்தேன். வேறொரு நண்பனிடம் எல்லாவற்றையும் எடுத்துக் கூறினேன். அவர்கள் சொல்வதில் ஞாயம் இருப்பதாக கூறினான். சரிவா என்று அவனை என்னை ஏதாவது பாருக்கும் அழைத்து போகும்படி சொன்னேன். அவன் டாஸ்மார்க் கிராக்கி. என்னையும் அங்கேதான் கூட்டிச் சென்றான். ஜானெக்‌ஷா ஹாஃப் ஆர்டர் செய்தான். சாப்பிட்டோம் ஆளுக்கு பாதி. இப்பவும் ஒன்றும் தெரியவில்லை எனக்கு. அப்போது இரவு சுமார் 11.30 இருந்திருக்கும்.

என்னை சென்னை சென்று ”பார்”க்க சொன்ன நண்பனை அழைத்தேன் (தொலைபேசியில்), பாதித் தூக்கத்தில் இருந்த அவனிடம் நடந்ததை உரைத்தேன்.ஒரே வாக்கியத்தில் முடித்துவிட்டான்…”நீ மனுஷனே இல்லடா…பா….(கெட்ட வார்த்தை போட்டு செல்லமாக திட்டிவிட்டு ஃபோனை துண்டித்தான்)”.

இந்த மூச்சா நிகழ்ச்சியை ஒருமுறை என் நண்பனிடம் பகிர்ந்தேன். அவனும் பதிலுக்கு ஒரு மூச்சாவை பகிர்ந்தான். அந்த நிகழ்ச்சி உங்களுக்காக என் நண்பன் சொன்னபடி:

அப்போது நான் 5வது படித்துக் கொண்டிருந்தேன். என் வகுப்பாசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் அதற்கு எனக்கு பதில் தெரியவில்லை. ”துறுதுறு என்று இருந்த நான் திருதிரு என்று முழித்தேன். ”நாடோடி மன்னன்” வாத்தியாரைப் போல பெஞ்ச் மேலேயெல்லாம் ஏறி துரத்தி துரத்தி என்னை அடித்தார். மூணாவது அடியில் என் அடியில் புதிதாக நேற்றுதான் வாங்கிவந்த ஜெட்டி நனைந்தது போனது. எனக்கு அசிங்கமாகிவிட்டது. காரணம் என் பள்ளி ஆண்/பெண் இருபாலாரும் சேர்ந்து படிக்கும் “கோ-எஜுகேஷன்”. அன்றிலிருந்து என்னை எல்லாரும் எம்.என்.மஹேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். எம்.என் என்றால், ”மூச்சா நாயகன்”. எனக்கு பெருத்த அவமானாகிவிட்டது. நாள் சென்றது. அந்த ஆசிரியர் எங்கள் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியாதாகிவிட்டது. விடை பெரும் நாளில் அந்த ஆசிரியருக்கு பிரிவு உபசாரம் செய்ய, எங்கள் வகுப்பின் தலைமை மாணவன் ஒரு வாழ்த்து அட்டை வாங்கி அதில் எங்கள் அனைவரையும் ஏதாவது எழுதி கையொப்பம் இடச்சொன்னான்.

அட்டை கைமாறி கைமாறி முன் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் மாரிக்கும் போய், அங்கிருந்து என் பக்கத்திலிருக்கும் சோமாறி செந்திலுக்கு வந்தது. எனக்கோ என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. அவரை ”நினைத்தாலே இனிக்கும்”(லேட்டஸ்ட்) படம் போல முழுக்க முழுக்க கசக்கும். நான் தப்பும் தவறுமாக “உங்களை பார்த்தாலே மூச்சா வருகிறது பூச்சாண்டி சார்” என்று எழுதினேன். கையொப்பம் இடவில்லை. அவர் இங்கிருந்து செல்வதோடு எனக்கேற்பட்ட அவப்பெயரும் நீங்கும் என்று குதூகலித்தேன்.

அதோடு முடிந்தது என்று நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு வந்தது ஒரு மிகப்பெரிய ஆப்பு ஸ்பெஷல் க்ளாஸ் மூலமாக.

என் புருவங்கள் விரிந்தன. அவன் மூச்சா போனதை நினைத்த போது எனக்கு முட்டிய சிரிப்பை வந்த மூச்சாவோடு சேர்த்து முழுவதுமாக அடக்கிக் கொண்டேன். “ஹூம் அப்புறம்” என்று அமைத்திப்படை சத்தியராஜ் போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டேன்…அவன் ஒரு நிமிஷம் விஜய்…..மூச்சா போயிட்டு வரேன் என்று நகர்ந்தான்.

விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தான் என் நண்பன்.

முழு ஆண்டு தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஹெட்மாஸ்டர் எல்லோருக்கும் ஸ்பெஷல் க்ளாஸ் ஒன்று ஏற்பாடு செய்தார். இதுவரைதான் நாம் படிக்கவில்லை, இன்றாவது கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம் என்று சென்றேன். அங்கே 7 வகுப்பு மாணவர்களும் கூடியிருந்தார்கள். கிட்டதட்ட 300 பேர். அதுவரை பக்கத்து சோமாறி செந்திலை கலாய்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி. வந்த ஆசிரியர் அதே ஆசிரியர். ஆம், நான் எடக்கு மடக்காக வாழ்த்து எழுதி அனுப்பிவைத்த ஆசிரியர். எனக்கு அப்போதும் அவரை பார்த்தவுடன் மூச்சா வந்துவிட்டது. இது அடிப்பார் என்ற பயத்தில் அல்ல. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மூச்சா சென்று வந்தேன். இது ஸ்பெஷல் க்ளாஸ்தானே அதோடு இங்கு அவர் வந்திருக்கும் நோக்கம் வேறு என்று கொஞ்சம் நிம்மதி அடைந்தேன். விட்டாரா என்னை? அந்த வாழ்த்து அட்டையை எடுத்து வெளியே காட்டி, என் பெயர் சொல்லி கூப்பிட்டு எழுந்திருக்க சொன்னார். எழுந்தேன். நின்றேன். ”இதை எழுதியது நீதானே” என்றார்.

”ஒப்புக்கொள்ளவில்லையே?” என்று பதட்டத்தோடு வினவினேன் நான்.

இல்லை. நான் எழுதவில்லை என்று அடித்து கூறினேன். அவர் நம்பவில்லை. நீதான் எழுதியிருக்கிறாய் என்று அவரும் அடித்து கூறினார். மீண்டும் அதை நிறுத்தி நிதானமாக படிக்க மொத்த மாணவர்களும் “கொல்” என்று சிரிக்க, எனக்கும் இன்னும் ஒரு முறை அசிங்கமாகிப் போனது. என்னைவிட அசிங்கமாகிப் போனது அந்த ஆசிரியருக்குதான்.

6 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.