Home » சிந்தனைகள், பொது

எது நிலையானது?

14 September 2009 3 Comments

என் தந்தை இறந்த பிறகுதான் எனக்கு கடவுளுடனான நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இப்படிச் சொன்னால் பைத்தியம் என்று கூறி உன்னை பாண்டி மடத்துக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள் என்று வழக்கம் போல என் மனசாட்சி சொன்னதால், அதே விஷயத்தை கொஞ்சம் மாற்றி கூறுகிறேன். என் தந்தை இறந்த பிறகுதான் எனக்கு கடவுளை நெருங்கும் தொடர்பு ஏற்பட்டது. இது கொஞ்சம் பரவாயில்லை தானே?

அந்த சமயத்தில் தான் எனக்கு வேளுக்குடி ஸ்ரீ உ.வே. கிருஷ்ணன் அவர்களை கேட்கும் வாய்ப்பும் வந்தது. அவர் சொல்லும் விஷயங்களை விடுங்கள், அவரின் குரலை ஒரு முறை கேட்டுப்பாருங்கள். நீங்கள் மயங்கிப் போவதற்கு நான் பொறுப்பு. குரலே இப்படியென்றால் அவர் சொல்லும் விஷயங்கள். ஆச்சரியமான ஒன்று என்னவென்றால் அவர் மற்ற மதங்களையோ அல்லது மனிதர்களை கடுகளவிற்குக் கூட தாழ்த்தியோ அல்லது குறையோ கூறுவது கிடையாது.

ஒருவர் சொல்ல வரும் விஷயத்தை வைத்துதான் அவர் சொல்வதை மேலும் கேட்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்கிறோம். இது முக்கியமென்றால் அதைவிட முக்கியம் யார் அதை சொல்கிறார்கள் என்பது. ஜக்கி வாசுதேவ் ஆன்மீகத்தை பற்றி சொன்னால் அது வேறு, அதையே நானும் சொல்கிறேன் என்று எழுந்து நின்றேன் என்று வையுங்கள், காமெடியாகத்தான் இருக்கும். புகைப்பிடிக்கக் கூடாது என்று கூறுவதற்கு நான் புகைப்பிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அதை பிடிப்பதனால ஏற்படும் தீமைகளை அறிந்தவனாகவாவது இருக்க வேண்டியது அவசியம். நான் ரசிக்கும் வேளுக்குடி இந்த கோஷ்டியைச் சேர்ந்தவரே.

பாகவதத்தில் முத்துக்கள் என்ற அவரின் உபன்யாசத்தை கேட்டதில் நாம் பிறந்தது எப்படி, மறுபிறப்பு என்று ஒன்று இருக்கிறதா, வாழ்க்கை என்பது என்ன, எதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம், எதற்காக வாழவேண்டும் என்றறிந்தேன். அதை முழுவதுமாக இங்கே சில பத்திகளில் சொல்லிவிட முடியாது. இது ஒரு சிறு துளியில் சிறு துளி. இருந்தாலும் கேட்டவுடன் என்னைக் கவர்ந்த நாம் வாழ்க்கையை எதை நோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை சில நிமிடங்களில் புரியவைத்த இரு உதாரணத்தை இங்கே பதிப்பதில் பேரானந்தம் அடைகிறேன் என்றால் அது மிகையல்ல. இதை படிப்போர் என்றேனும் ஒரு நாள் இதை உணர்வார்களானால் அது நான் என் வாழ்க்கையில் செய்த ஒரே புண்ணியச் செயலாகக் கருதுகிறேன்.

பாகவத்தில் முத்துகளிலிருந்து எடுத்த ஒரு சிறு துளி உங்களுக்காக என்னுடைய எண்ணக்களையும் சேர்த்து:

ஒருவனை சிங்கம் துரத்தியது. ஓடினான். மிக வேகமாக ஓடினான். எங்கே சிங்கம் தன்னை அடித்து தின்றுவிடப்போகிறதோ என்ற அச்சத்தில் ஓடினான். ஓடியவன் ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்தான். துரத்தி வந்த சிங்கத்திற்கு முதலில் தெரியாமல் போனாலும், பிறகு கண்டுபிடித்துவிட்டது. கிணற்றின் மேலேயே தன் கோர பற்களை காட்டிக்கொண்டு..ர்ர்ர்ர்..ஹ..ஹ…ர்ர்ர்…என்று மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது.

அதே சமயத்தில் கிணற்றுக்குள் விழுந்தவன் அதிர்ஷ்டவசமாக கிணற்றின் சுவற்றில் வளர்ந்துவிட்டிருந்த ஒரு சிறிய ஆலமரத்தின் வேரை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தான். சிங்கத்திடமிருந்து தப்பியதை எண்ணி பெருமூச்சு விட்டான். விட்டுக்கொண்டே மேலே பார்த்தவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. சிங்கம் தான் அங்கே காத்துக்கொண்டிருக்கிறதே.

சரி இருந்தாலும் எவ்வளவு நேரம்தான் சிங்கமும் பசி தாங்கும். வேறு இரையை தேடி ஓடிவிடும், நாமும் தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டே கீழே பார்த்தால், கருநாகங்கள் இவனை வெறிக்க வெறிக்க படமெடுத்து பார்த்துக் கொண்டிருக்கின்றன. மேலே சிங்கம் கீழே பாம்பு. இதற்கிடையில் அவன் பிடித்து தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளையை ஒரு பெருச்சாளி கடித்துக் கொண்டிருந்தது.. பிழைத்தோம் என்று நினைத்தவனுக்கு தான் உயிருடன் இருக்கிறோமா என்று சந்தேகம் வரும் அளவிற்கு வெலவெலத்துப் போனது.

அதே சமயத்தில் கிணற்றுக்கு மேலே இருந்த மரத்தில் ஒரு தேன்கூட்டை ஒரு கொளவி கொட்ட தேன்கூட்டிலிருந்து ஒரே ஒரு சொட்டு தேன் அவன் வாயில் வந்து விழுந்தது. இது நடுக்காட்டில் இருக்கும், மனிதக்கை படாத, நேரடியாக தேன்கூட்டிலிருந்தே விழுந்த தேன். சுவைக்கு சொல்லவா வேண்டும். அதை சுவைத்த நொடியில் அவன் தன்னிலையை மறந்து போனதில் ஆச்சர்யம் இல்லை. இன்னும் சில நொடிகளிலோ அல்லது நிமிடங்களிலோ ஏதோ ஒரு ரூபத்தில் தான் இறக்க இருப்பதையும் கூட அவன் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.

இந்த சுகத்தைப் போன்றதுதான் நாம் வாழ்வில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களும். எதுவுமே நிலையானவை அல்ல. பல இன்னல்கள் நம்மை பிடுங்கிக் கொண்டிருப்பதை நாம் அப்போது உணர்வதில்லை. அந்த தேன் சொட்டு வாயின் வழியே வயிற்றுக்குள் இறங்கி, நாவிலும் சுவை குறைந்த பிறகு சிங்கமும், பாம்பும் அறுந்து விழப்போகும் மரத்தின் வேரும் தானே வாழ்க்கை.

இன்னல்களை மறக்கும் முயற்ச்சியில் இது போன்று சிற்றின்பங்களில் நம் நாட்டத்தை செலுத்துகிறோம். பேரின்பமான இறைவன் திருவடிகளை பற்றுவதில் நாட்டம் காண்பிக்க மறந்துவிடுகிறோம். அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் அருளியது ஞாபகத்துக்கு வருகிறது. அவ்வளவு சொல்லியும் அர்ச்சுனன் கடைசிவரையில் சரணாகதி செய்யாததையும் கண்ணன் சுட்டிக்காட்டியுள்ளார் ஸ்ரீமத் பாகவத்ததில். கடவுளிடமிருந்தே உண்மையை அறிந்து கொண்ட அர்ச்சுன்னே சரணாகதி செய்யாத போது நாமெல்லாம் எம்மாத்திரம்.

இரை தேடிக்கொண்டிருந்த ஒரு நாய் வழியில் கிடந்த ஒரு காய்ந்து போன எலும்புத் துண்டை கவ்விக் கொண்டு ஓர் இடத்தில் அமர்ந்து அதை உண்ணத் தொடங்கியது. அதை உண்ணும் போது எலும்பு உடைந்து ஒரு சிறு துண்டு நாயின் வாயை கிழித்துவிட்டது. ரத்தம் கீழே சொட்ட, தன் ரத்தம் என்று கூட தெரியாமல் அந்த மாமிசத்துண்டிலிருந்து சொட்டுகிறது என்றெண்ணி நாய் அதை ருசிக்க தொடங்கியது. என்ன சுவையாக உள்ளது இந்த மாமிசத்தின் ரத்தம் என்று மகிழ்ந்தது.

இது போலத்தான் நாம் வாழ்கின்ற வாழ்க்கையும். சுகமென்பது சுருங்கப் போவது என்றறியாமல் நாம் கூத்தாடி மகிழ்கிறோம். ஆனால் துக்கம் வந்தாலோ வாழ்க்கையே முடிந்துவிட்டதாக எண்ணி ஒடிந்து போகிறோம். ஒரு குழந்தை விளையாடினால் நமக்கு சுகம் தரும். அதே குழந்தை மற்றொரு நாள் உடல்னிலை சரியில்லாமல் போனால் துக்கம். 100 மதிப்பெண்கள் பெற்றால் ஆனந்தம், 60 பெற்றால் சோகம். இப்படி மாற்றி மாற்றி நம்மை நாமே மாய்த்துக் கொள்கிறோம்.

வேலை கிடைத்தவுடன் மகிழ்ச்சி கொள்கிறோம். அதே வேலையில் நமக்கு பிடிக்காத ஒன்று நடக்கும் போது வருந்துகிறோம். நடப்பது எதுவுமே நம் கையில் இல்லாத போது தேவையற்ற அங்கலாய்ப்புக்களும், வருத்தங்களும், கும்மாளங்களும், எரிச்சல்களும் எதற்கு. நம்மால் ஒன்று முடிந்தால் அது ப்ரம்மம் முடியும் என்று சங்கல்பித்து கொண்டதனாலேயே என்ற உண்மையை அறிந்துவிட்டால், நம்மால் ஆவதென்று ஒன்றுமில்லை என்ற உண்மையும் விளங்கிவிடும்.

நிலையில்லாத சந்தோஷத்தையும் துக்கத்தையும் ஆராதிப்பதற்கு பதில், ”இதுவும் கடந்து போகும்” என்று பலனைப் பற்றி சிந்தியாமல் போய்க் கொண்டே இருக்க வேண்டும். நிலையானது நாராயணன் (அவரர் நம்பிக்கைக்கு ஏற்ப கடவுளை மாற்றிக் கொள்ளலாம்) மட்டும்தான் என்றுணர்ந்து வாழ்க்கையை வாழந்து முடிக்க வேண்டும்.

இந்த அளவிற்காவது எனக்கு அறிவூட்டிய ஸ்ரீ உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றி.

இப்படிக்கு,
அடியேன் ராமானுஜதாசன்

3 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.