Home » நகைச்சுவை, பொது

கிருஷ்ணாம்பேட்டை கபாலியின் ராமாயணம்

9 September 2009 5 Comments

வழக்கமாக நான் இரவு தூங்குவதற்கு முன் கொஞ்ச நேரம் உபன்யாசம் கேட்பேன். அப்படி நேற்றிரவு கேட்டுக் கொன்டிருந்தது “ராமானுசர் வைபவம்””. அய்யங்கார் குடும்பத்தில் பிறந்திருந்தும், தமிழை பல காலமாக படித்துக் கொண்டிருந்தும் எனக்கு அவர் படித்த அந்த வடநாட்டு ஸமஸ்கிருதம் கலந்த தமிழை (வடமொழி) புரிந்து கொள்ள முயற்சிப்பதே சிரமமாக இருந்தது.

ராமாயணத்தை போன்ற இதிகாசங்கள் மனிதனுக்கு எவ்வளவோ கற்றுக் கொடுக்கிறது. ஆனால் அது அனவரையும் சென்றடைகிறதா என்றால் அது சந்தகமே. இதிகாசங்களும் புராணங்களும் சொல்லப்படும் விதம் மட்டுமே வேறுபடுகிறதே தவிர அதன் சாராம்சத்தை சிறுதும் குறைத்துவிடுவதில்லை. குப்பத்தில் வாழும் சுப்பனும் கூட ராமாயணம் பேசலாம். காலட்சேபம் என்றால் இவர்கள் தான் செய்யாலாம் என்றெல்லாம் எதுவுமில்லை. அக்ரஹாரத்தில் உள்ள அய்யங்காரும் காலட்சேபம் நடத்தலாம், கிருஷ்ணாம்பேட்டையில் உள்ள கபாலியும் சொற்பொழியலாம். இந்த காலட்சேபக் கருத்தில் உங்களுக்கும் ஆட்சேபக் கருத்து இருக்காது என்று நினைக்கிறேன். இருந்தாலும் அதை பற்றியெல்லாம் எனக்கு கவலையுமில்லை. இப்பொழுது கி.கபாலி வழங்கும் “ராமாயணம்”

இடம்: கிருஷ்ணாம்பேட்டை
தேதி/நேரம்: ஞாயிறு/ காலை 10:30

ராமாயணம் – கிருஷ்ணாம்பேட்டை கபாலியின் காலட்சேபம்

கபாலி அல்லாருக்கும் வணக்கம் வெச்சிகிறான்…ஊர்சனமெல்லாம் குந்திகிற இந்த சபையில நாம இப்ப ராமாயணத்த பத்தி பேசப்போறத நென்ச்சாலே குஜாலாகுது. இந்த ராமாயணத்த ஸ்டார்ட் செய்யறதுக்கு மின்னாடி ஒரு கவிதைய சொல்லிக்கறேன்…

ராமன் பொண்டாட்டி சீதா
கிருஷ்ணன் கொட்த்தது கீதா (ரிப்பீட்டு..)
அவன் தம்பி லட்சுமணன்
ராமன் லட்சுமணன் ரெண்டு
பேர்ர்க்குமே எதிரி ராவணன் (ரிப்பீட்டு..)
ராவணா! (ரிப்பீட்டு..) (ரிப்பீட்டு..)
நீ இட்டுக்கினு போனது சீதாவ
ஆனா வல்ச்சிக்கினது கோதாவ
அனுமான்னாலே ஞாபகம் வர்றது கத (ரிப்பீட்டு..)
இவங்க எல்லாரும் சேர்ந்ததுதான்
நம்ம ராமாயணம் கத
கபாலி சொல்லப்போறான் அத

முதல்ல நம்ம அண்ணாத்த ராமனோட ஃபாமிலிய பத்தி சொல்றேன் கேட்டுக்கோ:

தசரதனுக்கு மூணு சம்சாரம்
அதுல ஒண்ணுதான் இந்த
ராமாயணத்தோட சாராம்சம்
அது சம்சாரமில்ல கண்ணு
சம்சாரமா வந்த மின்சாரம்
வாத்தியாருக்கு பொறந்தது நாலு புள்ள
நாலுல ஒண்ணு பேர் சொல்லும் புள்ள
நாலுமே நைனா பேர் சொல்லாத புள்ள
கைகேயி கெட்டதுக்கே காரணம்
கூனின்ற அந்த கைபுள்ள
சண்டையில காப்பாதினதுனால
தசரதன் கைகேயி கைக்குள்ள
அவ கேட்ட வரத்துல
கொஞ்சம் கூட இரக்கமில்ல
அண்ணாத்த ராமன் காட்டுக்கு போவனும்
தன் மவன் ராசா ஆவணும்
ஒண்ணு இல்ல ரெண்டு இல்ல
பதினாலு வர்சோ கானகத்துல
ராவணனுக்கு இறங்கல மப்பு
அதுல சீதாவ தூக்கினது தப்பு
சீதா எவ்ளோ கேட்டும்
அவன் மனசு இறங்கல
அவனே எழுதிக்கிட்டான் அவன் இரங்கல

-இப்ப இருக்குற கொயந்தைங்க மாதிரி…..நைனா பேர டமாசுக்கு கூட சொல்லாத புள்ளைங்க. பேர் சொல்லும் புள்ளைன்னா உடனே கமல்னு நெனச்சுக்காத வாத்தியாரே, அது நம்ம அண்ணாத்த ராமன்.

அண்ணாத்த ராமன் தக்குனூண்டா இருக்கசொல்லவே சார்ப்பு. ராமர் உட்ட பானம் திரும்பி பார்த்த காணுன்னு நம்ம பெரியவங்க கூட சொல்லியிருக்காங்க. தோ..கிளம்பி வரசொல்லோ கூட எம்புள்ள அத்த சொல்லிக்கினு இருந்தான். திரும்பி வரசொல்லோ வில்லு ஒண்ணு வாங்கிவா நைன்னான். ராமன் துன்னாதான் நான் துன்னுவேன்னு சொல்றளவுக்கு ப்ரதர்ஸ் அல்லாருமே பாசக்கார பசங்க. அதுலயும் லட்சுமண இருக்கானே…..”ஆனந்தம் படத்துல மம்முட்டி தம்பியா வர்ற முரளி மாதிரி. ராமன் சொன்ன எல்ஐசி லேர்ந்து குதின்னா என்னன்னு கேட்டுக்காம தொப்புன்னு குச்சிடும். அப்படிப்பட்ட புள்ள.

அண்ணாத்த ராமனுக்கு செங்கல் கணக்கா ரெண்டு தோளு. ஆம்ஸ் மடக்கினா நாலு பேரு சேர்ந்தாப்ல தொங்கலாம். அம்புட்டு பவரு. ஆறடிக்கு சும்மா அமிதாபச்சான மாதிரி உசந்து நிக்குது புள்ள. செஸ்ட்ட அளந்தா 50, மூச்ச இயுத்து புட்ச்சா 55. அண்ணாத்த கலரு குங்கும சிவப்பு. வில்ல எட்த்து அப்படி நின்னுச்சுன்னா வில்லன் முட்ட பொடிமாசுதான். அண்ணாத்தைக்கு தெரியாத ஃபைட்டே இல்ல. கத்தி, கொம்பு, கராத்தே, குன்ஃபூன்னு பல ஆயிட்டத்த கத்துவெச்சிக்கிட்டு மொகத்துல பால லிட்டர் கணக்குல வய்யவுடும் நம்ம அண்ணாத்த.

ஒர்தபா விசுவாமித்திரர்னு ஒரு சாமில் தசதரனாண்ட ஒரு பூச செய்யப்போறேன், உன் மவன் ராமன என்னோட அனுப்பு, நாசர் கணக்கா வில்லன் கூட்டம் கொடாசல் கொடுக்குதுன்னு சொல்லி இட்டுக்கினு போனாரு. போனாரா….அங்க அந்த கொடாசல் கொடுக்கற வில்லன் நம்ம ராமன பார்த்ததுமே மெர்சலாயிட்டான். ராமன் வுட்டான் ஒரு பானம். திரும்பி பார்த்த காணும்…பானத்தை இல்லீங்கோ…வில்லன….

அப்ப்டியே ஒரு டூர் அடிச்சிட்டு வூட்டுக்கு போவலாம்னு விசு சொல்ல, நீங்க சொன்ன சர்தான் வாத்தியாரேன்னு ராமனும் லட்சுமணணும் தலைய பூம்பூம் மாடு கணக்கா ஆட்டிச்சிங்கோ. மரியாத தெரிஞ்ச புள்ளைங்க. நம்ம வூட்லையும் ஒண்ணுகுதே?

அங்கயிருந்து அல்லாரும் மிதிலாபுரி நாட்டுக்கு போவ அங்க ஒரு பொண்ண மேரேஜ் பண்ணிக்க நான் நீன்னு சரியான போட்டி. எல்லா நாட்டு ராஜாவும் சேதிய கேள்விபட்டதும் கையில கடந்தத அல்லாத்தையும் அப்படியே போட்டுபுட்டு இங்க வந்து குந்திங்குறாங்கோ…

ஏன்னா அண்ணி சீதா சும்மா அப்படி அயகா இருக்கும். அது பார்துச்சுன்னா திரும்ப நாம அத பார்க்க முடியாது. சும்மா பளபளன்னு, தகதகன்னு தங்க கணக்கா மின்னும். சுருக்கா சொல்லணும்னா நம்ம ஸ்ரீதேவி மாதிரி இருக்கும்.

அந்த கூட்டத்துல அண்ணாத்த ராமன் கால எட்த்து வெக்கோசொல்ல இங்க உள்ள அண்ணிக்கு இன்னாமோ பண்ணுது. வந்த ராஜாவெல்லாம் ராமன் பார்த்துட்டு “இனிமே நாம வடிவேல் மாதிரி 23ஆம் புலிகேசில வர்ற காமெடி ராஜாதான்”னு முடிவே பண்ணிட்டானுங்கோ.

அண்ணாத்த வில்ல எட்து, வொட்ச்சி அண்ணிய அலேக்கா தூக்கினு போயிட்ச்சி பொண்டாட்டியாக்கிக்கினு.

சும்மா ஜோலி எதுவுமே இல்லாம ஜாலியா சுத்திக்கினு கெடந்த ராமனுக்கு கைகேயி வெச்சா ஒரு ஆப்பு. ஒர்தபா தசரதன் சண்ட போட்டுனு இருக்கசொல்ல கைகேயிதான் காப்பாத்திச்சு. அதுனால நைனா கைகேயிக்கு ரெண்டு வரம் தர்றதா ப்ராமிஸ் பண்ணிச்சு.

இப்படியே குஜாலா போயிக்கினு இருந்த ராமாயணத்துல “அரசி சீரியல்ல ராதிகாவுக்கு அட்சா மாதிரி” புயல் அட்சிது. கைகேயியோட ரெண்டு வரத்த கேட்டு ஜாலியா இருந்த தசரதன் காலியாயிட்டான். ஒண்ணு நம்ம அண்ணாத்த ராமன் 14 வர்சோ காட்டுக்கு போவனும் இன்னொன்னு என் மவன் பரதன் கிங் ஆவணும்னு கேட்டா…? அதான் ஷோக்கா இருந்த தசரதன் ஷாக்காயிட்டான். சம்சாரம் அது மின்சாரம்னு சும்மாவா சொன்னாங்கோ பெரியவங்கோ…

கட்டினு வந்த எடத்துல சந்தோஷமா இருந்தமா, அப்படியே குஜாலா ஒரு ஹனிமூன் டூர் போனோம்மான்னு இருக்க வேண்டிய நம்ம சீதைக்கு இத்த கேட்டதும் பக்குனு ஆயிட்ச்சி. வீட்ல வேலை செய்யற வயசான ஆயா சொன்னாலே கேட்டுக்குற ராமன், நைனா சொன்னா..கிளம்பிட்டான். சரி இதையே ஹனிமூன் ட்ரிப்பா மாத்திக்கலாம்னு ஐடியா பண்ணி சீதாவும் கூட கிளம்பிட்டுது.

அண்ணாத்த இல்லாத வூட்ல நானும் இருக்க மாட்டேன்னு பாசக்கார லட்சுமணனும் வில்ல எட்துக்கினு ஒரே அழுகாச்சி. சரி போய்த்தொலைன்னு அவன் அம்மாவும் அனுப்பி வெச்சிட்ச்சி. இந்த சீன்ல பரதன் இல்லவே இல்ல. பாவம் அந்த புள்ளை ஏதோ ஜோலியா வெளிநாட்டுக்கு போயிருந்துச்சி.

காட்டுக் போனா அங்க சோமாறி மாரிச்சன் மானப் போல வந்து அண்ணி சீதாவ ஏமாத்தி..ராமானாண்ட “எனக்கு அந்த மான் வேணும்”னு கேட்டு ஒரே ரப்சர். சரி ஆசையா கேட்குதுனு தொர்த்திக்கினு ஓடிச்சு அண்ணாத்த. லட்சுமணா அங்க என் புருஷங்காரன் கொர்லு கொடுக்கரான், போய் என்னான்னு பார்த்துக்கினு வா”னு லட்சுமணனையும் அனுப்பிட்ச்சி அண்ணி.

இதான் கரேட்டு டைம்ன்னு பட்டா ராவணன் அங்க வந்து சீதாவ அலேக்கா தூக்கின்னு போயிட்டான் தூ.ம….

பாவம் அண்ணி நிறைய சொல்லிச்சி..வேணாண்டா..அண்ணாத்தைக்கு தெரிஞ்சா மேட்டர் மோசாமா போயிடும். உன் லைஃப்க்கு நான் காரண்டி இல்லன்னு. எத்தையும் காதுல வாங்கிக்கல அந்த பேமானி பய. ஃப்லைட்ட ஸ்ட்ரெயிட்டா அவன் எட்த்துல..அதாம்பா சீலங்காவுல…லாண்ட் பண்ணிட்டான் கேப்மாரி. அண்ணி தேம்பித் தேம்பி அழுவுது.பார்க்கறதுக்கு பாவமாயிட்ச்சிபா. ஒரு பொம்பள புள்ளைய இப்டியா இட்டாறது. அதுவும் நம்ம அண்ணாத்த ராமனோட வொய்ஃபு.

வயக்கமா ராமன் வுட்ட பானந்தான் காணாம போகும், இந்த தபா அண்ணாத்த வுட்டுட்டு போன சீதான்ற மான காண்ல. எதுக்குமே டென்சனாகத நம்ம தல சீதா காணும்னு தெரிஞ்சதும் டென்சன் ஆயிட்ச்சி. அண்ணி அண்ணினு லட்சுமண கொர்லு கொடுத்து பார்த்து டையேடா உட்கார்ந்துட்டான். தேடலாம்னுட்டு ரெண்டு பேரும் வில்ல எட்துகினி கிளம்ப, வயியில ஒரு குரங்கு கூட்டத்த பார்தாங்கோ. அதுல ஒருத்தர் தான் நம்ம அனுமான். அனுமானுக்கு இன்னா பலம்ற.

ஆள் சும்மா அர்னால்டு மாதிரி இரும்பு. அண்ணாத்த ராமன் மேல அம்புட்டு பக்தி. ஒர்தபா உனக்கு ராமன எம்புட்டு புடிக்கும்னு கேக்க, மார கீசி காட்டினாரு அனுமாரு.

அனுமாரு அனுமாரு அனுமாரு
ராமன நெஞ்சுல வெச்சு காட்டினாரு
அனுமாருக்கு இன்னொரு பேரு ஆஞ்சநேயரு
தொள்சி மாலப் பிரியரு
வெண்ண பூசினா குஜால் ஆவாரு
நீ கேட்டதெல்லாம் கொடுப்பாரு

-ன்னு அவர பத்தி ராயபுரம் மாணிக்கம் எய்தின கவித ஒண்ணு நாபகத்துக்கு வருதுபா…..

அனுமாரு அண்ணாத்தையயும், லட்சுமணணையும் சுக்கிரீவன் கிட்ட கூட்னு போவ அங்க அண்ணாத்த வந்த மேட்டர க்ளீனா ஒண்ணுவிடாம எட்து சொன்னாரு.

இதே நேரத்துல அங்க ராவணன் ராவா ஆஃப் அடிச்சுட்டு ராவடி பண்றான் சீலங்காவுல. அட்த நாள் காலில குட்ச வாசனை இறங்கதற்கு மின்னாடியே குளிக்காம கொள்ளாம கப்பு ராவணன் அண்ணி சீதயாண்ட போய், ராமன் பூட்டான், வரமாட்டான் அது இதுன்னு செம ஃபிலிம் வுட்டு பார்த்தான். அண்ணி நம்புமா? இல்ல கேட்கறேன்….

மாமு ராவணா நீ ஆராண்டே விளாடிக்கினுகீறே தெர்தா…..மவன இருடி உனக்கு இன்னும் கொஞ்ச நாள்ள சங்குதான்… அப்படி அண்ணி வெறுப்பேத்தி வுட்டுட்சி.

பின்னால இங்க அண்ணிய தேடிக்கினு அனுமாரு சீலங்காவுக்கே வந்துட்டாரு. அங்க வந்தா அங்க இருந்த ராச்சஸ கூட்டம் அண்ணன் அனுமாராண்டா வாலாட்ட…எனக்கே வாலான்னு, ச்சும்மா ஏர்லே பர்ந்து பர்ந்து, தரையிலே கால் படாம அல்லாரையும் போட்டு தும்சம் பண்ணிட்டாரு. அண்ணிய மீட் பண்ணி, அண்ணன் கொட்த்த மேரேஜ் டே மோதரத்தை கொடுத்தாரு.

அங்கயிருந்து கெளம்பி ராவணன போய் பார்த்தாரு. பேமானி நம்ம அனுமாருக்கு ஒரு சேர் கூட போடலை…கட்டயில போறவன். நம்ம ஆளு சூப்பரும்மா….அவரோட வாலையே சுத்தி சுத்தி நாலுகாலு சேர் மாதிரி போட்டு உக்காஞ்சிக்கினு பேசறாரு……

”கைதே டாய் எங்க அண்ணாத்த வொய்ஃப இட்டாந்துட்டியா நீ? உன் கொடல உருவி மாலைய போடறேன் பாரு…

ஒயுங்கு மருவாதியா அண்ணனாண்ட மன்னாப்பு கேட்டுட்டு, அண்ணிய வுட்டுடு…இல்லாங்காட்டி படா பேஜாரு ஆயிடும்…அப்புறம் பகுலு பிகுலு ஊதும், செவுளு அவுலு துண்ணும்”னாரு அனுமாரு. கேட்டானா ராவணன்…பய புள்ளைக்கு போறாதகாலம் ஸ்டார்ட் ஆயிட்ச்சி.

நம்ம அனுமார கிண்டல் பண்ணான்பா அந்த பேமானி. ராமன் உன்ன ஒண்ணியும் பண்ணாதன்னு சொல்லி அனுப்பிகிறாரு. அத்தொட்டு வுட்டு போறேன்…இல்ல மவன நீ சட்னிதான்னு சொல்ட்டு பறந்துட்டாரு நம்ம அனுமாரு.

அப்புறம் என்ன…நம்ம அண்ணாத்தைக்கும் ராங்கு புட்ச்ச ராவணனுக்கும் செம ஃபைட். ராவணன் போட்டுக்கினு இருந்த கேப்ப இங்கயிருந்து ஒரு அம்பு வுட்டு கீய தள்ட்டாரு அண்ணாத்த. “இன்னிக்கு போ நாளைக்கு வா”ன்னாரு. பேமானி அப்பையும் கூட திர்ந்தலபா அவன்.

ராவணன் மவன் இந்தரஜித்து, துண்ட்டு துண்ட்டு தூங்கிக்கினுகீற கும்பகர்ணண் அவன் இவன்னு அல்லாரையும் அண்ணாத்தையும் சின்ன அண்ணாத்தையும் போட்டு தள்ட்டாங்கோ….கட்சில ராவணன் வந்தான். நம்ம அண்ணாத்த அவனுக்கு கொஞ்ச நேரம் சொல்லி பார்த்துச்சு…

அவனுக்கு அயிவுகாலம் வந்துட்டதால எத்தையும் கேட்கலை கேப்மாரி. ஒரு தலைய வெட்னா திரும்ப வர்துபா…இன்னாமோ மேஜிக் வெச்சிகிறான்…சாவடிக்கவே முட்ல அண்ணாத்தையால..

அப்பதான் ராவணன் கட்சிலேர்ந்து ராமன் கட்சில சேர்ந்த விபீஷனன் (ராவணன் தம்பிமா இவன்) பாயிண்ட சொன்னான். அண்ணாத்த அவன் வவுத்துல அம்பு வுடு…அவனுக்கு அங்கதான் உசிரு மேட்டருன்னு.

அவ்ளோதான்….ராமன் அம்ப எட்த்தாரு, வில்லுல பூட்டினார்ர்…கண்ண மூடிகினு ஏதோ மந்தரம் சொன்னாரு…..சடாருன்னு வுட்டாரு அம்ப….முடிஞ்சுது ராவணன் கதை…..

ராவணன் அப்பீட்டு….அண்ணிய கூட்டிக்கினு அண்ணாத்த அல்லாருக்கும் நன்றி தெரிவிச்சுக்கினு காட்ட பார்த்து போயிட்டாரு. அப்புறம் மிச்சம் சொச்சம் டைம காட்ல வாய்ந்துட்டு, பதினாலு வர்சோ கயிச்சு ராஜாவாயிட்டாரு.

5 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.