Home » சிந்தனைகள்

பெருமதிப்பிற்குரிய ஐயா

4 September 2009 6 Comments

ஒருவன் கற்றற்குரிய நூல்களையும் ஐயம், திரிபு, ஆகிய குற்றங்கள் நீக்கிக் கற்க வேண்டும், அங்கனம் கற்ற பிறகு அவை கூறிய ஒழுக்க நெறியில் வழுவாது ஒழுக வேண்டும். இது வள்ளுவனின் எழுத்துக்கள். கல்வியைப் பற்றியும் கல்லாமையை பற்றியும் மட்டுமே வள்ளுவன் இருபது குறள்களை இயற்றியுள்ளார். கல்வியின் சிறப்பு அப்படி.

அறிவு நம்மை அழிவிலிருந்து காக்கும் ஒன்று. சான்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறி கேட்டு இருக்கிறோம். அத்தகைய மிக உயர்ந்த கல்வியை போதிக்கும் ஆசிரியர்களை போற்றுவதே இந்த பதிவின் நோக்கம்.ஆசிரியர் தினம் இந்தியாவில் செப்டம்பர் 5 அன்று கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 5 நம் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் ஆகும்.

நம் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கும் தோற்பதற்கும் பலர் காரணமாக இருந்தாலும், நாம் இப்பொழுது யாராக இருக்கிறோம் என்பதற்கும் எவ்வாறாக நடந்து கொள்கிறோம் என்பதற்கும் முக்கியமான மூன்ற்ர் பேர் காரணர்களாகின்றனர்.

அந்த மூவர் அம்மா, அப்பா மற்றும் ஆச்சார்யன். இதில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரு ரத்த பந்தமும் கடமையும் சேர்ந்த காரணங்கள் இருக்கிறது. இவர்கள் இருவரை விட எனக்கு பெரிதாக தோன்றுவது ஒரு ஆசிரியனின் பங்காகவே கருதுகிறேன். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசிரியன் அமையவில்லையெனில், இப்பூவுலகம் இன்று ஒரு காடாக மாறியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் (இவ்வுலகில் ஆசிரிய பெருமக்கள் இருக்கும்போதே) நடக்கும் அட்டூழியங்களும், வன்முறைகளும்,அக்கிரமங்களுமே தெரிகின்றன.

ஒரு திருடனாக இருந்தாலும் கூட அவனுக்கு குரு என்று ஒருவன் இருக்கத்தான் செய்கிறான். எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அவரவருக்கு அமைந்த ஆசிரியராலே என்று மாற்றிப் பாடினால் கொஞ்சமும் தவறில்லை. அன்பு, பண்பு, அறிவு, ஒழுக்கம் என்று ஒருவன் மனிதாகப் பார்க்கபடுவதற்கு அடையாளமான அனைத்தையுமே போதிப்பவர்தான் ஆசிரியர்.

நாம் எல்லோருமே ஒரு ஆச்சார்யனை பின்பற்றியே வாழவேண்டும் என்று நம் வேதங்களும் கூட பறைசாற்றுகின்றன. இதற்கெல்லாம் மேலே நாம் அனுதினமும் வழிபடும் ராமனும் கிருஷ்ணணும் கூட தங்கள் வாழ்வில் ஆசிரியர்கள் கொண்டே பல வேதங்களும் வித்தைகளும் பயின்றனர். படைத்தவனுக்கே பாடமா என்ற கேள்வி எழுந்தாலும் நாம் வாழ்வில் ஒரு ஆச்சார்யனை பற்றி வாழவேண்டும் என்பதை உணர்த்துவதற்கே அவர்கள் அப்படி வாழ்ந்து காட்டினார்கள்

அது கடவுளே ஆனாலும் ஆச்சார்யன் தேவை என்பது இதிகாசங்களிலிருந்து வெட்ட வெளிச்சமாகிறது.

இங்கே பொதுவாக நாம் நம் பள்ளியில் பாடம் நடத்தியவர்களை மட்டுமே ஆசிரியராக பார்ப்பது வழக்கமாகிவிட்டது. நம்முடைய அன்றாட வாழ்கையில் எவ்வளவோ பேர் அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே அந்த பொறுப்பில் இருந்து நம்மை வழிகாட்டுகிறார்கள். நாம்தான் அதை உணர மறுக்கிறோம் அல்லது உணர்ந்தும் உணராதது போல இருந்துவிடுகிறோம்.

“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை” என்று வள்ளுவன் கூறியது போல மற்றைய எல்லாச் செல்வங்களை விட மிக உயர்வான கேள்விச் செல்வத்தை நமக்கு தரும் ஆசிரியர்கள் இவ்வுலகில் இல்லையெனில் நாமெல்லாம் இன்றளவில் அதே வள்ளுவன் சொன்னதுபோல மிருகமாக இருந்திருப்போம்.

பாடத்தை நடத்துபவரை மட்டுமே ஆசிரியராக பார்த்தோமேயானால், என் இரண்டரை வயது மகனுக்கும் தற்போது ஒரு ஆசிரியர் இருக்கிறார். ஆனால் அதே இரண்டரை வயதில் அவன் தப்பு செய்யும்போது அவனை கண்டித்து நல்லதை பழக்கப்படுத்தும் அவனது பாட்டியையோ, அல்லது பெரியப்பனையோ, மாமாவையோ அவன் வாழ்நாளில் ஆசிரியனுக்கு கொடுக்கும் மதிப்பில் கொஞ்சமும் கொடுப்பதில்லை. மாறாக பாசமழை பொழிகிறான். அது இயல்பு. அதை பற்றி நாம் இங்கே பேசவில்லை.

அம்மா நம் சொந்தங்களை காண்பித்துக் கொடுத்தால் அப்பா நமக்கு வாழ்வதற்கும் கற்பதற்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தால், நமக்கு அறிவை ஊட்டி இந்த உலகத்தை நமக்கு உணர்த்தி நம்மை ஒரு முழுமனிதாக்குவது ஒரு ஆசிரியரே.

ஆசிரியர்கள் இந்த உலகத்திற்கு ஆற்றும் பணியானது விலைமதிப்பற்ற ஒன்று. என்னை பத்தாம் வகுப்பில் பாதித்த துரை அவர்கள் என் நினைவுக்கு வருகிறார். ஒரு நண்பனைப் போல பழகியவர். எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற்றவர்கள் எங்கள் வகுப்பை சேர்ந்தவர்களே. இதற்கு எங்கள் வகுப்பாசிரியரே காரணம். அன்பு காட்டுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.

இன்று நான் பல பதிவர்களில் ஒருவனாக இருப்பதற்கு காரணம் சில ஆசிரியர்கள். அவர்களில் மிக முக்கியமான பங்கு 8ஆம் வகுப்பிலும் 10ஆம் வகுப்பிலும் எனக்கு தமிழ் போதித்த தமிழ் ஐயா. அவரின் பெயர் இன்றுவரை எனக்கு தெரியாது. தமிழ் ஐயா என்று கூப்பிடுவதும் குறிப்பிடுவதும்தான் வழக்கம். அவர் வகுப்பில் மட்டும் ஆங்கிலத்தில் ஒருவார்த்தை பேசக்கூடாது. அப்போது அந்த கண்டிப்பு எனக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. வடிவேல் சத்யராஜுடன் ஒரு நகைச்சுவை காட்சியில் வந்தது போல “அவசரத்திற்கு பாஷை தெரியாது” என்பதை நான் நடைமுறையில் அனுபவித்திருக்கிறேன். என்ன ஒரே வித்தியாசம் எங்கள் ஐயா என்னை தடுக்கவில்லை ஆனால் ஒன்னுக்கு இருந்துவிட்டு வந்தபிறகு பிரம்பால் கையில் வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டு “இனிமே வந்தா ஒன்னுக்கு போகணும்னு தமிழ்ல சொல்லு, புரியுதா” என்றார். சில மாதங்களுக்கு முன் அவர் காலாமாகிவிட்டார் என்ற செய்தியை என் பள்ளிவயது தோழன் மூலம் அறிந்து மிகுந்த வருத்தப்படேன்.

கல்லூரியோ அல்லது மேற்படிப்போ முடித்துவிட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்த நாளே நாம் ஆசிரியர் என்பவரை பற்றி சிந்தித்துப் பார்ப்பதில்லை. நாம் வேலை செய்யும் இடத்தில் பலவற்றை கற்கிறோம். ஆனால் அவர்களை ”முன்மாதிரி” என்று கூறிவிடுகிறோம். அதுவும் கொஞ்சகாலத்திற்கே நிற்கிறது. நாம் வளர வளர முன்மாதிரி இல்லாமல் பழைய முன்மாதிரி போய் புதிய முன்மாதிரி ஒருவர் வந்துவிடுவார் நம் வாழ்வில்.

இவ்வளவு ஏன் இன்று நானும் என் நண்பனும் மதிய இடைவேளையில் உணவு முடித்து ஊர்மேய சென்றோம். பாரிஸ் கார்னர். எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். கூட்ட நெரிசல், சாலையோர கடைகள், எதையோ தேடி அவசர அவசரமாக சென்று கொண்டிருக்கும் மனிதர்கள் என்று இவற்றையெல்லாம் கடந்து எங்களால் முடிந்தளவிற்கு மெதுவாக நடந்தோம்..ம்ஹூம்….நடை பயின்றோம் என்பதே சரியான சொல்.

அப்படி பயின்றுக் கொண்டிருந்த போது சாலையோரத்தில் ஒருவர் குப்புறபடுத்திருந்தார். அவரது கைகள் முதுகின் மேல் இருந்தது. கால்கள் உடம்பிற்கு இருபுறமும் கிடந்தன. மதிய வெயில் காட்டன் ஆடை போட்டிருந்த என்னையும் வாட்டியது குடை பிடித்துப் போய்க்கொண்டிருந்த பிற மனிதர்களையும் வதைத்தது. இவர் உடம்பில் சாம்பிளுக்காக ஒரு ட்ராயர் மட்டுமே. ஒரு கோணியின் மீது படுத்திருந்தார். ஒரு சில நொடிகள் என் கண் முன்னே எனக்கு அறிவூட்டி ஆளாக்கிய என் ஆசிரியப்பெருமக்கள் வந்து போனார்கள்.

இங்கே ஆசிரியப்பெருமக்கள் என்று நான் குறிப்பிடுவது இதுவரையில் எனக்கு பல தருணங்களில் பலவாறாக பல விஷயங்களை கற்று கொடுத்த அனைவரையும். இவ்வளவு ஏன் இந்த வாழ்க்கையே ஒரு மிகச் சிறந்த ஆசிரியன் தானே?

கடவுளை அடையக்கூட நமக்கு ஒரு நல்ல ஆசிரியர் தேவைப்படுகிறார். அதற்காக போலியானவர்கள் பிடித்துக் கொண்டு பின்னாளில் போலியோ வந்தது போல இழுத்துக் கொள்ளச் சொல்லவில்லை. நாம் யாரிடம் கற்க வேண்டுமோ, யாரை பின் தொடர வேண்டுமோ அந்த ஆசிரியரை/ஆச்சார்யனை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நம்மிடம் இருக்கிறது. அதை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இந்த ஆசிரியர் தினத்தில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் என் வாழ்வில் இந்த அளவிற்கு உயர உதவியாயிருந்த மேலும் வளர உதவியாக இருக்கப் போகிற அனைத்து ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வார்த்தைகளுக்கும் உயிருண்டு அது நம் ஆழ்மனத்திலிருந்த எண்ணங்களின் பிரதிபலிப்பாக வெளிவரும்போது.

கடைசியாக ஆசிரியர்கள் ஒரு மெழுகைப் போல தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்கள் அறிவென்னும் வெளிச்சத்தை தருகின்றனர். இப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு காதலர் தினத்தை கொண்டாடுவதை போல ஆசிரியர் தினம் கொண்டாடப்படாதது மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயம்.

6 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.