Home » நகைச்சுவை, பொது

காக்கா சுட்ட வடை – மெகா சீரியல்

15 August 2009 6 Comments

நாம் எல்லோரும் நம் வாழ்வில் ஒரு முறையேனும் கேட்ட கதை “காக்கா வடை திருடிய” கதை. இன்றளவும் நம் பெற்றோருக்கு அவர்கள் பெற்றோர் சொல்ல, அது நமக்கு வர, நம்மிடமிருந்து நம் குழந்தைகளுக்கு செல்ல, காலம் ஓடிக்கொண்டே இருந்தாலும், கதை சொல்லும் விதம் மாறினாலும், எவ்வளவோ சிடிக்களும், டிவிடிக்களும் வந்தாலும், இன்னும் பழமை மாறாமல் இருப்பது இந்தக் கதை. பார்த்தீர்களா? “காக்கா வடை சுட்ட கதையை மெகா சீரியல் போல சொல்லப் போகிறேன் என்பதை கூட இவ்வளவு இழுழுழுத்து சொல்கிறேன். மெகா சீரியலின் மகிமையே மகிமை! மகிமையே மகிமை! மகிமை!

மு.கு: இதை படித்துக்குக் கொண்டிருக்கும் போது இடையிடையே கீழ்காணும் வாசகத்தை நினைவுபடுத்திக் கொண்டு ஒரு 13 நிமிடங்கள் இடைவெளி எடுத்துக் கொள்ளவும்.

”சன் மைதா மாவு வழங்கும்
திருக்கொல்வானின் காக்கை சுட்ட வடை
ஒரு சிறிய இடவெளிக்குப் பிறகு…………”

ஒரு ஊர்ல ஒரு காக்கா. அந்த காக்காவோட ஃபாமிலில அம்மா மற்றும் நாலு தங்கச்சி இருந்துச்சாம். நம்ம காக்காதான் இவங்க எல்லோருக்கும் சேர்த்து வடை திருடிக்கொண்டு வரணும். ஆளுக்கொரு வடைய திருடி கொண்டுவந்தாலும், அம்மா காக்கா சதா அழுதுகிட்டேதான் இருக்கும்.

அவள்(அக்கா) தன் சோகங்களையெல்லாம் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு மற்றவர்கள் கண்ணுக்கு தான் மகிழ்ச்சியாகவே இருப்பதாக காண்பித்துக் கொண்டு மற்றவர்களின் உயர்வுக்காக/நலனுக்காகவே மட்டுமே எதையும் செய்யும் தியாகக் காக்கை.

நம்ம அக்கா காக்காவுக்கு பரம எதிரி அடுத்த கூட்டுல இருக்கிற அண்டங்காக்கா தான். என்ன கிரகம்னு அக்கா காக்காவுக்கும் தெரியாது அந்த அண்டங்காக்காவுக்கு தெரியாது. ஆனா எதிரிங்க. ஆனா அண்டங்காக்கா தன்னோட எதிரின்னு தெரியாம ரொம்ப வெகுளிய பழகுது அக்கா அண்ட் ஃபாமிலி. அக்கா காக்காவுக்கு ஒரு சித்திக்காக்கா. சித்திக்காக்கா கொஞசம் வசதியான (மைலாப்பூர் ஏரியா காக்காவ கல்யாணம் பண்ணிக்கிட்டதுனால) காக்கா. அவ்வப்பொழுது திருடி மீந்த வடைய கொண்டுவந்து நம்ம அக்கா ஃபாமிலிக்கு கொடுத்து சந்தோஷப்படும்.

நம்ம அக்கா காக்கா வழக்கம் போல காலையில சீக்கிரம் எழுந்திருச்சி, கூட்டுக்கு தேவையான குச்சிகளை சேகரிச்சு கொடுத்துட்டு, வடை திருட கிளம்பியது.

”நான் வரேன்மா” என்று கிளம்பிய அக்கா காக்காவை அம்மா காக்கா “நில்லுமா, நேத்து உன் சித்திக்காரி வந்து தித்திப்பான ஒரு அதிரசத்தை கொடுத்துட்டு போயிட்டா, அவ திருடும் போது கவனிக்கலையாம். உனக்கும் கொடுக்க சொன்னா. நாந்தான் ஏதோ ஞாபகத்துலயே இருந்துட்டேன். இரு கொண்டு வரேன். ஒரு கடி கடிச்சிட்டு போ” என்று சித்திக்காக்கைக்காக கரைந்தாள்.

இல்லமா, ஏற்கனவே நான் லேட், அங்க பாட்டி கடைய மூடிட்டு போயிடும். இப்ப எல்லாம் நமக்கு போட்டியா சில மனுஷங்களும் வடை திருட ஆரம்பிச்சுட்டாங்க” என்று காலில் முள் குத்தியது போல குதித்தாள்.

என்னடி பெரிய…நான் திருடாத வடையா? நான் திருடாமையா இன்னிக்கி நீயே போய் திருடர அளவுக்கு ஆளாயிருக்கே?

அய்யோ அம்மா என்று தலையில் அடித்துக் கொண்டாலும், அம்மா மீதுள்ள அதீத பாசம் அவள் கோபத்தை கட்டுப்படுத்தியது. “சரி சீக்கிரம் கொண்டுவாம்மா” என்றாள்.

”ஹூம்” என்று தலையசைத்து விட்டு, உள்ளே சென்று அதிங்கிப் போன அதிரசத்தை கொண்டுவந்தாள் அம்மா. அதை தன் மூக்கால் கொத்திக் கொத்தி தின்ன ஆரம்பித்தாள் நம்ம அக்கா காக்கா.

அம்மா அவள் தின்றுக் கொண்டிருக்கும் போதே, ”உனக்கு ஒரு ஜாதகம் பொருந்தி வந்திருக்கு. நம்ம ஜோசியர் கொடுத்திட்டு போனார். பையன் காக்கா திருவல்லிக்கேணி ஏரியாவாம். அங்க பார்த்தசாரதி கோயில், மடம் அது இது நிறைய சத்திரமாம். பையன் வீட்ல சாப்பாட்டுக்கு வரைட்டி ரைஸ் எல்லாம் கூட கிடைக்குமாம். இன்னிக்கி ஜோசியர வர சொல்லியிருக்கேன். என்னிக்கி வர சொல்லட்டும் பையன் வீட்டிலிருந்து உன்ன பார்க்க”

அம்மா, இப்ப எனக்கு கல்யாணத்த பத்தி எந்த யோசனையும் இல்லமா. என் தங்கச்சிங்க ரெண்டு பேரும் திருட ஆரம்பிக்கணும். அவங்கள அண்ணா நகர்லயும், அடையார்லையும் கல்யாணம் கட்டிக் கொடுக்கணும். இதெல்லாம் முடிஞ்ச பிறகுதான் என் கல்யாண பேச்சே” என்று மூக்கால் தன் முதுகை சொரிந்து கொண்டாள்.

என்னடி இப்படி சொல்லற. மூத்த காக்கா நீயிருக்கும் போது அவங்களுக்கு கல்யாணம் பேசின நம்ம காக்கா உலகம் காதுகிட்ட வந்து கரைஞ்சே சாகடிச்சிராதா?. நான் சொல்றத கேளும்….(அக்கா காக்கா அம்மா மூக்கை பொத்தி மேலே பேசவிடாமல்,)

”அம்மா, இந்த விஷயத்துல நான் சொல்றத நீ கேளு. இப்ப வேணாம்னா வேணாம். என்ன விடு. அய்யய்யோ…டைம் ஆயிடிச்சு. அங்க கடை மூடுற நேரம். நான் கிளம்பறேன் மா” என்று பதிலுக்கு காத்திராமால் காற்றோடு காற்றாய் சரேலென பறந்தாள் வடை திருட.

அம்மாவுக்கு அக்கா காக்கை தான் செய்யாத ஒரு கொலைக்காக போலீஸ் காக்கா தன்னை துரத்துகிறது என்று தெரியாது. சொல்லவில்லை. மறைத்துவிட்டாள், சொன்னால் எங்கே அவர்களின் சந்தோஷம் பறிபோய்விடுமோ என்று தன் மனதில் போட்டு பூட்டி வைத்து விட்டாள். முன்பொரு முறை போலீஸ் காக்கை அக்கா காக்கையை தேடி வர, ஏதோ ஒரு காரணத்தை சொல்லி மழுப்பி இருக்கிறாள்.

மழை காரணத்தினால் பழுதாயிருந்த ஒரு விளக்கு கம்பத்தில் ஒரு காக்கை சென்று உட்கார, மின்சாரம் தாக்கி அது இறந்து போக, அந்த சமயத்தில் அங்கே அடுத்த கம்பத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த அக்கா காக்கையின் மீது வடைக்காகத் தான் கொலை செய்ததாக சந்தேகப்பட்டு போலீஸ் காக்கை துரத்திக் கொண்டிருப்பது அவளின் இன்னொரு பக்க துக்கம். இது அந்த எதிரி அண்டங்காக்கையின் வேலைதான் என்று தெரிந்திருந்தும், மற்றவர்கள் மீது இரக்கப்பட்டே பழகிவிட்ட நம் அக்கா காக்கை, அந்த அண்டங்காக்கை தானாகவே திருந்தும், ஒரு நாள் இல்லையேல் ஒரு நாள் நிச்சயமாக திருந்தும் என்று காத்துக்கொண்டிருக்கிறாள்.

எதிர்ச்சையாக எதிரில் தன் தோழியை காண இருவரும் வழியில் கண்ணில் பட்ட மரம் ஒன்றில் அமர்ந்து அளவளாவினார்கள். தோழி திருமணம் என்கிற பெயரில் தனக்கு நடந்த சோகத்தை சொல்ல, சோகத்தின் உச்சிக்கு போன அக்கா காக்கா, சுதாரித்துக் கொண்டும், ”நாம திரும்ப சந்திச்சு பேசுவோம், இப்ப நான் அவசரமா வடை திருட போயிட்டிருக்கேன், நீயும் வேணும்னா வாயேன்” என்றாள்.

இல்லடி, இப்பத்தான் ஒரு இடத்துல திருட ட்ரை பண்ணி, கல்லால அடிச்சு விரட்டிட்டாங்க. நீ கிளம்பு, உனக்கு லேட் ஆயிடப்போகுது என்று சினேகிதி பிரி(பற)ந்தாள்.

ஒரு வழியாக மூலக்கடையில் மூலையில் இருக்கும் பாட்டிக் கடைக்கு ஸ்லோமோஷனில் அக்கா காக்கா வர, அங்கே அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன்னை போலீஸ் பலம் உபயோகித்து கொலை கேஸில் சிக்கவைத்த தன் எதிரி அண்டங்காக்கை அண்டங்காக்கை உட்கார்ந்து இல்லாத நாக்கினால் சப்புக் கொட்டிக் கொண்டிருந்தது.

இப்படி அடுக்கடுக்காக அவளுக்கும் அந்த வடைக்கும் இடையில் இடைவெளி அதிகரித்துக் கொண்டே போவதை நினைத்து வருந்தினாள். தனக்கென்று கிடைக்க இருக்கும் ஒரு வடைக்கும் போட்டி வந்துவிட்டதை எண்ணி தன்னைத்தானே நொந்துகொண்டாள்.

அப்போது அங்கு வந்த இன்னொரு அண்டங்காக்கை, அக்கா காக்கா அழுவதை கண்டு மனமிறங்கி, வானிலிருந்து சுவரிறங்கி வந்து குசலம் விசாரித்தது. அக்கா காக்கா தான் தன் தோழியை கண்டதுவரை அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி அழுதது.

ஒரு வழியாக நண்பன் காக்கை எதிரியை விரட்ட, பாட்டி சுட்ட வடையிலிருந்து ஒரு வடையை நண்பன் காக்கை தட்டி அதை அக்கா காக்காவுக்கு கொடுக்க, அக்கா காக்கா வழக்கம் போல உடனே அந்த வடையை எடுத்துக் கொண்டு கூட்டை நோக்கிப் போகாமால், வடையையும் நண்பனையும் ஒரு மணி நேரத்துக்கு மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

நல்ல வேளையாக சுட்டதை பார்த்த பாட்டி கையிலிருந்த கொம்பை நீட்டி இருவரையும் விரட்ட, இருவரும் பறந்தார்கள்.

முடிவு1: அக்கா காக்காவுக்கு வடையும் கிடைத்தது. அந்த அண்டங்காக்கைக்கும் அவளுக்கும் புதிதாய் ஒரு நட்பும் துளிர்விட்டது.

முடிவு 2: வடையை எடுத்துக் கொண்டு தன் குடும்பத்துக்கு கொடுக்கப் போகிறோம், அது அவர்களுக்கு பசியை ஆற்றி ஆனந்தத்தைத் தரப்போகிறது என்ற அந்த தருணத்தை நினைத்துக் கொண்டே வருகிறாள் அக்கா காக்கா. மனதில் ஆனந்தம் மூக்கில் சிரிப்பு என்று தன்னிலை அறியாமல் பறக்கிறாள். வழக்கமாக எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட இன்று கூடு செல்ல அதிக நேரம் எடுக்கிறது. போகப் போக தூரம் அதிகரித்துக் கொண்டே போகிறது. சற்றும் எதிர்பாராமல் விரட்டி அடிக்கப்பட்ட அந்த எதிரி காக்கை வடையை அபகரிக்க வர, அ(கா)க்காள் வடையை வெற்றிகரமாக எடுத்துச் செல்ல எடுக்கும் அதிரடி முடிவு தான் மீதிக் கதை.

நமது அடுத்த படைப்பான
”சன் மைதா மாவு வழங்கும்
நரி பிடுங்கிய வடை” க்காக காத்திருங்கள்.

6 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.