என் எண்ண சிதறல்கள்

மும்பை பயணத்தினால் எனக்கும் என் வலைதளத்திற்கும் ஏற்பட்ட இடைவெளி என் சிந்திக்கும் திறனை மிகவும் பாதித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இன்னொரு முக்கிய காரணம் அலுவலகப் பணியும் கூட. பகலில் ஒரு வாடிக்கையாளர், அது முடித்து வீடு திரும்பி மற்றொருவர் என்று காவு தீர்ந்து போகிறது. கிட்டத்தட்ட இப்பொழுதெல்லும் அலுவலக்ப்பணிக்கும் விபச்சாரத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறாப்போலே தெரியவில்லை.

இதை வேறு நாம் விரும்பி செய்யவேண்டும் அப்படி செய்தால் நமக்கும் கிடைக்கும் ஆனந்தமே வேறு என்று பல கிழமொழிகள். இவ்வளவு ஏன் அதை நானே பலபேருக்கு
மொழிந்திருக்கிறேன். அப்போது எனக்கு அந்தளவிற்கு வேலை பளு இருந்திருக்காது என்று இப்போது தோன்றுகிறது. என்னதான் பிடித்து ஒரு காரியத்தை செய்தாலும் அதன் பளு குறையும் என்பது இயல்புக்கு மாறான கருத்தாகவே இருக்கிறது.

ஒரு கட்டிட வேலையை செய்யும் சித்தாளை எடுத்துக் கொண்டாலும், அவன் அதை பிடித்தே செய்தாலும், செங்கலின் எடை குறைந்துவிடுமா என்ன? ஒருவேளை அவன் அந்த சுமையயும் சுகமாக அதை செய்யும் போது கருதினாலும் இரவு படுக்கும்போது வரும் உடல் வலி அதே சுகத்தை தராது. நிச்சயமாக நல்ல உறக்கத்தைத் தரும். நம்மையும் மீறி அந்த அலுப்பானது ஒரு நாள் எட்டிப்பார்க்கும். இதுவும் இயல்பு. அதைத் தாண்டி மறுபடியும் தன் வேலையை சுகமாக நினைப்பதும் இயல்பே.

“முள் முடியும்
சிலுவையும்
என்னதான் ஏசுவாகவே இருந்தாலும்
வலிக்காமலா இருந்திருக்கும்”

இயல்பாகவே என்னை பொறுத்தவரை எதை செய்தாலும் என் மனதில் அதை செய்யவேண்டும் என்று தோன்றவேண்டும். இல்லையென்றால் இல்லைதான். இது தப்பாக பலருக்கு தோன்றினாலும் எனக்கென்னவோ ஓவ்வொருவரும் அவரவர் இயல்பிற்கு ஏற்றார்ப்போல்தான் நடந்து கொள்கிறார்கள். அது மற்றவருக்கு என்று வரும்போது இந்த சிந்தனை வருவதில்லை.இதுவும் ஒருவித இயல்பே.

எப்படி முதலை தான் தரையிலும் இருக்க இயலுமோ அதுபோலத்தான் இதுவும். என்னதான் தரையில் இருக்க முடியுமென்றாலும், அது தண்ணீரில் இருப்பதையே மிகவும் விரும்பும். ஏன் அப்படி என்று நாம் கேட்பதில்லை. கேட்டாலும் அது பதில் சொல்லப்போவதில்லை என்பது வேறு. இதுபோலத்தான் மனிதர்களும். ஒரே வித்தியாசம் அத்தனை முதலைகளுமே இப்படித்தான். ஆனால் மனிதர்களான நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயல்பில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த வேறுபட்ட இயல்பில் ஒற்றுமைகளும் உண்டு. உதாரணமாக என் போன்ற மே மாதத்தில் பிறந்தவர்கள் கிட்டத்தட்ட என்னைப் போலவே யோசிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. யோசிப்பது மட்டுமின்றி அவரவர் செய்கையிலும், பிடித்த, பிடிக்காத விஷயங்களிலும் கூட ஒற்றுமை இருக்கும். இதில் ஒரு உதாரணம் சொல்லப்போனால், இயற்கை இயற்கையான பொருட்கள் இவற்றின் மீது அளவுகடந்த பற்றுதல் இருக்கும். இவர்கள் பாதுகாப்பு, தத்துவார்த்தாங்களின் மீது அதீத நாட்டம் இருக்கும்.

ஆனால் எனக்கு மட்டுமின்றி யாருக்குமே புரியாத ஒரு இயல்பு அரசியல்வாதிகளின் இயல்பே. அது எப்படி அவர்கள் அனைவருமே ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்பது மிக ஆச்சர்யப்பட வைக்கும் ஒன்று.

சாஸ்த்திரங்களில் கூட பிராமணன் வாயினால் பிழைக்கவேண்டும், சத்திரியன் நாட்டை காக்கும் பணி செய்யவேண்டும், சூத்திரன் நிலம் உழுதல் மற்றும் இதர வேலைகள் செய்து பிழைக்கவேண்டும் மற்றும் வைசியன் வணிகத்தொழில் புரிந்து வாழவேண்டும் என்று கூறுகிறது. இந்த அரசியல்வாதிகளாப்பட்டவர்கள் இந்த நான்கு பிரிவுகளிலிருந்தும் வந்திருந்தாலும், அவர்கள் இயல்பு அந்த வெள்ளை சட்டை வேட்டி கட்டியவுடன் மாறிவிடுகிறது.

இவர்கள் முதலைகளுடன் ஒத்துப்போவது கவனிக்கத்தக்கது. ஆச்சரியபட வைக்கும் இன்னொரு ஒற்றுமை, முதலை தன் இனமான பிற விலங்குகளை அடித்து தின்று வாழ்கிறதென்றால், நம் அரசியல்வியாதிகள் தன் இனமான பிற மனிதர்களை அடித்து, ஏமாற்றி பிழைக்கிறான்.

இயல்பு எதுவாயிருப்பினும் அது மற்றவர்களை புண்படுத்தாத வரையில் நல்லதே. நான் இப்படித்தான் என்ற முத்திரையில் மற்றவர்களை தொந்தரவு செய்வதோ அல்லது அவர்கள் மனதை புண்படுத்துவதோ சற்றும் நல்லதல்ல. என்னதான் நான் என் காலவரையில்தான் ஒரு வேலையை செய்வேன் என்றாலும் அது மற்றவர்களை பாதிக்குமேயானால் அது சரியல்ல.

இதுபோலவே பல இடங்களில் நம் இயல்பையெல்லாம் காண்பிக்க இயலாது. முக்கியமாக அலுவல்களில். ம்ஹூம்..எனக்கு பத்து மணிக்கு எழுவதுதான் இயல்பு, நான் அலுவலகத்திற்கு கொஞ்சம் தாமதமாகத்தான் வரமுடியும் என்றெல்லாம் சொல்ல முடியாது. மொத்தமாக ஒரு கடிதம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். பிறகு நாம் கஷ்டத்தை அனுபவிக்கும் இயல்புக்கு மாறவேண்டிவந்துவிடும்.

This entry was posted in சிந்தனைகள், பொது and tagged , , , . Bookmark the permalink.

3 Responses to என் எண்ண சிதறல்கள்

 1. ஒழுக்கம்கூட இயல்புதான். இயல்பாக எது செய்தாலும் அது நன்றாகவே இருக்கும். இயல்புக்கு மாறாக செய்வது சாதனையில் அல்ல, சோதனையிலும், வேதனையிலும் முடியும்.

  சுட்டியிருக்கும் கவிதை “முள்முடியும்…” சிந்திக்கத் தூண்டியது.

  • சத்தியமூர்த்தி, அந்த கவிதை என் சொத்தல்ல. எங்கோ எவரோ சொன்னதை ஒருவர் எனக்கு சொல்ல, இங்கே அதை படித்திராதவர்களுக்காக.

   நல்ல கவிதை, என்னையும் கவர்ந்தது.

 2. T.P.Anand says:

  விரும்பி ஒரு வேலை செய்தால் அதன் பாரம் தெரியாது

  வலி தெரிவது உடம்பில், ஆனால் பாரம் மனதை சார்ந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *