Home » சிறுகதை

மணிப்பயல்

17 August 2009 2 Comments

அன்று வழக்கம் போல அலுவலகத்திற்கு அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள் ஹம்ஸத்வனி. செல்லமாக ஹம்ஸா என்று அழைக்கப்படுகிறவள். ஹம்ஸத்வனி ராகத்தை போலவே மென்மையானவள், அழகனாவள். உள்ளிருந்து “இன்று மணியை நீ கூட்டிக்கிட்டு வந்துரு ஹம்ஸா” என்று பாலா குரல் கொடுத்தான்.

மணி ஸ்கூல் சென்று வர ஆட்டோ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று ஆட்டோ வரவில்லை. காலை பாலா அவனை பள்ளியில் கொண்டுவிட்டு வந்துவிட்டான்.

இருவருமே வேலைக்கு செல்வதால் கிரிஜாவை வீட்டோடு வேலைக்காரியாக வைத்திருந்தார்கள். அவள் கிட்டத்தட்ட அந்த குடும்பத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டாள். மணி ஸ்கூல் முடிந்து வீடு திரும்பியதிலிருந்து ஹம்ஸாவோ அல்லது பாலாவோ வரும் வரை, இவளின் பாதுகாப்பில்தான் மணி.

ஹம்ஸா இன்னும் கொஞ்ச நாள் வேலைக்கு போக வேண்டும் என்று பாலா கேட்டுக்கொண்டதால்தான் வேலையை தொடர்கிறாள். வீட்டுக் கடன் கட்டுவதற்கே பாலாவின் முக்கால்வாசி சம்பளம் போயிவிடுவதால், அடுத்த சம்பள உயர்வு வரை போகும்படி கேட்டுக்கொண்டிருக்கிறான்.

”இல்ல பாலா, மந்த் எண்ட்ல க்லோசிங் போயிக்கிட்டு இருக்கு ஆபீஸ்ல. நான் வர்றதுக்கே இன்னிக்கு லேட் ஆகும். ப்ளீஸ் நீ பர்மிஷன் போட்டு போயிட்டு வந்துரேன்”.

“என்ன விளையாடறியா? எங்க ஆபீஸ்லையும் அதேதான். நான் என் சுபீரியர பத்தி உன்கிட்ட சொல்லியிருக்கேன். மறந்துட்டியா? ப்ளீஸ்மா நீயே போயிடு. இன்னும் ரெண்டு நாள்ல பெர்ஃபாமன்ஸ் அப்ரைசல் இருக்கு. அவன் அதுல கைய வெச்சுடுவான் ஹம்ஸா”

ஹம்ஸாவிற்கு இது போன்ற தருணத்தில் தான் தன் வேலை மீது உச்சக்கட்ட வெறுப்பு தட்டும். வேறு வழியில்லாமல் பாலாவிற்கு அலுவலகத்தில் உள்ள நெருக்கடியும் புரிந்து கொண்டவளாய் “சரி நானே போய் மணியை கூட்டி வந்து வீட்ல விட்டுட்டு போயிடறேன்” என்றாள்.

இருவரும் தற்தமது ஆபீஸுக்கு கிளம்பினார்கள். ஹம்ஸா தன் செல்ல ஸ்கூட்டியில் பறந்தாள். அலுவலகப் பணியில் மூழ்கிப் போய்விட்டதால் தான் இன்று மணியை அழைத்துக் கொண்டுவருவதை முழுவதுமாக மறந்துவிட்டிருந்தாள். கடிகாரத்தின் சின்ன முள் ஆறையும் பெரிய முள் மூன்றையும் தொட்டிருந்ததை இன்னமும் அவள் கவனிக்கவும் இல்லை. வழக்கமாக ஆறடித்தால் கிளம்பிவிடும் தன் சக ஊழியர்கள் கூட அன்று பணியில் இருந்ததால், அவளால் நேரமானதை உணரவும் வாய்ப்பில்லாமல் போனது.

ஒரு வழியாக வேலைகளை முடித்துவிட்டு தன் கைக்கடிகாரத்தை பார்த்தபோது “மணி எட்டரையைத் தாண்டிவிட்டிருந்தது. அப்போதுதான் நினைவுக்கு வந்தவளாக “அய்யய்யோ, மணியை கூட்டிக்கிட்டு வரவேயில்லியே” என்று ஆபீஸ் லாபியில் சற்றே உரத்த குரலில் தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.

இந்த மாதக் கடைசி தருணங்களில் இது போன்று பல விஷயங்கள் ஆபீஸ் வேலையில் மறைந்து போய்விடும். இது அவளுக்கு ஒன்றும் புதிதல்ல. சென்ற மாதம் எலக்டிரிக் பில் கட்ட கடைசி தேதியான 28லும் இதே கதைதான். பிறகு கூடுதல் கட்டணமான பெனாலிட்டியும் சேர்த்து கட்ட வேண்டியதாயிற்று. பாலா ஒன்றும் சொல்லவில்லை. போனால் போகிறது என்று சாதாரணமாக விட்டுவிட்டான். ஆனால் இப்போது அவள் மறந்தது மணியை அழைத்து வருவதை.

பாலா இதுவரை எதற்குமே தன்னிடம் கோபப்பட்டது கிடையாது. ஆனால் இதற்கு நிச்சயம் பாலா வெளுத்துக்கட்டப் போகிறான் என்று முடிவே செய்துவிட்டிருந்தாள் ஹம்ஸா.

உடனே பாலாவிற்கு இதை தெரிவிக்க வேண்டும். மணி என்ன ஆயிருப்பான். அங்கேயே காத்துக்கொண்டிருப்பானா அல்லது தட்டுத்தடுமாறி வீடு போய் சேர்ந்திருப்பானா? மனதில் நாளேடுகளில் தினமும் அவள் படிக்கும் சில செய்திகள் வந்து போயின. ஏசியிலும் முழுவதுமாக வேர்த்திருந்தாள். மணி இவர்கள் தத்தெடுத்த செல்லப்பிள்ளை. கல்யாணம் ஆகி 4 வருடங்கள் ஆன பிறகும் குழந்தை ஏதும் பிறக்காததால் தேவையில்லாமல் நேரத்தையும் பணத்தையும் மருத்துவத்தில் வீணாக்காமல் தத்தெடுத்த பிள்ளைதான் மணி.

தன் தலையில் அடித்துக் கொண்டே அலைபேசியில் பாலாவின் நம்பரை திருமணமான 4 வருடங்களில் முதல் முறையாக தேடினாள் ஹம்ஸா. மனதுக்குள் தன்னை திட்டித் தீர்த்தாள். ”எவ்வளவு பெரிய தவறு நான் செய்தது. எப்படி மறந்தேன்?”. மறுபடியும் ஒரு முறை தன் வேலையை வெறுத்தாள். காலை சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று சொல்லியும் இழுத்தடித்த தன் மேலாளரை மனதுக்குள் வசைந்தாள். மறுகணம் அவளின் இயல்பு, “அவர் என்ன செய்வார் பாவம்” என்றது.

பாலா நம்பர் கிடைத்தது, ரிங் டோனில் “அன்பே அன்பே நீ எங்கே” பாடல் ஒலித்தது. அன்பே நம் அன்பான மணியை கூட்டி வரவில்லை என்று எப்படி நான் சொல்லப்போகிறேன். சொன்ன பிறகு இந்த பாடலைப் போலவே இனிக்கும் பாலா தொடர்ந்து இனிப்பானா?

ஹலோ! சொல்லு ஹம்ஸா! என்ன ஏதாவது வாங்கிட்டு வரணுமா?

இல்ல பாலா! சொல்லும்போதே அந்த இரு வார்த்தையில் தன் முழு டென்ஷனையும் கலந்திருந்தாள்

ஹலோ என்னம்மா? மணிப்பயல் என்ன செய்யறான்? சாப்பிட்டானா?

போச்சு, பாலா இப்படி கேட்டவுடன் ஒரு நொடி உறைந்து போனாள் ஹம்ஸா.

”பாலா…நான் இன்னும் ஆபீஸ்ல தான் இருக்கேன். மணியை கூட்டி வர மறந்துட்டேன்” என்று ஒரு மூச்சில் சொல்லி முடித்தாள்

தானும் இன்னும் ஆபீஸில்தான் இருக்கிறோம் என்பதை மறந்து பாலா கத்தியேவிட்டான் “என்ன ஹம்சா சொல்ற? ஸ்கூலுக்கு போன் பண்ணியா? மணி ஒன்பதாயிடுச்சே? ஸ்கூலே மூடியிருக்குமே? என்ன அப்படி உனக்கு மறதி ஹம்ஸா? ச்சே..கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருந்துட்டியே. ஃபோன வை, நான் முதல்ல ஸ்கூலுக்கு ட்ரை பண்றேன் என்று வடுக்கென்று துண்டித்துவிட்டான்.

ஹம்ஸா மேலும் தாமதிக்காமல் அங்கிருந்து நேராக ஸ்கூலுக்கு போய் பார்த்துவிடலாம் என்று கிளம்பிவிட்டாள். மணியின் ஸ்கூல் வீட்டிலுருந்து அதிக தூரம் இல்லை. மூன்று தெருக்கள் தொலைவுதான்.

இதற்கிடையில் பாலா ஸ்கூலுக்கு ஃபோன் செய்து பார்த்து தோல்வியடைந்தான். யாரும் எடுக்கவில்லை. ”ச்சே வாட்ச்மேன் கூட இல்லையா ஃபோன எடுக்க, என்ன ஸ்கூல் இது” என்று ஹம்ஸா செய்த தவறுக்கு ஸ்கூலை வெய்தான். அடுத்த வினாடி ஹம்ஸாவிற்கு ஃபோன் செய்து தான் ஸ்கூலுக்கே போகப்பவதாக கூற முற்படும்போது, ஹம்ஸா பாதி வழியில் இருப்பதாக சொல்ல, ”நானும் அங்கு வருகிறேன்” என்று மானேஜரிடம் “சார் ஒரு பிரச்சனை அவசரமாக கிளம்புகிறேன்” என்று கூறி விட்டு பதிலுக்கு காத்திராமல் தன் வண்டியை நோக்கி ஓடினான்.

ஹம்ஸா ஸ்கூலுக்கு வந்து சேர்ந்துவிட்டாள். அவள் கண்ணில்பட்டவரை அங்கு யாரும் இருப்பதாக தெரியவில்லை. வாட்ச்மேன் பீடியின் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இவர்களின் பதற்றம் தெரிய வாய்ப்பில்லை.

”வாட்ச்மேன்! இங்க எங்க பையன் இருந்தானா?”

”எந்தப் பையனும் இல்லியேமா? பேரு இன்னாமா?”

”ஆஹ்..மணி, எல்கேஜி…பார்த்திங்களா. ஸ்கூல் முடிஞ்சு வெயிட் பண்ண சொல்லியிருந்தோம்”

”இஸ்கூல் முடிஞ்சு ரொம்ப நேரம் ஆவுதேம்மா. அல்லாரும் போயிட்டாங்களே. ஆரையும் பார்க்கலியே நான்”

ஹம்ஸாவின் நாடித்துடிப்பு நின்றுவிடும் நிலையில் இருந்தது. சரேலென அங்கு பாலா வந்து விஷயத்தை அறிந்தான். என்ன செய்வதென்று புரியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பாலாவின் கண்களில் ஆத்திரமும், மணியை காணவில்லை என்ற சோகமும் ஒரு சேர தெரிந்தது. ஏதோ தோன்றியவனாக வீட்டிற்கு ஃபோன் செய்து பார்க்கச் சொன்னான். அவர்களின் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் தொலைபேசி பிஸியாக இருப்பதாக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மைய பெண்மணி இனிமையாக சொன்னது, ஹம்ஸாவின் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. மறுபடியும் தொடர்பு கொள்ள, மறுபடியும் அதே பிஸி.

”லைன் கிடைக்கல பாலா. பிஸியாயிருக்கு”

பாலாவின் ப்ரெஷர் உச்சத்தை தொட்டிருப்பதற்கான அத்தனை அங்க அடையாளங்களும் அவன் முகத்தில் பளிச். ”என்ன எழவ பண்ணிக்கிட்டுருக்கா அந்த கிரிஜா? ஏன் ஃபோன் பிஸி? திரும்ப ட்ரை பண்ணு…

இல்ல பாலா இன்னும் பிஸியாத்தான் இருக்கு. எனக்கென்னவோ பயமா இருக்கு பாலா. பெட்டர் நாம போலீஸுக்கு போயிடலாம்.

பாலாவுக்கும் அதுதான் சரியென்று தோன்றியது.

”என்ன மன்னிச்சிடு பாலா. நான் வேணும்னே பண்ணல. ஐ ஆம் சாரி”

”இப்போ அதுக்கெல்லாம் நேரமில்லை. முதலில் போலீஸிடம் புகார் செய்ய வேண்டும். உன் வண்டியை எடுத்துட்டு நம்ம வீட்டுக்கு போ. நான் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய் பார்த்துட்டு ஒரு கம்ப்ளைய்ண்ட் கொடுத்திட்டு வரேன்”.

”நானும் வரேனே பாலா”.

”இல்ல ஹம்ஸா நீ வீட்டுக்கு போ..சொன்னா கேளு…”

இருவரும் அவரவர் வண்டியியை ஸ்டார்ட் செய்ய, பாலாவின் அலைபேசி ஒலித்தது.

ஹம்ஸாவின் கற்பனை குதிரை முடிவே செய்துவிட்டது. ”என் மகன் கடத்தப்பட்டு விட்டான்” என்று தனக்குள்ளேயே கூறிக்கொண்டாள்.

ஃபோனை எடுத்த பாலாவின் முகத்தில் குழப்பமும் நிலவியது. பயம் அதிகரித்தது. அதில் வந்த நம்பர் அவனுக்கு பரிச்சயமில்லாதது….

ஹலோ!…..ஹலோ!!

முடிவு 1(கதாசிரியர்): எதிர்முனையில் தன் அம்மாவின் குரல். பாலாவிற்கு அம்மாவிடம் மணி காணாமல் போய்விட்டதை சொல்லலாமா வேண்டாமா என்ற யோசனை. சொல்லிவிட முடிவெடுத்து..ஆரம்பித்தான். “அம்மா, மணி….”

அவன் ஆரம்பித்த உடனே அம்மா குறுக்கிட்டாள் “ஆமாண்டா பாலா. குழந்தைய பார்த்து ஒரு மாசம் ஆயிடுச்சி. அதான் நான் மதியம் வந்தேன். உன் நம்பரும் ஹம்ஸா நம்பரும் மதியம் வந்தவுடனே போட்டுப் பார்த்தேன். போகலை. மணிய நானே உன்கிட்ட கூட சொல்லாம ஸ்கூல்லேர்ந்து நானே கூட்டிக்கிட்டு வந்துட்டேன். சரின்னு மணிய கூட்டிகிட்டு சாயங்காலமா பீச்சு பக்கம் வந்தேன். தேடுவீங்களேன்னு ஃபோன் பண்ணேன். என்னடா வீட்டுக்கு வந்துட்டியா? ஹம்ஸா வந்துட்டாளா?

பாலா நிம்மதி பெருமூச்சு விட்டான்.

”என்னம்மா நீ? இப்படி பண்ணிட்டே. மணிய காணும்னு நாங்க இங்க பதறிப்போயிட்டோம் தெரியுமா? நீ உடனே கிளம்பி வாம்மா” என்று ஃபோனை வைத்தான் .

உரையாடலிலேயே புரிந்துகொண்டவளாக போன உயிர் திரும்பி வந்த ஹம்ஸா சந்தோஷத்தின் எல்லையில் பாலாவை கட்டியணைத்து முத்தமிட்டாள்.

****************************************************************************************************************************************************************************

முடிவு 2(சக பதிவர் சத்தியமூர்த்தி): போனில் இருந்த எண் அவனுக்கு பரிச்சயமில்லாதது. பாலா நிலைகுலைந்தான். ஒருவேளை கடத்தல் பார்ட்டியோ?

அந்தப்புறம் குரல் “மணிய தேடறீங்களா?” கவலைப்படாதீங்க பத்திரமா இருக்கான்”.

“ஹலோ! யாரு நீங்க்? உங்களுக்கு என்ன வேணும்? எங்க பையன் எங்க?”

“அவசரப்படாதீங்க தம்பி. நான் விவேகானந்தா ஆஸ்ரமத்த சேர்ந்தவன். அங்கதானே நீங்க மணிய தத்தெடுத்தீங்க ?”

“ஆமாம்! அதுக்கென்ன இப்போ”

”நாங்க பொதுவா தத்து எடுத்தவங்க குழந்தைய எப்படி பாத்துக்கறாங்கன்னு சில வருஷங்களுக்கு ஒருமுறை பார்ப்பது வழக்கம். இன்னிக்கும் அப்படிதான் உங்க வீட்டுக்கு போனேன். பையன் ஸ்கூல் போயிருக்கறதா சொன்னாங்க. ஸ்கூல் விடற வரைக்கும் காத்திருந்து உங்கள பாத்து பேசலாம்னு இருந்தேன். ஆனா ரொம்ப நேரம் ஆகியும் யாரும் வரததால அவன எங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்திருக்கேன். ஸ்கூல் டைரில உங்க நம்பர பாத்து போன் செய்யறேன். சீக்கிரமா வந்தீங்கன்னா கூட்டிக்கிட்டு போயிடலாம்”

“அடுத்தமுறை தவற விட்டுடாதீங்க தம்பி” என்றார்.

பாலா, ஹம்ஸாவை பார்த்து அன்று முதல்முறையாக சிரித்தான்
==============================================================================
முடிவ ஒரு ரெண்டு நாளைக்கு அப்புறம் போடறேன். அதுவரைக்கும் நீங்க உங்களுக்கு தோன்ற முடிவ கருத்துரையில போடுங்க. ஒரு வேளை உங்களதும் என்னது ஒத்துப் போனாலோ அல்லது உங்க முடிவு என் முடிவோட நல்லா இருந்தாலோ…ரெண்டுத்தையும் சேர்த்து போடறேன்.

2 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.