Home » இந்திய சினிமா, சினிமா இசை, தமிழ் சினிமா

கமலின் உன்னைப் போல் ஒருவன்

24 August 2009 18 Comments

எவ்வளவு பேர் வந்தாலும் என்ன வேஷம் கட்டினாலும் உன்னைப் போல வருமான்னு தான் கேட்கத் தோணுது நம்ம உலக நாயகனை பார்த்தால். ”எனக்குள் ஒருவன்” படத்துல நேபாளி வேஷம் போட்டு அந்தக் காலத்திலேயே கேரக்டருக்கு ஏற்றார்ப்போலே கண்ணை இழுத்துக் கொண்டு, குரலை மாற்றிப் பேசி அட்டகாசம் பண்ணினார் கமல். அது மட்டுமா ராஜபார்வையில் ஓவியத்திலிருக்கும் நிழல் உருவங்கள் நிஜமாக உருவெடுத்ததை கண்டோம். சில காரக்டர் கமல் தைரியமா எடுத்து பண்ணியது போல் வேறு எந்த பெரிய ஹீரோவும் பண்ணியதில்லை(உதாரணம்: அன்பே சிவம்,அது கூட ஏதோ ஆங்கிலப்படம் காப்பியாம்).
விக்ரம் படத்தில் செய்யாத புதுமைகளா?

தொழில்நுட்பமும் மேக்கப் கலையும் அவ்வளவாக வளராத அந்த சமயத்துலேயே அப்படி ஜமாய்த்த போது, இப்போது இருக்கும் சூழலில், தற்போது தசாவதாரம் வெற்றியடைந்திருக்கும் நிலையில் “உன்னைப் போல் ஒருவன்” வெள்ளித்திரைக்கும் மிக அருகில். கேட்க வேண்டுமா?

என்னதான் கமல் பெரிய நாயகனாக இருந்தாலும், தசாவதானியாக இருந்தாலும் அவர் மேலும் ஒரு பழி சொல் உண்டு. அவர் விரும்பி எடுத்த ஆளவந்தான் சரியாக ஓடாமல் போக, தயாரிப்பாளர் தடாலடியாக கமல் மீது பழியை போட மீதிக் கதை நாம் அனைவருமே அறிந்ததுதானே.

இப்பொழுது அதே தயாரிப்பாளர் புதிதாக வெளிவந்திருக்கும் கந்தசாமிக்கு கண்டபடி பணத்தை வாரி இறைத்திருப்பதும், போட்ட காசு வருமா இல்லை (மறுபடி) தலையில் துண்டா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

கமல் நடித்து மற்றொருவர் தயாரிக்கும் படங்களின் மீது இந்த ஒரு குற்றச்சாட்டு இருந்தாலும், அவரே தயாரிக்கும் படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு இருப்பதென்பது இன்னொரு பக்க உண்மை. அது ராஜப்பார்வையாகட்டும் அல்லது அபூர்வ சகோதரர்கள் ஆகட்டும். ராஜபார்வை, நளதமயந்தி மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்கள் படு தோல்வி அடைந்தாலும், அவை அனைத்துமே நல்லதொரு படைப்பாகவே பேசப்பட்டது.

கமல் மக்களின் நாடித்துடிப்பை படிக்கும் திறன் படைத்தவரோ இல்லையோ, நிச்சயமாக படத்துக்கு நல்ல துடிப்பை தரும் கதைகளை தேர்ந்தெடுப்பதில் வல்லவரே. இப்போது அவர் பிடித்திருக்கும் துடிப்பு வட இந்தியாவில் தயாரிக்கப்பட்டு படு அமர்க்களமாக ஓடிய “தி வெட்னஸ்டே” என்ற படத்தை தமிழ், தெலுங்கு என்று இருமொழிகளிலும் ரீ-மேக் செய்திருக்கிறார்.

கமலின் சில படங்களில் நன்கு கவனித்தால் உரையாடல்கள் மிகப்பிரமாதமாக இருக்கும். ஆங்கிலப் படங்களைப் போல எடுக்கிறோம், அவர்களின் அளவிற்கு கிட்டத்தட்ட வளர்ந்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளும் உரிமை நம் உலக நாயகனைக்கே உண்டு. கமல் ஆங்கிலோ-விஷ்யங்களை மட்டுமே நம்பாமல் , தொழில்நுட்பத்திலும், நடிப்பிலும் பல புதிய பரிமாணங்களை பிரயோகித்து தமிழ் சினிமாவை ஆங்கிலத் தரத்துக்கு இட்டுச்செல்ல துடிப்பவர். இந்த விஷயத்தில் சேர்த்துக் கொள்ளப்படவேண்டியவர்கள் மணிரத்னம், சங்கர்.

உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள் இரண்டே இரண்டு போதுமே கமலின் திறனை சொல்ல. அது அவர் எழுதியதோ இல்லையோ அவற்றில் நிச்சயம் அவரின் பங்கு ஏராளம் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. குருதிப்புனலில் கமலுக்கும் நாசருக்கும் இடையே நடக்கும் விவாதமும், அன்பே சிவம் படத்தில் கமலுக்கும் மாதவனுக்கும் நடக்கும் உரையாடலும் என் மனதைவிட்டு இன்னும் அகலாதவை…உங்களுக்கும் தானே?

அன்பே சிவம், குருதிப்புனல் (ஹீரோ தோக்கறது), மகாநதி, வறுமையின் நிறம் சிவப்பு எல்லாவற்றிலேயும் ஹீரோ ஜெயிப்பது வேறு வகையில். வயர் கட்டி பறந்து அடித்து அல்ல. ஒரு குத்துல வில்லன் பறந்துபோய் எதிர் பில்டிங்ல இடிச்சு மின்சாரப்பொறி பறக்க இரததம் கக்கி விழுந்து அல்ல. சமீபகாலமாக, கமல் படத்தில் இன்னொரு வித்தியாசம், பாடல்கள். பாடல்களுக்காக கதையை நிறுத்தாத பாடல் சூழல் இருக்கும் (உதாரணம், தசாவதாரம்)

இந்த “உன்னைப் போல் ஒருவன்”ம் கூட அந்த ரகமே. படத்தில் முஸ்லிம் தீவிரவாதியாக உருவெடுக்கிறார் கமல். ஒரு அதிரடிக் காலையில் தன் சக தீவிரவாதிகள் நால்வரை உடனடியாக விடுவிக்கச் சொல்லி கமிஷ்னருக்கு கட்டளையிடுகிறார். தவறினால் நகரமே குண்டு வெடிப்பில் நரகமாகிவிடுமென்று பயமுறுத்துகிறார்.

அந்த கமிஷ்னர் வேறுயாருமல்ல நம் அபிமான, கமலுக்கு இணையாக (நடிப்பில் மட்டும்) பேசப்படும் நம் அன்பர் மோகன்லால். மோகன்லாலின் நடிப்பாற்றலை பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் வாங்கிய பல தேசிய விருதுகளே அதற்கு சான்று. மோகன்லால் ஒரு நேர்மையான, நாட்டை நேசிக்கும் கமிஷ்னர். மக்களின் உயிரை காப்பாற்ற துடிக்கிறார். கமல் தன் திருவிளையாடல்களை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பி மோகன்லாலுக்கு மேலும் சிக்கலை அதிகப்படுத்துகிறார்.

தான் உண்மையாகவே நகரம் முழுவதும் குண்டு வைத்திருப்பதை நிரூபிக்க ஒரு போலீஸ் நிலையத்திலேயே ஒரு குண்டை வைக்கிறார். இவர்கள் இருவருக்கும் நடக்கும் உரையாடலே ”உன்னைப் போல் ஒருவன்”. படத்தின் முடிவு தமிழ்த் திரையுலகம் இதுவரை கண்டிராத ஒன்று.

நடிப்பில் இயல்பை காட்டுவதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்லர். அவர்கள் இருவருக்கும் இந்தப் படம் செம வேட்டையென்றால் நமக்கு வேட்டையோ வேட்டைதான்.

நம் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க படத்திற்கு ஸ்ருதிஹாசனின் இசையமைத்திருப்பது. தாய் எட்டடி பாய்ந்தார். மகள் என்பதடி பாயப்போகிறார். ”சுஜாதா” பாஷையில் சொல்லப்போனால் “தந்தை ஒரு எம்பி (MB) பாய்ந்தால் மகள் 1 ஜீபி (GB) பாயப்போகிறார்.

உரையாடலும் க்ளைமாக்ஸ் மட்டுமல்ல “உன்னைப் போல் ஒருவன்”. அதனூடே நம் ரத்தத்தில் சூட்டைக் கிளப்பி நம்மை சீட்டின் நுனிக்கே கொண்டுவந்துவிடும் விறுவிறுப்பும்தான். ரீமேக் படத்த ப்ரேமுக்கு ப்ரேம் அப்படியே எடுக்காம புதுசா செய்யறது கமல் வழக்கம். அதுனால இந்த படத்திலும் கதை களத்தை மட்டும் வைத்துக்கொண்டு வேட்டையாடி விளையாடியிருப்பார் என்று நம்பலாம்.

அதற்காக ”கந்தசாமியும்” உங்களை சீட்டின் நுனிக்கு கொண்டவந்தது என்று ஜோக் அடிக்க கூடாது. அது சீட்டின் நுனிக்கு கொண்டுவந்து வீட்டின் முக்கப்பில் விட்டுவிடும் ஒன்று.

செப்டம்பர் பதி்னெட்டுக்கு நான் காத்திருக்கிறேன்..அப்ப நீங்க…?

18 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.