சென்னை டூ மும்பை – பாகம் 5(கடைசி)

இந்த பாகத்தில் என்னுடைய வாடிக்கையாளர் அலுவகத்தில் அனுபவங்களையும், நான் மீண்டும் குறுகிய காலகட்டத்திற்கு மும்பை சென்று வந்ததையும் சொல்லி இத்துடன் இந்த செ.டூ.மு வை முடித்துக்கொள்கிறேன். நிறைய விஷயங்களை பற்றி எழுதவேண்டுமாதலால் இந்த முடிவு. அது மட்டுமில்லாமல் ஒரே விஷயத்தில் எழுதி கொண்டிருந்தால் எனக்கே போரடிக்கிறது, படிக்கும் உங்களுக்கு? தன்னைப் போல பிறரையும் நினை என்ற பழைய மொழி ஒன்று நினைவுக்கு வந்ததே இந்த முடிவுக்கு முக்கிய காரணம்.

இந்த பிரயாணங்கள் அதில் கிடைத்த கஷ்டமான இருந்தும் சுவாரஸ்யமான அனுபவங்களை தவிர்த்து, அலுவகத்தில் நாம் பொதுவாக எப்படி நடந்துகொள்கிறோம் என்பதே இந்த பாகத்தின் முக்கிய அம்சம். இது தவிர அப்படியொன்றும் பெரிதாக அனுபவம் கிடைத்துவிட போவதில்லை.

முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரையிலும் நாம் அதிகம் விஷயம் தெரிந்தவர்கள் என்ற பொய்யான கூற்றை உண்மையாக்க நாம் படும்பாடு இந்த உத்தியோகத்தில் இருப்பவருக்கே தெரியும். அதிலும் நம் கதையில் கஷ்டத்தை இன்னும் கூடுதலாக்க நம் மேலாளர் முதல் நாளே தூக்கி கோபுரத்தில் வைத்துவிட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்துவிட்டார். அவர் சொன்னாலும் சொன்னார் வாடிக்கையாளர் அலுவகத்தில் மூச்சா போவதென்றால் கூட நம்மை ஒருவார்த்தை கேட்டுவிட்டுத்தான் போகவேண்டும் என்ற ரேஞ்சுக்கு நடந்து கொண்டார்கள்.

முதல் நாளும் அதுவுமாக கையில் ஒரு கத்தை பேப்பரை கொடுத்து இதில் உள்ள அனைத்தும் எங்கள் பிரச்சனை என்றார்கள். “எங்கள்” என்றால் அவர்களின் சொந்த பங்குச்சந்தை நஷ்டத்தை பற்றியல்ல, இது அவர்கள் அலுவலகத்தில் உபயோகிக்கும் மென்பொருளைப் பற்றியது. இது சரியில்லை என்று ஒரு 20, அதைப்பற்றி எங்களுக்கு தெரியவே தெரியாது என்று ஒரு 20, இதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்றும் ஒரு 20 என்று பக்கம் பக்கமாக கையில் திணித்துவிட்டு இனி எங்கள் வாழ்வு உங்கள் கையில் என்று சொல்லும் ஒரு பார்வையையும் விட்டுச்சென்றார்கள். சரி என்னதான் கொடுத்திருக்கிறார்கள் என்று படித்து புரிந்துகொள்ளவே ஒரு மூன்று நாட்கள் தேவைப்பட்டது.

உங்கள் சிஸ்டத்தை கொஞ்சம் பார்க்கவேண்டும், பார்த்து போனவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்து புரிந்துகொள்ளவேண்டும்.அதன் பிறகே நான் வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்று இரு நாட்கள். ஆகமொத்தம் கொடுத்த 20 நாட்களில் ஐந்து அப்படியே கழிந்துவிடும். மீதம் இருப்பது 15, அதில் சனி, ஞாயிறுகளை அகற்றிவிட்டு பார்த்தால் மிச்சம் சொச்சத்தைவிட கம்மியாகத்தான் இருக்கும்.

இந்த மீதி இருக்கும் நாட்களில் அவர்கள் பிரச்சனை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக தீர்த்துவைக்க வேண்டுமென்பது யதார்த்தத்துக்கு மீறிய எதிர்ப்பார்ப்பு. இது அவர்களுக்கும் தெரியும். சரி ஆகட்டும் அதற்கென்ன, பார்த்துவிட்டால் போகிறது என்று நாமும் அதே யதா.தை மீறிய பதிலை உதிர்க்கவேண்டியிருந்தது. சட்டென்று படித்தோமா வேலையை ஆரம்பித்தோமா சரி செய்தோமா என்பது இங்கு முடியாது. அவர்கள் அவரவர் ஆங்கிலத்தில் சிக்கல்களை எழுதிவைத்திருப்பர். நாம் கேட்டுத் தெரிந்துகொண்ட பின்னரே ப.வே.ஆ.ச.செய்தோமா….

எனக்கு ஃபைனான்சியல்ஸ் தெரிந்த அளவுக்கு டிஸ்ட்ரிப்யூஷன்ஸ் தெரியாது. ஆனால் அது இரண்டுமே என் பொறுப்பில். ஆழம் பார்த்து காலைவிடு என்பார்கள். நான் ஒன்று கேட்கிறேன், ஆழம் பார்த்தால் மட்டும் போதுமா? ஆழம் என்று தெரிந்தும் காலைவிடவேண்டுமென்றால், நீந்தத் தெரிந்துகொள் என்று ஏன் யாரும் பழமொழியை உதிர்க்கவில்லை என்று தெரியவில்லை. அப்படி ஏதும் இருந்தால் தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள் (கருத்துரையில்). எனக்கு இதெல்லாம் வராது, தெரியாது என்று பொறுப்பை நிராகரிக்க நாட்டின் பொருளாதாரமும் ஒத்துழைக்கவில்லை. இருக்கும் வேலையில் நீடித்திருந்தால் போதுமானதாக இருக்கும் இந்த சமயத்தில் நாம் இதெல்லாம் பேசமுடியாது. சரி பார்த்துக்கொள்ளலாம் என்று ஒரு அசட்டு தைரியத்தில்தான் இறங்கினேன்.

கண்ணை கட்டிக்கொண்டு காட்டில் இறங்க வேண்டும் என்று தெரிந்த பிறகு, அங்கேயிருந்து எப்படி வெளியில் வரவேண்டும் என்பதில்தான் நம் சிந்தனை இருக்கவேண்டுமே ஒழிய, நாம் ஏன் இங்கு வந்தோம், எப்படி வந்தோம், எதற்காக என்ற ஆராய்ச்சியெல்லாம் வீண்.

என் அலுவலகத் தோழர்கள் சிலர் உதவியுடனும், என் அனுபவத்தினாலும் என்னால் அந்த காட்டில் இருந்து வெற்றிகரமாக வெளியே வரமுடிந்தது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் ஏர்டெல் சேவை மற்றும் அதன் சிக்னல்.

வாடிக்கையாளர் அலுவலகத்தில் ஏர்டெல் சிக்னல் எடுக்காது, வேலை முடித்து விருந்தினர் இல்லத்திற்கு சென்றால் அங்கேயும் அதே கதை. நான் மொபைல் உபயோகிக்க வேண்டுமென்றால் நடுரோட்டிற்கு வரவேண்டும். என் மனைவியுடனோ அல்லது அம்மாவிடமோ ஒவ்வொரு நாளும் காலை அலுவலகம் செல்வதற்கு முன் ஒருமுறை, வேலை முடித்துவிட்டு போகும் போது ஒரு முறை என்று அதிகபட்சமாக இரு முறை மட்டுமே பேச முடிந்தது அசௌகரியமே.

எனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் என் நண்பர்களை தொடர்புகொள்ள வேண்டுமென்றாலும் கஷ்டம்தான். ஏர்டெல்லின் புண்ணியத்தில், நான் நன்றாக சம்பாத்தித்து சௌக்கியமாக இருந்தாலும், அவ்வப்பொழுது நடுரோட்டிற்கு வந்து போனேன்.

அப்படி இப்படியென்று ஒருவழியாக நூற்றுக்கணக்கில் இருந்த சிக்கல்களின் எண்ணிக்கையை 30க்கு கொண்டுவந்துவிட்டேன். ஒரு விதத்தில் ஏர்டெல் எனக்கு உதவியிருக்கிறது. முதலில் என்னால் முடிந்தவரை சில சிக்கல்களை களைய முற்படும்போது அது முடியாமல் போக, என் ஏர்டெலும் என் நண்பர்களிடமிருந்து என்னை தள்ளிவைத்து உதவாமல் போக, கடைசியில் எனக்கு உதவியது என் தன்னம்பிக்கையே. ஒரு வழியாக எப்படியோ அதை படித்து, இதை பிடித்து அந்தச் சிக்கலகளையும் களந்தேன். இதில் இன்னொருமுறை நான் கற்றுக்கொண்டது “உன் மீது நம்பிக்கை வைத்து எடுத்த காரியத்தை முடித்தே தீரவேண்டும் என்ற எண்ணம் கொண்டு முயற்சித்தால், முடியாதது / தெரியாதது என்று எதுமில்லை” என்பது.

இவ்வுலகத்தில் தெரியாதது என்று எதுவுமில்லை. தெரிந்து கொள்ளாதது அல்லது தெரிந்து கொள்ள முயற்சிக்காதது அல்லது தேவையில்லை என்று தள்ளிவைத்தது என்று பல இருக்கிறது. எனக்கு வழக்கம் போல இந்த ப்ராஜக்ட்டும் எனக்கு புதிதாக சிலவற்றை கற்றுக்கொடுத்தது. இந்த தருணத்தில் எனக்கு அவ்வப்போது உதவிய என் நண்பர்களை நினைவு கூறுவது என் கடமை.

என் மேலாளரிடம் என்னைப் பற்றி வாடிக்கையாளர் உயவர்வாக பேசியது எனக்கு ஊக்கத்தை அளித்தது. நீண்ட நாளைக்கு பிறகு இன்னொரு முறை என் வேலை அங்கீகரிக்கப்பட்டது மகிழ்ச்சியை அளித்தது. பணியில் ஒரு கட்டத்திற்கு பிறகு சம்பளம் பெரிதாக தெரிவதில்லை. நாம் செய்த வேலை நமக்கே திருப்திகரமாக இருக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி சம்பளத்திலோ அல்லது பதவி உயர்விலோ கிடைப்பதில்லை. அப்படி ஒரு வேலையை செய்யும் போது நாம் அந்த வேலையை நம்மையும் அறியாமல் சிறப்பாக செய்கிறோம். இது உண்மை மற்றும் யதார்த்தம். ஆனால் பலர் இதை புரிந்து கொள்வதில்லை. அதற்காக சம்பளம் வாங்காமல் வேலை பாருங்கள் என்று சொல்ல வரவில்லை. அதுவே ஊக்கமாக இருக்கக் கூடாது என்கிறேன்.

காலை சுமார் ஒன்பது ஒன்பதரைக்கு அலுவலகம் சென்றால் இரவு வீடு திரும்ப எட்டரையிலிருந்து ஒன்பதாகிவிடும். இடைப்பட்ட நேரத்திலும் கூட சாட் உபயோகிப்பதோ அல்லது அலைபேசுவதோ நினைவில் கூட வரவில்லை எனக்கு. இப்படியேதான் என் இருபது நாட்களும் சென்றன.

வாடிக்கையாளரிடம் என்ன சொல்லியிருக்கிறோம், நம் வேலை என்ன என்ற எதுவுமே ”சொல்கிறேன்”, ”சொல்கிறேன்” என்று நான் அங்கு செல்லும் வரை சொல்லமலேயே இருந்தாலும், எல்லாம் நல்லதுக்கே என்ற சொல் உண்மையானது போல இன்று எனக்கு இதுவும் தெரியும் என்று சொல்லும் அளவுக்கு இந்த ப்ராஜக்ட் உதவியாகத்தான் இருந்தது.

இப்பொழுது என் இடத்தில் நான் தேர்வு செயத ஒருவர் வந்திருக்கிறார். இருந்தும் வாடிக்கையாளர்கள் என்னை துரத்திக் கொண்டிருப்பது கொஞ்சம் பெருமையாக இருந்தாலும், அதிலிருந்து விலகி நான் அடுத்த ப்ராஜக்ட் செல்லவேண்டியிருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக என்னை அவர்களிடமிருந்து விலக்கி, புதிதாக சேர்ந்தவரிடம் மொத்தமாக ஒப்படைப்பதும் என் கடமையாகிறது. இப்பொழுது நான் சென்னையில் இருந்தாலும், என்னால் முடிந்தவரை அந்த வாடிக்கையாளருக்கு உதவுகிறேன் அதே சமயத்தில் இனி புதிதாக வந்தவரே உங்களுக்காக என்றும் புரியவைத்துக் கொண்டிருக்கிறேன்.

சென்னையிலிருந்து மும்பை சென்ற இந்த பாகங்கள் இப்போது மேலே உள்ள வரியில் மீண்டும் மும்பையிலிருந்து சென்னையும் வந்துவிட்டது, இந்த அனுபவமும் முடிவுறுகிறது.

பொறுமையாக படித்து என் அனுபவங்களை ரசித்ததற்கு மிக்க நன்றி. மற்றொரு பதிவில் மீண்டும் சந்திப்போம்.

This entry was posted in அனுபவம் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to சென்னை டூ மும்பை – பாகம் 5(கடைசி)

 1. T.P.Anand says:

  Completing things on your own with your own efforts is always satisfying.

  “Unnaal midiyum thambi thambi” song came to my mind when i read the para on bringing down the issues to 30 and then trying to sort out issues on your own.

  Well done..

  • நன்றி ஆனந்த். இதை பலர் படித்து ஊக்கம் பெறுவதே இந்த கடைசி பாகத்தின் நோக்கம். எதுவும் புதிதும் இல்லை நிரந்தரமும் இல்லை.

   இப்பொழுது உங்களுக்கு “நிலை மாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்” பாடல் நினைவுக்கு வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல…. :-)

 2. சுயமாக சிந்தித்து, தடைகளை தாண்டி பெறுகின்ற வெற்றி தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையில்லை.

  இதை இந்த பயணக்கட்டுரை அழகாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

  மேலே தூக்கி பிடியுங்கள். (கீப் இட் அப்)

  • நன்றி சத்தியமூர்த்தி. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அடுத்ததா ஒரு நகைச்சுவை பதிவு போடலாமான்னு யோசிக்கறேன்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *