சென்னை டூ மும்பை – பாகம் 4

ஒரு வழியாக டாக்ஸிகள் அணிவகுத்து நின்ற இடம் கண்ணுக்கு தெரிய…ஆனந்தம் அடைந்தேன். போய் கூப்பிட்டேன். ஒருத்தரும் வருகிறபாடில்லை. ”அடடா இன்னும் முடியலயா” என்று மனதுக்குள் புலம்பினேன்.

பதிலெல்லாம் முரட்டுத்தனமாகத்தான் வந்தது டாக்ஸி ஓட்டுனர்களிடமிருந்து. ஒருவர் மட்டும் அதே முரட்டுத்தனத்துடன் வரும் ஆனா வராது என்று ”என்னத்த” கண்ணைய்யா ரேஞ்சில் சம்மதித்தார். எனக்கு இன்பத்தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது. அப்படியன்ன பெரிய…என்று படித்துவிட்டு புலம்புபவர்கள் ஒரு முறை மும்பையில் அனுபவித்தால் புரியும். இதற்கு முன்பு ஒரு முறை மஸ்கட் பயணத்தின் போது சுமார் 2 க்ளோமீட்ரு மட்ட மத்தியான மிடில் ஈஸ்ட் வெய்யிலில் நடந்த அனுபவம் இருக்கிறது. வருகிறேன்..(இந்தியில்தான்) ஆனால் பாந்தரா வரைதான் வருவேன் அதற்குமேல் வேறு வண்டி பிடித்து செல்லவேண்டும் என்று அக்ரிமெண்ட் மற்றும் மீட்டர் போட்டு ஏற்றிக்கொண்டார். அங்கிருந்து கிளம்பினால் போதுமென்ற மனநிலையில் இருந்ததால் “சரி” என்று சைகையில் ஒப்புதல் தெரிவித்த பின்னர் டாக்ஸி கிளம்பியது.

இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும். நம் ஊரைப்போல் அல்லாமல் மும்பையில் ஆட்டோ ஓட்டுனர்களும் டாக்ஸி டிரைவர்களும் எங்கே போகவேண்டும் என்று கேட்ட மறுவினாடி மீட்டரை போடுகிறார்கள். சென்னையில் இருப்பது போன்று ஆட்டோ அராஜகம் அங்கு இல்லாதது இரு நகரங்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசம். நம்மைப் போன்ற நடுத்தரர்களுக்கு மட்டுமே இந்த வித்தியாசம் தெரியும். உயர்மட்டங்களுக்கு தெரிந்த ஒரு வித்தியாசம் பங்கு வர்த்தகம்.

சரி என் கதைக்கு வருவோம். டாக்ஸி நகர நகரம் முழுவதும் சுற்ற நானும் போனேன் போனேன் போனேன் போய்க்கொண்டேயிருந்தேன். பயணம் முடிந்தபாடில்லை. ஒருவேளை நம்மை அசலூர் (சென்னையில் கிராமத்திலிருந்து வந்து அண்ணா சமாதியில் நின்று கொண்டு காந்தி சமாதிக்கு ஆட்டோ கேட்டால் 30 நிமிடத்தில் கொண்டு செல்லுவார்களே அதைப்போல), வழி தெரியாது என்று தெரிந்துகொண்டு ஏமாற்றுகிறாரோ என்ற எண்ணம் மேலோங்கினாலும், ஓட்டுனரை பார்த்தால் ஏமாற்றுவது போல தெரியவில்லை. முதலில் பீடிப்புகை மண்டலத்தின் ஊடே உட்கார்து பயணம். சற்று நேரம் கழிந்ததும் வாகனப்புகை மண்டலங்களுக்கு நடுவில்.

நான் மும்பைக்கு விமானத்தின் மூலம் தரையிறங்கிய அதே ஏர்போட்டெல்லாம் மறுபடியும் ஒருமுறை சுற்றிக் காண்பித்தார். மேலே சொன்னது போல மும்பையின் ஸ்பெஷல் பங்குச்சந்தை, இன்னொரு ஸ்பெஷல் போக்குவரத்து நெரிசல். நம் ஊரில் புலம்புவது போல இங்கே யாரும் புலம்புவது இல்லை. நெரிசலுக்கு இரண்டு முக்கிய காரணங்கள்:

1. மெட்ரோ ரயில் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சாலைகள் சுருக்கப்படிருக்கின்றன.
2. வாகனங்கள் அந்நியாயத்துக்கு அதிகரித்துவிட்டிருக்கிறது. லோன் போட்டு சகட்டு மேனிக்கு வாகனங்கள் வாங்கிப் போட்டு இருக்கிறார்கள்.

நெரிசல் என்றால் அப்படியொரு நெரிசல். வாகனங்கள் ஒன்றை ஒன்று முத்தமிட்டுக் கொள்ளும் நிலையில் ஓட்டப்படுகின்றன. நம்மை அறியாமல் நம்மிடம் ப்ரேக்கின் கண்ட்ரோல் இல்லாதபோதும் பலமுறை காலை அழுத்துவது உறுதி. நான் குறைந்தபட்சம் 54 முறை காலை அழுத்தியிருக்கிறேன்.

என் நிலைமையை புரிந்துகொண்டு அந்த டிரைவரே பாந்த்ரா அருகில் செல்லும் போதே வழியில் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த டாக்ஸிகாரர்களிடம் “வாஷி, வாஷி” வாய்வலிக்க கேட்டுக்கொண்டே வந்தார். ”ம்ஹூம்….” என்று சிலர் வாயாலும் சிலர் கையாலும் மறுத்தனர். ஏதோ ஒரு பாலத்தின் கீழ் சென்றார். அங்கு எனக்கு அதிர்ஷ்டம் காத்துக்கொண்டிருந்தது. ஆமாம், ஒருவர் வருகிறேன் என்று உடனே சம்மதித்தார். இந்தமுறை எந்த அக்ரிமெண்டும் இல்லை, மீட்டர் மட்டும்தான் போடப்பட்டது.

கொஞ்சதூரம் டாக்ஸி சென்றதும், கோப்பர்கைரானே (அது கோஃபர்கைரானேவா அல்லது கோப்பர்கைரானேவா என்று முடிவு செய்யவே எனக்கு ரெண்டு நாள் தேவைப்பட்டதெல்லாம் தனி ஸ்டோரி) செல்ல வேண்டும், எனக்கு வழிதெரியாது ஆனால் டிமார்ட் வந்தால் சொல்லுங்கள் என்று எனக்கு தெரிந்த இந்திகிலீஷில் கேட்டுக்கொண்டேன். இன்னும் தூரம் போகவேண்டும், வந்ததும் சொல்கிறேன் என்றார். தண்ணீர் தாகம் நாக்கு வறட்டியது. கடை ஏதும் வந்தால் சற்று நிறுத்துங்கள் தண்னீர் வாங்கவேண்டும் என்று சொன்னது அவர் காதில் விழவே இல்லை என்று நான் உணர்ந்தது நான் இறங்க வேண்டிய இடம் வந்தபின்புதான்.

பக்கத்துக் கடையில் பான் வாங்கிக்கொண்டு என் அறைக்கு சென்று சற்று இளைப்பாறிவிட்டு, கொஞ்ச நேரம் சென்றதும் பசியும் ஆற்றிக்கொண்டேன். சுவை தெரியவில்லை மாறாக என் மனைவிதான் தெரிந்தாள். இந்நேரம் என் மகன் வழக்கம் போல உணவருந்த படுத்தி எடுத்துக் கொண்டிருப்பான். அங்கே உணவருந்தும் மேசையில் என்னுடன் இன்னும் சில விருந்தாளிகளும்(சக ஊழியர்கள், என்னைப்போலவே அவர்களும் வேற்றுகிரகத்தவர்கள்..மன்னிக்கவும் வேறு மாநிலத்தவர்கள்) அருந்திக் கொண்டிருந்தார்கள். டிவியில் ஏதோ “பார்த்தி பாஸ்கர்” என்று நினைக்கிறேன் சீரியல் ஓடிக்கொண்டிருந்தது.

நல்லவேலையாக (எழுதிவிட்டு என்னடா உன் தமிழ். பெரிய ‘ள’ போடுவதற்கு பதிலாக சின்ன ‘ல’ போட்டிருக்கே என்று நினைத்தேன். ஆனால் இந்த சின்ன ‘ல’விலும் அர்த்தம் வந்தது தமிழின் சிறப்பம்சம்) அதிலிருந்த ஒரு கிரிக்கெட் ரசிகர் மேட்ச்சைப் பற்றி பேச்சு ஆரம்பிக்க, ஐபில் நினைவில் வந்து, அந்த கண்றாவி சேனைலை மாற்றி கிரிக்கெட் போட்டார்கள். பார்த்துக்கொண்டே மென்று முடித்தேன் உணவை. அன்றைய பொழுதையும் முடித்துக்கொண்டேன்.

பிறகு மும்பையில் கால் டாக்ஸியை பற்றி கேள்விப்பட்டு, அன்று முதல் மூன்று நாளைக்கு அதில் பயணித்தேன். ஆனால் பாக்கெட் பழுத்தவிட்டது. ஒரு நாளைக்கு சுமார் 900 ரூபாய். முதல் ஒரு கிலோமீட்டருக்கு ரூ17 மற்றும் அடுத்தடுத்த கிலோமீட்டருக்கு ரூ15 வீதம் வாங்குகிறார்கள். சொன்னால் சொன்ன நேரத்துக்கு ‘டாண்’ என்று வருவது நேரத்தை திட்டமிட மிக உபயோகமான ஒன்று. இதுதவிர க்ளோபல் பொஸிஷனிங் சிஸ்டம் (GPS) பொருத்தியிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. சராசரியாக ஒரு டிரைவர் மாதத்துக்கு குறைந்தபட்சம் ரூ8000 வரை சம்பாத்திப்பதாக கேள்விப்பட்டது மனதுக்கு மகிழ்ச்சியை தந்தது.

திரும்ப கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கையை நனைத்துவிட்டேன். சமீபத்திய நிலவரம் இன்னும் அது திரும்பவில்லை (இது உங்களுக்கு மட்டும்தான் சொல்கிறேன், அதனால் தயவுசெய்து வெளியே சொல்லிவிடாதீர்கள்).

அப்புறம் சில வேண்டுகோள்களுக்கும், சண்டைகளுக்கும் முறையீடல்களுக்கும் பின்பு என்னை வாடிக்கையாளர் அலுவலகத்திற்கு மிக அருகாமையில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் என்னை அமர்த்தினார்கள்.

இத்துடன் நான் வந்திறங்கிய மற்றும் பிராயண களைப்பு குறிப்புகளை முடித்துக் கொண்டு அடுத்த பகுதியில் வேலையின் ஊடே கிடைத்த அனுபவங்களையும் மன உளறல்களையும் எடுத்துவிடுகிறேன். காத்திருங்கள்…எனக்காக…ப்ளீஸ்….

This entry was posted in அனுபவம் and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to சென்னை டூ மும்பை – பாகம் 4

  1. T.P.Anand says:

    We have waited 14 days to move from part 3 to part 4. We will now wait for part 5………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *