Home » சினிமா இசை, தமிழ் சினிமா

பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் – பாகம் 2

11 June 2009 5 Comments

ராக் அண்ட் ரோல் வகையில் பின்னப்பட்ட இசை. இந்தகால இளைஞர்களையும் கேட்ட மாத்திரத்தில் ஆட வைக்கும். அந்த காலத்து ஐடம் சாங் இது (ஆங்கில வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்) பாடல், படத்தில் கேளிக்கைகளில் நாட்டம் கொண்டவனாக வளர்க்கப்பட்ட நாட்டை காக்க வேண்டிய ஒரு இளவரசன் பாடும்படியாக அமைந்துள்ளது.

நிஜ வாழ்வில் மதுபானங்களில் திளைத்த ஒருவன் எப்படி தன்னிலை இழந்து கேளிக்கைகளில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டு மங்கையரோடு ஆட்டம் போடுவான் என்பதை சித்தரிக்க இந்த பாடல் ஒன்று போதாதா? பாடலை பார்க்கும் போது நமக்கும் அந்த போதை வருவதை உணர்ந்திருக்கிறீர்களா?

படத்தில் ஏழு முக்கியப் பாடல்கள். எல்லாம் இன்றும் ரசிக்கும்படி இருப்பது இதன் தனிச்சிறப்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். வின்செண்ட்டின் மிகத் திறமையான ஒளிப்பதிவில் இரட்டை வேடம் கொண்ட படங்களை அந்த காலத்திலேயே நம் கனவு தொழிற்சாலையினர் தொழில்நுட்பத்தில் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்திரிக்கிறார் என்றே சொல்லவேண்டும். குறிப்பாக இந்தப் பாடல் இடம்பெற்றுள்ள படம் கமலஹாசனுக்கு மிகவும் பிடித்தது, அவர் ரீமேக் செய்ய ஆசைப்பட்ட ஒன்று.

இது மூன்று முறை ரீ-மேக் செய்யப்பட்ட படம்.

இந்தப் பாடலின் வெற்றியின் காரணங்களில் மிக முக்கியாமானது நடிகர் திலகத்தின் குஷியான ஆட்டமென்று சொல்லலாம். எம்ஜிஆர் நடித்திருந்தால் இந்தப் பாடல் அவருக்கு எடுபட்டிருக்குமா என்பது சந்தேகமே. இந்த படத்தை சிவாஜியை வைத்து ஒரு கம்பெனியும், எம்ஜிஆரே தன் சொந்தத் தயாரிப்பில் நடிப்பதாகவும் இருந்தது. ஒரு வேளை எம்ஜிஆர் நடித்திருந்தால் இந்த பாடல் படத்தில் இடம்பெறுவதே கேள்வியாயிருக்கும்.

எம்.ஜி.ஆர் நடிக்கப் போகிறாரா அல்லது சிவாஜியா என்ற சர்ச்சையுடன் ஆரம்பித்த படம் இந்தப் பாடல் இடம்பெற்றப் படம். உங்களில் நிறைய பேர் இதைப் படித்தவுடனேயே யூகித்து இருப்பீர்கள்.
நடிகர் திலகம் இந்த பாடல் பதிவு செய்த நேரம் உடல் நலம் சரியில்லாமல் இருந்தாராம். அப்படி இருந்தபோதே இப்படி கும்மாளம் அடித்து வெளுத்துக் கட்டியிருக்கிறாரே, ஒருவேளை ஆரோக்கியமாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

சிவாஜி மூக்கில் விரலை வைத்து திருப்பும் ஸ்டைல் எம்.ஜி.ஆரையும் திருப்பியது என்றால் பொய்யில்லை. எம்.ஜி.ஆர் அதைத் தொடர்ந்தார், சிவாஜி மறந்தே விட்டார் என்றே சொல்லலாம் (அவர் மிகச்சிறந்த கலைஞன், தான் ஒரு படத்தில் கொடுத்ததை மற்றொரு படத்தில் உபயோகப்படுத்த மாட்டார் என்பதற்கு இதுவே சான்று ஆங்கிலத்தில் ட்ரெண்ட் செட்டர் என்பார்கள்). இப்பொழுது தெரிந்திருக்குமே அது என்ன பாடல் என்று.

பாடலில் சிவாஜியின் வேகமான மிக நேர்த்தியான அசைவுகள் மிக மிக நவீன பாணியிலான அழகு, தன் இடது கை பழக்கத்தை உபயோகப்படுத்தி கைதட்டும் ஸ்டைல்..ஆஹா…ஓஹோ…பாடலின் இசை மாறிக்கொண்டே இருக்கும். அதற்கேற்றார் போலே சிவாஜியின் உடல் அசைவுகளும், முகபாவங்களும் மாறி கொண்டேயிருக்கும். இது போல இன்னொரு பாடல், சிவாஜி மிகவும் ரசித்து நடித்த பாடல் வந்திருக்குமா என்பது சந்தேகமே.

தன்னை மற்றொரு வேடத்திலிருந்து வேறுபடுத்தி காண்பித்து கொள்ள சிவாஜி மிகவும் நேர்த்தியாக பல புதிய மேனரிசங்களை செய்திருக்கிறார். அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் ஆடல், பாடல், மது, மங்கை போதை, களியாட்டங்களுக்கு அடிமையாக்கப்பட்டவனின் வாழ்க்கை. அதுபோலவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் நடிகர் திலகம் என்றால் மிகையல்ல. அப்படிப்பட்ட நடிப்பு, நடனம், ஸ்டைல், மேனரிசம் என்று சிவாஜி ஒரு ராஜாங்கமே நடத்திய பாடல். அவரை சுற்றி மங்கையர் என்ன, ஊஞ்சல் என்ன, மாட மாளிகையின் அலங்காரம் என்ன?

ரஜினி அவர் படங்களில் எல்லாவற்றிலும் காட்டும் ஸ்டைலான சில அங்க அசைவுகள் (விறைப்பான) இந்த பாடல் ஒன்றிலிருந்தே நிறைய கற்றுக் கொண்டிருக்கிறார் என்பது என் எண்ணம். உற்று கவனித்தால் உங்களுக்கும் அது தெரியும், புரியும்.

இந்தப் பாடலில் ஜி.ராமனாதன் கர்நாடகம் மட்டுமின்றி மேற்கத்திய ராக் அண்ட் ரோல் வகையையும் சேர்த்து கலந்தளித்திருக்கிறார். அவரைப் பற்றி நான் சொல்லி தெரியவேண்டியது ஏதுமில்லை. துள்ளல் இசை, அதிரடி சத்தம், கொண்டாட்டத்தின் உச்சக்கட்டதை கொஞ்சமும் குறையாமல் அப்படியே கொடுத்திருப்பார். இசைக்கோலங்களை நம்முள் அழுந்த இட்டிருப்பார். இந்தப் பாடலின் மூலம் பல அப்பாக்களையும், தாத்தாக்களையும் ஆடவைத்தார் என்பது மறுக்கமுடியாத உண்மை.

கு.மா பாலசுப்பிரமணியம் அவர்களை பற்றி சொல்லாமல் இந்த பதிவு முழுமை பெறாது. அதிமேதாவித்தனத்தை கொஞ்சமும் பாடல்களில் கொண்டுவராமல், என்னைப்போல ஒரு பாமரனும் கேட்டு, புரிந்து ரசிக்கும்படி எழுதுபவர். அவரின் பல பாடல்கள் இன்றும் நம் மனதில் ஆழ பதிந்து உலவிக்கொண்டிருக்கின்றன. முக்கியமாக இந்தப் பாடலில், சூழ்நிலைக்கு ஏற்ப அவரின் வரிகள், அவர் அப்படி எழுதியதால் சிவாஜிக்கு உற்சாக ஊற்றெடுத்ததா அல்லது சிவாஜி என்பதால் அவர் அப்படி எழுதினாரா என்ற சந்தேகம் எழுவது திண்ணம். அதிலும் அந்த ராப் வரிகள், சொல்ல வார்த்தைகளற்றுப் போகிறேன். அமுதை பொழிந்த அந்த நிலவு நெஞ்சை அள்ளும் உள்ளம் துள்ளும் இந்தப் பாடலையும் எழுதியது.

பாடலுக்கு நடனமாட முதலில் அழைப்பு வந்தது ஈ,வி. சரோஜாவுக்குத்தான். ஆடை குறைப்பு காரணமாக அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார் (நமீதாக்களும், நயன்தாராக்களும் கவனிக்க…).
துள்ளலான இசை, ராக் அண்ட் ரோலும், ராப்பும் கலந்த ராகம், நடிகர்களின் துடிப்பான ஆட்டம், கேட்டாலே ஆட்டம் போட வைக்கும் தாளம், ஹெலனின் அந்தக்கால கவர்ச்சி ஆட்டம், ஜிக்கி, டி.எம்.எஸ் குரல், பாடல் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை கொண்டாட்டத்தை பிரதிபலித்திடும் வேகம், தாளத்திற்கேற்ப அதிரடி கைத்தட்டல்கள், நடிப்பு மட்டுமின்றி, சிவாஜியின் நடனம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இப்போது நிச்சயமாக கண்டுபிடித்திருப்பீர்கள். அந்த கடைசி நிமிடங்கள் குதூகலத்தின் உச்சம். நாம் அனுபவிக்க வேண்டியதுதான் மிச்சம்.

தேன் வேணுமா? இந்த பாடல் போதுமா? ஹ்ஹா…ஹ்ஹா!! கண்ணா இதைக் கேட்டாலே உந்தன் உள்ளம் துள்ளும்….மின்னல் போல துள்ளி உங்கள் நெஞ்சை அள்ளும் அந்தப் பாடல்:

ஹ்ஹ! யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி
ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி
ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி
ஹ்ஹ! யாரடி நீ மோகினி..

விந்தையான வேந்தனே! விந்தையான வேந்தனே!
வீராவேசம் ஆகுமா…? வீராவேசம் ஆகுமா?
பேயைப் போலே பாயனுமா? விந்தையான வேந்தனே
சந்தோஷமா கோபமா சந்தோஷமா கோபமா?
நான் சொந்தம் கொண்டாடி ஆடிப் பாடி கொஞ்சவே நெஞ்சமே அஞ்சுதே
விந்தையான வேந்தனே!
ஹ்ஹ! திராட்சையின் தேன் சாரடி
மோட்சமே நீ தானடி
மீறுகின்ற போதை
ஏறுகின்ற போதே
மேலும் மேலும் நீ ஊற்றடி
மீறுகின்ற போதை
ஏறுகின்ற போதே
மேலும் மேலும் நீ ஊற்றடி
ஹ்ஹ! திராட்சையின் தேன் சாரடி

தேன் வேணுமா? நான் வேணுமா?
தீரா காதல் மாறுமா
தேன் வேணுமா? நான் வேணுமா?
தீரா காதல் மாறுமா
தேவகானமே பாடி ஆசை தீரவே ஆடி
பேரின்பம் தான் காண்போம் வா மன்னவா
பேரின்பம் தான் காண்போம் வா மன்னவா
தேன் வேணுமா? நான் வேணுமா?
தீரா காதல் மாறுமா
ஹ்ஹ! மன்மதா நீ ஓடி வா…

ஹ்ஹ! காதலி நீ தானடி….பேதமே ஆகாதடி
ரம்பை போல நீயே ஆடுகின்ற மானே
மேலும் மேலும் நீ ஆடடி…
ரம்பை போல நீயே ஆடுகின்ற மானே
மேலும் மேலும் நீ ஆடடி…
ஹ்ஹ! காதலி நீ தானடி ………

மன்மதா நீ ஓடிவா…அன்புடன் சீராடி வா
மின்னல் போல உந்தன் நெஞ்சில் அல்லி இன்பவல்லி நான் ஆடவா
மின்னல் போல உந்தன் நெஞ்சில் அல்லி இன்பவல்லி நான் ஆடவா
ஹ்ஹ! மன்மதா நீ ஓடிவா……..

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
உன்மேல் ஆசை உண்டு
ரெண்டும் மூணும் அஞ்சு
என்னை நீயும் கொஞ்சு
மன்னா தேன் உண்ணும் சின்னக் கன்னி எந்தன் கன்னம்
மயக்கும் மது கிண்ணமே
கண்ணா என்னைக்கண்டாலே உந்தன் உள்ளம் துள்ளும்
தன்னாலே போதை கொள்ளுமே (அஹ்..ஹ..ஹா)
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு (அ..ஹ..ஹஹா)
உன்மேல் ஆசை உண்டு (ஆஹ்..ஹ..ஹஹா)

ஆ…..ஆ……அன்பே…..ஆஹ்..ஹ….ஹ
என் அன்பே….ஓஹ்..ஹோ…ஹோ
என் அன்பே வா….வா..வா…வா…வா
என் அன்பே நீ வா…ஹா!
ஆ….ஆ….அன்பே…ஆஹ்..ஹ்ஹா….ஹ்ஹா
என் அன்பே..ஓஹ்….ஹோ….ஹோ
என் அன்பே வா..வா…வா…வா…வா
என் அன்பே நீ வா…ஹா
பண்பாடும் என் அன்பே நீ வா….

நானும் நீயும் நல்ல ஜோடி
தேனும் போல கூடி
நானும் நீயும் நல்ல ஜோடி
தேனும் போல கூடி
நேசமாக பாடிப் பாடி
ஆசையாக ஆடி ஆடி
நேசமாக பாடிப் பாடி
ஆசையாக ஆடி ஆடி
காதலாலே போதை ஏறி
போதையாலே பாதை மாறி
வாழ்கவே

போதை ஏறி நீ வா
பாவம் எது புண்ணியம் எது
லாபம் எது நஷ்டம் எது
நானும் எது நீயும் எது
ஆணும் எது பெண்ணும் எது
உண்மையும் எது பொய்யும் எது
நன்மை தீமை எது
தன்மானம் எது ஈனம் எது
தானம் எது தர்மம் எது
மானம் எது ஈனம் எது
தானம் எது தர்மம் எது
மாறா வீரா
வீரா நீயே
வாராய்……..

ஆ…..ஆ……அன்பே…..ஆஹ்..ஹ….ஹ
என் அன்பே….ஓஹ்..ஹோ…ஹோ
என் அன்பே வா….வா..வா…வா…வா
என் அன்பே நீ வா…ஹா!
ஆ….ஆ….அன்பே…ஆஹ்..ஹ்ஹா….ஹ்ஹா
என் அன்பே..ஓஹ்….ஹோ….ஹோ
என் அன்பே வா..வா…வா…வா…வா
என் அன்பே நீ வா…ஹா
பண்பாடும் என் அன்பே நீ வா….

5 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.