சென்னை டூ மும்பை – பாகம் 1

கொஞ்சம் பெரிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் வேலை நிமித்தமாக பிரயாணப்பட்டேன். அதற்காக பெரிதாக ஒன்றும் பிரயத்தனப்படவில்லை என்றாலும், இப்போதிருக்கும் நிலையில் ”போக முடியாது உன்னால ஆனத பார்த்துக்கோ” என்று கொக்கரிக்க முடியாது. சொல்லி பார்க்கலாம், போயேத்தீரணும் என்று சொன்னால் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான்.

அப்படியொரு நிலைமையில்தான் என் இந்த மும்பைப் பயணம், வேலை நிமித்தமாக. இங்கு வந்து ஒப்படைத்திருக்கும் வேலையை பார்த்தவுடன் தான் தெரிகிறது அது வேலை நிமித்தமாக இல்லை பெண்டு எடுக்கும் நிமித்தமாக என்று.

இதற்கு முன்னமே சில பல பயணங்கள் இந்தியாவிற்குள்ளும் இந்தியாவிற்கு வெளியேயும் செய்திருந்ததால், முன் அனுபவம் காரணமாக என்னிடம் எந்த ஒரு பரபரப்பையும் இருக்கவில்லை. வழக்கமான பயணங்களைவிட இந்த பயணத்திற்கு முன் என் வீட்டுக் கடமைகள் (2 வயது மகனை முட்ய்திருத்தகம் அழைத்து சென்று முடிதிருத்தம் செய்தது, அதே இ.வ.ம பள்ளித்தேர்வு, வீட்டிற்கு தேவையான சாமான்கள் என்று கடைசி நிமிடம் வரை அயராது உழைத்துவிட்டு வந்தேன்.

மேலே சொன்ன அ.உ.வில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். டெபுடேஷன் லெட்டர் வாங்கிவந்தாதான் ஆச்சுன்னு அங்க இருக்குற மீரா பஜன் பாட, நானும் என் கம்பெனி ஹெச் ஆருடன் தொடர்புகொள்ள, நீங்க எங்க போறீங்கண்ணு கேட்டு ஒருதடவை என்னை கிள்ளிப்பார்க்க வைத்தார்கள். அப்புறம் விமான பயணச்சீட்டை காண்பித்து, இங்க பாருங்க டிக்கெட்டெல்லாம் எடுத்து கொடுத்திருக்காங்க, மும்பை போகணும். இன்னிக்கு நைட் ஃப்ளைட். கொஞ்சம் சீக்கிரம் கொடுத்தீங்கண்ணா நல்லா இருக்கும்னேன், என்னவோ என் வேலைய செய்யப்போறாப் போல.

இன்னும் எனக்கு மெயில் வரலையே. அது வராம தரக்கூடாது விஜய். இருங்க சொல்லியிருக்கேன் மயில் வந்திடும்னாங்க மேடம். மேடம் அது மெயில் மயில் இல்ல. ஓ..ஆமா..சாரி மெயில். ஆங்…வந்திடுச்சு, இருங்கன்னாங்க மேடம். எப்பா சாமி இவங்க இன்னும் அடங்கவேயில்லையா, இத்தோட இன்னும் பெரிய ரிசஷன் வந்தாத்தான் அடங்குவாங்க போல இருக்கேன்னு மூளை சொல்ல, மனசு பளாருன்னு ஒரு அறைய விட்டு, டேய் இந்த ரிசஷனுக்கு அவனவன் நுரைதள்ளி துப்பிக்கிட்டு இருக்கான். இன்னொன்னா? நீ முதல்ல அடங்குன்னுச்சு மனசு.

பாக்கிங் எல்லாம் முடிச்சு ஃப்ரெஷா ஒரு குளியல போட்டு வந்தா தங்கமணி தட்டுல சப்பாத்தியோட கண்ல கண்ணீரோட வந்து நின்னா. நானும் அவள சமாதானபடுத்த “என்ன இட்லியில உப்பு கம்மியாயிடுச்சா, கண்ணீரால கரையேத்தறீயான்னு தாமாஷ்(னு நினைச்சு) பண்ணேன். போங்க நீங்க, உங்களுக்கு நான் அழறத பார்த்தா கிண்டலா இருக்கா.

உங்களுக்கு ஊருக்கு போறதில ரொம்ப சந்தோஷம் போலிருக்கேன்னு ஒரு போடு போட்டா. தங்கமணியையும் சமாளிச்சு கார்ல ஏறி நம்ம சென்னை மாநகர போக்குவரத்தையும் சமாளிச்சு, ஏர்போர்ட் போயி செக்யூரிட்டிகளையும் சமாளிச்சு உள்ள சொன்ன நேரத்துக்கு முன்னாடியே போய் உட்கார்ந்துட்டேன்.

நெத்தியில் திருமண் ஸ்ரீசுர்ணம், கையில் “ரஜினி பேரக் கேட்டாலே” புத்தகம். இந்த இரண்டு விஷயத்துக்காக ஏர்போர்ட்டில் பல பேரின் கவனத்தை நான் ஈர்த்தேன் என்பதை அவர்கள் என்னை பார்த்த விதத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.

செக்யூரிட்டு செக்கிங்கில் ஒரு காவலர் நான் வந்து நின்றவுடன் என் நெற்றியை பார்த்தவர், “செப்பண்டி” என்றார். எனக்கு தசாவதாரத்தில் கமல் இதை தத்ரூபமாக காண்பித்திருந்ததுதான் சட்டென்று நினைவுக்கு வந்தது. எவ்வளவு உன்னிப்பாக கவனித்திருந்தால் அதை படத்தில் சொல்லியிருக்க வேண்டும். கையில் ரஜினி புத்தகம் மனதில் கமலின் புத்திசாலித்தனம்.

அடுத்ததாக அந்த காவலர் கண்ணில்பட்டது ரஜினி புத்தகம், பார்த்தவுடன் கேட்டார், “ரஜ்னிகாந்த்”. அந்த ஒரு வார்த்தையில் பல கேள்விகளும், பதில்களும், சொல்ல நினைத்தவைகளும் எத்தனை. ”ரஜினி பேரக் கேட்டாலே”, உண்மைதானே. நன்றி காயத்ரி ஸ்ரீராம்.

நாந்தான் பல பயணங்களை பார்த்தவனாயிற்றே. இந்த ஒரு ஆணவம் நம்மை மிகச் சாதரணமாக கவ்வுவதை கவனிக்கலாம். உதரணமாக, ”ஃப்ளைட் ரெடி, வந்து ஏறுங்க” என்று குறைந்தது மூன்று முறை சொன்ன பிறகே வரிசையில் நிற்பது, என்ன அவசரமாக இருந்தாலும் நம் அவசரங்களை நிதானமாக செய்துமுடிப்பது என்று நிறைய உண்டு.

இதில் எனக்கு ரொம்ப நாட்களாக கண்ணில்பட்டு வருவது. என்னவோ அலுவலக வேலையெல்லாம் தன் தலையில்தான் இருப்பது போலவும், அந்த வேலையை பறக்கும் நேரத்திற்குக் கூட தள்ளிபோட முடியாது போலவும், லேப்டாப்பை வைத்து படம் காட்டுபவர்களை பார்ப்பதுண்டு. என்றாவது ஒரு நாள் ஒருவரை நிச்சயமாக கேட்பேன்.

அடுத்த சீன் ஃப்ளைட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டு சிலர் போடும் படம் இன்னும் அருமை. சென்னை ஏர்போர்ட் ப்ளாட்ஃபார்ம் ஒன்றிலிருந்து புறப்படும் ஃப்ளைட் மிஞ்சி மிஞ்சி போனால் 2 மணி நேரமே எடுத்துக் கொள்ளும் மும்பையை சென்றடைய. இதற்குள் இத்தனை படங்களா என்று வியக்கும் அளவுக்கு இருக்கும் நமக்கு.

விமான பணிப்பெண் வழக்கம் போல ஃப்ளைட்டில் பாதுகாப்பு முறைகளை சொல்ல ஆரம்பித்தாள். இதை என் கணிப்பில் ஒரு 20 பேர் மட்டுமே கவனித்திருக்க வேண்டும். பலமுறை பறந்த புண்ணியவான்கள் சிலரை கவனித்தேன். அப்போ நீ பாதுகாப்பு முறைகளை கவனிக்கல அப்படின்னு கேட்க்கக்கூடாது. அப்படி நான் அதை கவனிச்சிருந்தா இதை யாரு கவனிக்கறது. பொதுவா இந்த கவனிக்கறது இருக்கே…(போதும்டா சாமி, இவ்வளோ மொக்கையா நீ..ச்ச்சே..உன்ன பார்க்கவே பயமா இருக்குன்னு சில பேரின் புலம்பல் ஆகாய மார்க்கமா வந்து தொப்பு தொப்புனு என் தொப்பையில் விழுது).

எங்க விட்டோம்…ஆங்…பாதுகாப்பு. ப.ப.புக்கள் இருக்காங்களே, அவங்கள்ள ஒருத்தர் ரொம்ப சுவாரஸ்யமா புத்தகம் படிச்சிகிட்டு இருந்தார், ஒருத்தர் ரொம்ப ரொம்ப விசேஷம் தூங்க ஆரம்பிச்சுட்டார். இன்னொரு பெண் தன் அம்மாவிடம் செல்லச் சண்டை போட்டுகிட்டு இருந்தார். ஏன்யா, அந்த பெண் எவ்வளோ முக்கியமா உங்க நலன்ல நலன் காட்டிகிட்டு இருக்கு….கொஞ்சம் கூட அக்கறையே இல்லாம இருக்கீங்களேன்னு கேட்டா, நான் ப.ப.பு, இதெல்லாம் முன்னாடியே பார்த்திருக்கேன்

ஃப்ளைட் கிளம்பும் போது விளக்கெல்லாம் அனைத்துவிடுவார்கள். நம்ம ஆளு (அதான் புத்தகப் பிரியர்) அப்பவும் தன் தலைக்கு மேலே இருக்கும் விளைக்கை போட்டுவிட்டு படித்தார். இன்னும் சிலர் அப்போதுதான் ஃப்ளைட் கிளம்புகிறது என்று தெரிந்தும், விமானப் பணிப்பெண்ணை அழைத்து பஞ்சு கொண்டுவா, தண்ணி பாட்டில் என்று அலைகழிப்பார்கள்.

நானும் ஆன்மா, உடம்பு, மறுபிறப்பு, தர்மம், நியாயம் என்று வேலுக்குடி கிருஷ்ணனை காதார அருந்திக் கொண்டு இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தேன். உங்களுக்காக மக்களே…பட்டாம்பூச்சி பயல்கள் போட்ட படத்தையெல்லாம் உங்களுக்காகவே கவனித்து இங்கே பதிகிறேன்.

பசி எடுத்தது, உணவும் வந்தது. எல்லோரும் அருந்தினோம். அதாவது இதெல்லாம் அவருக்கு ஒன்றும் புதிதில்லையாம். அப்படித்தான் இருக்கும் அவர்கள் செய்யும் சேட்டைகளை பார்த்தால். அந்த பு.பு. உணவு தன் முன் இருக்கைக்கு பறிமாறப்படும் போதே, தன் இருக்கைக்கு முன் இருக்கும் உணவு இருக்கையை கழட்டி விட்டார்..ஆமாம், புத்தகம் படித்துக் கொண்டே. ஆக மொத்தம் மன உணவிலும், பணிப்பெண் (அழகான) எங்கிருக்கிறாள் என்பதில்தான் உள்ளது. இருந்தாலும் ஒரு படம்.

இங்கேயிருந்து நேராக நாம் போவது ஃப்ளைட் சென்றடைந்தவுடன் (தரையிறங்கியவுடன்) அது நிற்கும் முன்பே முக்கால்வாசி கூட்டம் எழுந்து நின்றுவிடும். என்னதான் முன்னாடி நின்றாலும் விமான கதவை திறந்தால்தான் வெளியே போக முடியும் என்று தெரிந்தும், எத்தனை முறை பறந்த்ருந்தாலும் இப்படி செய்பவர்களை கண்டால் சிரிப்புத்தான் வருகிறது.

ரொம்ப நேரமாக அடக்கி வைத்திருந்த உச்சாவைப் போல விமானம் தரையிறங்கிய மறுநொடி பாக்கெட்டில் கைவிட்டு அலைபேசியை ஆன் செய்வது இன்னொரு ப.மு.ப. படம். என்னவோ அதுவரை வாழ்விலேயே வராத அழைப்புகள் வந்திருக்கிறாப்போலே.

இதோடு நான் மும்பை சென்றடைந்த கதையை முடித்துக் கொள்கிறேன். மும்பையில் நடந்த நடந்து கொண்டிருக்கும் கதைகளை அடுத்த பகுதியில்.

This entry was posted in அனுபவம் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *