Home » அனுபவம்

சென்னை டூ மும்பை – பாகம் 3

19 June 2009 3 Comments

மேலாளர் சொன்ன நேரத்துக்கு சற்று தாமதமாகவே ஃபோன் செய்தார். மேலாளர் என்றால் எதையுமே தாமதமாகச் செய்பவர் என்று தானே பொருள்.

”ஹான் விஜய்….” என்று (முன்னே ஒரு தடவை சென்னையில் நாங்கள் சந்தித்து இருந்தோம்) என்னை அடையாளம் கண்டார். நானும் அவரை “ஹாய்” என்று என் பங்குக்கு அடையாளம் காட்டிக்கொண்டேன். காரில் இருவரும் ஏற அவர் அந்த காரை செலுத்த, காரும் கிளம்ப, மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் (அட ஆமாங்க சொற்பொழிவுதான்). ஆத்து ஆத்து என்று ஆத்தினார். ஆத்திய ஆத்தில் கார் ஏசி அளவை காட்டிலும் சில்லென்று ஆகிப்போனது.

இந்திய தேர்தல் பற்றியும் ஐபிஎல் ஆட்டம் பற்றியும் பேச்சு திரும்பியது. அவர் கல்கத்தாவை சேர்ந்தவர் என்பதால் அவரிடம் கொஞ்சம் உஷாராகவே பேச முடிவு செய்தேன். தோற்றது கம்யூனிஸ்ட், கல்கத்தா ஐபிஎல்லில் பெற்றது கடைசி இடம். ஆனால் அவரே தான் கம்யூனிஸத்தை வெறுப்பதாக சொன்னது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவருக்குமே கல்கத்தாவிலும் கேரளாவிலும் கம்யூனிஸத்தின் தோல்வி பெரும் அதிர்ச்சிதான் ஆனால் இன்ப அதிர்ச்சி என்றார்.

”அங்க க்ளையண்டு கிட்ட நல்ல கெத்தா நடந்துக்கோ. எடுத்தவுடனே இதுக்கு முன்ன இந்த வேலைய செஞ்சவங்க சரியாவே செய்யலையேன்னு அலும்பல் விடு” என்று அறிவுரை கூறினார். சுருக்கமாக சீன் போட சொன்னார். அது நமக்குத்தான் கை வந்த கலையாச்சே. அதுக்கென்ன செஞ்சா போச்சு என்றேன். கண்டிப்பாக நான் ஜூன் பத்து தேதிக்கு ஊர் திரும்ப வேண்டும், என் மகனை முதன்முதலில் பள்ளியில் சேர்க்க வேண்டும் கூறினேன்.

வழக்கமான வடக்கராக, “விஜய் டோண்ட் வொரி, தட்ஸ் நாட் அ பிராப்ளம்” என்றார். மனதுக்குள்ளேயே அவரை இன்று போல என்றும் வாழ்க என்று வாழ்த்தினேன். அவர் மாறிவிட்டால் அவரின் வாக்கும் மாறுமே? க்ளையண்டை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று வியூகம் வகுத்துக் கொண்டிருக்கும் போது நாங்கள் எங்கள் மும்பை அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோம்.

விஜய் கிவ் மீ ஆஃபேனவர், ஐ வில் செக் மை மெயில்ஸ் அண்ட் வீ வில் ஸ்டார்ட் டூ த க்ளையண்ட் ப்லேஸ் (என்னவோ பேலஸுக்கு கூட்டிப் போவது போல) என்று கூறினார். வெறுமனே அவர் எதிர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மேலும், கீழும், இடமும், வலமும் கண்ணை அலைபாயவிட்டு நேரத்தை வீணடித்தேன். ஒரு சமயத்தில் பொறுமை இழக்க, சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து ஃபோன் எடுத்து (என் ஃபோனைத்தான்) என் மனைவிக்கான எண்ணை சுழற்றினேன். ”ஒன் மினிட்” என்று சொல்லிவிட்டு கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நிமிடம் பேசி பொழுதை கழித்தேன்.

ஒருவழியாக அங்கிருக்கும் என் (நான் பார்த்திராத) சக ஊழியர்களிடம் அழைத்து சென்று “இவர்தான் விஜய், சென்னையிலிருந்து வந்திருக்கிறார்” என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

என் அலுவலக அறிமுகங்கள் முடிந்த பின்னர், காரை எடுத்துக் கொண்டு க்ளையண்ட் அலுவலக அறிமுகங்களுக்கு கிளம்பினோம். சீயீஓ மஞ்சள் தண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் ஐடி மானேஜர் ஆட்டை வெட்டும் பூசாரி போல காட்சியளித்தார். சீயீஓவின் அறையில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்தவை எனக்கு ஆட்டை வெட்டும் அரிவாளாக தென்பட்டது. இது வழக்கமாக எந்த க்ளையண்டை முதல் தடவை சந்திக்கும் போது தோன்றும் எண்ணங்களாதலால் பெரிதாக என்னை சேதப்படுத்தவில்லை.

என் மானேஜேர் என்னை காண்பித்து “யூ ஆர் அட் சேஃப் ஹாண்ட்ஸ்” என்றார் சீயீஓவிடம். எனக்கு மனதுக்குள் தூக்கிவாரிப் போட்டது. அதை வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் ஒரு “பொருமிதச் சிரிப்பு” ஒன்றை உதிர்த்தேன். அப்பொழுதிலிருந்து ஆரம்பமானதுதான் நம்ம அதுப்பு. இன்றையவரையிலும் அடங்கமால் பார்த்துக்கொள்வதற்குள் போதும் போதும் என்றாகிறது.

காலையில் மானேஜருடன் வந்துவிட்டதால் பிராயண களைப்பும் தெரியவில்லை, அவர் வரும் வழியில் எல்லாம் அறுத்துக்கொண்டே வந்ததால் அலுப்பு மற்றும் தூரம் தெரியவில்லை. திரும்ப வரும்போது தெரியப்போகும் பிரயாண அலுப்பைப் பற்றி அப்போது நான் நினைத்தும் கூட பார்க்கவில்லை. முதல் நாளே வேலையில் இறங்கிவிட்டேன். மாலையும் வந்தது, உடம்பில் சோர்வும் வந்தது. செல்லும் முகவரியை காண்பித்து எப்படி செல்லவேண்டும் என்று ஆட்டை வெட்டும் பூசாரியை கேட்டேன். தெரிந்தது செல்லும் இடம் மட்டுமில்லை அவர் சைவம் என்றும்.

இங்கிருந்து ”ரிக்” – ஆட்டோரிக்‌ஷாவின் சுருக்கம் – பிடித்தால் போய்விடலாம் என்றார். வெளியில் சென்று விசாரித்தபோதுதான் தெரிந்தது நான் ஊர் விட்டு ஊர் வந்திருக்கிறேன் என்பது. வருமா என்று கேட்ட எல்லா ஆட்டோவும் மாட்டோமென்று மீட்டர் போடமலேயே கட் செய்துவிட்டு போனார்கள். அப்படியே காலாற நடந்துபோய் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். தப்பாக சுமார் ஒன்றரை கிலோமீட்டர் நடந்திருப்பேன் என்று நினைக்கிறேன். இருப்பது மெயின் ரோடு என்றரிந்திருந்தாலும் மெயினாக நான் போக வேண்டிய ரோடு இதுதானா என்ற சந்தேகம் அதுபாட்டிற்கு என்னைப் போலவே என் மனதில் அலைந்து கொண்டிருந்தது.

”திருதிரு”வென முழித்துக் கொண்டே போகிற வருகிற ஆட்டோவையெல்லாம் விசாரித்துப் பார்த்ததில் இங்கிருந்து போவதற்கு டாக்ஸிதான் என்பதை தெரிந்துகொண்டேன்.

இப்போது போகிற வருகிற டாக்ஸியெல்லாம் கைபோட்டு நிறுத்த முற்பட்டேன். ஹூம்…நடந்து காலும், நீட்டி கையும் பார்த்து பார்த்து கண்ணும் வலித்ததுதான் மிச்சம். சொச்சமும் ஒடுங்கி போவதற்குள் ஒரு டாக்ஸியை பிடித்தே ஆகவேண்டும் என்று மறுபடியும் வேட்டையை ஆரம்பித்தேன்….

டாக்ஸி வேட்டை தொடரும்…

3 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.