சென்னை டூ மும்பை – பாகம் 2

ஒரு வழியாக மும்பை ஏர்போர்ட்டிலிருந்து கம்பெனி கார் உதவியுடன் கம்பெனி விருந்தினர் இல்லத்திற்கு வந்து சேர்ந்தேன். வழியில்தான் எத்தனி மேம்பாலங்கள். ஒரு வேளை இங்கே யாரும் கழக கண்மணிகள் இருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்தது. மும்பையை இரண்டு மகுதியாக பிரிக்கப்பட்டதற்கும், இங்கிருந்து அங்கு செல்ல டோல் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதும் ஆச்ச்ர்யமாக இருக்கிறது. சென்னையிலும் இது இருக்கிறது என்றாலும், ஒரு நகரத்திற்குள் இருக்கும் இரு வெவ்வேறு இடங்களுக்கு செல்ல இது தேவையா?

விமானம் தரையிறங்கியதும், அதிலிருந்து நான் தரையிறங்கி வெளியே எனக்காக கண்கொட்ட கண்கொத்திப் பாம்பை போல என் டிரைவர் மனோகர் (என் என்றால், என் கம்பெனி என்று சொல்வதில்லையா அது போல) காத்துக்கொண்டிருந்தார். மனோகர் பாண்டே என்று நினைக்கிறேன். நெத்தியில் குங்குமப்பொட்டு காரில் கணபதி பப்பாவின் சிறிய சைஸ் பொம்மை என்று அந்த நடு இரவிலும் மணங்கமழ இருந்தார். அப்போது இரவு மணி சுமார் 1 மணி இருக்கும் என்று நினைக்கிறேன். அங்கிருந்து கிட்டத்தட்ட சராசரியாக வண்டி 45-50 கிமீயில் பயணித்த போதும் நான் விருந்தினர் இல்லத்திற்கு வந்து செல்ல 2.20 ஆயிற்று. சென்னையிலிருந்து மும்பைக்கு வந்த நேரத்தில் முக்கால் பங்கு. பயண களைப்பு மற்றும் அவசரத் தேவை காரணமாக நான் சற்று நிலைதள்ளிப் போயிருந்தேன்.

எனக்கு ரூம் 301ஐ கொடுத்திருந்தார்கள். அங்கு நான் அணுகவேண்டிய நபர் அசோக் அல்லது புதன். வந்தேன் மணியினேன். ஒன்றும் நடக்கவில்லை. தன்னந்தனியனாக அந்த வராண்டாவில் முழித்து திரும்ப திரும்ப மணியடித்து அடித்து, வந்த எரிச்சலில் மனவாய் கண்டபடி அந்த அசோக்கை ஏசியது, ஏண்டா இதெல்லாம் உனக்கு தேவையா என்று என்னுடன் பேசியது.

என்னை விட்டதுதான் தாமதம். மனோகர் கர்சீப்பை காணும் பேண்டை காணும் என்று காரை விரட்டி என்னை தனியாக மகனே இனி உன் சமர்த்து என்று விட்டுவிட்டுச் சென்றார்.

அசோக் ஒரு நல்ல காரியம் செய்திருந்தான். கதவில் அவன் அலைபேசி எண்ணை ஒரு பேப்பரில் எழுதி ஒட்டியிருந்தான். எடுத்தேன் போனை தொடுத்தேன் காலை.
எடுத்தான் போனை “ஹலோ, போலியே ஜீ, கவுன் பாத் கர் ரஎஹேன் ஹை?

”அசோக், (ஊர்ஜிதம் செய்ய) மே (ஆடு கத்துவது போல) விஜயசாரதி. அதற்கு மேல் நமக்கு கிராமர் 1376 கிமீ தூரம் என்பதால் அடக்கி வாசித்து, மே விஜயசாரthi, இதர் பாஹர் வைட் கர்ரஹான் ஹூ (செந்தில் ஊளையிடுவது போல்). தர்வாஜா கோலோ யார்(இந்த ”யார்” வட இந்தியாவில் 90 விழிக்காடு மக்கள் உபயோகிக்கும் சொல்)” என்றேன்.

வந்தான் திறந்தான் என்னுடைய பள்ளியறையை காண்பித்தான். திரும்பிப் பார்த்தால், அவன் அவன் இடத்திற்கு சென்று உறங்க தொடங்கியிருந்தான். நமக்கு அவ்வளவுதான் லக்கென்று நினைத்துக் கொண்டு, ஆடகளை களைந்து, காஷுவல்ஸுக்கு மாறி பொத்தென்று படுக்கையில் விழுந்தேன்.

நான் சந்திக்க வேண்டிய என் இடைக்கால மேலாளர் காலை ஃபோன் செய்துவிட்டு வந்து காரில் கூட்டிச் செல்வதாக கூறியிருந்ததால், காலை சுமார் 7 மணியளவிற்கு அலாரம் வைத்துக் கொண்டேன். சிறிது யோசித்து அதை எட்டாக மாற்றி, இன்னொரு முறை சிந்தித்து முடிவாக ஒன்பதிற்கு வைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தேன்.

கண் முன் என் மகன் என் தலைமுடி பிடித்துக் கொண்டு தன் வலது விரலை வாயில் வைத்து சப்புவது வந்து போயிற்று. இந்நேரம் அவன் உறங்கியிருப்பான். நான் ஊருக்கு கிளம்புகையில் அவனை நான் பிரியப்போகிறேன் என்றோ, என்னை பார்க்க கொஞ்ச நாள் ஆகுமென்ற வருத்தமோ அவனிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவனுக்கு வயது இரண்டுதானே ஆகிறது. “டாடா பாய்” என்றான் ஏதோ நான் வழக்கம் போல வெளியில் சென்று திரும்புவது போல. அவனுக்கு நான் என் பைக்கில் சென்றால்தான் அவனை விட்டுச் சென்றதாக உணர்வான்.

என் மனைவி தைரியமானவள்தான். இருந்தாலும், இப்போதெல்லாம் நம்பமுடிவதில்லை. ஒரு சின்ன பயம் இருந்தாலும், வருவதை யாராலும் தடுக்க முடியாது என்ற தத்துவத்தின் அடிப்படையிலும், வேலையை உதறித் தள்ளுவது இந்த ரெசெஷன் நேரத்தில் சரிவராது என்ற காரணத்தாலும், சமாளித்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் முற்றிலுமாக உறங்கினேன்.

காலையில் எழுந்து பல் துலக்கி துப்பிவிட்டு, குளிக்க செல்ல முற்படும்போது என் மேலாளர் கூப்பிட்டிருந்தார். தான் இன்னும் ஒரே ஒரு மணி நேரத்தில் அங்கு வந்துவிடுவதாக கூறினார். அப்பொழுது மணி 9.30 இருக்கும். வட இந்தியர்களின் சுறுசுறுப்பை நான் அனுபவித்திருக்கிறேன்.

விருந்தினர் மாளிகையின் முதல் நாள் சிற்றுண்டியான ஏதோ உப்புமா என்று சொன்னார்கள். அதை நல்லாயிருக்கிறதா இல்லையா என்றெல்லாம் ஆராய்ச்சியில் ஈடுபடாமல் தின்று முடித்தேன். என் மேலாளர் வர இன்னும் சற்று நேரம் இருந்ததால், காத்திருக்கும் பொழுதை சன் டிவி பார்த்து தொலைத்தேன்.

தொடரும்….

சென்னை டூ மும்பை – முதல் பாகம்

This entry was posted in அனுபவம். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *