Home » அரசியல், நாட்டு நடப்பு, பொது

நான் இந்தியக் குடிமகனா? எனக்கு ஓட்டு இருக்கா?

13 May 2009 6 Comments

முந்தையப் பதிவில் ஆளும் கட்சியையும் அதன் தோழமை கட்சியான திமுகாவையும் சில பல காரணங்களுக்காக திட்டித் தீர்த்ததன் விளைவோ என்னவோ எனக்கும் என் குடும்பத்தார் அனைவருக்கும் ஓட்டு இல்லை அன்று கைவிரித்து விட்டனர்.

election-commissionவாக்காளர் அட்டை வைத்திருக்கிறேன். அது வோட்டுப் போடுவதை தவிர எல்லாவற்றிற்கும் ஆவணமாக பயன்படுகிறது. நான் புதிய வீட்டிற்கு குடியேறியதால் இந்த குழப்பம். ஒரு விதத்தில் தேர்தல் ஆணையத்தின் பிழை இது என்றாலும் அதில் ஒரு இந்திய பிரஜையாக எனக்கும் பங்கு உண்டு.

நான் வாக்காளர் அட்டையில் என் முகவரியை மாற்றியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு எங்கு செல்ல வேண்டும், யாரை பார்க்க வேண்டும்? இவை எதுவுமே நான் தெரிந்து கொள்ள முற்படவில்லை. இது என் தவறே. நல்ல கட்சி ஆட்சியமைக்க வேண்டும், நாம் விரும்பும் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதற்கான எந்த ஒரு முயற்சியும் எடுப்பதில்லை. வோட்டுப் போடுவதைத் தவிர.

இந்த தேர்தலில் எங்கள் வீட்டில் கிட்டதட்ட 10 பேரின் ஓட்டு செல்லா ஓட்டாக போனது. அது செல்லா ஓட்டாக போனதா அல்லது யாருக்கும் செல்ல வேண்டுமோ அவர்களுக்கு சென்றதா என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.

எல்லா கட்சியும் தங்களுக்கு ஓட்டு போடும்படி கேட்டிருக்கிறது. எந்த கட்சி ஒரு குடிமகனுக்கு ஓட்டுரிமை இருக்கிறதா என்று சரிபார்த்தது. இதை கட்சிகள் குறைந்தது தேர்தலுக்கு 2 மாதம் முன் செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் வாக்காளர்களுக்கும் கூட வோட்டு போட்டு நல்லாட்சியை தேர்ந்தெடுக்க வேட்கையும் அதிகரித்திருக்கும், அவர்களின் உரிமை போற்றப்படுவதை நினைத்து பெருமையும் பட்டிருப்பர்.

தேர்தல் குறித்து என்னுடைய சில யோசனைகளும் ஆசைகளும்:

 • வாக்காளர் சேகரிப்பின் போது ஒரு முகவரியில் இருந்து இன்னொரு முகவரிக்கு வாக்காளர் மாறியிருந்தால் அவர்களின் பெயர்களை தனியாக ஒரு சேகரித்து, செய்தித் தாள்களிலோ அல்லது பிட்நோட்டீஸ் மூலமாகவோ அவர்களை முகவரி மாற்றச் சொல்லலாம்.
 • எல்லா இந்திய பிரஜைகளுக்கும் அமெரிக்காவைப் போல “Social Security Number” கொடுக்க வழி செய்ய வேண்டும். அதை வைத்துக்கொண்டே அரசு சார்ந்த அனைத்து வசதிகளையும் பெறலாம் என்ற சட்டம் கொண்டு வரவேண்டும். இதனால் ஒருவர் ஒரே ஒரு முறை ஒரே இடத்தில் மட்டும் முகவரி மாற்றம் செய்தால் போதும்.
 • ஒரு இந்தியன் மத்திய அளவிலான தேர்தலானாலும் சரி மாநில அளவிலான தேர்தலானாலும் சரி, இந்தியாவின் எங்கிருந்தும் வோட்டு போடலாம் என்ற நிலை வரவேண்டும். இப்பொழுதிருக்கும் நிலையில் நான் என் தொகுதியிலேயே ஓட்டு போடமுடியாத நிலை.
 • அது ஆளும் கட்சியானாலும் சரி எதிர்கட்சியானாலும் சரி, அவர்களின் கடைசி ஆட்சியின் போது கணக்கு வாரியாக வரவு செலவுகளையும் பிரசுரிக்க வேண்டும். அப்ப்டி செய்யாத வேட்பாளரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது.
 • வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் முறையே தானியங்கி இயந்திரத்தின் மூலம் செய்ய வேண்டும். இதனால் மனித குறுக்கீடுகளும் பிழைகளையும், வாக்காளர்கள் விடுபட்டுப் போவதையும் தவிர்க்கலாம்.
 • வெளிநாடுகளில் இருந்தாலும் இன்னும் இந்தியப் பிரஜைகளாகவே இருக்கும் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வலைதளம் அமைத்து அதிலிருந்தே ஓட்டு போடும் வசதியை உண்டாக்க வேண்டும். அப்படி வெளிநாட்டிலிருந்து ஓட்டு போடுவதற்காகவே ஒருவர் வருகிறாயின் அவருக்கு விமான பயணக் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
 • ஒருவர் மூன்று வருடங்களுக்கு மேல் தன் சொந்த மாநிலத்தில் இல்லாமல் வேறு மாநிலத்தில் இருந்தாரேயானால் அவர் பெயர் அவர் தற்போது இருக்கும் மாநிலத்துக்கு மாற்றிவிட வேண்டும். தேர்தலுக்கு பிறகு ஓட்டு போடும் உரிமையிருந்தும் சரியான காரணங்கள் ஏதும் இல்லாமல் ஓட்டு போடமலிருந்தால் அவருக்கு பெரிய தொகையோ அல்லது குறிப்பிட்ட அரசாங்க உதவியை ஒரு வருததிற்கு நிறுத்தி வைப்பதோ சட்டமாக கொண்டுவரப்பட வேண்டும்.
 • ஒரு தொகுதி என்று எடுத்துக் கொண்டால் தேர்தலுக்கு முன் நிலவரமும், வாக்குறுதிகளும், வாக்குறுதி அளித்த கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களையும் பிரசுரிக்க வேண்டும் என்ற சட்டம் வரவேண்டும்.
 • வாக்காளர் தன் இல்லத்திற்கு அருகில் இருக்கும் எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் தன் வாக்கைப் பதிவலாம் என்ற சட்டம் வரவேண்டும்.
 • ஒரு வேட்பாளர் தன் ஆட்சி காலத்தில் குறைந்தபட்சம் இதையெல்லாம் செய்திருக்க வேண்டும் என்ற ஒரு பணி மதிப்பீட்டு அளவை நிர்ணயம் செய்ய வேண்டும்.
 • வேட்பாளர்களை பற்றிய புகார்களை பதிவு செய்ய ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு அலுவலகம் நிறுவி அதை முழுக்க முழுக்க தேர்தல் ஆணயம் கையாளும்படி செய்ய வேண்டும்.
  2 மாததிற்கு ஒரு முறை அந்த புகார்களின் அடிப்படையில் ஆட்சியில் இருக்கும் வேட்பாளர் தன்னிலை விளக்கத்தை அளிக்க வேண்டும். அது அவர் சார்ந்த கட்சி தலைமையிடத்தில் எடுத்துச் சென்று அவரை பற்றிய ஒரு காலாண்டு ஆய்வறக்கையாக கொடுக்க வேண்டும். அதை பிரசுரிக்கவும் வேண்டும்.
 • ஒருவர் ஓட்டளித்த உடன் கருவியிலிருந்து “ஒப்புதல் ரஸீது” கொடுக்கப்பட வேண்டும். இப்படிச் செய்வதால், இயந்திரம் சரியான முறையில் இயங்குவது தெரியவரும். அது மட்டுமல்லாமல் நாம் யாருக்கு வோட்டு அளித்தோம், யாருக்கு அது சென்றடைந்தது என்றும் ஊர்ஜிதம் செய்து கொள்ள முடியும்.
 • கடைசியாக எததெற்கோ பிரத்யேக தொலைக்காட்சி இருக்கும் நிலையில் தேர்தல், வேட்பாளர் செயல்திறன், ஆட்சிக்கால சாதனைகள், காப்பாற்ற முடியாமல் போன வாக்குறுதிகள், மக்களின் குறைகள் சம்பந்தமான தொலைக்காட்சி ஒன்றை தேர்தல் ஆணையம் நிறுவலாம். வலையிலும் தகவல்கள் அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடத் தேவையில்லை.
 • இன்னும் நிறைய ஆசைகள் உண்டு என் மனதில். அனைத்தும் நல்லவையா? உபயோகமானவையா? அப்படியே நல்ல யோசனைகளாக இருந்தாலும் சாத்தியமா? சாத்தியப்பட்டாலும் இந்திய தேர்தல் ஆணையமும் அரசாங்கமும் நிறைவேற்றுமா?

  இதெல்லாம் பதில்கள் இல்லாத கேள்விகள். சில சமயங்களில் கேலிகளுக்கு உள்ளாகும் கேள்விகளும் கூட. கேலி செய்யப்படும் என்று கருதி இதையெல்லாம் வெளிக்காட்டாமல் இருப்பது தவறு. நாம் நம் நாட்டுக்காக நம் சக இந்தியர்களுக்காக செய்யும் ஒரு சிறு உதவியே. இதே யோசனை ஒரு விறகு வெட்டிக்குமோ அல்லது கூலி வேலை செய்பவருக்கோ நிச்சயமாக தோன்றும். ஆனால் அவருக்கு வெளிபடுத்தும் வாய்ப்பு இல்லை. அவர்களின் குரலாக என் மனகனவுகளை இங்கே பதிவு செய்துள்ளேன்.

  ஓட்டு போடமுடியாதது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும், அந்த கஷ்டத்தை என் சக இந்தியர்கள் வோட்டு போடுவதாக வரும் தொலைக்காட்சி செய்திகளை பார்த்து தேற்றிக் கொள்கிறேன். நல்ல அரசு அமையும் என்ற நம்பிக்கை இன்னும் ஒரு முறை என் சகோதர சகோதரிகளின் மீது வைத்திருக்கும் நம்ம்பிக்கையின் பேரில் துளிர்விட்டிருக்கிறது.

  இப்படிக்கு ஒரு சராசரி இந்தியன்.

  6 Comments »

  Leave your response!

  Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

  Be nice. Keep it clean. Stay on topic. No spam.

  You can use these tags:
  <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

  This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.