அன்புள்ள அப்பா….

அன்புள்ள அப்பா….

அப்பா எப்படி இருக்க? தாத்தா பாட்டி செளக்கியமா? இங்க எல்லாரும் நல்லா இருக்கா. நீ இல்லாததுதான் ஒரே குறை.

அம்மா ரெகுலரா ஷுகர் செக்கப் போறா. ப்ரியாதான் கூட்டிண்டு போறா. இங்க விவேகானந்தா காலேஜ் கிட்ட ஏதோ ஒரு டாக்டர். நல்லா மாதிரியா இருக்கார், நல்ல மருந்து தர்றார்ன்னு அம்மா கூட சொன்னா.

விக்ரம் சீடிஎஸ்ல ஜாயின் பண்ணியிருக்கான். ஒரு வருஷம் ஆச்சு. இப்போ பர்மனெண்ட் ஆயிட்டான். சம்பளமும் ரூ.2000 ஏறியிருக்கு. மூர்த்தி அவனுக்கு லேப்டாப் வாங்கி கொடுத்தான். அதுக்கும் திரும்ப பைசா கொடுத்திண்டு இருக்கான் விக்ரம். மூர்த்தி இப்போ வேணாம்னு நிறுத்த சொல்லிட்டான்னு நினைக்கிறேன்.

நிஞ்சு சூர்யாவுக்கு பூனல் போட்டான் மூர்த்தி. ஃபங்ஷன் நன்னா நடந்தது. நீயில்லாதது தான் ஒரே குறை. சத்திரம் சின்னாதானாலும் மூர்த்தி பிரமாதமா பண்ணிட்டான். சித்தப்பா வந்து நடத்திக் கொடுத்தார்.

நம்ம மேல்மா சிஷ்யன் வெங்கடேசந்தான் வாத்தியார். ஒரு மந்திரம் விடாம கம்ப்ளீட்டா பண்ணிவெச்சார். நிஞ்சுவுக்கு மூர்த்தியும் சூர்யாவுக்கு சுந்தரும் மணையில நின்னா.

தோ இப்ப சத்தியாவோட பூனல் வந்திண்டிருக்கு. உன்னால வர்றது கஷ்டம்னு தெரியும். நீ தாத்தாவையும் பாட்டியையும் பாத்துக்கணும். இருந்தாலும் முயற்சி பண்ணு.

என் பொறந்தநாளும் சத்திய பூனல் உதகசாந்தியும் ஒண்ணா வர்றதுபா. நீ வந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன். உன் ப்ளான் வருஷதுக்கு ஒரு தடவைதானே.

பூனலுக்கு அப்புறம் மூர்த்தி இப்பதான் வந்து போனதால, இனிமே அப்பாவ பார்க்கத்தான் வருவேன்னு சொல்லிட்டான். அதனால அவன் சத்தியா பூனலுக்கு வரப்போறது இல்லை.

செப்டம்பர் மாசம் நீ வரும்போது முரளி லீவ் எடுத்திண்டு வர முடியுமான்றது சந்தேகம்தான்பா. பாவம் அவனுக்கு கொஞ்சம் பண கஷ்டம். அதனால ஒரு ரெண்டு மூணு வருஷம் வெளில போயி சம்பாதிச்சு கடனையெல்லாம் அடைச்சிக்கலாம்னு போயிருக்கான்.

பூனலுக்கு கூட ஒரு 4-5 நாள் லீவுலதான் வரப்போறான்.

தேர்தல் ஆரம்பிச்சுடுத்துப்பா இங்க. ஒரே பிரச்சாரம்தான். ஸ்ரீலங்கா பிரச்சனையில் காங்கிரஸும் திமுகவும் கொஞ்சம் சொதப்பிட்டா. இந்த தடவை அவா ஜெயிக்கறது கஷ்டம்தான். உனக்கு திமுகவ பத்தி சொன்னா பொத்திண்டு வந்திடும். ஆனா இப்போ அதுதான் நிஜம். வேணும்னா நாராயணன கேட்டுப்பார். அவரே சொல்லுவார்.

அதிமுகவோட மதிமுகவும் பாமகவும் ஒண்ணு சேர்ந்திண்டு போட்டி போடறது. நம்ம ஊர்ல மே 13ஆம் தேதி ஓட்டு பதிவு. எனக்கும் கூட ஆபீஸ் லீவு விட்டுட்டா. அங்க எப்போ? ஆனா உங்க ஊர்ல இதமாதிரி எல்லாம் கிடையாது இல்ல? ச்சே நினைக்கவே சுகமா இருக்குப்பா. நிம்மதியான வாழ்க்கை உங்களோடதெல்லாம்.

இந்த மாதிரி பொய், புனைசுருட்டு, பித்தலாட்டம் எல்லாம் அங்க கிடையாது இல்ல. ஆனா எப்படிப்பா காலந்தள்ளற அங்க? போரடிக்கல உனக்கும் தாத்தா பாட்டிக்கும்? உன் ஒரு நாள் பொழுத பத்தி எனக்கு எழுதுப்பா. எங்ககூட நீ டெல்லி வர்றேன்னு சொன்ன. கடைசில நான் டெல்லிலேர்ந்து வந்து துபாய் போயிட்டேன். நீ பாஸ்போர்ட் வெச்சிருக்கியா என்னன்னு கூட கேட்கமுடியல. நீ பாட்டுக்கு கிளம்பி போயிட்ட. எனக்கு உன்மேல கொஞ்சம் கோவம் இருந்தது. நாராயணன சொல்லணும். அவனுக்காவது தெரிஞ்சிருக்கணும்.

அப்படியென்ன அவசரம் உனக்கு என் கல்யாணதுக்கு கூட இருக்க முடியாம போயிட்ட? சரி எனக்கு குழந்தை பொறந்து அதுக்கு ரெண்டு வயசும் ஆறது தெரியுமா. நாராயணன் சொல்லியிருப்பானே? சொன்னானா இல்லையா? அவனுக்கு உன்பெயரத்தான் வெச்சிருக்கோம். நேர்ல பாத்து நீ கொஞ்ச வேண்டியது. இதுதாண்டா உன் தாத்தான்னு போட்டவ காமிக்க வேண்டியாதா இருக்கு.

நீ எனக்கு பார்த்து வெச்ச பொண்ணுதான் ப்ரியா. தெரியுமா உனக்கு? பாட்டி சொன்னாளா? பாவம் பாட்டிக்கூட ராமனுஜன பார்க்கணும்னு ரொம்ப ஆசைபட்டாளாம்.

ரொம்பப் பேசறதுபா அது. அம்மாவப்போலவே வாயடறது. அது அம்மாவப்போலவும் நம்ம அம்மாவப்போலவும்.

பெருமாள் மேல அப்படியொரு பக்தி அதுக்கு.

அம்மா உள்பட நிறைய பேர் ராமானுஜன் அப்படியே உன்ன கொண்டுவந்திருக்குன்னு சொல்றா. கேட்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உனக்கும் தானே?

அக்‌ஷய் எல்கேஜி பாஸாயி இப்போ யுகேஜிக்கு சீனியர் செடண்டரி ஸ்கூல்ல ட்ரை பண்னிண்டு இருக்கா. கிடைச்சிடும் போல இருக்கு. உன் ஆசீர்வாதம் வேணும். எங்களுக்கெல்லாம் சீட் வாங்க ஒவ்வொரு தடவையும் நீயும் அம்மாவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்க இல்ல? இப்பதான்பா முழுசா புரியுது.

மத்தபடி ஆதர்ஷ் அனிருத் எல்லாம் நன்னா இருக்கா. நன்னா படிச்சிண்டும் இருக்கா. பாட்டி கிளம்பினபோது சித்தப்பா, சித்தி, பசங்க எல்லாம் ஒண்ணா மீட் பண்ண சந்தர்ப்பம் கிடைச்சது. அவா எல்லாரும் செளக்கியமா இருக்காப்பா. உன்ன கேட்டத ஒரு வார்த்த கூட சொல்லலை. அதான் ஒரே குறை. நீ இருந்தா பாட்டிய எப்படி வழியனுப்பி வெச்சிருப்ப இல்ல? விடு நடந்து முடிஞ்சு போச்சு. இப்பதான் பாட்டி உன்கிட்ட வந்துட்டாளே.

மத்தபடி ஐபிஎல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் நேத்து மேட்ச்சுல ஜெயிச்சுது. போன தடவை ராஜஸ்தான் ராயல்ஸ் கப் ஜெயிச்சத உனக்கு நான் எழுதல. என் தமிழும் சோம்பேறித்தனம் தான் உனக்கு நல்லாவே தெரியுமே.

இந்த பதான் ப்ரதர்ஸ் நன்னா ஆடறாப்பா. போனதடவை எல்லா மேட்ச்சும் தோத்துப்போன டெக்கான் சார்ஜர்ஸ் இந்த தடவை சூப்பர ஆடறாப்பா. நீ கிரிக்கெட் கூட வேணாம்னு அங்க போயி உட்கார்ந்துண்டு இருக்கறது ரொம்ப ஆச்சரியமா இருக்குபா எனக்கு.

ஏர்டெல் சூப்பர் சிங்கர்னு ஒரு ப்ரோக்ராம். அதுகூட நன்னாத்தான் இருக்கு. என்ன ரொம்ப இழுக்கறா. நீ இங்க இருந்த டிவிய விட்டு எழுந்துக்க மாட்ட. அங்க உனக்கு டிவியெல்லாம் கிடையாதே எப்படி பொழுத போக்கற? நாராயணன் என்னதான் இண்ட்ரஸ்ட்டிங்கா பேசினாலும், தாத்தா பாட்டி உன் கூட இருந்தாலும் எப்படிதான் பொழுத கழிச்சுண்டு இருக்கியோ.

ப்ரியா இன்னிக்கி பார்த்தசாரதி கோவில் ஏலத்துக்கு போயிருக்கா. நல்ல நல்ல புடவை வேஷ்டியெல்லாம் ஏலம் விடுவா இல்ல. அதான் போயி பார்க்கலாம்னு. நான் யாமுனன (ராமானுஜனுக்கு இன்னொரு பேர்பா) குளிப்பாட்டி ட்ரெஸ் பண்ணிவிட்டேன்.

நான் இன்னும் குளிக்கல. உன் லெட்டர் முடிச்சுட்டு, ப்ரியா வந்தவுடனே குளிக்கலாம்னு இருக்கேன்.

மத்தபடி சுந்தர் ஸ்ரீகாந்த் எல்லாரும் செளக்கியமா இருக்கா. அவாளையும் முடிஞ்சா எழுதச் சொல்றேன்.

சரி உடம்ப பார்த்துக்கோ. தாத்தா பாட்டிய கேட்டத சொல்லு. நான் வர்ற அம்மாவாசை அன்னிக்கு கூப்பிடறேன். நாம டீட்டெய்லா பேசலாம். அப்ப அப்ப என்னால் முடியற போது உனக்கு லெட்டர் எழுதறேன். அம்மாவாசைக்கு அம்மாவாசை தான் பேச முடியறது பாத்தியா? சொன்னா கேட்காமா போயிட்ட.

ஓகே. டேக் கேர். எங்க எல்லாரையும் ஆசிர்வாதம் பண்ணு. மீண்டும் எழுதறேன்.

இப்படிக்கு உன் மீது அளவில்லா அன்புகொண்ட
சாரதி.

This entry was posted in சிந்தனைகள், சிறுகதை and tagged , , , , , , . Bookmark the permalink.

5 Responses to அன்புள்ள அப்பா….

 1. T.P. Anand says:

  Very touching and very nicely written letter. When i read this letter i was on a “nostalgic” tour of some of my interactions with your father. Very nice and humble man.

  I need to pick up “letter writing” skills from you. Well done.

  – T.P.Anand

 2. ரொம்ப நன்றி ஆனந்த். உங்களுடைய ஹங்கேரியில் ஒரு அக்ரஹாரம் பதிவுதான் இந்த பதிவுக்கு தூண்டுகோலாக அமைந்தது.

 3. R.Sridhar says:

  ரொம்ப நெகிழ்வா இருக்கு விஜய். ஹாட்ஸ் ஆப். பாராட்டுக்கள்

 4. ரொம்ப நெகிழ்வா இருக்கு விஜய். ஹாட்ஸ் ஆப். பாராட்டுக்கள்

 5. நாராயணன் சொல்லியிருப்பார்னு நெனைக்கிறேன். கோன் பனேகா கரோர்பதி நின்னு போச்சுப்பா. நீ கடைசியா அந்த ப்ரோக்ராம் தானே பாத்த? கோலங்கள் இன்னும் முடியவேயில்ல. நீ பாதிதான் பாத்த. நாராயணன்கிட்ட சொல்லி நம்மாத்துல ஒருத்தியா ஆயிட்ட இந்த அபிக்கும் நல்லது நடக்க ஆசி பண்ணு.
  நீ காமராசர் போனப்பறம் திமுகவுக்கு மாறி எங்க எல்லாரையும் திமுகவுக்கு ஓட்டு போட சொல்லுவ. ஆனாகூட நாங்க போட்டதில்ல. நீ கலைஞர்தான் நல்ல அட்மினிஸ்ட்ரேடர்னு சொல்லுவ.

  இந்த வாட்டி நாங்க நெனச்சா கூட திமுகவுக்கு எதிரா போடமுடியாது. குடும்பத்தோட க்ளோஸ் பண்ணிட்டா. நம்மாத்துல யாருக்குமே ஓட்டு கிடையாது. ஓட்டர் ஐடி மட்டும் எல்லார்கிட்டேயும் இருக்கு. திருவல்லிக்கேணியையும் தென்சென்னைலேந்து தூக்கி மத்திய சென்னைக்கு போட்டுட்டாப்பா.

  நீ இல்லாம சண்டை போட்டு அரசியல் பேச முடியலப்பா. எல்லாரும் ஒரே கட்சி. எப்படிப்பா சண்டை போடறது? நாராயணன்கிட்ட ரெகமெண்ட்டேஷன் வாங்கி காந்தி, காமராஜ் ரெண்டு பேர்ல யாரையான ஒத்தரையாவது இங்க அனுப்பச் சொல்லு.
  மத்தபடி சாரதி தமிழ் பாத்தியா? ரொம்ப நல்லா எழுதறான். இதுக்கு முன்னாடி நீ அவனோட இங்கிலீஷ் லெட்டர்தான் படிச்சிருப்பே.
  நான் ஒனக்கு ரெண்டு மூணு இமெயில் rampankaj@yahoo.com அனுப்பினேன். ஏன் அதுக்கு பதிலே எழுதல? நீ கிளம்பறதுக்கு அரை மணி முன்னால எனக்கு அந்த ஐடிலேந்துதான் ஒரு மெயில் அனுப்பின. நெனவிருக்கா? ஒருவேளை வெள்ளமா வர மெயில்னால பாக்ஸ் ரொம்பிடறதா?
  பாட்டி பிப்ரவரில கெளம்பினா. சௌகரியமா வந்து சேந்தாளா? நாங்க எல்லாம் ஒண்ணா சேந்து வழிசொல்லி அனுப்பினோம். வழிக்கு லாந்தர், தீர்த்தம் எல்லாம் குடுத்து அனுப்பினோம். நீ ஜாக்கிரதயா ஸ்டேஷனுக்கு போய் கூட்டிண்டு போனியா?

  சத்யா பூணலன்னிக்கு ஒன்ன வாத்தியார் கூப்பிடுவார். வந்து ஆசீர்வாதம் பண்ணிடு. நான் ஒன்ன நீ செப்டம்பர்ல வரச்சே மீட் பண்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *