ஐபிஎல் – 100 000 ராண்டும் கல்வி நிறுவனங்களும்

இந்த ஐபிஎல்லில் நாம் நினைத்தாலும் காணத்தவற முடியாதது எல்லா மேட்ட்சுகளின் நடுவிலும் அங்கிருக்கும் பள்ளிகளுக்கு பண உதவி செய்ய ஏற்பாடு செய்திருந்தது ஐபிஎல் குழு. உண்மையிலேயே இது ஒரு மிகச்சிறந்த ஒரு செயல். படிக்க நினைக்கும் ஆனால் படிக்க முடியாத பல ஏழை மாணவர்களுக்கு படிப்பை அளிப்பது வாழ்க்கையை கொடுப்பதற்கு சமம்.

அன்றன்றைக்கு விளையாடும் அணிகளின் சொந்தக்காரர் (ஸ்பான்ஸர்) ஒரு லட்சம் ராண்ட் வழங்குகிறார். நிச்சயமாக இது பாராட்டப்பட வேண்டிய ஒன்றே. எங்கிருந்தோ வந்து நம் இந்தியர்களோடு சில நாள் இந்தியர்களோடு இந்தியர்களாக மாறி விளையாட்டை விறுவிறுப்பாக இழுத்துச் செல்லும் அயல்நாட்டு வீரர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கு ஏற்றபடி பணம் கிடைக்கிறது.

ஆனால் நம்மூரின் பாலாஜிக்கோ அல்லது டிண்டாவுக்கோ அதே அளவு கிடைக்கிறதா என்றால் இல்லை.

அங்கே தென் ஆப்பிரிக்கா சென்று கல்வி கற்க உதவி புரியும் இந்த ஐபிஎல் குழு ஏன் போன முறை இந்தியாவில் செய்யவில்லை. இந்தியாவில் ஏழைக் குழந்தைகள் இல்லையென்று மோடியிடம் சொன்னார்களா என்ன?

அல்லது இங்கே நடத்த முடியாது என்று துரத்திவிட்டதும் ”இந்தாப் பிடி” இடத்தை என்று தென் ஆப்பிரிக்கா அழைக்க, நன்றிக்கடனாக கருதி இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

நிச்சயம் அடுத்த ஐபிஎல் என் இந்தியக் குழந்தைகளின் கல்விப் பசியை ஆற்றும். அதுவரை இந்த ஐபிஎல்லை ரசிக்கலாம். ஓவ்வொரு ஆட்டமும் ஓவ்வொரு மாதிரியான முடிவுகளை தந்துக்கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் தேர்தல் போட்டி இன்னொரு பக்கம் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டி இவை இரண்டிற்கும் ஈடு கொடுத்துக் கொண்டிருக்கும் நம் ஐபிஎல்.

இனி சென்ற சிலநாட்களாக நடந்த சில போட்டிகளின் முடிவுகளும் சில முக்கியமான தருணங்களும்.

=====================================================================

46வது ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸும் பஞ்சாப் கின்ஸ் லெவனும் மோதியது. ஆடிய கிரவுண்டின் பெயர் அவுட்சூரன்ஸ். இன்சூரன்ஸ் கேள்விப்பட்டிருப்போ, இங்க விளையாடி யார் அவுட்டானாலும் ஏதாவது பணம் கொடுப்பார்களா என்ன? அப்படி கொடுத்தால் கொல்கத்தாவே அதிக பரிசை வெல்லும்.

மிகவும் சொற்ப ரன்களே எடுத்த டெல்லி டேர் டெவில்ஸ் தன்னால் முடிந்தது ஒரு 120 ரன்களை குவித்தது. ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டையை போட்டது ஸ்ரீசாந்தும் லீயும்.

இந்த முறை தில்ஷனும் வில்லியர்ஸும் ஏமாற்ற மிகவும் சிரமப்பட்டுதான் 120ஐ சேர்த்தது. கார்த்திக் தன் வாழ்கையில் மிகச்சிறந்த நாட்களை தென் ஆப்பிரிக்காவில் கழித்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் அடிக்க சிரமப்பட்டது பஞ்சாப். விக்கெட்டுகளை அதிகமாக இழக்கவில்லையென்றாலும் ரன் எடுக்க ஆடுகளம் ஏதுவாக இல்லாததால் 19வது ஓவரில் தான் வெற்றி காண முடிந்தது.

பஞ்சாப்பிற்காக சங்கக்காரா அருமையாக விளையாடி 43 ரன்கள் குவித்தார். ஒரு கட்டத்தில் இதையும் கூட அடிக்காமல் தோற்றுவிடும் நிலையில்தான் இருந்தது பஞ்சாப்.

யுவராஜ் அடித்த ஒரு பந்தை சேவாக் பிடித்து அடிக்க போய் கால் தவறி கீழே விழ, யுவராஜ் நட்பின் உரிமையில் நக்கலடித்தார் யுவராஜ். சுவையாக இருந்தது.

=====================================================================

47வது ஆட்டம் சென்னை சூப்பர் கின்ஸ் அணிக்கும் மும்பைக்கும் புனித க்ஜார்ஜ் பார்க்கில் நடந்தது. இவ்வளவு பெரிய கிரவுண்டை கட்டிவிட்டு, பார்க் என்று நக்கலடிக்கிறார்கள். அதை விடுங்கள். டெண்டுல்கர் சிறப்பாக ஆடி 62 குவித்தார். அவ்வளவு வேகம் இல்லை ஆட்டத்தில். ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. அவ்வளவு எளிதாக ரன் எடுக்க முடியவில்லை.

பின் வந்த சென்னைக்கும் இதே கதிதான். மும்பைக்காக நய்யார் நன்றாக ஆடி 33 சேர்த்தார். ஜெயசூர்யா, டெண்டுல்கர் மற்றும் நய்யார் ஆளுக்கு இரண்டு சிக்ஸர்கள் அடித்தார்கள்.

அந்த காலத்தில் கடப்பாக்கல்லில் கட்டிய சுவரைப் போல மும்பையின் வெற்றுக்கு முன்னால் தடையாக ஹேடனின் 60. இந்த ஐபிஎல்லில் மட்டும் இதுவரையில் ஹேடன் மொத்தமாக 546 ரன்களை குவித்துள்ளார்.

ரெயனா, தோனி, பத்ரி இவர்களுடன் சேர்ந்து உதிரிகளும் 20களில். மும்பையின் தோல்விக்கு 10 வைடும் காரணம்.

=====================================================================

யார்விட்ட சாபமோ கொல்கத்தாவை இப்படி துரத்துகிறது. எவ்வளவு அடித்தாலும் தோற்றுவிடுகிறது. சில சமயங்களில் பார்க்க பாவமாகக் கூட இருக்கிறது. அன்றும் வழக்கம் போலத்தான் ஆட்டத்தை தொடங்கியது கொல்கத்தா.

டெக்கானின் சிறந்த போலிங்கை சிறப்பாக எதிர்கொண்டது. மெக்கல்லம் ஆட ஆரம்பித்த போது இன்று மெக்கல்லம் இன்னொரு 84ஐ காட்டுவார் என்று எதிர்பார்த்தேன். கங்குலிக்கு அடுத்த ஐபிஎல்லில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான். ஆனாலும் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் தன் அனுபவத்தை 33ல் காட்டினார்.

இரண்டு “H”களும் சேர்ந்து ஆளுக்கு 40ஐ அடித்து கொல்கத்தாவிற்கு வெற்றிப் பாதையை காண்பித்துக் கொடுத்தது. இதை உபயோகப்படுத்திக் கொள்ளாமல் வாய்ப்பை தவறவிட்டது இந்த முறையும்.

கனவுகளை தகர்த்தது டெக்கான் ஷர்மா. கடைசி ஓவரில் 21 ரன்களை 10000 வாலா சரத்தை போல படபடவென வெடித்துத் தள்ளினார். வங்காளதேசத்தின் மொர்ட்டாசாவே அந்த ஓவரை வீசியது.

ஒரே ஓவரில் ஒரு வெற்றி கை மாறியது என்றால், கொல்கத்தாவின் ராசியை என்னவென்று சொல்ல. முன்னதாக கில்லி என்ற மின்னல் அதிவேகமாக தாக்கியது கொல்கத்தாவை. பின்னரும் சிமெண்ட்ஸ் என்ற இடி லேசாக இடித்துவிட்டு போக, மீதிக்கதை வரலாறு.

ஷர்மா வாழ்நாளின் சிறந்த ஐபிஎல் இனிங்ஸை ஆடியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல. அவரின் 32க்கு எடுத்து கொண்ட பந்துகள் 13 மட்டுமே. அதில் 3 பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.

=====================================================================

This entry was posted in பொது and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *