ஐபிஎல் – அது ஒரு கனாக்காலம்

இந்த பதிவை படிக்கும் போது நம்மில் பலருக்கு 20-20 உலகக்கோப்பைக்கான் இந்திய அணி தெரிந்திருக்கும். அதை பற்றி விரிவாக இன்னும் நிறைய நேரப்பிருப்பதால், அதை சற்று தள்ளி வைத்துவிட்டு இப்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்டங்களை பற்றி பார்ப்போம்.

27வது ஆட்டம்: கின்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

நேற்று நடந்த இரண்டு பெரிய ஆச்சர்யங்களில் முதலாவதை பார்ப்போம். இது இரண்டாவதை விட மிக பெரியது. காணக்கிடைக்காதது. ஆம். மெக்கல்லம் ரன் அடித்தார். இது மெக்கல்லத்துக்கே மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும்.

நமக்கே பேட்டில் படுகிறது, நமக்கு நேரம் வொர்க் அவுட்டாகிறது போலும், இந்த மேட்ச்சில் இருந்து நமக்கு வெற்றிதான் என்று கனவுற்றிருப்பார்.

எல்லாம் கொஞ்ச நேரம்தான். தூக்கத்தில் வரும் கனவுகள் கூட அவ்வளவு சீக்கிரம் முடிந்திருக்காது ஆனால் நம் மெக்கல்லம்மின் கனவு முடிவுற்றது. நல்ல கனவு ஓடிக்கொண்டிருக்கும் போது ஒரு வாளி பச்சைத்தண்ணீரை எடுத்து ஊற்றி எழுப்பியது போல அமைந்தது நடுவரின் தீர்ப்பு ஒன்று.

அதுவும் அது மிக முக்கியமான ஜெயவர்த்தேனே விக்கெட். நிச்சயமாக அதை சரியாக அவுட் என்றிருந்தால் கொல்கத்தா ஜெயித்திருக்கும். கொல்கத்தாவிற்கு நேரம் சரியில்லை தானே?

ஜெயவர்த்தனே இரண்டாவதாக கிடைத்த வாய்ப்பில் தன் அணிக்கு வெற்றியை ஈட்டித்தந்தார். கூடவே தன் பெயரில் ஒரு அரைசதமும் சேர்த்துக் கொண்டார்.

இர்ஃபான் பதானின் 16 பந்து 19 மிகவும் முக்கியமாக அமைந்தது. கடைசி நேரத்தில் அவர் அடித்த ரன் கொஞ்சமானாலும் வெற்றி இலக்குக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.

முன்னதாக ஆடிய கொல்கத்தா அணியின் ஹாட்ஜ் 70 ரன்களை அடித்து அணிக்கு வலுவை சேர்த்தார். கேல் ஏமாற்றிவிட்டு சென்றார். கேல் தன் பங்குக்கு 17 மட்டுமே அடித்தார்.

கங்குலியின் ஒரு சிக்ஸருடன் கூடிய 22 கொல்கத்தா அணி 150ஐ தொட உதவியது.

150 அடித்தும் அதை சரிவர் பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை கொல்கத்தாவிற்கு. மீண்டும் ஒருமுறை தன் தோல்விக்கு தானே வழியை தேடிக்கொண்டது பரிதாபம். இந்த தோல்விக்கும் மெக்கல்லம் தான் காரணம் என்று சொல்வது தவறு.

சரியாக 20வது ஓவர் முடிய பஞ்சாப் அணி வெற்றிக்கனியை சுவைத்தது. இர்ஃபான் கடைசி பந்தில் 1 ரன் தேவை என்ற நிலையில் ஃபோர் அடித்தார்.

உலகக்கோப்பைக்கும் செல்லும் இந்திய அணியில் இவரை சேர்த்தது சரியே என்று நிரூபித்த நிமிடம் அது.

28வது ஆட்டம்: ராயல் சேலஞர்ஸ் – மும்பை இந்தியன்ஸ்

இது அன்றைய இரண்டாவது ஆச்சரியம் இது. இல்லை, இல்லை. சத்தியமாக ராயல் சேலஞ் அணி வென்றதை நான் சொல்லவில்லை. அவர்கள் வெற்றி பெற்ற விதமும் அவர்களி வெற்றிபெறச் செய்தவர்களும்தான் ஆச்சர்யம்.

ஊத்தப்பா அடித்தார் என்று நான் ஸ்கோர் கார்டை ப்ரிண்ட்ஸ்க்ரீன் போட்டிருந்தால் கூட உங்களில் பலர் நம்பியிருக்க மாட்டீர்கள். அப்படிப்பட்டவர் அவுட்டாகாமல் கடைசிவரை நின்று 18.1 ஓவர்களில் வெற்றிபெறச் செய்தார் என்றால்? நம்பித்தான் ஆகவேண்டும்.

ராயல் சேலஞ் அணியின் ஸ்பான்ஸரான மல்லையா அவரை கிள்ளிப் பார்த்து கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டாலும் அது பொய்யாக இருக்காது.

வெற்றி இலக்கான 150ஐ அதிகாரப்பூர்வமாக அடித்து நொறுக்கியது ராயல் சேலஞ். ஒரு வேளை ஏழரை அவர்களை விட்டுச்சென்றதாலோ. நான் சொன்ன ஏழரை பீட்டர்சன்னின் ஏழரைகோடி.

நன்றாக கவனியுங்கள் ஆறரை கோடி பேர்களின் டீமும் இன்னொரு ஏழரை போனபிறகு நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை அவர்களை அதற்கு மேலோ அல்லது சற்று கீழான விலைக்கோ வங்கியிருந்தால் அவர்களும் ஆடியிருப்பார்களோ?

53க்கே 5 விக்கெட்டுகளை இழந்தபோதும் சுதாரித்து கொண்டு 149ஐ தொட்டது மும்பை. நன்றி ஜெயசூர்யா. தன் திறமையை முழுவதுமாக உபயோகபடுத்தி ஆடினார் ஜெயசூர்யா. அவருடன் ப்ராவோ சேர்ந்து சொற்ப ரன்களில் இன்னிங்ஸை முடித்து கொண்டிருக்க வேண்டிய மும்பை தப்பித்தது.

அங்கேயே சச்சின் டெண்டுல்கருக்கு அலாரம் அடித்திருக்க வேண்டும். அவர் கண்டு கொள்ளவில்லை போலும்.

ஆனாலும் ராயல் சேலஞ் அணி அப்படி ஜெயிக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

மலிங்காவின் முதல் ஓவரில் சிக்ஸர்கள் போனதிலேயே அன்று அவர்கள் தினம் என்று முடிவாகிப்போனது. தனது அடுத்த ஓவரில் மேடன் எடுத்தாலும், அந்த ஒரு ஓவர் கொடுத்த நம்பிக்கை வழக்கமாக ஊத்திக்கொண்டு போகும் ஊத்தப்பாவைகூட ஆடவைத்தது.

காலிஸ் தனது முழுத்திறைமையை வெளிபடுத்தியது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. காலிஸ் ஆடுவதை பார்ப்பதற்கே நன்றாக இருக்கும். அதிலும் அவர் அணியை வெற்றிபெறச் செய்யும் இன்னிங்ஸ் ஆடினால் கேட்கவா வேண்டும்.

விளாசித் தள்ளினார் காலிஸ். கூட ஜோடி சேர்ந்துகொண்டு ஊத்தப்பா ”நண்பா இது நம்ம நேரம்” என்று தன் பங்குக்குக் சில பல பந்துகளை க்ரவுண்டை விடடே விரட்டி அடித்தார். அவர் 42 பந்துகளில் 68ஐ அடித்தார். அதில் 8 பவுண்டரிகளும் 2 பவுண்டரிகளை தாண்டியும் பறக்க விட்டார்.

கும்ப்ளேவுக்கும் வெற்றிக்கும் ஏதோ பூர்வஜென்ம பந்தம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இப்படியே ஆடினால் ராயல் சேல்ஞ் செமிக்கு வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை.

காலிஸ் (59 பந்துகளில் 69. 2 சிக்ஸ் 5 ஃபோர்) அவரின் இந்த ஃபார்மை தொடர்ந்தாலே போதும். பார்க்கலாம்.

18.1 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றியின் இலக்கான 150ஐ அடைந்தது ராயல் சேலஞ்.

This entry was posted in ஐபிஎல்2, கிரிகெட் and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

One Response to ஐபிஎல் – அது ஒரு கனாக்காலம்

  1. T.P. Anand says:

    Bangalore dominated the match from start to finish. They started well by bowling a maiden over, that too, to the in-form deadly Jayasurya.

    Kumble was very impressive as Captain and for once the Bangalore team made a good collective effort.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *