ஐபிஎல் – வேகம் பிடித்த சென்னை எக்ஸ்பிரஸ்

சில தினங்களுக்கு முன் சென்னையில் மெட்ரோ ரயில் ஒன்றை மர்ம மனிதன் ஒருவன் இயக்கி அதை தெய்வமே என்று நின்று கொண்டிருந்த சரக்கு (அந்த சரக்கு இல்லைங்க!) ரயில் மீது மோதியதை படித்திருப்பீர்க்ள்.

அது அழிவுக்கு இழுத்துச் சென்ற செய்தி. இதே போல இங்கே ஐபிஎல்லிலும் நடந்தது. ஆனால் இது ஆக்கப்பூர்வமாக அமைந்தது. கேட்பாரற்று தவறான (தோல்வியை நோக்கி) பாதையில் போய்க் கொண்டிருந்த சென்னை எக்ஸ்பிரஸ்ஸை சரியான பாதையில் கொண்டு சென்று வெற்றிக்கு வழிவகுத்தது.

அந்த ரயிலை இயக்கிய அந்த மர்ம மனிதன் யாரென்று கண்டுபிடிக்கும் பொறுப்பு அரசாங்கத்திடம் தான் இருக்கிறது. அவர் யார் என்பதும் எனக்கு தெரியாது. ஆனால் இந்த ரயிலை இயக்கியவர் ஜகாதி. இவர் கோவா மாநிலத்தை சேர்ந்தவர். ரயிலை (போலிங்) ஓட்டத் தெரிந்தவர்.

டாஸ் ஜெயித்து ஆட தீர்மானித்தது மட்டுமின்றி கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தது போலும். சென்னை விஜய் ஹேடனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சற்றும் சளைக்காமல் ரன் சேர்த்தது, அணிக்கு நல்ல தளம் அமைத்துக் கொடுத்தது.

ஹேடன் அந்த ஆரன்சு கேப்பை யாருக்கும் தரமாட்டார் போலிருக்கிறது. அடமாக எல்லா மேட்ச்சிலும் குறைந்தது 30-40 அடித்து தக்க வைத்துக் கொள்கிறார்.

விஜய் நன்றாக விளையாடி தன் தார்மீக கடமையான ஹேடனுக்கு ஸ்டிரைக் கொடுப்பதை பொறுப்புடன் நிறைவேற்றினார்.

சென்னை 200ஐ தாண்டியிருக்க வேண்டும். தோனியிடமிருந்து (எத்தனை முறைதான் எழுதுவது) இன்னும் அந்த விளாசல் இனிங்ஸ் வரவில்லை. அதனால் சென்னை 178ஐத்தான் தொடமுடிந்தது. ஆனால் அதுவே டெக்கான் அணிக்கு எட்டாத கனியாக இருக்கும் என்று அப்போதே நினைத்தேன்.

விளாசல்தான் இல்லையே தவிர தோனியின் ஆட்டம் வேகமாகத்தான் இருந்தது. நாம் எதிர்பார்க்கும் தோனி வேறு. இந்தியனுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. டெண்டுல்கர் 100 அடித்து அவுட்டானாலும் அணியை ஜெயித்து கொடுக்கவில்லேயே என்று சொல்லுவோம். அப்படி அவர் ஜெயித்துக் கொடுத்தால், “அவர் திறமைக்கு இதெல்லாம் ஸ்லோ” என்று குறைகூறுவோம்.

நானும் இந்தியனே. தோனி 58ஐ அடிக்க எடுத்துக்கொண்ட பந்துகள் 37 தான். அப்படியிருந்தும், இதுக்குமேலேயா? ரொம்ப பேராசைதான் எனக்கு,

ரைனா வழக்கம் போல வந்து தூறல் போட்டுவிட்டு சென்றார். அவர் மழை பெய்தால் எப்படி இருக்கும் என்று உங்களுக்கே தெரியும். 19 பந்துகளில் 32 ரன்களை சேகரித்தார்.

சென்னை மேட்ச் முழுவதையும் கவனித்த போது அப்படியொன்றும் விளாசித் தள்ளியதாக தெரியவில்லை. 178ஐ கூட மிகச்சாதாரணமாக ஆடியதாகவே தெரிந்தது. குறிப்பாக தோனியின் ஆட்டம்.

178 என்று தெரிந்து ஆரம்பிக்கும் போதே, ஆரம்பத்திலிருந்தே அடித்தால்தான் உண்டு என்ற நிலையில்தான் டெக்கான் தன் ஆட்டத்தை தொடங்க வேண்டியதாயிற்று.

முதல் பந்திலேயே கில்லியை இழந்தது மிகப்பெரிய இழப்புதான். மோர்க்கெல் இந்த ஐபிஎல்லில் செய்த மிகச்சிறந்த காரியம் என்பதில் சந்தேகமே இல்லை. அவரிடமிருந்து சென்னை இன்னும் நிறைய எதிர்பார்க்கிறது.

கிப்ஸ் இந்த முறையும் ஏமாற்றிவிட்டு போக மறுபடியும் வேலை பளு ரோஹித்தின் மேல் விழுந்தது. லக்‌ஷம்ன் மேட்ச் ஆடியதற்கு சான்று அவர் ஃபீல்டிங் செய்தார், பேட்டிங் போது வந்து அவுட்டாகி போய் தன் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார்.

என்னை பொறுத்தவரை உண்மையிலேயே நேற்றைய ஸ்டார் ஸ்மித் தான். என்ன பலம். அப்படி ஸ்டைலாக ஒரு ஃப்ளிக். பந்து போய்க்கொண்டே இருந்தது. பவுண்டரியையும் தாண்டி.

அவருக்கு ஒரு அவுட் கொடுக்காமல் போனது, அவருடை கேட்ச் ஒன்றை விட்டது, ரன் அவுட்டை மிஸ் செய்தது என்று சில பல காமெடி சீன்களும் அடக்கம் இந்த மேட்ச்சில்.

அப்பாடா என்று சொல்லும் அளவுக்கு 49ல் அவுட்டாகி சென்னையை பெருமூச்சு விடச்செய்தார்.

ஆட்டம் முழுக்க சென்னையின் ஆதிக்கம் இருந்தாலும், ஒரு கட்டத்தில் ஜகாதி விக்கெட் எடுக்கவில்லை என்றால், முடிவு டெக்காம் பக்கம் போயிருக்க நிறைய வாய்ப்புகள் இருந்தது.

This entry was posted in ஐபிஎல்2, கிரிகெட் and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஐபிஎல் – வேகம் பிடித்த சென்னை எக்ஸ்பிரஸ்

  1. T.P. Anand says:

    I am very happy for Chennai and Dhoni. If Dwayne Smith had continued they would have wrapped up the match in 15 overs. Thanks for Jakati.

    I wish Chennai continues to play well and gets into Semi finals..

    Fortunes are changing rapidly with Hyderabad losing 3 matches in a row… today being a crucial day for both Hyderabad and Mumbai…..

  2. கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் ஆட்கள் மூவர் குழுவில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. ஜகாதி சூப்பர். இரண்டு முறை நான்கு விக்கெட்டுகள் அடுத்தடுத்த மேட்சில் எனக்கு தெரிந்தவரை அதிகம் பேர் செய்ததில்லை.

    கோவாவில் இருந்து இந்திய அணிக்கு போகும் முதல் வீரராக ஆனாலும் ஆச்சரியம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *