ஐபிஎல் – நின்றது டெக்கான் எக்ஸ்பிரஸ், மீண்டது சென்னை எக்ஸ்பிரஸ்

போன முறை முதலிடத்தில் வந்து கோப்பையை வென்ற அணியா அது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு தோல்வியை தழுவிக் கொண்டிருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.

போன முறை தோல்வியை மட்டுமே தழுவிய டெக்கான் வென்று கொண்டே இருக்கிறது. நாலுக்கு நாலு என்று அதிர வைக்கிறது கிரிக்கெட் ரசிகர்களை.

என்ன நடக்கிறது?

21வது ஆட்டம்: டெக்கான் சார்ஜர்ஸ் – டெல்லி டேர் டெவில்ஸ்

கிலியின் கில்லியான அதிரடி ஆட்டமும், கிப்ஸின் சூப்பர் ஃபார்மும் நம்மை கிள்ளி பார்த்து, நாம் காண்பது கனவா அல்லது நினைவா என்றளவிற்கு வெற்றி மேல் வெற்றியை குவித்த டெக்கான் சார்ஜர்ஸ் தன்னை போலவே வெற்றிகளை சந்த்தித்து வரும் சாத்தான் அணியை சந்திக்கிறது.

தொடருமா கிலியின் வெற்றி பாதை? சேவாக்கின் சாத்தான் அணி அதை தடுக்குமா?

52 ரன்களை தொட்ட போதே கிலி, கிப்ஸ் மற்றும் ரோஹித் ஷர்மா என தன் பலங்கள் அனைத்தையும் இழந்தது டெக்கான் அணி. மூவருமே பின்னுவார்கள் என்று அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் ஏமாற்றமே அவர்க்ள் தந்தது.

தளரவில்லை டெக்கான். வந்தான் ஸ்மித். விக்கெட்டுகள் சரிந்திருந்த போதும் தன் அதிரடி ஆட்டத்தையே தொடர்ந்தார். சந்தித்த 28 பந்துகளில் 48ஐ குவித்து டெக்கானை வீழச்சியிலிருந்து மீட்டார்.

மற்றபடி சொல்லும்படி இல்லாவிட்டாலும் பிலாய்க்கியாவும் சுமனும் (நடிகர் இல்லீங்க) கொஞ்சம் பொறுப்பாக ஆடி தலா 22 மற்றும் 23 ரன்களை சேர்த்தனர்.

முதலில் ஆடிய ஆட்டத்துக்கு தேருமா என்று சந்தேகத்தை எழுப்பிய டெக்கான் முடிவில் 148 ரன்களை குவித்து ”பார்க்காலாம், அடிச்சிருக்கோம், நல்ல ஸ்கோர்தான். முதல் இரண்டு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால் வாய்ப்பிருக்கிறது” என்ற ரேஞ்சில் போலிங் போட தொடங்கியது.

நல்லா போடிருக்கோம். அதிகம் இல்லை ஜெண்டில்மேன் 149 தான். சேவாக், கம்பீர், டீவில்லியர்ஸ் மற்றும் தில்ஷன் போன்ற பேட்ஸ்மேன்களை கொண்ட டெவில்ஸ்க்கு இது ஒன்றும் கஷ்டமான இலக்கு இல்லை.

அது என்னவோ இன்னும் நாம் சேவாக்கிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் அந்த சரவெடி ஆட்டம் வரவில்லை. அவரும் ஒரு சில ஆட்டங்களில் அடிக்கப் போகிறார் என்ற மாதிரி ஆரம்பித்தாலும் ஃப்ளாப்பாகி திரும்ப போய்விடுகிறார்.

தில்ஷானுக்கும் டிவில்லியர்ஸ்க்கும் ஏதோ டெஸ்ட் வைக்கிறாப்போலே ஆட்டதுக்கு ஆட்டம் அவர்களையே ஆடும்படி செய்கிறார். அவர்களும் சொல்வது கேப்டன் என்பதால் அவர் சொன்னதை காப்பாற்றுகிறார்கள்.

இந்த மேட்ச்சிலும் அப்படியே. ஒரு நிலையில் மேட்ச் நம் கையில் என்று டெக்கான் நினைத்தது. நினைப்பை தவிடு பொடியாக்கிய பெருமை தில்ஷன் மற்றும் கார்த்திக்கை சேரும்.

கார்த்திக் ஆடி நான் பார்க்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு இன்ரு நினைவாகியது. பொறுப்புடனும் அதே சமயத்தில் அதிரடியாகவும் ஆடி அணியை வெற்றி பெற பெரும் உதவி செய்தார். தன் பங்குக்கு 30 பந்துகளில் 41 ரன்களை சேர்த்தார்.

தில்ஷன் தான் ஆட்டத்தின் ஸ்டார். நிதானமாக ஆடினாலும் ஆட்டத்தின் நிலை உணர்ந்து ரன் ரேட் கீழே சரியாமல் பார்த்து கொண்டதில் அவரின் திறமை அபாரம்.

ஆட்டத்தின் கடைசியில் எட்வர்ட்ஸ் உடனான விளையாட்டு ரீதியான சண்டையில் இரண்டு சிக்ஸர்க்ளை பறக்க விட்டது தில்ஷனின் ஆக்ரோஷத்தையும் காட்டியது.

அந்த சின்ன சண்டை எனக்கு பிடித்திருந்தது. எட்வர்ட்ஸ் தோற்றாலும் அவரின் ”போட்டிக்கு நான் ரெடி” குணம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

22வது ஆட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ்

ஹேடன் சோபிக்கவில்லை. நம்ப முடிகிறதா? நான் டிவியை திருப்பிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இந்த முறை ஐபிஎல் சென்னைக்கு இல்லை என்று நினைத்து நொந்து கொண்டேன். ரைனா வந்தார் வென்றார். இந்தியாவின் எதிர்காலத்தில் ஒன்று இன்று பிரகாசமாக ஒளி வீசியது.

சுழற்பந்து வீச்சாளர்களை வார்னே அறிமுகபடுத்தியது ரைனாவை தூண்டிவிட்டு தப்பான ஷாட் மூலம் விக்கெட் எடுக்கவே. ஆனால் அது பலிக்கவில்லை. தன்னுடன் ஜோடி சேர்ந்த பத்ரியும் நன்றாக ஆட அணியின் ஸ்கோரை உயர்த்தினார் ரைனா. 10வது ஓவர் முடிய சென்னை 80களில். சென்னை 160வதை தாண்டும் என்ற நம்பிக்கை வந்தது.

10 ஓவர் முடிவில் வரும் ப்ரேக்கில் அனேக அணிகள் பறிகொடுத்துக் கொண்டிருக்கின்றன. சென்னையும் அதற்கு விதிவிலக்கல்ல. பத்ரி ஆட்டமிழந்தார். அவர் ஆட்டம் இழக்க ஓட்டம் எடுக்கும் வேகமும் சற்று குறைந்தது. சடாரென்று ஓரமும் ஆட்டம் இழக்க, இப்போது 160வதை தொடுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் அது தவறான கேள்வி என்று நம்மை திருத்தியது போல இருந்தது ரைனாவின் அதிரடியும் தோனியின் ஓட்ட வேகமும்.

ரைனா சதம் அடித்துவிட்டார் என்று தப்பாக அவர் அணியினர் எழுந்து நின்று கைத்தட்ட அப்போது அவர் 98 மட்டுமே எடுத்திருந்தார். அப்படி செய்யாமல் இருந்திருந்தால் தோனியும் சரி ரைனாவும் சரி வாய்ப்பை நழுவ விட்டிருக்க மாட்டார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 164ஐ தொட்டது.

ஸ்மித் போன மேட்ச்சில் காட்டிய நிதானதிற்கும் யூசுப் பதான் காட்டிய அதிரடி ஆட்டத்துக்கும் இது போதுமா?

போதுமானதாக இருந்தது. மறுபடியும் ரவீந்த்ர ஜடேஜாதான் பரிமளித்தார். மற்றபடி நாம் எழுதக்கூட வாய்ப்பளிக்கவில்லை ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள். யூசுப் நன்றாக ஆட ஆரம்பித்தபோது அவுட்டானது ராஜஸ்தானின் துரதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சென்னைக்காக பாலாஜி அருமையாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராஜஸ்தானின் வெற்றி வாய்ப்பையும் தூரத்தள்ளினார்.

மோர்க்கெல்லும் ஓரமும் ஆளுக்கு ரெண்டு விக்கெட் எடுத்து சென்னையின் வெற்றியை ஊர்ஜிதம் செய்தனர்.

இந்த ஆட்டத்தில் சென்னை சென்னை சென்னையே இருந்தது. அதிலும் ரைனா ரைனா ரைனாவே மிளிர்ந்தார். பாலாஜியும் தன் பங்கை கொடுத்தார்.

This entry was posted in பொது and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

One Response to ஐபிஎல் – நின்றது டெக்கான் எக்ஸ்பிரஸ், மீண்டது சென்னை எக்ஸ்பிரஸ்

  1. டெக்கான் நின்றதும் சென்னை வென்றதும், இந்த ஐ பி எல்லில் இன்னும் சுவாரசியத்தை கூட்டியிருக்கிறது.

    சென்னை இன்னும் நன்றாக விளையாடவேண்டும். இங்கிலாந்து வீரர்கள் அதிகம் இல்லாததும், ஆஸ்திரேலியர்களில் ஓய்வுபெற்றுவிட்ட ஹேடன் மட்டுமே இருப்பதும் சென்னைக்கு ஐபிஎல்-2 இரண்டாவது பாதியில் சென்னைக்கு சாதகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *