தேர்தல் 2009 – தேர்தலால் தேறப்போவதில்லை இந்தியா

நான் இந்த பதிவை போட முதலில் முற்படவேயில்லை. ஆபிஸ் வட்டாரங்களில் காரசாரமாகவும் சற்று தமாஷாகவும் தேர்தலை பற்றியும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், இந்தியாவின் எதிர்காலத்தை பற்றிய அதன் நிலைப்பாடுகளை பற்றியும் அலசி ஓய்ந்து போனதில், நாளை தேர்தல் என்றிருக்கும் போது இந்த பதிவு தேவையா என்ற கேள்வி எழுந்து, வேண்டாம் என்ற பதிலும் உடனே எழுந்தது.

ஆனால் சுமார் 9 மணி அளவில் திடீரென்று மின்சாரம் ரத்தாகிப் போக, என் உடம்பிலிருந்து வியர்வை ஆறாக ஓட, இதற்காகவே ஆளும் கட்சியான காங்கிரஸை பற்றியும் அதன் தோழமை கட்சியான திமுகவை பற்றியும் சிந்திக்க வேண்டியதாயிற்று. இல்லை, அப்படி சொல்வது தவறு. அவர்கள் இருக்கிறார்கள் என்ற ஒன்றையே மறக்க முற்படப்போகிறேன்.

நாளை ஓட்டுப்பதிவு இன்று மின்சாரம் இல்லை. அதுவும் கத்திரிக்கோடையில் வியர்வை நீரோடையில், நினைக்க நினைக்க வயிறெரிகிறது இந்த நிலைகெட்ட மாந்தரைக் கண்டால்.

ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 12 மணி நேரமே இருக்கும் நிலையில் இப்படி மின்சாரத்தால் தாக்கப்பட்டவர்கள் நிச்சயமாக ஆளுங்கட்சிக்கு எதிராகப் போவது திண்ணம். இன்று மதியம்தான் என் இரு நண்பர்கள், கழகக் கண்மணிகள் ஆளுங்கட்சியைப் பற்றி விட்டுக்கொடுக்காமல் பேசினார்கள்.

மேம்பாலம் அமைத்தார், சாலைகள் போட்டார், 100 நாட்களுக்கு வேலை அது இது என்று. சிறுவயதில் சமூக அறியியல் புத்தகத்தில் அவர் மரம் நட்டார், இவர் சாலை அமைத்தார் என்று படித்திருக்கிறேன். ஒருவேளை தன் பெயரும் சாலை அமைத்தவர் லிஸ்டில் வரவேண்டும் என்பதற்காக இப்படி சாலைகள்(மட்டும்) அமைத்துக் கொண்டிருக்கிறார்களா என்ன?

சோனியாவை அன்னை என்று சொல்லலாம், ஆனால் ஜெயலலிதாவை அம்மா என்று சொல்லக்கூடாது. சோனியா இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்த குடிமகளாயிற்றே. எப்படி என்றெல்லாம் கேட்கக்கூடாது. அப்படித்தான் சொல்வோம். சோனியாவின் தியாக உள்ளத்தை அறிவீர்களா நீங்கள்?

சோனியாவுக்கும் நடந்த ஆட்சிக்கும் எந்த சம்பதமில்லைதானே? ஆமாம், எல்லா முடிவுகளுமே மன்மோகன் தானே எடுத்தார். அப்படியென்றால் சோனியாவிற்கு தேர்தலில் என்ன வேலை? எதுவுமே செய்யவில்லையென்றால் ஓரமாக உட்கார வேண்டும்.

இல்லை, இல்லை..எல்லாமே என்னைக் கேட்டுத்தான் எடுக்கப்பட்டன என்றால் மன்மோகன் பொம்மையா? அவரையா சிறந்த தலைவர் என்கிறார்கள்? மன்மோகன் மற்றும் இதர காங்கிரஸார் அன்னையின் ஆணைப்படி நடக்கலாம், ஆனால் இங்கே ஜெயலலிதாவிற்கு பணிந்து அவர் கட்சியினர் நடந்தால் அது கேள்விக்குரியது.

என்ன..சோனியா என்னத் தியாகம் செய்தாரா? இது மாதிரி குறுக்கு கேள்வியெல்லாம் கேட்டால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் கழகக் கண்மணிகளுக்கும் சரி தமிழ் தந்தைக்கும் சரி, பதில் தெரியாது. தெரியாத பதிலை சொல் சொல் என்றால் கொல் கொல் என்று சிரிக்கத்தான் முடியும்.

அதற்காக ஜெயலலிதா உத்தமர், அவருக்கே உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வீசுங்கள் என்று கூறவில்லை. தனி ஈழம் என்பது சாத்தியமில்லை என்று அதைச் சொன்ன ஜெயலலிதா உள்பட எல்லோருமே நன்கு அறிவோம். இனப்படுகொலையை வேடிக்கை பார்த்ததற்கு தனி ஈழத்துக்கு பாடுபடுவோம் என்பது எவ்வளவோ மேல்.

மின்சாரம் சரியாக வழங்காதது
ஸ்பெக்ட்ரம் முறைகேடு
பிஎஸ்என்எல் ஊழல்
கொலை/கொள்ளை நடக்கும் விகிதம்
கட்டப்பட்ட போலீஸின் கைகள்
சட்டக்கல்லூரி மாணவர்களின் அடிதடி
போலீஸ் / வக்கீல்கள் மோதல்

இவையெல்லாம் இந்த ஆட்சியின் கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரகற்கள்.

”சாளரத்தின்” பதிவில் மேய்ந்து கொண்டிருக்கும்போது மதுரையில் பணநாயகம் விளையாடுவதை அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்ள முடிந்தது. என் அருமை நண்பர் ஒருவர் கேட்டார், அங்கே பல லட்சப் பிணங்கள் தரையில் கொட்டிக்கிடக்கின்றன இங்கே பல லட்சங்களை கொடுத்து வோட்டு வேட்டையா?

தனிமனிதன் சாவிற்காக ஒரு மனித இனத்தையே அழித்ததை தன் ஆட்சிகால சாதனையாக சொல்லிக்கொள்ளலாம் காங்கிரஸ். இவ்வளவு அரசியல் தமிழர்களுக்கு எதிரான இந்த கட்சியை கூடணியில் வைத்துக் கொண்டிருப்பது திமுகாவை சந்தேகிக்க வைக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அன்னையும் பிள்ளையும் தமிழ் ஈழப்படுகொலையை பற்றி எத்தனை அறிக்கைகள் விடுத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். அதற்கு முன்னால்? நான் முன்னாலேயே சொன்னேன். குறுக்கு கேள்வி, எதிர்கேள்வி இந்த இரண்டுமே கூடாது என்று.

கருணாநிதி விடியற்காலை சிற்றுண்டி முடித்துக் கொண்டு இரண்டு கூலர்கள், மனைவிகள், மருத்துவர் சகிதம் கார்பரேஷனின் அனுபதியில்லாமல் உ.மு உ.பி இருந்தாராம். ராஜபக்சே கொஞ்சமும் யோசிக்காமல் போரை முடித்துக் கொண்டாராம். அன்றே வந்த நாளிதழில் ராஜபக்சே தன் காரைக் கூட நிறுத்தவில்லை என்று அறிக்கை விடுத்திருக்கிறார்.

அன்னை சோனியாகாந்தியை தியாக திருவிளக்கு என்று கூறிய கருணாநிதி அவர்கள் அன்னை செய்த தியாகத்தையும் பட்டியலிட்டு இருக்கலாம்.

நாமும் நடந்தவை எல்லாவற்றையுமே மறந்து போய்விடுகிறோம். எனக்கு முகமது பின் துக்ளக் படம்தான் நினைவில் வருகிறது. சோவும் பீலீசிவமும் நாட்டு மக்களை திருத்த வேண்டி துக்ளக்காகவும் பதுதாவாகவும் வேடமேற்று மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியில் அமர்வர்.

துக்ளக் பல அபத்தமான வேலைகளை நாட்டின் வளர்ச்சிக்காக என்று சொல்லி முடிந்தவரை தன் பெயரை கெடுத்துக்கொள்வார். சமயம் வரும்போது உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை திருத்துவதுதான் அவர்களின் எண்ணம்.

க்ளைமாக்ஸ் காட்சியில் உண்மையை சொல்ல முற்படும்போது பதுதாவை தடுத்து நிறுத்தும் துக்ளக், இதை நாம் ஏன் சொல்ல வேண்டும். நாமும் அனுபவித்து விட்டு போகலாமே என்று மனம் கெட்ட வழியில் போக, அதையே பதுதாவிடமும் தெரிவிக்கிறார்.

பதுதா அதை ஏற்காமல் உண்மையை சொல்கிறார். துக்ளக் பதுதாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகவும் அவன் பிதற்றுவதாகவும் கூற, மக்கள் பதுதாவை கல்லால் அடிப்பார்கள்.

இந்த மக்களை மாற்ற முடியாது என்று முடிவுசெய்த பதுதா மனம் வருந்த துக்ளக் பழையபடி காமெடி அரசியலைத் தொடருவான். அந்த காலத்திலேயே அரசியல் நாடகத்தை பார்த்து உணர்ந்தவர்கள்தான் நாம். இருந்தும் ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் மெய்யன கூறி அதை மெய்யாக்கும் அரசியல் தலைவர்களை இனங்கண்டு கொண்டும், மறுபடியும் அவர்களையே அதற்கு தீர்வு காண அழைப்பது உலகின் மிகச்சிறந்த நகைச்சுவை.

சத்தியாமாகச் சொன்னால், யாருக்கு வோட்டுப் போட்டால் நாடு முன்னேறும் என்ற கேள்விக்கு விடைதெரியாமல்தான் இந்த பதிவை எழுதினேன், எழுதி முடித்தும் விட்டேன். இன்னும் என் குழப்பம் தீரவில்லை. உங்களுக்கு குழப்பம் தீர்ந்திருந்தால் நல்ல கட்சியை தேர்ந்தெடுங்கள். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது 49ஓ.

சன்னில் வந்த ஃப்ளாஷ் நியூஸ்: தேர்தல் நேரத்தில் ஆளும்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த சதி – சென்னையில் மின்கம்பிகள் அறுப்பு. மின்வாரியம் உடனடி நடவடிக்கை. சமூக விரோதிகள் 4 பேர் கைது.

ஜெயாவில் வந்த ஃப்ளாஷ் நியூஸ்: சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திட்டமிட்டு மின்சாரம் துண்டிப்பு – வாக்காளர்களுக்கு திமுகாவினர் பணம் வினியோகம் – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் முறைகேடுகளில் ஈடுபட திமுகாவினர் சதி செய்வதாக புகார்.

This entry was posted in பொது and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *