Home » பொது

தேர்தல் 2009 – நந்தவனத்தில் ஓர் ஆண்டி

17 May 2009 2 Comments

நந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய்
குயனை வேண்டி – கொண்டு
வந்தான் ஒரு தோண்டி
அதை கூத்தாடி கூத்தாடி
போட்டுடைத்தாண்டி
நந்தவனத்தில் ஓர் ஆண்டி

பணம் 10 அல்ல 28 செய்திருக்கிறது. தமிழன் தன்மானத்தை விற்றுவிட்டான். தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு மின்சார ரத்து திட்டமிட்ட சதியா அல்லது கலைஞர் சொன்னது போல அமூக விரோதிகளின் சதியா? நான்கு சமூக விரோதிகள் பிடிபட்டனர் (அன்றே) என்ற செய்தி வந்தும், அந்த நான்கு பேரை வெளிச்சத்துக்கு கொண்டுவராததேன்? ஒரு வேளை அவர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பதாக வாக்களித்தனரோ? இப்படி மொத்தமாக பணத்தை மட்டுமே காரணமாக சொல்லிவிட முடியாது. இன்னும் சில காரணக்களும் உண்டு.

தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளும் முற்றிலும் பொய்யாய் போனது. தமிழக அளவிலும் சரி தேசிய அளவிலும் சரி, மக்கள் வாக்களித்து தேர்த்தெடுத்தது கொஞ்சம் என்றால், ஆளுங்கட்சி தன் பண பலத்தையும் ஆள் பலத்தையும் உபயோகபடுத்தி தன்னைத்தானே தேர்ந்தெடுத்துக் கொண்டது அதிகம்.

முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி நவீன்சாவ்லாவை காங்கிரஸ் சார்ந்தவர் என்றும், அவரை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். நடந்ததா? இப்பொழுது காங்கிரஸ் பெற்றிருக்கும் வெற்றி கோபால்சாமியின் குற்றசாட்டுகளை ஊர்ஜிதம் செய்துவிட்டது.

கள்ள ஓட்டும் பணக்கட்டும் ஆளும்கட்சியை வெற்றிக்கு இட்டுச்சென்றது. எதிர்கட்சியை தோல்வி என்ற தளத்தில் கட்டிப்போட்டது.

தேர்தல் நாள் என்னவென்று தெரிந்து கொள்ள சிரமப்பட தேவையில்லை. கறுப்பு வெள்ளை உடையணிந்த கூட்டம் அதிகம் காணப்பட்டால் அதுவே தேர்தல் நாள் என்று அறிந்து கொள்ளலாம். பழக்க தோஷத்தில் பல க.வெ.யினர் பலர் தேர்தலுக்கு அடுத்த நாளும் வாக்குச்சாவடிக்கு சென்றார்களாம். நகைச்சுவைக்கு அப்பாற்பட்டு இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம், நாம் எல்லாவற்றையும் “நமக்கென்ன ஆச்சு” என்று தள்ளிப்போக இப்போது அடிமடியிலேயே அவர்கள் கைவைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்னும் நாம் ஜனநாயக நாடு அது இது என்று பேசிக்கொண்டிருப்பது அத்தனையும் சுத்த ஹம்பக்கு. இனியும் நாம் நம் உரிமைகளை விட்டுக்கொடுத்தோமேயானால், நாம் எதை பற்றியும் கேள்விக்கேட்க தகுதியற்றவர்களாக போவது உறுதி. திரும்ப திரும்ப இதுபோன்று ப்ளாக் போட்டுக்கொண்டும், இது போன்ற ப்ளாகுக்கு பாராட்டியோ திட்டியோ கமெண்ட்ஸ் போட வேண்டியதுதான். இதுவும் பறிக்கப்படும் வரையே.

அனாயசமாக பாஜகாவின் கோட்டையான பல இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. இது என் சந்தேகம் மட்டுமா அல்லது மக்களின் சந்தேகமுமா என்று சரிவரத் தெரியவில்லை. ஆனால் இதை பற்றி பாஜக இதை பற்றி இன்னும் ஒரு வார்த்தை பேசவில்லை.

தீவிரவாதிகளினால் சூறையாடப்பட்ட மும்பையிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். மும்பை போன்ற நகரங்களில் இது போன்று சம்பங்கள் அவ்வப்போது நடப்பது சாதரணமே என்று கூறிய காங்கிரஸ் நிர்வாகிகளை மறந்திருக்கலாம், ஆனால் பறிபோன உயிர்களையுமா மறந்துவிட்டோம். சந்தேகம் வலுக்கிறது. தோற்கும் என்று எதிர்பார்த்த இடங்களில் எல்லாம் அமோக வெற்றியை அடைந்திருக்கிறது.

இந்தியாவின் பணவீக்கம் இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு எந்த வீக்கத்தையும் காட்டாமல் ஓட்டு எண்ணிக்கையின் அளவே வீங்கி வெற்றி பெற்றதும் அத்தைக்கு மீசை முளைத்த அனுபவத்தை கொடுத்திருக்கிறது. இனிமேல் யாரும் அத்தைக்கு மீசை முளைக்குமா என்று கேட்கக்கூடாது.

மக்கள் தேசிய அளவிலும் மாநில அளவிலும் மாற்று அரசு அமைத்திட தங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு சில கட்சிகளின் முகத்திரையை கிழித்தெறிந்திருக்கிறார்கள் என்பது நாட்டிற்கு நல்ல செய்தியாகவே நான் கருதிகிறேன்.

உதாரணத்திற்கு தேசிய அளவில் கம்யுனிஸ்ட்டும் மாநில அளவில் பாட்டாளி மக்கள் கட்சியும் தழுவிய தோல்வி. இந்தியாவில் ஒரு சிறு பகுதி மக்களே கம்யுனிஸத்தை சார்ந்தவர்கள். ஆனால் இதை உபயோகபடுத்திக் கொண்டு ஆளும்கட்சியை ஆட்டிவைத்துக் கொண்டிருந்தார்கள்.

அதே போல பாமகவும் ஒரு சமயத்தில் திமுகவுடனும் மற்றொரு சமயத்தில் அதிமுகவுடனான கூட்டணியில் சேர்ந்து குளிர் காய்ந்து கொண்டிருப்பதை நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பாமகவின் இந்த தேர்தல் தோல்வி அவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்று எதிர்பார்ப்போம். மாநிலங்களவைத் தேர்தலிலும் திமுகவிற்கோ அல்லது அதிமுகவிற்கோ பெரும்பான்மையை அளித்து ஆட்சியில் உட்கார வைப்பதே தமிழகத்தின் வளர்ச்சிக்கு நல்லது. இல்லையென்றால் ஜாதியை காட்டி ஓட்டைப் பிரிக்கும் சில சின்னச்சின்ன கட்சிகள் இதை ஒரு சாக்காக பயன்படுத்தி மூட்டை மூட்டைகளாக நம் பணத்தை சூரையாடிவிட்டு போகும்.

அதே சமயம் ஒரு நல்ல கட்சி நல்லாட்சி சிந்தனையுடன் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடும் ஒன்றாக இருந்தால் அதை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.

தேசிய அளவில் பார்த்தோமேயானால், என்னை பொறுத்தவரை மக்கள் ஒரு வகையில் நல்லதையே செய்திருக்கிறார்கள்.

ஒன்றை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். முன்பொரு சமயம் தமிழர்களான நாம் காஷ்மீரப் பிரச்சனையை வைத்து தேர்தலில் வாக்களித்தோமா என்றால், இல்லையென்றுதான் பதிலாக இருக்கும். அதுவே இந்து-முஸ்லிம் பிரச்சனை மாநிலங்கள் வரையில் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுதியது. இந்து-முஸ்லிம் பிரச்சனை என்பது எங்கும் வியாபித்திருக்கிற நாராயணனைப் போல.

நம் நாட்டில் நடக்கும் நமக்காக நடக்கும் நம் பிரச்சனைக்கே/போருக்கே இந்த கதி என்றால், வேறொரு நாட்டில் நடக்கும் தமிழின படுகொலையை எப்படி தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்கள் எதிர்க்கும் என்றும் எதிர்பார்க்க முடியும். ஒருவேளை தமிழ்சார்ந்த கட்சிகள் இலங்கை பிரச்சனையின் ஆழத்தை மற்ற மாநிலங்களுக்கும் கொண்டு சென்றிருந்தால் தேர்தலில் தாக்கம் இருந்திருக்குமோ என்னவோ. குறைந்தது பாஜகவினராவது அதி எடுத்துச் சென்றிருக்கலாம்.

பாரதிய ஜனதாவோ அல்லது காங்கிரஸோ எந்த கட்சி ஆட்சியை பிடிக்கிறது என்பதல்ல பிரச்சனை. ஆனால் இன்னுமொரு தொங்கு நாடாளுமன்றம் வந்துவிடுமோ என்ற அச்சமே என்னை தேர்தலுக்கு தேர்தல் பெரிதும் தாக்குவது. இந்த முறை வெளியான ரிசல்ட் மறுபடியும் இலங்கை அரசுக்கு ஆதரவு தந்துகொண்டிருக்கும் காங்கிரஸைத்தான் தேர்ந்தெடுத்திருந்தாலும், ஒரு முக்கியமான நன்மை இதில் இருக்கிறது. அது ஒரு தேசிய அளவிலான கட்சியை பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறச்செய்திருப்பது.

ஆளுக்கு கொஞ்சம், மீதிக்கு அங்கே இங்கே என்று பல மாநில அளவிலான சிறிய கட்சிகளின் உதவியை பெற்று ஆட்சியமைத்தால், எங்களுக்கு இதை கொடுத்தால்தான் ஆச்சு என்று ஆளாளுக்கு தலையெடுத்தாட, ஆளும்கட்சி தன் பெரும்பான்மையை நிரூபிக்க அவர்கள் காலில் விழுவதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது 260 இடங்களை பெற்றிருக்கும் காங்கிரஸுக்கு இந்த தொல்லையில்லை என்பது தின்றது பாகற்காயென்றாலும், அது சர்க்கரையை கட்டுபடுத்தும் சந்தோஷத்தை தருகிறது. அது பாகற்காய்தானா? சர்க்கரையை கட்டுபடுத்துமா? போன்ற கேள்விகள் இரண்டவது பட்சம். சர்க்காரை பலம் கொண்டதாக்கும் என்ற நிலை நல்லதே.

இப்படி பெரும்பான்மையை பெற்றிருப்பது இன்னொரு விதத்தில் நல்லதே. அது, ஆளும்கட்சி நிச்சயமாக மக்களுக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும். மற்றும் அரசு எதைச் செய்தாலும், பிற தோழமை கட்சிகளின் வற்புறுத்தல்கள் என்று பழிபோட முடியாது. அரசு செய்வதெல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகும் நிலை மக்களுக்கு உகந்ததுதானே.

பாஜக அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற கட்சியில் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டும். கட்சியில் இளரத்தங்களை பாய்ச்ச வேண்டும். வாஜ்பாய் இல்லாதது ஒரு இழப்பு என்றால், ராகுல் காந்தி காங்கிரஸின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம்.

பாஜக தன் சிவசேனா நிலையிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளிவரவேண்டும். எதிர்கட்சியினர் ஒரு சராசரி சிவசேனை அடித்தள தொண்டனை பணத்தால் அடித்து விலைக்கு வாங்கி பிரச்சனையை கிளறி, பழியை பாஜகவின் மீது போட அவ்வளவு கஷ்டம் இல்லை. இதற்காகவாவது பாஜக இந்துத்துவாவில் தன் நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

பாஜக இளரத்தங்களை பாய்ச்சும் அதே நேரத்தில் ராகுல் அரசியலில் கொட்டை போட்டிருப்பார். இப்பொழுதே மன்மோகன் ராகுலை ஆட்சியில் ஒரு பொறுப்பேற்க வேண்டும் என்று அன்னையிடம் வேண்டுகோளை வைத்துவிட்டார்.

தமிழிசை செளந்தரராஜன் சன்னுக்கு அளித்த பேட்டியில் தன் கட்சியில் அதிக இடங்களில் போட்டியிட ஆட்கள் இல்லையென்று கூறியது கட்சி மாநில அளவில் வளர பெரிய தடைக்கல். 2004லிருந்தே 2009ல் தேர்தல் வரும் என்று தெரிந்திருந்தும் கட்சியை வளர்க்காமல், 4 வருடங்களாக மக்களை நேரடியாக சந்திக்காமல் நாடி பிரியும் நேரத்தில் நாராயணா என்றால் நடக்குமா.

இது மாநில அளவில் அதிமுகவிற்கும் பொருந்தும். நானும் கூட இந்த தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவே பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எண்ணினேன். இங்கே தமிழகத்தின் முடிவில் பணம் விளையாடியிருப்பது மானக்கேடு. பலர் சொல்வது போல ஆயிரமோ ஐநூறோ பெற்றுக்கொண்டு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தன்னையும் தன் வாழ்க்கையையும் அடமானம் வைத்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய தடைக்கல்லாக இருக்கும் என்பதில் சிறுதும் சந்தேகமில்லை.

இந்த பணப்பட்டுவாடா வளரக் காரணமாயிருந்த புல்லுருவிகளை களைந்தெரிவது அவசியம். இந்த புல்லுருவிகள் வளர்வது நாட்டின் வளர்ச்சிக்கு கேடு. எப்படியோ ஓட்டுகள் விலைக்கு போகத் தொடங்கிவிட்டது. நான் என் முந்தைய பதிவில் சொன்னது போல தேர்தல் ஆணையம் மாற்றமும் புதிய அணுகுமுரையும் கொண்டுவராவிட்டால், நாம் யாருமே ஓட்டு போட போகமலேயே, கட்சிகளே கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்துவிடும் நிலைக்கு நாம் தள்ளப்படுவது உறுதி.

இப்போது தேர்தலை சந்திக்கும் பல திட்டங்களில் ஒன்று ஓட்டை பிரிக்கும் திட்டம். எனக்கு தெரிந்து புதிதாக முளைத்துள்ள ஒரு கட்சி ஓட்டை பிரிப்பதற்கே வளர்க்கப்பட்டது என்று கூறுகிறார்கள். இது மக்களை ஏமாற்றும் வேலையில்லையா? அதுபோன்ற கட்சிகளை நாம் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டாமா?

வருங்காலத்தில் ஓட்டுக்கள் நல்ல விலைக்கு விற்கப்படும். நாமும் பேரம் பேசலாம். ”என் பணத்தைதானே அவன் எனக்கு திரும்ப கொடுக்கிறான், வாங்கிக் கொள்கிறேன்” என்று பாமர மக்களைப் போல இந்தியா முழுவதும் சிந்திக்க ஆரம்பிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

காங்கிரஸ் இந்த முறையாவது தன் எம்பிக்களுக்கு நல்லது செய்வதை உதறிவிட்டு நாட்டுக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் என்ற நம்பிக்”கை”யில் இருக்கிறேன். நம்பி கைக்கு வாக்களித்திருக்கும் நம் நாட்டு மக்களுக்கு கை கொடுக்கும், வாழ்க்கை தரத்தை கை மேலும் உயர்த்தும் என்று நம்பும், கைக்கு தேர்தலில் கை கொடுக்காவிட்டாலும் வெற்றி பெற்றதற்கு கை கொடுக்கும் சராசரி இந்தியன்.

2 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.