ஐபிஎல் – கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சரி கொல்கத்தா நைட் ரைடைர்ஸுக்கும் சரி முந்தாநாள் அவங்க நாள் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு நேர் மாறாக அது டிவில்லியர்ஸ் மற்றும் யூசுப் பதானின் நாள் என்று கூட குறிப்பிடலாம்.

சனாகண்ணன் அவரது பதிவில் சொன்னது போல ஃப்ளிண்டாஃபை ஏழரைகோடிக்கு வாங்கியது மிகப்பெரிய முட்டாள்தனம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. கடைசியாக கிடைத்த தகவலின் படி அவருக்கு காலில் காயம் காரணமாக அறுவை சிகிச்சைக்காக ஊருக்கு கிளம்புவதாக படித்தேன். அது உண்மையாக இருந்தாலும், இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் இழப்பு இது என்று சொல்ல முடியாது. கடந்த மூன்று ஆட்டங்களிலும் அவர் பந்து வீசுவதையும் பேட்டிங் ஆடுவதையும் பார்த்தால் “கிளம்பு காத்து வரட்டும் “ என்று சொல்லும் அளவுக்கே உள்ளது. ஏதோ தென் ஆப்பிரிக்காவை சுற்றி பார்க்க வந்தவரைப் போலத்தான் அவரது ஆட்டம் அமைந்தது.

அவருக்கு தன் காலில் பிரச்சனை(காயம்) இருப்பது தான் ஏலம் விடப்பட்டதிற்கு முன்னாலேயே தெரியுமா? அல்லது தெரியாதா? அப்படி தெரிந்திருந்தாலும் அதை அவர் சொல்லவில்லை என்றாலும், ஒரு வீரரை அணியில் சேர்க்கும் போது அவரது உடற்தகுதியை பார்ப்பதில்லையா? தோனி யோசிக்க வேண்டும்.

எங்கே எனதருமை தமிழக வீர்ரகள்?

ஹேடன், பார்த்திவ், ரைனா ரன் ஏதும் அடித்திருக்கவில்லை என்றால் சென்னை கிங்ஸ் வெற்றி இலக்கிற்கு அவ்வளவு அருகில் வந்திருக்குமா என்பது சந்தேகமே. இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னால் ஆனவரை முயன்றது. முயற்சி திருவினையாகவில்லை.

முன்னதாக முதலில் ஆடிய டெல்லி டேர் டெவில்ஸ் பிய்த்து உதறிவிட்டார்கள். ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு நன்றாகத்தான் இருந்தது. 15 ஓவர்களில் 123 ரன்களே சேர்த்திருந்தது டெல்லி டேர் டெவில்ஸ். அதற்கு பிறகு தீவாவளி சரவெடி போல வெடித்து கடைசிக்கு முதல் பந்தில்தான் ஓய்ந்தது. அந்த தீவாவளிக்கு சொந்தக்காரர் ஏபி டிவில்லியர்ஸ். அவர் தொட்ட்தெல்லாம் பொன்னாகியது..இல்லை இல்லை..ரன்னாகியது. ஆறாக ஆறுகள் ஓடியது. தில்ஷந்தான் முதலில் திரியை கொளுத்தியவர். அதுவே வெற்றித்திரியாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இதில் இவர்களின் பங்கைவிட அதிக பங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்கள் பங்குதான் அதிகம். என்ன ஒரு அபத்தமான பந்துவீச்சு. இவர்களுக்கு ஏதாவது ஒரு நிறத்தில் ஒரு கேப் (Cap) கொடுக்கலாம், இல்லையென்றால் தோனி அவர்களுக்கு ஒரு கேப் (Gap) கொடுக்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 180 வரை சென்றதுக்கு ஹேடனின் பேட்டிங்கும் தோனியின் மனோதைரியமும் தான் முக்கியமான காரணம். அடுத்து வரும் ஆட்டங்களில் ஓரம் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் அணியின் வெற்றிக்கு உரமாக இருப்பாரா அல்லது ஏமாற்றி ஓரமாக போவாரா என்று பார்ப்போம்.

அடுத்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டியை பார்ப்போம்.

இந்த ஆட்டத்தில் எண்ணிக்கை மூன்றின் பங்கு அதிகமாகவே இருந்தது. ஆட்டத்தின் போக்கையே மாற்றிய மூன்று பந்துகள். நான் பார்த்ததில் பிடித்தது என்றொன்று இருந்தால் அது இந்த போட்டிதான். அப்படி ஒரு விறுவிறுப்பு ஆட்டம் முழுவதும்.

ஷேன் வார்னின் தலைமைக்கு என் சிறந்தாழ்ந்த வணக்கங்கள். ராஜஸ்தான் ராயல்ஸின் மூளை அவர் என்று சொன்னால் அது மிகையாகாது.

முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் யூசுப் பதான் உதவியுடன் 150ஐ தொட்டது. அதிலும் கடைசி ஓவர் குறிப்பிடதக்கது. இரண்டு சிக்ஸர்கள் அந்த நேரத்தில் தேவையான் ஒன்றாக இருந்தது. கடைசி பந்தில் ரவுத் இன்னொரு சிக்ஸர் அடிக்க போய் பந்து சரியாக படாமல் மிட்விக்கெட் பக்கம் போக அவசர அவசரமாக இரண்டு ரன்களை தேற்றிக்கொண்டார் வார்ன். அந்த இரண்டு ரன் பின்னே தன் அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று அவர் நினைத்திருக்க வாய்ப்பில்லை. இரண்டு சிக்ஸர் ஒரு ரெண்டு ஆக மூன்று பந்துகள்.

வெற்றிக்கு 151 ரன் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியினர் முதலில் நன்றாகத்தான் விளையாடினார்கள். குறிப்பாக கேலின் அதிரடி ஆட்டம் அட்டகாசம். அவர் ஒவ்வொரு பந்தை அடிக்கும் போதும் எதிரணியை நினைத்துக் கொண்டு அடித்திருக்க வேண்டும். கேல் ரெண்டு சிக்ஸர், மெக்கல்லம் அவுட் ஆக மூன்று பந்துகள்.

பாஷா படத்தில் வரும் ஒரு டயலாக்தான் நினைவுக்கு வந்தது. ரஜினி அடித்த அடியில் அடியாட்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி பெற, அவர்களுக்கு மருந்து கொடுக்கும் டாக்டர் சொல்வார் “இது ஒரு சாதரண மனுஷன் அடிச்ச அடியே இல்ல, தன் ரத்ததில வெறி ஊறிப்போன ஒருத்தரால (மரியாத ரஜினின்றதுனால) மட்டும்தான் இது மாதிரி அடிக்க முடியும்”.

அதுமாதிரி தான் கேலும் அடித்தார். மெக்கல்லம் இல்ல அவர் மக்கு-ல்லம்.தூக்கி கொடுத்துவிட்டு ஓய்வு எடுக்க போய்விட்டார். ஆட்டதின் ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி சரிந்துவிட்டது என்ற ஒரு நிலையில், முனாஃப் பட்டேலின் ஓவரில் கங்கூலி நோ பாலில் ஒரு சிக்ஸரும் அதை தொடர்ந்து வந்த ஃபிரீ ஹிட் பந்தில் ஒரு சிக்ஸரும் மேட்ச்சை திருப்பி விட்டது.

அடுத்து உடன் நன்றாக ஆடிக்கொண்டிருந்த யஷ்பால் சிங்கிடம் சென்று ”பொறுமையாக ஆடு, நீ கூட நில் அது போதும், நாம் வெற்றிக்கு மிக மிக அருகில் இருக்கிறோம்” என்று தன் அனுபவத்தில் கங்கூலி சொன்னதையும் மீறி ஷேன் வார்னின் ”மீன்பிடி” பந்தில் மந்தை ஆட்டைப்போல ஆடி காட்ச் கொடுத்து வெற்றி வாய்ப்பை கெடுத்தார். கங்குலியின் ரெண்டு சிக்ஸர் மற்றும் யஷ்பாலின் விக்கெட் ஆக மூன்று பந்துகள்.

ஒரு ஓவர் ஏழே ஏழு ரன் தான் தேவை என்ற நிலையில் 18 வயது கம்ரான் கானிடம் பந்தை கொடுத்து “இந்தா பிடி, நம் வெற்றி இப்பொழுது உன் கையில்” என்று ஷேன் வார்ன் சொன்ன போது கம்ரானின் இதயத் துடிப்பு 90ஐ தொட்டிருக்க வேண்டும்.

தன் மீது ஷேன் வார்ன் கொண்ட அந்த நம்பிக்கையே கம்ரானை சிறப்பாக பந்துவீச தூண்டியிருக்க வேண்டும். 7 ரன்கள் தேவை என்ற இலக்குடன் ஆரம்பித்த அந்த ஓவரின் முதல் பந்து வைட் ஆக முடிய, டென்ஷன் நமக்கும் அதிகரித்தது. நமக்கே அப்படி என்றால், ஷேன் வார்னை பற்றி யோசியுங்கள். அவருக்கே அப்படியென்றால் கம்ரான்?

வெற்றிக்கு இரண்டு ரன்கள் இரண்டு பந்துகளில் தேவை என்ற சரியான நேரத்தில் கங்குலி அவுட் ஆகி வெளியேற, பின்பு வந்த இஷாந்த் பந்தை ஒரு வாங்கு வாங்க, அதை வார்ன் தடுத்தாலும் இஷாந்த் ஒரு ரன் எடுத்து ஸ்கோரை சமன் செய்தார்.

இரண்டு அணி ஸ்கோரும் நிகரானதில் சூப்பர் ஒவரின் உதயம். ஏற்கனவே சீட்டின் நுனிக்கு வந்துவிட்ட நாம் இப்பொழுது தொபக்கென்று கீழே விழுந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணியினர் கேலின் துப்பாக்கியிலிருந்து கிளம்பியது போன்ற மூன்று பவுண்டரிகளின் உதவியுடன் 15 ரன்களை குவித்தது. கேலின் மூன்று பவுண்டரிகள் கொல்கத்தாவை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றது.

யூசுப் பதான் களமிறங்கினார்..இல்லை இல்லை..களமிறக்கப்பட்டார். அவருக்கு தெரிந்திருந்தது, இந்த ஆட்டத்தை ஜெயிக்க யூசுப்பினால் முடியும் என்று. சொல்லி வைத்தது போல ரெண்டு மாக்ஸிமம் ஒரு நாலு. முடிந்தது விறுவிறுப்பு, ஆரம்பித்தது கொண்டாட்டம். யூசுப்பின் ரெண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரி ராஜஸ்தானை வெற்றிக்கே கொண்டு சென்றது.

கொல்கத்தா அணியின் சார்பில் கேல் போட்டிருக்க வேண்டும். கோல் விட்டுவிட்டார் அதான் சொன்னேனே…மக்கு-ல்லம். கிலிஃபேங்கர் படம் நமக்கு எல்லாம் நினைவிருக்கலாம். அதை கிரிக்கெட் வடிவத்தில் பார்க்க முடிந்தது.

This entry was posted in ஐபிஎல்2, கிரிகெட் and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஐபிஎல் – கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே?

  1. naren says:

    Stallones CLIFFHANGER is a super adventure movie.

    • அந்த படத்தில் வரும் க்ளைமாக்ஸ் காட்சி போன்றே இந்த மேட்ச்சின் கடைசி ஓவர் விறுவிறுப்புடன் இருந்ததல்லவா? வருகைக்கு நன்றி நரேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *