Home » General, சிந்தனைகள், பொது

உன்னை அறிந்தால்

5 March 2009 6 Comments

 என் அண்ணன் Ayn Randன் Fountain Head என்ற புத்தகத்திரிருந்து ஒரு அழகான குறிப்பை அனைவரும் படித்து ஊக்கம் பெற எண்ணி அதை அப்படியே தன் ஆங்கில வலைப்பதிவான http://www.sathyamurthy.com ல் கொடுத்திருந்தான். எங்கள் வீட்டில் அந்த புத்தகம் இருந்தும் அதை நான் பிரித்து கூட பார்த்ததில்லை. ஆனால் அந்த ஆங்கிலப் பதிவை படித்த போது மிகவும் பிடித்திருந்தது. அதை அப்படியே தமிழாக்கம் செய்யாமல் நான் என்ன அறிந்து கொண்டேனோ அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

ஒருவனுடைய வாழ்க்கை அவனாலேயே நிர்ணையிக்கப்படுகிறது. அவனுடைய சுயசிந்தனையும் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு நிற்கத் துடிக்கும் அந்த உள்ளுணர்வே அவனை அவனாக காட்டுகிறது. இதுவரை நாம் படித்துத் தெரிந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுமே இந்த ரகத்தைச் சேர்ந்தவர்களே. சரி அவர்களுக்கு மட்டும் ஏன் படைப்பாளிகள் பட்டம்? அப்படி அவர்களிடம் என்ன இருந்தது / இருக்கிறது?

படைப்பாளிகள் நாம் நினைப்பது போல ரோஜாப்பூக்கள் நிரப்பிய பாதையை கடந்து வந்தவர்கள் அல்ல, அவர்கள் கடந்து வந்தது முழுக்க முழுக்க முள் பாதையே. நம் பாதைகளில் பார்த்த பல எதிர்ப்புகள் முக்கால்வாசி நாம் உருவாக்கிக் கொண்டவைதான். ஆனால் படைப்பாளிகள் சந்தித்தது / சந்திப்பது மற்ரவர்களிடமிருந்து வந்த / வரும் எதிர்ப்புகள்தான். இருந்தும் அவர்களால் முடிந்தது பெரும்பாலானவர்களால் முடியவில்லை. ஏன்?

உலகின் சிறந்த கலைஞர்களாகட்டும், படைப்பாளிகளாகட்டும், விஞ்ஞானிகளாகட்டும். எந்த ஒரு புதிய சிந்தனையும் முதலில் எதிர்க்கப்பட்டதுதான். எல்லா கண்டுபிடிப்புகளும் முதலில் நிராகரிக்கப்பட்டவை தான். எல்லா படைப்புக்களும் முதலில் ஏளனம் செய்யப்பட்டவை தான்.

அவர்கள்முன் வைக்கப்பட்ட எல்லா எதிர்ப்புகளையும் எதிர்நீச்சல் போட்டு வென்றார்கள். தடைக்கல்லை அவர்கள் படைப்புக்கு படிக்கல்லாக மாற்றிக் கொண்டார்கள். நெருப்பை கண்டுபிடித்தவன் தண்டிக்கப்பட்டான். சக்கரத்தை கண்டுபிடித்ததற்காக ஒருவனை இழிவுபடுத்தினார்கள். இவை எதுவும் அவனை நிறுத்திவிடவில்லை.

ஆனால் நெருப்பாலும் சக்கரத்தாலும் நாம் இன்று அடைந்து கொண்டிருக்கும் பயன் பட்டியலிட்டாலும் தீராது.

சரி இப்படிபட்ட கண்டுபிடிப்புக்களுக்கு எது ஆதாரமாக இருந்தது?

சுருக்கமாகச் சொன்னால் சுய மனிதத் தேவை. விளங்கச் சொன்னால்:

மனிதனுக்கு அடித்து உண்ணும் வழி தெரிந்தாலும் அவனுக்கு மிருகத்தைப் போல உடம்பினோடு கூடிய ஆயுதங்கள் இல்லை. அவனிடம் சிங்கத்தினை போல் வலுவான நகங்கள் இல்லை. சிறுத்தையின் வேகம் இல்லை. அவனுடைய உணவை அவனே பயிர் செய்து கொள்ள வேண்டியதாயிற்று. சரி, வேட்டையாடலாம் என்றே வைத்துக் கொள்வோம், அதற்கான ஆயுதங்கள் தேவைப்படுமே? அடிப்படையில் பார்த்தால் அவனுக்கு ஆயுதங்களை செய்யவோ பயிரிடவோ வழிமுறை தெரிந்திருக்கு வேண்டும். இங்கே தான் மனிதனின் கண்டுபிடிப்புக்களும் படைப்புக்களும் தோன்றியது. அதுவே அவனை இட்டுச் செல்லும் காரணமாயிற்று.

ஆக நம்முடைய சுயதேவையே ஒரு படைப்புக்கான முதற்படியாகிறது. நம் எல்லாருக்குமே ஏதோ ஒரு விதத்தில் தேவை இருந்து கொண்டும் வளர்ந்து கொண்டும்தான் இருக்கிறது. நமக்கே தெரியாமல் நாமும் ஏதோ ஒன்றை கண்டுபிடித்துக் கொண்டோ அல்லது படைத்துக் கொண்டுதான் இருக்கிறோம், ஆனால் அது என்ன என்பதுதான் அதன் முக்கியத்துவத்தை முடிவு செய்கிறது. நம் அன்றாட வாழ்க்கையிலேயே எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் நமக்கு அது தெரிவதில்லை. தெரிந்தாலும் அதை நம்மால் முடியாத ஒன்றாக எண்ணி விட்டுவிடுகிறோம்.

சரி, ஒரு படைப்பாளியாகவோ அல்லது கண்டுபிடிப்பாளனாகவோ ஆக என்னன்ன தேவை? ஏன் ஒருவனால் முடிந்தது இன்னொருவனால் முடியாததாக கருதப்படுகிறது? எது ஊந்தும் சக்தியாக இருக்கிறது?

ஒரு படைப்பாளியாவதற்கு மிக முக்கியமான குணாதிசயமாக நான் கருதுவது சுயநலம். அடிப்படை காரணமாக இருப்பது சுயதேவை. எல்லாப் படைபாளிகளுக்கும் சில ஒற்றுமை உண்டு. அவை:

1.   சுயசிந்தனை மற்றும் சுயதேவை

2.   படைப்பு ஒன்றே தன் வாழ்க்கையாகக் கொள்வது

3.   மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்க வேண்டும் என்ற எண்ணம்

4.   படைப்பை நோக்கியே பயனிக்கும் சிந்தனை மற்றும் செயல்

எந்த படைப்புக்கும் அந்த படைப்பின் மீதான படைப்பாளியின் ஒருமுகப்படுத்தபட்ட நோக்கு (Vision) முக்கிய பங்கு வகிக்கிறது.

படைப்பாளி யாருமே சுயநலவாதிகளே என்பது கேட்பதற்கு வேண்டுமானால் தப்பாகத் தோன்றலாம். ஆனால் அதுதான் உண்மையும் யதார்த்தமும் கூட.. கொஞ்சம் யோசித்து பாருங்கள். நாம் எப்போது மற்றவர்களுக்காக படைக்க ஆரம்பிக்கிறோமோ அப்போதே நம் சுயசிந்தனையை இழக்க ஆரம்பித்துவிடுகிறோம் என்று அர்த்தம். படைப்பு எதுவாக இருப்பினும் படைப்பாளியின் சுயசிந்தனையில் உருவாகும் போதுதான் அது முழுமை பெற்றதாகிறது.

படைத்தவன் அவனுக்கான உபயோகத்தையே பார்த்தான். அவனுக்குப் பிறகு அதை யார் பயன்படுத்தப்போகிறார்கள், யார் யார் பயனடைவார்கள் போன்ற சிந்தனையில் அவன் நேரத்தை வீணாக்கவில்லை.

பிறகு ஒரு பொருள் எங்கனம் மேன்மை அடைவது என்று நீங்கள் கேட்கலாம். இப்பொழுது நாம் இரண்டு விதமான மனிதர்களை பார்ப்போம்.

முதலாமவர் மேலே சொல்லப்பட்டுள்ள படைப்பாளி. இரண்டாமவர் அதை மெருகேற்றுபவர்கள்.

படைக்கப்பட்ட பொருளை ஒரு வியாபார கண்ணோட்டத்தோடே பார்ப்பவன் இரண்டாமவன். அவனுக்கு படைப்பின் மீது அதிக கவனம் செலுத்த ஆர்வம் இல்லை. மாறாக அந்த படைப்பை எப்படி மெருகேற்றலாம், மற்றவர்களுக்கு எப்படி கொண்டு செல்லலாம் போன்ற சிந்தனைகளே அவனை ஆள்கிறது.

படைப்பாளியின் படைப்பை வேண்டுமானால் உபயோகப்படுத்திக் கொள்ள முடியும் அதன் வேரை அல்ல. படைப்பாளியைப் போல சிந்திக்க முடியாது. அது அவனுக்குச் சொந்தமானது. சுயசிந்தனை என்பது நம் ஒவ்வொருவருடைய தனி சொத்து. ஒருவனுடைய குறிக்கோள் அல்லது சக்தி அதை அவன் நினைத்தாலும் இன்னொருவருக்கு மாற்ற முடியாது. சுருங்கச் சொன்னால் முதலாமவன் மூலப்பொருளை கண்டுபிடிக்கிறான். இரண்டாமவன் அதை வைத்துக் கொண்டே மற்ற பொருள்களை உருவாக்கிகிறான்.

அவன் (முதலாமவன்) படைக்கிறான். மரபுரிமை அவனிடத்தில் தான் இருக்கிறது. இவன் அதைப் பெற்று மேலும் மெருகேற்றுகிறான். இவனுடைய தேவை மற்ற மனிதர்களிடத்தில் நட்புறவு. மேலே சொன்னது போல இரண்டாமவன் வர்த்தக ரீதியாக பார்ப்பதினாலே அவனுக்கு இந்த உறவுமுறை தேவைப்படுகிறது.

ஆங்கிலத்தில்அல்ட்ரூயிஸம்என்று சொல்வார்களே (மனிதனின் கடமை மற்றவர்களுக்கு உதவுவதே) அதை போதிக்கிறான்.

யதார்த்தத்தில் நாம் மற்றவர்களுக்காக வாழ முடியாது. அப்படி ஒன்றை செய்யும் போதோ அல்லது செய்ய முற்படும்போதோ நாம் இன்னொருவரின் நிழலில் வாழ்பவர்களாகிறோம்.

அன்றிலிருந்து இன்று வரை நாம் இரண்டாமவனையே போற்றுகிறோம், பின்பற்றுகிறோம். மாறாக படைப்பாளியை பற்றி சிந்திப்பதற்கு நேரமில்லை என்று கூட சொல்லலாம்.

உண்மையில் நாம் யாரும் தியாகிகள் அல்ல, அதுவாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. ஒரு கலைஞன் தன் படைப்பை முழுமையாக்க சிலர் தேவைப்பட்டாலும், அந்த படைப்பு அவனுடைய சிந்தனையாகவே இருக்க முடியும்.

காலப்போக்கில் வந்தது கூட்டுச் சிந்தனை. இதில் கொஞ்சமும் உண்மையில்லை. ஒரு படைப்பை கூட்டுச் சிந்தனையாக செய்ய நினைத்தால் யாருடைய சுயசிந்தனையின் படியும் அது உருவாக்கப்படுவதில்லை. மாறாக எல்லோருக்கும் ஏற்றதாக ஒரு சமரசச் சிந்தனையிலேயே உருவாக்கப்படுகிறது.

அன்றிலிரிருந்து இன்றுவரை முதலாமவனுக்கும் இரண்டாமவனுக்கும் விரோதம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. முதலாமவன் சக்கரத்தை கண்டுபிடித்தான், பதிலுக்கு இரண்டாமவன் அல்தூரிஸத்தை கண்டுபிடித்தான்.

ஒருவன் வாழ்வதே இன்னொருவனுக்காகத்தான் என்பதை நாம் எதிர்க்கவில்லை. அதை நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆக்கிக் கொண்டுவிட்டோம் (தினமும் எழுந்தவுடன் பல் துலக்குவதை போல). நாம் தப்பான ஒரு போதனைக்கு உட்பட்டுவிட்டோம் என்பதை உணரவில்லையா அல்லது உணர்ந்தும் மறுக்கவில்லையா?

நாம் வாழ்வதே பிறர்க்காக என்றும் நம் செய்கைகள் சுயநலமற்றதாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு உள்ளவரை இது இப்படியே போய்க் கொண்டுதான் இருக்கும்

படைத்தவன் பழிக்கப்பட்டான், அதை வைத்து பிழைத்தவன் போற்றப்பட்டான்.

படைத்தவன் பழிக்கப்படுகிறான், அதை வைத்து பிழைப்பவன் போற்றப்படுகிறான்.

படைத்தவன் பழிக்கப்படுவான், அதை வைத்து பிழைக்கப் போகிறவன் போற்றப்படுவான்.

இது ஒரு நாடகத்தை போலே வந்தும் போய்க்கொண்டும் இருக்கும். கதாபாத்திரங்கள் மட்டுமே மாறுபட்டுக் கொண்டிருக்கும் கதை மாறப்போவதில்லை.

நாம் முடிவு செய்ய வேண்டியது ஒன்றுதான். இன்னொருவர் நிழலில் இருக்க ஆசைப்படுகிறோமா அல்லது நம் நிழலில் இன்னொருவரை வரும்படி செய்கிறோமா என்பது தான் அது.

நன்றி: ஃபவுண்டன் ஹெட், ஐன் ராண்ட்

 

6 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.