Home » அனுபவம், பொது

திருவல்லிக்கேணி டூ வேப்பம்பட்டு

25 March 2009 10 Comments

உறவுக்காரர் ஒருவரின் மகளின் கல்யாண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வேப்பம்பட்டு வரை செல்ல நேர்ந்தது. சுஜாதாவைப் போல அதில் கற்றதும் பெற்றதும் எழுதலாம் என்றெண்ணி இந்த பதிவு.

கற்றது:

கால்டாக்ஸி, ஆட்டோ, இரு/நாற்சக்கர வாகனங்களை விட மெட்ரோ ரயில் பயணம் சுகம் மற்றும் மலிவும் கூட. ப்ராயண நேரமும் அதிகம் இல்லை. எல்லாவற்றையும் விட சென்று வந்ததற்கான உடல் வலி ஆதாரங்கள் எதுவும் தென்படாதது இதன் மற்றொரு சிறப்பு.
மெட்ரோ ரயில் உபயத்தில் பயணித்தது இது இரண்டாம் முறையே. இதற்கு முன் தாம்பரம் செல்வதற்காக மெட்ரோ ரயிலினேன்.

திருவல்லிக்கேணியிலிருந்து 38சி பிடித்து சென்னை செண்ட்ரல் செல்ல ரூ2ம், அங்கிருந்து வேப்பம்பட்டு ரூ8 (ஒருவருக்கு) மட்டுமே தேவைப்பட்டது. இதுவே ட்ராவல்ஸ் எடுத்திருந்தால் குறைந்தபட்சம் ரூ1200 பிடித்திருக்கும். அதுமட்டுமில்லாது, நாங்கள் குடும்பமாக சென்றதால் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டு போக முடிந்தது.

காரில் சென்றிருந்தால் இன்னொருவர் (ட்ரைவர்) பொறுப்பெடுத்து ஓட்டிச் சென்றாலும், நம் மனம் போக்குவரத்தின் மீதும், அவர் காரை ஒழுங்காக ஓட்டிச் செல்கிறாரா என்பதிலும் போயிருக்கும். மாறாக எதைபற்றியும் கவலைப்படாமல் நிம்மதியாக கருணாநிதியின் வக்கீல்-போலீஸ் விஷயத்தில் நடவடிக்கைப் பற்றியும், வரப்போகும் தேர்தலில், கட்சிகள் பல துண்டுகளாக உடைந்ததால், பொது மக்களாகிய நாம் படப்போகும் அவதியைப் பற்றியும் விவாதித்துக்கொண்டு வர/போக முடிந்தது.

அநேகமான சமயங்களில் கார் உபயத்தில் பயணம் செய்தவன் நான். அதற்கு காரணம் நாம் காரை எங்கு வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம், எப்போது வேண்டுமானாலும் சென்ற இடத்திலிருந்து திரும்ப வரலாம், குழந்தையை அலைக்கழிக்காமல் கூட்டிச்சென்று வரலாம் என்ற எண்ணங்களே.

நான் இப்படி பழக்கப்பட்டவன் இல்லையே? நான் இப்படி வளரவில்லையே? எங்கிருந்து வந்தது இந்த தேவையற்ற சோம்பேறித்தனம்? என்று பல கேள்விகள் (பொருளாதார வீழ்ச்சி எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது) தோன்றியதால்…..

இதெல்லாம் ஆடம்பரத்துக்கும் சோம்பேறித்தனத்துக்கும் நான் இட்டுக்கட்டிய காரணங்கள் என்று உணர்ந்ததால்…..

முதலில் ஒரு சிறு தயக்கம் இருந்தாலும், என்நிதி நிலைமையும், அடித்தளத்துக்கு போயிக்கொண்டிருக்கும் பொருளாதாரமுமே “என்ன ஆனாலும் சரி இந்த முறை மெ.ரயிலில் பயணிப்பது” என்ற முடிவுக்கு முக்கிய காரணங்களாயின. கூடுதல் காரணங்கள் என் மனைவியின் ஆசை மற்றும் என் மகனுக்கு பழக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணம்.

பயணத்தில் ஒரு சில உதவிகளும் சக பயணிகளிடமிருந்து கிடைத்தது கால்டாக்ஸியில் கிடைக்காதது.

நான், “எந்த ஸ்டேஷன் வந்திருக்கு?” என்று கேட்டதற்கு ஒரு பெரியவர், “எங்க போகணும் நீங்க?” என்று மறுகேள்வி கேட்டார்.

”இது கொரட்டூர், இன்னும் 6 ஸ்டேஷன் இருக்கு” என்று மேலும் அவர் வழிக்கட்டியது ஒரு சராசரி ”தினப்பயணர்” நாளைக்கொருமுறையேணும் ஒருவருக்காவது வழிகாட்டிக் கொண்டிருக்கிறார் என்பதை உறுதிபடுத்தியது.

பெரியவர் என் அண்ணன் பையனிடம் அவன் படிப்பைப் பற்றி வினவியது இந்தியனுக்கே உரிய, மிக குறுகியகாலத்தில் நெருக்கமாகிவிடும் ஒரு இயல்பு.

திரும்பி வரும்போது இதேபோல ஒருவர் ஸ்டேஷன் பெயரை தெரிந்துகொள்ள விரும்பினார். அவர் நடுத்தர வயதை தொட்டிருந்தார். அவரிடமிருந்து வந்த பழ வாடை அவர் பழக்கவழக்கங்களை சுட்டி காட்டியது. இதுவும் ரயில் (அது மெட்ரோவானாலும் சரி) பயணர்களின் ஒரு இயல்பாகிவிட்ட்து.

பெற்றது:

பயணத்தில் பல பார்வையற்றவர்கள் வியாபரம் செய்து கொண்டிருந்தார்கள். ஒருவர் நெயில் கட்டர், டிவி ரிமோட் கவர், டிவிடி ரிமோட் கவர் என்று பல அயிட்டங்களை கத்திக் கொண்டிருந்தார். ஒன்றிரண்டு தடவையே விற்றுக்கொண்டிருந்தார்.

ஒருவர் நெயில் கட்டர் வாங்கினார். “எவ்ளோ பா?”, விற்றவர், “பத்து ரூபா சார், வேற ஏதாவது வேணுமா சார், ரிமோட் கவர், ரேசன் கார்டு கவர், ஈபி கார்டு கவர்?”

வாங்கியவர் “இல்லப்பா இது போதும். 100 ரூபாய்க்கு சில்லர இருக்கா?”

விற்றவர், “ஜேம்ஸு……..டேய்…… ஜேம்ஸு” என்று அவரின் சக விற்பனையாளரை கூப்பிட்டு “அம்பது ரூபா இருக்கா?” என்றார்.

ஜேம்ஸ் தன்னிடமிருந்த ஒரே ஐம்பது ரூபாய் நோட்டை இவரிடம் கொடுக்க, தன் பையிலிருந்து ஒரு இருபது ரூபாய் மற்றும் இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களை சேர்த்து 90ஐ வாங்கியவருக்கு கொடுத்து வியாபரத்தை முடித்துக் கொண்டார்.

திரும்பி வர இரவு 10:15 ஆகிவிட்டதால், ரயிலில் அதிகம் கூட்டம் இல்லை. பலர் படுத்துக்கொண்டு வந்தது பயணர்களின் இன்னொரு இயல்பு. அந்த இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு இருந்ததாக எனக்கு தெரியவில்லை. குறைந்தபட்சம் நான் ப்ரயாணம் செய்த பெட்டியில் இல்லை. இது நம் அரசின் இயல்பு.

தன் இன்றைய வியாபாரத்தை முடித்துவிட்ட நிம்மதியில் ஒரு வடஇந்தியன் இன்றைய வரவுகளை எண்ணிக்கொண்டிருந்தான். பல சில்லரைகளும் சில நோட்டுக்களும். அவன் தன் முதலாளிக்கு கணக்கு கொடுக்க வேண்டுமே.

எனக்கு ஆச்சரியத்தை தந்த சில விஷயங்கள்:
1.பார்வை இல்லாவிட்டாலும், உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற அந்த உயரிய எண்ணம்.
2.ரூபாய் நோட்டுக்களை பார்க்க முடியாவிட்டாலும், வாங்குபவர்கள் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை.
3.தான் அனுபவிக்க முடியாத சாதனங்களுக்காக பொருட்களை விற்ற நெகிழ்ச்சியான காட்சி.
4.நெயில் கட்டர் விற்கும் போது அதை ரொம்ப சாதாரணமாக லாவகமாக பூட்டியிருந்த பின்னுக்குள் இருந்து ஒன்றை மட்டும் எடுத்து கொடுத்துவிட்டு மறுபடியும் அந்த பின்னை மறுபடியும் பூட்டியது.
5.தன்னிடம் எவ்வளவு காசு இருக்கிறது? அது எந்த வடிவில் இருக்கிறது? எத்தனை பத்து ரூபாய்க்கள், 20 ரூபாய்க்கள் என்று ஞாபகத்தில் வைத்திருந்தது, சில்லரைக் காசுக்களை அடையாளம் கண்டுகொள்ளும் அசாத்தியத் திறமை.

என் அண்ணன் சொன்ன ஒரு வார்த்தை என்னை யோசிக்க வைத்தது (நன்றி சுந்தர்). அது:
“இந்த ரிமோட் கவரெல்லாம் விக்கறாங்களே அவங்களுக்கு டிவிடி எப்படி இருக்கும்ன்னு கூட தெரியாது இல்ல?”.

”ம்ச்ச்….ஆமாம்” என்று நான் ஒரு வரியில் வருத்தப்பட்டாலும், மனதில் அந்த வார்த்தைகள் இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதன் கனம் இன்னும் குறையவில்லை.

ரயில் பயணம் முடிவுக்கு வந்தாலும் இவர்களின் அன்றாட தேவைகளுக்கு ஒரு நல்ல முடிவு வராததை நினைத்துப் பார்த்தாலே கண்கள் என்னையும் அறியாமல் ஈரமாகிறது. எத்தனை தேர்தல் வந்தாலென்ன இவர்களின் வாழ்க்கை தரம் தேறப்போவதில்லை.

10 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.