சில நேரங்களில் சில மனிதர்கள்…

சென்ற வாரம் என் குடும்பத்தோடு பிக் பஜார் சென்றதாகச் சொன்னேன். அங்கு வந்திருந்த பல்வேறு மக்களை கவனித்த போது:-

 

1.   அங்கு வந்த இளைஞர்கள், இளைஞிகள், கல்யாணமானவர்கள் என்று தரம் பிரிக்காமல் சைட்டிக் கொண்டிருந்தனர். சாமான் வாங்க வந்தவர் அல்லர்…

2.   சில குடும்பத்தலைவர்களும் தற்தமது பத்தினிகளை பார்த்து சலித்து போயிருப்பார்கள் போலும்; அவர்களும் சைடில் சைட்டினார்கள்.

3.   ஒரு தம்பதி மேகிக்கும் டாப் ராமனுக்கும் தள்ளுபடியில் என்ன வித்தியாசம் என்று அலசிக் கொண்டிருந்தார்கள். முடிவில் மேக்கிக்கு போவதாய் (மகனின் விருப்பம்) முடிவுக்கு வந்தார்கள்.

4.   புஷ்பா! உளுத்தம் பருப்பு எடுக்கணுமா? போன மாசம் வாங்கினது இருக்குமா? என்று புஷ்பாவுக்கு மட்டும்மல்லாமல் கீதா, மாலா எல்லோருக்கும் கேட்கும்படி கூவினார் ஒருவர் (புஷ்பாவோட புருஷனாகத்தான் இருக்க வேண்டும். அவர் பெயர் கூட பார்த்தசாரதியாக இருக்காலம் என்று அவர் நெற்றி சொல்லிற்று). உண்மையிலேயே அந்த சத்ததிற்கு திரும்பிய ஒரு (மாலாவோ, கீதாவோ) பெண்மணி (மனதுக்குள் அவருக்கு நன்றி நவின்றிருப்பாரோ) ஞாபகம் வந்தவராக உ.பருப்பை எடுத்தார்.

5.   ஏய்! அந்த சிந்தால் சோப் தள்ளுபடி இந்த மாசம் போடலடா என்று வருத்தத்தை தெரிவித்துக் கொண்டிருந்தது ஒரு பேச்சிலர் கூட்டம் (கூவினவரின் பெயர் செந்திலாகவோ அல்லது பழனியப்பனாகவோ இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது).

6.   ”நான் உன் தங்கையைப் பத்தி இப்ப பேசல” என்று ஒரு கணவன் வீட்டிலிருந்து கிளம்பும் போது ஆரம்பித்த சண்டையை தொடர்ந்து கொண்டிருந்தார்.

7.   எதையோ (செலவாதத்தான் இருக்கும்) நினைத்துக் கொண்டு ஒரு குடும்பத்தலைவன் தன் மூக்கினுள் விரலைவிட்டு (இன்னும் கொஞ்சம் விட்டால், அது கண் வழியாக வந்துவிடும் அபாயம் உணர்ந்ததால்) யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டு, (நான் பார்ப்பது தெரியாமல்) அதே விரலை பொருட்கள் அடுக்கி வைத்திருக்கும் அலமாரியின் விளிம்பில் துடைத்தார் (இது தப்பா?…5 லட்சம் பேர் 5 லட்சம் தடவை..என்று அன்னியன் ஸ்டைலில் நினைத்துப் பார்க்கவும். இப்போ தப்பா தெரியுதா?).

 

இதற்கு மேல் நான் மற்றவர்களையே கவனித்துக் கொண்டிருந்தால் வீட்டிற்கு திரும்பியவுடன் இரண்டு மூன்று வீக்கங்களுக்கு ஆளாக வேண்டுமே என்ற ஞாபகம் வந்ததால் (எல்லாம் முன் அனுபவம் தாங்க) சட்டென்று எங்கள் ஷாப்பிங்கில் கவனத்தைத் திருப்பினேன்.

This entry was posted in நகைச்சுவை, நாட்டு நடப்பு, பொது and tagged , , , . Bookmark the permalink.

One Response to சில நேரங்களில் சில மனிதர்கள்…

  1. மூக்கு அகழ்வராய்ச்சி, எல்லா மனிதனின் ரகசிய சுகம்; ஆனாலும், அதை பல இடங்களில் வர்ஜ்யா வர்ஜியம் இல்லாமல் தடவுவது, அருவருப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *