Home » அனுபவம், சினிமா இசை, செம்மொழி

பாட்டொன்று கேட்டேன், பரவசமானேன்! – பாகம் 1

12 February 2009 9 Comments

வலையில் பலர் ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர்களுக்கு பிடித்த பாடல்களை அதன் ரசம் கொஞ்சமும் குறையாமல் நம்முடன் பகிர்கிறார்கள். நானும் அதைத் தான் முயலப்போகிறேன். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக. பலர் அந்த பாடலை கேட்பதோடு நில்லாமல் பார்த்துவிட்டு அதை எடுக்கப்பட்ட விதத்தையும் மிக அழகாக கொடுக்கிறார்கள். என் கருத்து ஒரு பாடல் கேட்டவுடனேயே நம்மை ஆட்கொண்டுவிட்டால் அதற்கு பிறகு அதை எடுக்கப்பட்ட விதம் நமக்கு இரண்டாம் பட்சமாகிறது. அப்படிப்பட்ட பாடல்களே காலத்தை வென்று நிற்கிறது.

இதோ என் தொடக்கம்…..

முதன் முதலில் ஒரு குழந்தை அப்பா, அம்மா என்று தன் மழலைச் சொல்லில் கூப்பிடும் போது அந்த குழந்தையின் தந்தையும் தாயும் எந்த அளவிற்கு சந்தோஷம் அடைந்தார்கள் என்று கேட்டுப்பாருங்கள். அவர்களுக்கு சொல்ல தெரியாது.

அதே குழந்தை தனக்கே உரிய தெய்வ (மழலை) மொழியில் பல விஷயங்களை சொல்ல முற்படும். ஆனால் நமக்குத்தான் புரியவே புரியாது. இருந்தாலும் புரிந்தாலும் யாவிட்டாலும் அதை ஆஹா..ஓஹோ..என்று பாராட்டி புகாங்கிதம் அடைவோம்.

அம்மா: ”எப்படி சொல்லறது பாரேன்…..சொல்லு சொல்லுடா செல்லம்…..
குழந்தை: டிவி போ…ஆ..போ..யு”.

சத்தியமாக அந்த வார்தைகளை பதிவு செய்ய ஒரு மொழி வரவில்லை வரவும் வாய்ப்பில்லை. இருந்தபோதும் நாம் அதை தேனினும் இனிதாக, தமிழினும் அமுதாக கேட்டு மகிழ்வோம். அதுபோலத் தான் சில பாடல்கள் நம் தமிழ் சினிமாவில். வைரமுத்து குறிப்பிட்டது போல்…தமிழ் என்ற சொல்லிலேயே அழகு (ழனா) இருக்கும்போது தமிழ் பாடல்களில்? அப்படிப்பட்ட ஒரு பாட்டை பற்றி தான் நாம் இப்பொழுது ரசிக்க இருக்கிறோம்.

கவியரசர் முதல் மூன்று வார்த்தைகளிலேயே நம்மை இக்கிரகம் விட்டு வானுலகத்தில் மிதக்க வைக்கிறார். இன்றளவும் அந்த மூன்று வார்த்தைகள் காற்றின் ஒரு பகுதியாக நம்மை சுற்றிச் சுற்றி சிறகடிக்கிறது..கேட்ட மாத்திரத்திலேயே நம்மை கிறங்கடிக்கிறது. போகப் போக நாம் நம்மைவிட்டு வெகு தொலைவில் இருப்பதை அந்த பாடலின் இறுதியில் தான் உணர்வோம். மீண்டு வர ஒரு சில முயற்சிகள் எடுப்போம். ஆனால் இந்த முயற்சிகள் மட்டும் குறைந்தபட்சம் ஒரு நான்கு நாட்களுக்கு திருவினையே ஆகாது. மனத்தின் ஏதோ ஒரு மூலையில் நம்முடைய மனதின் இன்னொரு குரல் போல அது ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.

ஒரு பாடல் என்று எடுத்துக் கொண்டால் அதில் வரிகள் வசிகரிக்கும். சில பாடல்களில் ராகம் ராஜ்ஜியம் நடத்தும். சிலவற்றில் பாடியவர்களின் குரல் தண்னீரில் சக்கரை கரைந்தது போல நம்முள் கரைந்து கலந்துவிடும். ஆனால் ஒரே பாடலில் இத்தனையும் இருந்தால்? இதை தெய்வத்தை உணர்வதற்கு நிகராக சொல்லலாம். இதற்கும் (அந்த உணர்வை வெளிப்படுத்த) ஒரு பாஷை இல்லை. இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம், அவ்வளவுதான்.

என்னைப் பொறுத்தவரை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் இசைத்தாயின் கருவூலத்திலிருந்தே அவதரித்திருக்க வேண்டும். எப்படி தன்னை காத்துக் கொள்ள, மக்களை காப்பாற்ற, கம்சனை வதம் செய்ய திருமால் மடி மாறினானோ அதுபோல இவர்களும் நம்மை ஆட்கொள்ள மடிபெயர்ந்திருக்கிறார்கள்.

இந்தப் பாடலில் ஆரம்பத்தில் மொத்தம் 15 நொடிகளே ஒலிக்கும் அந்த வீணையின் நாத ஒலி ஒன்று போதாதா இந்த இசைப்பேதையை இசைபோதைக்குள் இட்டுச் செல்ல? பாட்டை என் ஹெட்ஃபோன்ஸில் கேட்டபோது யாரோ என் காதினுள் உட்கார்ந்து கொண்டு மிருதங்கத்தை வாசிப்பது போன்ற உணர்வு.

சுசீலா அவர்கள் அந்த பாடலை பாடும்பொழுது ஒரு வித மயக்கத்தில் இருந்திருக்கதான் வேண்டும். இல்லையென்றால் அவர் அப்படி பாடியிருக்க முடியாது. இவர் பாடும்போது நமக்கு கதாநாயகியின் உருவமோ அல்லது அதை படமாக்கப்பட்ட விதமோ மூன்றாம் பட்சம் தான் (இரண்டாம் ஏற்கனவே சொல்லிவிட்டதால் மூன்றாம்). ஒரு குவளை தேனை யாருக்கும் தராமல் நாமே குடித்தால் எப்படி இருக்கும்? ஒரு மயக்க நிலையை அடைந்துவிடுவோம் அல்லவா?

அந்த பாடல்:

ஜெமினி கணேசனும் செளகார் ஜானகியும் சிறுவயதில் அறியா பருவத்தில் மணமுடிக்கிறார்கள். பிறகு ஜெமினி பிழைப்பைத் தேடி வேறொரு ஊருக்கு செல்ல, செல்கிறது காலமும் தம்பதியினரும் பிரிகின்றனர். சில காலம் கழித்து ஜெமினியின் பெற்றோர் அவருக்கு திருமணம் முடிக்க எண்ணி ஈ.வி.சரோஜாவை பெண் பேசுகிறார்கள். எதிர்பாராத விதமாக செளகார் ஜானகி ஈ.வி.ச வீட்டில் வேலைக்காரியாக பணிபுரிகிறார். ஒரு காட்சியில் செளகார் ஜானகியை ஈ.வி.ச பாட வற்புறுத்த…..”மாலை பொழுதின்…”. இளமைக்காலத்திலேயே காலத்தின் கட்டாயத்தால் விதியின் சதியால் விதவையான ஒரு பெண்ணின் சோகமும் ஏக்கமும் இந்த பாடலின் இசையிலும் வரிகளிலும் ததும்புகிறது.

ஜெமினி மணம் முடித்த பிறகு செளகாரை பிரிந்ததை எவ்வளவு அழகாக அதே சமயத்தில் ஆழமாக சொல்லியிருக்கிறார் கவியரசர். ஜெமினி செளகாரின் இறந்த (இறந்ததாக நினைத்த) தன் கணவரைப் போல இருப்பதையும் அந்த பாடலில் தெரிவிக்கிறார். இந்தச் சூழலில்…….

தென்றல் வீசும் மாலை நேரம், அமைதியான சூழலில் மொட்டை மாடியும் அதில் அந்த இனிமையான தென்றலில் ஆடிக்கொண்டிருக்கும் ஊஞ்சலும், மொட்டைமாடியை சுற்றி பசுமையான சூழலும், கருப்பு வெள்ளை காட்சியானாலும் அதில் பல வண்ணங்களை நம் மனத்தில் புகுத்தியிருக்கும் விதமும், சுசீலாவின் குரலில், மெல்லிசையமைப்பில் கவியரசரின் கற்பனையும், அந்த மாலைத் தென்றல் நம் மீது வீசும் ஒரு பரவச உணர்வை ஏற்படுத்துகிறது. நம்மை ஆழ்ந்த மயக்க நிலைக்கு இழுத்துச் செல்கிறது.

அமைதிசூழ்ந்த அந்தி மாலை நேரம், மென்சுவை மெட்டு, ஜெமினியின் இயல்பான நடிப்பு, செளகார் ஜானகியின் சோகம் கலந்த முகபாவம், மீட்டிக் கொண்டிருப்பது வீணையானாலும் ஈ.வி. சரோஜா தன் கண்களையும் அதற்கேற்ப பேசவைப்பது என்று இந்த பாடலுக்கு இவையெல்லாம் மேலும் மெருகேற்றுகிறது, இசையின் வேகத்திற்கேற்ப காட்சியமைத்த விதம். ,மொத்தத்தில் இது ஒரு மென்சுகம். கிட்டத்தட்ட 50 வயதினை தொட்டுவிட்டது இந்த பாடல். ஆனால் இன்னும் இளமையாகவும் சுவை குறையாமலும் இருக்கிறது.

இனியும் உங்களை காக்கவைக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை (அந்த பாடலை கேட்டு உருகிவிட்டேன்)

மாலைப் பொழுதின் மயக்கத்திலே (வருகிறதா மயக்கம்?)
ஓர் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி

இன்பம் சில நாள்
துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி

மணமுடித்தவர் போல் அருகினிலே
ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம்
தந்தார் – மாலையிட்டார் தோழி
வழிமறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்துவிட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார்
உடனே மறந்துவிட்டார் தோழி
பறந்துவிட்டார் தோழி

கனவினில் வந்தவர் யாரெனக்கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவரென்றால் அவர் கனவு
முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி
இளமையெல்லாம் வெறும் கனவுமையம்
இதில் மறைந்தது சிலகாலம்
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம்

மாலைப் பொழுதின் மயக்கத்திலே (வருகிறதா மயக்கம்?)
ஓர் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி

இதற்கு மேல் நான் என்ன சொன்னாலும் உங்கள் காதுகளில் விழப்போவதில்லை. படித்த மாத்திரத்திலேயே MP3யில் இந்த பாடலை தேடிக் கண்டுபிடித்து கேட்கவே ஆரம்பித்திருப்பீர்கள். இருந்தாலும், உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமாக இடுவது எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக மட்டுமில்லாமல் இதுபோன்ற காலத்தை வென்ற பாடல்கள் பலவற்றை பற்றி எழுத ஒரு ஊந்துகோலாக அமையும்.

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

9 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.