Home » General, அனுபவம், சினிமா இசை, நாட்டு நடப்பு, பொது

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான்

23 February 2009 14 Comments

slumdog_rahmanoscarrrafp226பிரமாண்டமான அரங்கு. அரங்கு முழுதும் சாதனையாளர்களும், வெற்றி பெற்றவர்களும் அமர்ந்திருக்கின்றனர். அழகான வடிவமைப்பு. வைரத்தால் செய்தது போல முகப்பு. அந்த அரங்கம் பார்ப்பதற்கே ஒரு பிரமாண்டத்தை ஏற்படுத்துவதை என்னால் உணர முடிந்தது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை இதுவரை நான் பார்த்ததில்லை. அதை பார்க்க வந்தவர்கள் முகத்தில் விருதை நாம் வென்றிருக்கிறோமா என்ற எதிர்பார்ப்பு. கைத்தட்டல்களுடன் பல விருதுகள் கடந்து சென்றன. மகிழ்ச்சி ஆராவாரத்தில் அரங்கமே திளைத்திருந்ததை என் கண்கள் கண்டு ஆச்சர்யத்தில் விரிந்தன. ஏன் இந்த திடீர் மாற்றம்? எதற்காக எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் இந்த ஆஸ்கர் விருதின் மேல் ஒரு மோகம், எதிர்பார்ப்பு? இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஒரே விடை ரஹ்மான் என்ற அந்த நான்கெழுத்து இசை. ஆங்கிலத்தில் Rahman என்று வருவது ஆஸ்கர் விருதின் சிறப்பம்சம் என்று என் அண்ணன் சத்தியமூர்த்தி நேற்றிரவு கூறினான். இதுவரை வென்றவர்களின் முக்கால்வாசிப் பேர்களின் பெயர்களிலும் ஆரம்பத்திலோ அல்லது கடைசியிலோ “MAN” இருப்பதாக தெரிவித்தான். அவனது பதிப்பிலும் அதை எழுதியிருக்கிறான். ரஹ்மான் வெல்வாரா? இந்தியா சினிமா மற்றும் இசைத்துறையில் வெளிநாட்டவருக்கு நிகர் என்று பல வெற்றிகளின் மூலம் தெரிவித்து விட்டிருந்தாலும், இன்னும் எழுத்தளவிலோ அல்லது விருது வாங்கியோ அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன் கோல்டன் க்ளோப் மற்றும் பாஃப்டா அந்த ஆசையை பூர்த்தி செய்தது மன நிறைவை தந்தது.

80வது ஆஸ்கர் வரை நாம் யாருக்கு கிடைக்கிறது என்றே பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் இந்த 81வது ஆஸ்கரில் சற்று வித்தியாசமாக முதன் முறையாக நமக்கு கிடைக்குமா என்ற ஆசையுடன் பார்த்தோம். இதற்கு முன் ஒரு சில படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும். இன்று ஏதோ ஒரு அதீத நம்பிக்கை. நாம் வெற்றி பெறுவோமென்று. அந்த நம்பிக்கையின் பெயர் ஏ.ஆர்.ரஹ்மான். எனக்கு எந்த வரிசையில் விருதுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சரியாக தெரியவில்லை. அதனால், இசைக்கும் பின்னணி இசைக்கும் தரப்பட வேண்டிய விருதுக்காக காத்திருந்தேன்.

ஆபிஸுக்கு நேரமானதால் என் மனைவி குளிக்கச் சொல்லி குரல் கொடுத்தாள். இல்லை போகவிருப்பமில்லை எனக்கு. ரஹ்மானுக்கு கிடைக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொண்டு போகிறேன் என்று மறுத்துவிட்டேன்.

அந்த முடிவு எவ்வளவு நல்ல முடிவு என்பதை அடுத்த சில நிமிடங்களில் என்னால் உணரமுடிந்தது. நான் மட்டும் அல்ல என்னை ஆபிஸுக்கு போகச் சொல்லி துரத்திய என் மனைவியும்.

ரஹ்மான் இந்த படத்துக்கு பாடல் மற்றும் பின்னணி இசை அமைக்கும் போது அவரையும் ஸ்ரீதரையும் இன்னும் வெகு சில பேரைத் தவிர யாருக்குமே எந்த படத்திற்கு இசையமைக்கிறோம் என்று தெரியாதாம். அது மட்டுமல்ல ரஹ்மான் அமைத்த இந்த இசை டான்னி பாயலுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்ற ஒரு சிறு சந்தேகம் ரஹ்மானுக்கே இருந்த்தாகவும் என் நண்பன் ஒருவன் சொல்லிக் கேள்வி. அப்படி ஒரு பயம் இருந்ததாலோ என்னவோ, மிகச் சிறந்த இசையை அவரால் தரமுடிந்தது.

ரஹ்மானின் பயம் ஆஸ்கரில் முடிந்தது.

அந்த நிமிடம், என் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. அது ஆனந்த கண்ணீர். நிற்கவில்லை. உடம்பினுள் ஏதோ ஒரு வித உணர்ச்சி. என்னவென்று இப்போது சரியாக சொல்லமுடியவில்லை. அப்போது கேட்டிருந்தாலும் என்னால் சொல்லியிருக்க முடியாது. இந்தியன் என்ற பெருமையா? தமிழன் என்ற கர்வமா?

இரண்டு பிரிவுகளில் (சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல்) ரஹ்மானை வெற்றி பெற்றவராக அறிவித்தபோது என்னால் நானாக இருக்க முடியவில்லை. மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தேன். முன்னங்கைய்யால் காற்றில் குத்தினேன். யே! என்று கூச்சலிட்டேன். என் மனைவியை பார்த்து என்னவோ நானே அந்த விருதை வென்றது போல் பெருமிதத்துடன் பார்த்தேன். என் கண்கள்slumdogmillionaire_originalsong ஆனந்தக் கண்ணீரில் நனைந்தது. எதிரில் இருக்கும் யாவும் மங்கலாகிப் போனது. இப்போழுதும் கூட அந்த ஆச்சர்யத்தை என்னால் விவரிக்க முடியவில்லை.சொல்ல முடியாத ஒரு உணர்வு. என்னவோ நானே அந்த விருதை என் கையால் வாங்கியது போல இருந்தது எனக்கு.
ஏ.ஆர். ரஹ்மான் – சிறந்த பாடல் மற்றும் சிறந்த பின்னணி இசைக்காக விருது பெற்றுக்கொண்டார்.
நன்றி நவிலும் போது மறக்காமல் உடன் பணியாற்றிய அனைவரையும் நினைவு கூர்ந்தும், தன் வெற்றிக்கு மூல காரணம் தன் தாயென்றும் கடைசியில் எல்லாவற்றிர்க்கும் முத்தாய்ப்பாக “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று தமிழில் சொன்னதும் என்று எல்லாமே என்னை புல்லரிக்கச் செய்தது.
என் மொழி, உன் மொழி நம் மொழி, தமிழ். அது இன்று ஆஸ்கர் மேடையை தொட்டுவிட்ட்து அதற்கு காரணம் அந்த உலக மொழி. அது இசை, அதன் மறுபெயர் ரஹ்மான்.

1992ல் ரோஜாவில் தொடங்கி தமிழ் சினிமா சார்ந்த இசையை வடக்கு மட்டுமின்றி இந்தியாவை தாண்டி வெளிநாடிகளுக்கும் எடுத்துச் சென்ற பெருமை ரஹ்மானையே சாரும். ஒருவேளை அன்று மணிரத்னம் வேண்டாம் என்று சொல்லியிருந்தால்? சொல்லியிருந்தால் என்ன, இன்று எப்படியும் ஆஸ்கர் வாங்கியிருப்பார். அவரது திறமை அப்படி.

”ஜெய்ஹோ” பாடி முடித்த மறுவினாடி கேட்ட கைத்தட்டல் சத்தம். அரங்கம் அதிர்ந்தது. இவ்வளவு பெரிய விருது கிடைத்தும் அதை வாங்கும் போதும் கூட ரஹ்மான் முகத்தில் ஒரு பதட்டமோ கர்வமோ காணவில்லை. மிகவும் அடக்கமாக காணப்பட்டார். சந்தோஷம் அவரை ஆட்கொள்ளவில்லை. மாறாக அவர் அதை அமைதியாக அனுபவித்தார். அது அவர் முகத்தில் பிரதிபலித்தது.

ரஹ்மான் வெற்றி பெற்றவராக அறிவித்த போது நில நடுக்கம் வராதது ஆச்சர்யம் தான். ஆமாங்க இந்தியா முழுவதும் மக்கள் கைத்தட்டி இருப்பாங்களே. கொஞ்சம் அதை யூகித்துப் பாருங்கள்.

14 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.