நான்முகன் நாகேஷ்

 

நம்மையெல்லாம் சிரிக்க வைத்த ஒருவன் (அன்பு கூடும்பொழுது மரியாதை குறைகிறது) இன்று இறைவனடி சேர்ந்துவிட்டான். ஏனோ நம்மை வெறுத்துவிட்டான். ஆம், வெறுத்துவிட்டான் என்பதே சரி. அவன் அப்படிச் செய்ததற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கிறதே. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களுக்கு எல்லாம் பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிற வேளையில், இந்த நான்முகனுக்கு என்ன செய்தோம். இது தமிழ்த்திரையுலகம் கூனிக்குறுக வேண்டிய தருணம். நான் விருதும் புனைப்பெயர்களும் வாங்கியவர்களை குறை கூறவில்லை. ஆனால் நாகேஷுக்கு என்ன செய்தார்கள் என்றுதான் கேட்கிறேன்.

nageshஇன்று அவரின் பூத உடல் முன்பு இல்லாத சோகத்தை காட்டிக் கொண்டிருக்கும் பல புண்ணியவான்கள், அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்துக்காக ஏன் குரல் எழுப்பவில்லை. கமல் ஒருவரைத் தவிர யாரும் அதற்காக கவலைப்பட்டதாகக் கூட தெரியவில்லை. ஒருவேளை அது நடிப்பு சமாசாரம் நமக்கெதற்கு என்று விட்டுவிட்டார்களோ?

இனி அவருக்கு தேசிய அளவில் எல்லாம் அங்கீகாரமும் கிடைக்கும். பாவம் அவர்தான் இருக்க மாட்டார் அதை ஏற்றுக்கொள்ள இனி அவர் பெயரில் பல விருதுகள் வழங்கப்படும். தற்போதிருக்கும் அனைத்து நகைச்சுவை நடிகர்களும் அந்த விருதுகளை வாங்கிச் செல்வார்கள். பாவம் நாகேஷ் தான் இருந்து பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. தமிழக அரசு அவரது குடும்பத்திற்கு பண உதவி வழங்கும்.

நகைச்சுவை நடிகன், கதாநாயகன், நடனக் கலைஞர் மற்றும் நல்ல மனிதன் என்ற நான்கு முகங்களை தன்னுள் கொண்டவர் நாகேஷ். எல்லோரும் அவரின் திருவிளையாடல் மற்றும் எங்க வீட்டுப் பிள்ளை போன்ற MGR, சிவாஜியின் படங்களில் அவரின் நடிப்பாற்றலை குறிப்பிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, அவரின் சிறந்த படைப்பு அவர் கதாநாயகனாக நடித்த படங்களில் இன்னும் சிறப்பாக வெளிப்பட்டது. நாகேஷ் சரியான வாய்ப்புக் கிடைக்காத ஒரு சிவாஜியென்றால் அது மிகையல்ல.

அவரது நகைச்சுவையின் வீச்சை, நீர்க்குமிழி, எதிர்நீச்சல், யாருக்காக அழுதான் படங்களில் அவர் வெளிப்படுத்திய குணச்சித்திர நடிப்பே அவரது நடிப்புத் திறமைக்குச் சான்று.

ஒரே சமயத்தில் இரு பெரும் கதாநாயகர்களின் படங்களில் நடித்து இருவரிடமும் நற்பெயர் பெற்றவர். கீழ்வரும் அவரது ரத்தினங்களில் ஒரு சில படங்கள் அந்தந்த காலக்கட்டத்தில் பெரிய கதாநாயகர்களுடன் நடித்து பெரும் வெற்றி பெற்றவை.

எம்.ஜி.ஆர் உலகம் சுற்றும் வாலிபன், எங்க வீட்டுப் பிள்ளை
சிவாஜி
திருவிளையாடல், கலாட்டா கல்யாணம்
கமல்ஹாசன்
அபூர்வ சகோதரர்கள், மகளீர் மட்டும், பஞ்ச தந்திரம்
ரஜினிகாந்த்
தில்லுமுல்லு, படிக்காதவன்

அவர் நம்மைப் பிரிந்தது தடுக்க முடியாதென்றாலும், அவருக்கு நாம் செலுத்தும் முழுமன அஞ்சலி அவரது ஆன்மாவை குளிரவைக்கும்.

ரஜினி கூறியது போல் நாகேஷ் ஒரு மேதை. எப்படி சார்லி சாப்ளின் வாழ்வில் ஒரு சோகம் இருந்ததோ, நாகேஷ் வாழ்விலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. நாகேஷ் தன் திரையரங்கை பணக் கஷ்டத்தினால் விற்ற போது எங்கே போனார்கள் இன்று செயற்கையாக கண்ணீர் விடுவோர்?

யார் என்ன சொன்னாலும், எப்படி நடத்தியிருந்தாலும், இன்றில்லை, என்றுமே எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறாய். உன் அனைத்து படைப்புகளும் எங்களுக்கு நினைவலைகள். இனி உன்னை எப்பொழுது திரையில் பார்த்தாலும் எங்கள் கண்களில் நீர்த்திவலைகள்.

“Death comes to all but great achievements build a monument which shall endure until the sun grows cold.”

This entry was posted in இந்திய சினிமா, நாட்டு நடப்பு, பொது and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

One Response to நான்முகன் நாகேஷ்

  1. சுந்தர் says:

    ஹாய்!!!
    நாகேஷ் என்றுமே அழியமாட்டார். அவர் நம்முடனே இருப்பார், அவருடைய காமெடி மற்றும் நடிப்பின் மூலம். யார் யாரோ வாங்கிவிட்டார்கள், ஆனால் நாகேஷ் வாஙகவில்லை…….பத்மஸ்ரீ பட்டம். இப்பொழுது நினைக்கத்தோன்றுகிறது, இந்த பட்டம் வெறும் கலைமாமணி மாதிரி தான்னு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *