Home » General, பொது

என் எழுத்துலக த்ரோணாச்சார்யர்

27 February 2009 7 Comments

 

sujatha4

அது என்னவோ ரங்கராஜன் என்ற பெயருக்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. நான் எங்க பக்கத்து வீட்டு .ராஜனை சொல்லவில்லை. நான் குறிப்பிடுவது கவிஞர் வாலியையும் எழுத்தாளர் சுஜாதாவையும். இருவரின் இயற்பெயர் ரங்கராஜன், இருவரின் இயற்நகரம்( பாருங்க சுஜாதாவின் பாதிப்பு) ஸ்ரீரங்கம், நாம் இப்போழுது பேசப்போவது இரண்டாமவரை பற்றி.

படிப்பில் அவர் மின்னணுவியல் பொறியாளர், படைப்பில் (கடவுளின்). அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த புதினங்களில்(Science Fiction) அவர் இன்றும் ஒரு முன்னோடியாக திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல.

தமிழில் பதிவு செய்யலாம் என்று தொடங்கிய பிறகு நிறைய படிக்க வேண்டியாதாயிற்று புத்தகத்திலும் வலையிலும். வலையில் பின்னுவோரின் முக்கால்வாசி எழுத்துக்களில் சுஜாதாவை அவரின் மறைவிற்குப் பிறகும் அவர் உலவிக் கொண்டிருப்பதை என்னால் எழுத்துணர(மீண்டும் சுஜாதா) முடிகிறது.

இன்று தமிழில் ஒரளவுக்கு எழுதுகிறேன் என்றால் அதற்கு இரண்டு பேர் மிக முக்கியமான காரணங்கள் ஆவர்.

என்னுடைய எழுத்துக்களிலேயே என்னையும் அறியாமல் சுஜாதா அவர்கள் வந்து போவதை உணர்ந்தாலும் அதை நிறுத்த மனம் வரவில்லை. நான் அவரை பார்த்திருக்கிறேன் ஓரிருமுறை (பெண்டா சாப்ட் நிறுவனத்தின் நுழைவாயில் முன்பு). ஒரு வாசகனாக நான் கடிதமும் விமர்சனமும் கூட எழுதியதில்லை. ஒருவகையில் நானும் ஏகலைவனே. கட்டை விரலை கேட்பதற்கு இன்று அவர் இல்லை. இருந்திருந்தாலும் .விரலை கேட்டிருக்க மாட்டார். அவருக்கு தெரியும் தட்டச்சுக்கு அல்லது இன்று ஒரு கணிணி பொறியாளனுக்கு அது அவசியம் என்று (ஸ்பேஸ் பார் தட்டணுமே).

முதல் காரணன் (என்) அண்ணன் மற்றொருவர் சுஜாதா என்கிற அந்த எழுத்தோவியன். மு. (முதல் மந்திரி அல்ல, முதல் காரணன்) எனக்கு புத்தகப் பழக்கம் ஏற்படுத்தினான். சுஜாதா அதை அதிகரிக்கும் பொறுப்பை ஏற்றார். முதன் முதலாக தமிழில் அவரின் கம்ப்யூட்டரே கதை சொல்லுஎன்ற புத்தகத்தை படித்ததாக நினைவு. ”நான் படித்தவரையில்ஒரு கதைக்கு இரண்டு முடிவுகள் என்ற வித்தியாசமான முயற்சி முதலில் அவர்தான் கையாண்டிருப்பார் என்று நினைக்கிறேன்(அதற்கு முன் ஏதேனும் இருந்தால், ” “ இருக்கும் வாசகத்தை மீண்டும் ஒரு முறை படித்து விடவும்).

 ஒருவேளை அவர் பிறந்த இடத்தில் நானும் பிறந்ததால் இந்த பிணைப்போ? ஆம் அவர் பிறந்தது சென்னை திருவல்லிக்கேணி, நானும். தாடி வைத்தவன் பெரியவனாகலாம் பெரியார்? அது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை. மீசை வைத்தவன் கண்டிப்பாக பாரதி ஆகிவிட முடியாது. நான் மீசை வைத்தவன் (மீ.சு).கடலை முழுவதுமாக அள்ளிக் குடித்துவிட முடியாது ஆனால் அதன் கரையோரத்தில் நின்று அதன் அழகை, ஆர்பரிப்பை ரசிக்கலாம். கடலும் வற்றப்போவதில்லை அதைச் சார்ந்த நம் பிரம்மிப்பும் குறையப் போவதில்லை (கரையில் கடலை விற்போரும் போடுவோரும் .குறையப் போவதில்லை). அதுவே கடலையின்ச்ச்..சே (பசி மயக்கம். மன்னிக்கவும்) கடலின் சிறப்பு. சுஜாதா என்னும் கடலில் உண்டு ஆயிரமாயிரம் எழுத்தலைகள், அதன்கரையெல்லாம் செண்பகப்பூக்களாகிய அவரது ரசிகர்கள்.

 கப்பன் பார்க் (பெங்களூரு) ஒரு மாலை வேளையில் எப்படி இருக்கும் என்பதற்கு நாம் அங்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. சுஜாதாவை கொஞ்சம் சுரண்டினாலே போதும். அவருக்கு ஒரு கதை எழுத குறைந்தபட்சம் இரண்டு வரிகள் மட்டுமே தேவைப்பட்டது. தன்னால் கட்டுரை மட்டுமின்றி சிறுகதை, சிறியதிலும் சிறுகதை (All Clear clinic Shampoo போல) என்று அவரின் புலமை என்னை வியப்பின் உச்சத்தில் ஆழ்த்தின. திருக்குறளுக்கு அவரின் எளிய உரையே அதன் மிக அருகில் என்னை இழுத்துச் சென்றது. பள்ளியில் தமிழ் ஐயா சொல்லி வராதது எழுத்தைய்யா சொல்லி வந்தது. எப்படி இசையையும் இசைஞானியையும் பிரித்துப் பார்க்க முடியாதோ அதுபோலத் தான் சுஜாதாவையும் பல எழுத்தாளர்களை உருவாக்கிய அவரின் எழுத்தும்.

குமுதம், கணையாழி, ஆனந்த விகடன் என்று பல பத்திரிகைகளில் அவரின் எழுத்துச் சுடர் கொழுந்துவிட்டு எரிந்ததை நாம் அறிவோம். அவர் எந்தளவிற்கு தமிழின் புலமை பெற்றிருந்தாரோ அந்தளவிற்கு ஆங்கிலத்திலேயும் புலமை இருந்தது பிரம்மிக்கத்தக்கது. சுஜாதா ஒரு அறிவியல் அறிவாளி.

கற்றதும் பெற்றதும் படித்து நான் கற்றதும் பெற்றதும் எண்ணிலடங்கா.

ஒவ்வொரு முறையும் நான் புத்தக கண்காட்சிக்கு சென்றால் முதலில் காட்சியின் முகப்பில் குறித்துக் கொள்வது சுஜாதாவின் படைப்புக்கள் கிடைக்குமிடத்தை தான். இந்த ஆண்டும் சென்றேன் அந்த இடம் காலியாகவே இருந்தது. அதை நிரப்ப அவர் இல்லை. என் மனதுக்குள்ளேயே அந்த துக்கத்தை அடக்கிக் கொண்டு உள்சென்றேன். அவரின் எல்லாம் இருந்ததும் என் கண்ணுக்கு இருந்ததும் இல்லாததாகவே தோன்றியது. படைக்க படிக்க என்று அவர் சொல்லியிருந்ததால் ஒரு சில நல்ல படைப்புக்களை பிடித்து வந்தேன்.

என்னதான் நரசூஸ் காபியாக இருந்தாலும், உசிலைமணி மீண்டும் வந்து சொன்னாலும், வீட்டுக் காபிக்கு இணையாகுமா? பொடி ஒன்றாக இருந்தாலும் அதை கலக்கும் விதமும் விகிதமும் முக்கியமாயிற்றே. வாங்கியவை குடிக்கக்கூடியவையே ஆனால் மணக்கக்கூடியவை அல்ல (மீ.சு). நான் மற்றவர்களில் குறை கூறவில்லை அவரின் நிறைகளையே கூற முயற்சிக்கிறேன் (கடலை முழுவதுமாக……..ஆர்பரிப்பை ரசிக்கலாம்).

ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது அதை ( மின்னணு வோட்டு இயந்திரம்) கண்டுபிடித்தவர் அவர் என்ற காரணத்திற்காகவாவது ஒரு வோட்டு. அவரைத் தொட்டுப் பார்க்கும் ஒரு பரவச உணர்வு. அது மட்டுமல்லாமல் அவரது பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நாட்களில் அங்கே நடக்கும் போட்டிகளுக்கு மின்னணு ஸ்கோர்போர்டு உருவாக்கியவர்.

சினிமாவில் அவரது பங்கு சொல்லி தெரியவேண்டியவை அல்ல இருந்தாலும் ஒரு சில இங்கே:-

காயத்ரியிலிருந்து இன்று வெளிவர இருக்கும் ஆனந்த தாண்டவம் வரை அவரது பல அற்புத படைப்புகள் சினிமாவாக உருவெடுத்திருக்கிறது. கதை மட்டுமின்றி முக்கால்வாசி ஷங்கர் படங்களுக்கு வசனம் எழுதியவர். இதற்கெல்லாம் மேலாக சினிபவான்கள்(மீ.சு) அவரை ஒரு ஆராய்ச்சியாளராகவே பார்த்திருக்கிறார்கள். அது ஷங்கராகட்டும் அல்லது கமலாகட்டும். கதையின் போக்கு அறியிவியலாகட்டும் அல்லது கலாச்சாரமாகட்டும், அதனின் ஆழத்தை வேரோடு பிடுங்கி, ரசிகர்களுக்கு எளிய முறையில் கொண்டு சேர்த்தவர் சுஜாதா.

sujatha3

தமிழ் இலக்கியத்தின்  மீது தான் கொண்ட ரசனையை பன்மடங்கு உயர்த்தியதற்காகவே அவருக்கு தான் நிறைய கடன்பட்டிருப்பதாக கமல் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.”

ரோபோ என்ற பெயருக்கு எதிர்ப்பு வந்ததால் மாற்றுப் பெயராக இயந்திரனை கொடுத்தார் சுஜாதா. ரஜினியின் காயத்ரிக்கு அவர்தான் கதையாசிரியர். அதே ரஜினியின் இயந்திரனுக்கு அவர்தான் திரைக்கதையாசிரியர்.

ஒரு விதத்தில் நீயும் பாரதிதான்(ஏன் மீசை வைத்துக் கொள்ளவில்லை?). அவன் சுதந்திர தாகம் ஏற்படுத்தினான் நீ எழுத்து தாகம் ஏற்படுத்தினாய்.

மிக ஆழமான பாதிக்கத் தக்க பல கருத்துக்களைக் கூட நாம் படிக்கும் போது அவர் ஈர்ப்பு ஏற்படுகிற வகையிலே தான் கொடுப்பார் சுஜாதா. அந்த கட்டுரை, இந்த கட்டுரை, இந்த கதை அந்தக் கதை என்றில்லாமல் சரமாரியாக அவரது நகைச்சுவைத்தனத்தை ஆங்காங்கே தெளித்து இருப்பார். நாம் படிக்கும் போது வாய்விட்டு சிரிக்காத ஒரு படைப்பு சுஜாதாவிடம் வந்திருக்குமா?

சுஜாதாவின் திருப்பாவை விளக்கவுரையை இன்னும் உங்களில் யாரேனும் படித்ததில்லை என்றால் தயவு செய்து விடுங்கள் (மீ.சு). திருப்பாவை அதற்கு முன் வைணவர்கள் படித்து புரிந்து ஆச்சரியப்படும் ஒன்றாகவே இருந்தது. அதை மாற்றி எல்லோரும் எல்லாமும் படிக்க முடியும் என்று மாற்றிய பெருமைஉன்னையல்லால் வேறெவற்கு உண்டு.

உன்னை உன் படைப்பைப் பற்றி எழுதி மாளாது பேசித் தீராது.

சிறியனின் இந்த படைப்பு உனக்கு உன், எழுத்து மூலமாக உலவிக் கொண்டிருக்கும், ஆன்மாவிற்கு சமர்பணம். நான், ஒரு பிராமணண், எழுத்தால் உனக்கு செய்த தர்ப்பணம்.

சார், அந்த மெக்சிகோ சலவைக்காரி ஜோக்கை சொல்லமலேயே போயிட்டீங்களே சார்!!!

பி.கு: இந்த படைப்பில் நான் சோகத்தை காண்பிக்க முற்படவில்லை. மாறாக சுஜாதா அவர்களுக்கு மிகவும் பிடித்தமானஅந்த இடையிடையே சிறிய நகைச்சுவையையே இந்த படைப்பில் கலந்திருக்கிறேன்.

சுஜாதாவை பற்றி நான் மிகவும் ரசிச்ச என்னை அழவைத்த ஒரு பதிப்பு…இத க்ளிக் செய்யுங்க…

.

7 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.