கவிஞனின் கற்பனைத்திறன் – பாகம் 1

”நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” – கவியரசு.

நம் அன்றாட வாழ்க்கையில் வியப்புகளிலேயே மிக பெரியது ஒரு கவிஞனின் கற்பனை சக்தியாகத்தான் இருக்கும்.

பல விஞ்ஞானிகள் சேர்ந்து என்னென்னவோ யோசித்து புரிவதற்க்கே மிக கடினமான பல கணிப்புகளை வைத்து கிட்டதட்ட ஒரு தவம் போல ஒரு வாழ்கை வாழ்ந்து 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு விண்கலத்தை (அஃறினை) நிலவுக்கு செலுத்துகிறார்கள்.

ஆனால் நம் கவிஞர்கள் இந்த கஷ்டம் எதுவும் இல்லாமல் மிக சுலபமாக நிலவுக்கு போய்விட்டு வந்துவிடுவார்கள். உதரணத்திற்கு பல பாடல்களை சொல்லலாம். முக்கியமாக வைரமுத்து அவர்களின் அநேக பாடல்களை கேட்டுப் பார்த்தால் புரியும்.

என்னை பொறுத்தவரை இதுவும் கிட்டதட்ட ஒரு தவ வாழ்க்கை போலத்தான். எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை கவிதை.

கவிஞர்களின் மூளை வேகமும் அவர்களின் யோசிக்கும் திறனும் இன்னும் வியப்பு. உதரணமாக கவி. வாலியிடம் அவரது ஆசிரியர் கேட்டாராம் எங்கே வாலை காணோம் என்று. அதற்கு வாலியின் பதில் ஒரு கவிதை:

’வாலில்லை என்பதால்
வாலியாகக் கூடாதா?
காலில்லை என்பதனால்
கடிகாரம் ஓடாதா?’

அவருடைய பொய்க்கால் குதிரைகள் என்ற புத்தகத்தின் முதல் கவிதை. இதோ உங்களுக்காக இங்கே:-

நான் வாசிப்பதும் – சு
வாசிப்பதும் – விசு
வாசிப்பதும்
உனையே – தமிழ்
அனையே – தீன்
சுனையே – கா
எனையே

இதுபோல பல சொல்லலாம்…..சொல்லிக்கொண்டே போகலாம்.

வைரமுத்து ஒரு பாடலில்:

கண்ணில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ……
கைய்யில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால்..செய்த சிலையா….

இது கற்பனையென்றால்…இதோ அறிவியல் கலந்த கற்பனை..

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்…
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்…
கண்டு கொண்டேன் அடி…

வாலியின் மொத்த அவதார புருஷனும் கவிஞர்களின் கற்பனைத் திறனுக்கு ஒரு எடுத்துக் காட்டு. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பபட்டோர் இராமனை வர்ணித்து இருப்பார்கள். ஏன் வாலியே பல பாடல்களில் கதாநாயகனை உவமைக் கொண்டு வர்ணித்து இருப்பார். இருந்தாலும் அவரது அவதார புருஷனில்:

இவன் –
வான சூரியன் வம்சத்தில் வந்த
ஞான சூரியன்
மனிதச் சட்டையை
மாட்டிக்கொண்டு-
மண்ணில் இறங்கிய இறை

இதைவிட எளிமையாக ராமனை என்போல ஒரு பாமரனுக்கு அறிமுகப்படுத்திவிட முடியாது. மேலும்….

தேயும் நிலாவைக்
தாயும் காட்டி-
தேயா நிலாவுக்குச்
சோறு ஊட்டினாள்

இங்கே கவிஞர் வாலி ராமனையே தேயா நிலவாக குறிப்பிடுகிறார்.

இதுபோல கவிஞர் வைரமுத்து கடல் மீது தனக்குள்ள காதலை பல கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார். அவரது ‘தண்ணீர் தேசம்’ என் மனதைக் கவர்ந்த, என்னை தூங்க விடாமல் செய்த ஒரு அற்புதப் படைப்பு. அவரது ’அலைகள்’ கவிதையில் இருந்து ஒரு சில வரிகள்…

அலைகளே! நீர்மேல் ஆடுந் தண்ணீர்
மலைகளே! கடலின் மந்திரக் கைகளே!
வித்தை புரிந்து வீசுங் காற்று
நித்தந் திரிக்கும் நீர்க்கயிறுகளே..

என்கிறார்.

 

கடைசியாக, இந்த பதிவை கவியரசரின் கவிதையை தந்து முடிக்கிறேன்…

நான் காவியத்தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன்
நான் படைப்பதினால் என்பேர் இறைவன்

நான் இங்கே தந்துள்ள அனைத்தும் கவிதைக் கடலின் ஒரு துளியே. நீங்களும் உங்கள் மனங்கவர்ந்த கவித்துளிகளை இங்கே பகிர்ந்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இந்த கவிதைத் தொடரை கவியரசருடன் ஆரம்பித்து அவருடனே முடிக்கிறோம். ஆகையால்…இது ஒரு ஆரம்பமே!!!

தமிழுக்கு நன்றி…தமிழ்த்தாய் தந்த நேரடிப் பிள்ளைகளுக்கு நன்றி.

This entry was posted in General, கவிதைத் தொகுப்பு, செம்மொழி and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to கவிஞனின் கற்பனைத்திறன் – பாகம் 1

 1. நீங்கள் கொடுத்த கவிதைகள் விதைகள் மட்டுமே. விருட்சம் இதனினின் பெரிது. அதை ஒரிரு பதிவுகளில் அடக்கிட முடியாது.

 2. கமல் says:

  தேயும் நிலாவைக்
  தாயும் காட்டி-
  தேயா நிலாவுக்குச்
  சோறு ஊட்டினாள்//

  கவிஞர் சிலேடைகளைச் சிந்தவிட்டுள்ளார்….ம்…. நல்ல தொகுப்பு… நண்பரே!//

  நான் காவியத்தாயின் இளையமகன்
  காதல் பெண்களின் பெருந்தலைவன்
  பாமர ஜாதியில் தனி மனிதன்
  நான் படைப்பதினால் என்பேர் இறைவன்//

  ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..
  கோல மயில் எந்தன் மடியிருப்பு….
  கவியரசரின் தனித்துவங்களுள் இதுவும் ஒன்று..

  தொடர்ந்தும் எழுதுங்கோ….நிறைய கவிநயம் ததும்பும் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்…..

 3. vijayasarathyr says:

  நன்றி சத்திய மூர்த்தி. ஆமாம் இன்னும் சொல்லபோனால் விதயிலும் சிறிய விதை நான் இங்கே குறிப்பிட்டுள்ள கவிதைகள்.

  பதிவுகளின் மூலம் உங்களைப் போன்றவர்களின் நினைவலைகளை தட்டிவிட இந்த பதிவுகள்.

  ==================================================
  கமல்,
  வாங்க. நன்றி. ஒபாமா மற்றும் புஷ்ஷின் கடமைகளை படித்தீர்களா?

 4. R.Sridhar says:

  வாழ்த்துக்கள். ஆயிரத்தை தொட்டதிற்கும் நான் இதுவரை அறியாத உங்களின் கவிரசனை காட்டியதற்கும்.

 5. vijayasarathyr says:

  வாங்க ஸ்ரீதர். வணக்கம். உங்கள் மறுமொழிக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *